ஏஐயைப் பயன்படுத்தி வேலையில் சாதிக்கலாம்!

 









இருப்பதிலேயே குறைந்த கூலிக்கு ஆட்களை வேலைக்கு எடுத்து செக்குமாடு போல வேலைவாங்கும் நாளிதழ் நிறுவனம், சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு போவது உங்கள் விதியாக இருந்தாலும் ஏஐ பற்றி அறிந்து கொள்வது நல்லது. தெரிந்துகொண்டால் அங்கிருந்து தப்பி நல்ல நிறுவனத்திற்கு வேலைக்குப் போகலாம். உலகம் முழுக்க 300 மில்லியன் வேலைவாய்ப்புகள் ஏஐ மூலம் பாதிக்கப்படவிருக்கின்றன என மெக்கின்சி ஆய்வு நிறுவனம் தகவல் கூறியுள்ளது. இதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஏஐ பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றுக்கொண்டால் நல்லது. 


டெக் கம்பெனி அல்லாத நிறுவனத்திற்கு சென்றால் கூட ஏஐ பற்றிய அறிவை பணியாளர் கொண்டிருப்பதை வேலைக்கு எடுப்பவர்கள் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் உதவும் என அவர் நினைக்கலாம். வடிவமைப்பாளராக இருப்பவர்கள், சாட்ஜிபிடி, டால் இ ஆகிய மாடல்களை கற்பது அவர்களின் கிரியேட்டிவிட்டியை உயரே கொண்டு செல்லும். மொத்த வித்தையையும் டிசைனில் இறக்கியிருக்கேன் என காலரை தூக்கிவிட்டுக்கொண்டு முதலாளியிடம் பெருமை பீற்றிக்கொள்ளலாம். உலகளவில் அடிப்படையான ஏஐ பற்றிய படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் அதைக் கற்கலாம். 


ஆய்வு செய்வது, அதை வேர்ட் கோப்பில் தொகுப்பது ஆகிய வேலைகள் இனி ஏஐதான் செய்யும். இதனால் 2045ஆம் ஆண்டில் பணியாளரின் எழுபது சதவீத பணிநேரம் ஏஐயின் கையில் வந்துவிடும். இப்படி சொல்வது வேகமாக கூட நடக்கலாம். நிறைய நிறுவனங்கள் ஏஐ மூலமே வேலைகளை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து, டெக் நிறுவனங்களுக்கு சந்தா கட்டி வேலையில் உள்ள ஆட்களை பிஎஃப் கணக்கு எண்ணைக் கூட சொல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. 


தினசரி வாழ்க்கையில் ஏஐயை அதிகாரிகள் எண்பது சதவீதமும், அவர்களின் ஊழியர்கள் இருபது சதவீதமும் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்கள் செய்துவரும் வேலைகள் பலவும் இனி காலியாகி ஏஐயின் கரங்களுக்கு வந்துவிட வாய்ப்பு அதிகம் என ரேவோலியோ லேப்ஸ் நிறுவனம் தகவல் தருகிறது. வேலையில் ஏஐயை பயன்படுத்துபவர்கள் பிழைப்பார்கள். அதற்கு தயங்குபவர்கள் வேலையோடு நிறைய விஷயங்களை இழக்கவேண்டியிருக்கும் என அச்சுறுத்துகிறார் எழுத்தாளர் தாமஸ் சமோரோ ப்ரிமியூசிக். இவர் ஐ ஹியூமன் - ஏஐ ஆட்டோமோஷன் அண்ட் தி க்வெஸ்ட் டு ரீகிளைம் வாட் மேக் அஸ் யுனிக்யூ என்ற நூலை எழுதியிருக்கிறார். எப்போதும் செய்யும் வேலைகள், எளிதாக கணிக்க முடிவது ஆகியபடி அமைந்த செயல்களை ஏஐ பாதிக்கும் என்பவர், ஏஐயை கற்றுக்கொள்ள முயலுங்கள். இல்லையெனில் கஷ்டம் உங்களுக்குத்தான் என அச்சுறுத்துகிறார். 


வேலையில் ஒருவர் ஏஐயை பயன்படுத்தினால் அவரின் உற்பத்தித்திறன் கூடும். அதன் மூலம் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதை மட்டும் பேசவேண்டியதில்லை. அப்படி சொன்னால் நாட்டிற்காக குடும்பத்தை விட்டுவிட்டு வந்தேன் என்று பிரதமர் மோடி சொல்லும் அசட்டு பொய்யைப் போல ஆகிவிடும். வாடிக்கையாளர்களுக்கு உதவும் மையங்களில் ஏஐ உதவியை நாடத் தொடங்கிவிட்டனர். இது தொடக்க கட்ட பணியாளர்களுக்கு உதவக்கூடியதுதான். தொழில்நுட்பம் மீது பொய், வெறுப்பு பிரசாரத்தை செய்யவேண்டியதில்லை. 


ஏஐ வேலைகளைப் பார்ப்போம். 


ஏஐ வணிக ஆலோசகர்


வணிக நிறுவனத்திற்கு ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி கொண்டுவருவது அமல்படுத்துவது என ஆராய்ந்து கூறும் வேலை சம்பளம் 1,37,885 டாலர்கள் மட்டுமே.


விற்பனை பிரதிநிதி


ஏஐ மாடல்கள், சேவைகளை நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்து விற்பனை செய்யும் வேலை. சம்பளம் 1,24,194 டாலர்கள்.


விதிகளை கட்டமைப்பவர்


ஏஐயை உருவாக்குவது மனிதர்கள்தான். இதனால் அவர்களின் விருப்பு வெறுப்புகள் அதில் வந்துவிட வாய்ப்பு அதிகம். அதைக் கண்காணித்து முறைப்படுத்துவதே இவர்களின் பணி. சம்பளம் 1,21, 841 டாலர்கள். 


தகவல் பொறியாளர்


புதிய தகவல் அமைப்பை உருவாக்கி அதன் வழியாக வேலை செய்யும் நிறுவனத்தின் வருமானத்தை பெருக்குவது.. சம்பளம் 1,17,964 டாலர்கள். 


எந்திர பொறியாளர்


வாகனத்துறை, பாதுகாப்புத்துறை, விமானத்துறை, கட்டுமானத்துறை, உற்பத்தித்துறை, மருத்துவம் ஆகியவற்றில் வேலை. சம்பளம் 1,04,062 டாலர்கள். 


இந்த வேலைகள் இல்லாமல் ஏஐ பொறியாளர், ஆராய்ச்சி அறிவியலாளர், எந்திரவழிக்கற்றல் பொறியாளர் ஆகிய வேலைகள் இருக்கின்றன. அனைத்துக்குமே 1,03,626 டாலர்கள் தொடங்கி 1,51,399 டாலர்கள் வரை சம்பளம் உண்டு. 


லிங்க்டுஇன் சமூக வலைத்தளம், கூகுள் நிறுவனம், சர்வதேச பல்கலைக்கழகங்கள் பலவும ஏஐ பற்றிய படிப்பை குறைந்த விலைக்கு வழங்குகின்றன. இவற்றை ஆன்லைனில் கூட கற்றுக்கொள்ளலாம். ஏஐயைக் கற்றால் எளிதாக வேலைகளை குறைந்த நேரத்தில் முடிக்கலாம். கற்கவே தயங்குவது நல்லதல்ல. 


டைம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்