ஜப்பானிய கூலிப்படையிடமிருந்து அமரத்துவ பொக்கிஷங்களை காக்கப் போராடும் நாயகன்!

 









ஃபாக்குயின் - லாஸ்ட் லெஜண்ட்


சீன திரைப்படம்


ஐக்யூயி ஆப்


ஒரு மணிநேர திரைப்படம்



சீன கலாசாரத்தில் பிரிட்டிஷார், ஜப்பானியர்கள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இன்றும் கூட சீனாவில் ஜப்பானியர்களை தங்களது தீவிர எதிரியாக நினைக்கும் குடிமக்கள் அதிகம். இதற்கு முக்கியமான காரணம், ஜப்பானியர்கள் சீனாவில் போரிட்டு செய்த ஆக்கிரமிப்புகளும், அக்கிரமங்களும்தான். அதை இந்த தொடரும் பிரதிபலிக்கிறது். 


சீனத்தின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த கல்லறை உள்ளது. அதிலுள்ள பொக்கிஷங்களை கொள்ளையடிக்க ஜப்பானிய ஆட்கள் முயல்கிறார்கள். அதை சீன நாட்டைச் சேர்ந்த நாயகன் சாமர்த்தியாக தடுத்து அனைவரையும் கல்லறையில் பிணமாக்குகிறான். ஜப்பானியர்கள் எதற்கு சீனாவில் உள்ள ஏதோ ஒரு கல்லறையைத் தேடி வரவேண்டும்? இங்குதான் அமரத்துவம் தரும் கனிகளைக் கொண்ட யுன்சி என்ற மரம் உள்ளது. அதற்காகத்தான் பேராசை கொண்ட மனிதர்கள் வேறு நாட்டுக்கே பயணம் செய்து வருகிறார்கள். பொக்கிஷங்களைக் கொள்ளையிட முயல்கிறார்கள். 


படத்தில் நாயகன் எந்திர புதிர் அமைப்புகளை திறக்கும் சூட்சுமம் கற்றவன். அவனது நண்பன், கதவுகளை திறக்கும் வழிமுறைகளை அறிந்தவன். தோழி, மலையேறுவதிலும், ஓவியங்களை, தொன்மை எழுத்துகளை படிப்பதில் நிபுணத்துவம் கொண்டவள். இந்த மூவரும்தான் சீன நாட்டு ஆட்கள். 


நாயகன் அந்தளவு வீர தீர சூரன் அல்ல. புத்தி பலம். உடல் பலவீனம். அவனது பாப் கட்டிங் தோழி, நண்பன் இருவரும் நன்றாக சண்டைபோடுகிறார்கள்.


இவர்களோடு சண்டைபோட்டு கலாசார பொக்கிஷத்தை திருடும் கூட்டத்தலைவி, அவளுடைய கையாள் ஒற்றைக் கண் பார்வை கொண்டவன். இவர்களுக்கு அடியாள் படை உள்ளது. நாயகன் கல்லறை கதவை எளிதாக திறக்கும் சாமர்த்தியம் கொண்டவன். கூடவே, அவனது அப்பாவிடம்தான் குறிப்பிட்ட வினோத வாள் ஒன்று உள்ளது. அதை, கல்லறை பொக்கிஷங்களுக்கான சாவி போல கருதுகிறார்கள். எனவே, ஜப்பானியர்கள் நாயகனை தங்களுக்கு உதவி செய்யும்படி நெருக்கடி கொடுக்கிறார்கள். அடித்து உதைக்கிறார்கள். மிரட்டுகிறார்கள். 


நாயகனுக்கு அவனது தந்தை காணாமல் போனதாலும், அம்மா மர்ம நோய்வாய்ப்பட்டு இறந்துபோனதாலும் துயரமான பால்ய காலத்தைக் கொண்டவன். அப்பா, கல்லறைகளை ஆராயப் போனதால்தான் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துபோக நேரிட்டது என புரிந்துகொள்கிறான். உண்மையில் அப்பா அப்படி செல்ல என்ன காரணம் என்பதை கல்லறைக்கு செல்லும் பயணமே அவனுக்கு விளக்குகிறது. நாயகனின் அப்பா, கல்லறைகளைத் தேடி செல்வதில் லெஜெண்ட் என பெயர் வாங்கியவர். 


அமரத்துவம் பற்றிய கேள்வியை ஒருவரின் கல்லறையில் தேடுவதே வினோதமாக உள்ளது அல்லவா? 


படத்தின் முடிவில் நாயகனுக்கு அமரத்துவம் பற்றிய உண்மை புரிபடுகிறது. கலாசார பொக்கிஷங்களை களவாடும் எண்ணம் அவனுக்கு தொடக்கத்திலேயே கிடையாது. அவனது காணாமல் போன அப்பா பற்றிய உண்மை மட்டுமே அறிய நினைப்பான். அதையும் தான் கற்றுக்கொண்டு அப்பா கற்பித்த விஷயங்களை வைத்தே அறிந்துவிடுவான். படத்தில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. பாம்போடு, அமரத்துவ மரத்தோடு நடக்கும் சண்டைகள் பார்க்க நன்றாக உள்ளன. 


சீனர்கள் தம் கலாசார பொக்கிஷங்களை பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்துகிற படம். இதற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. நிறையப்பேர் விரும்பி பார்க்கிறார்கள். இத்தனைக்கும் பெரும்பாலான காட்சிகள் அனைத்துமே க்ரீன்மேட்தான். அதுவும் சுவாரசியமாக இருக்கையில் பார்க்காமல் எப்படி இருப்பது?



கல்லறைகளை தேடிச்செல்கிற நிறைய டிவி தொடர்கள் சீன ஓடிடிகளில் உண்டு. அதை பார்ப்பவர்களுக்கு இந்த திரைப்படமும் பிடிக்கும். 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்