நகரில் திடீரென நெருப்பால் எரிந்து இறந்துபோகும் மனிதர்கள்! - பின்னணியை ஆராயும் இரண்டு காவல் அதிகாரிகள்!

 







அல்டிமேட் சீக்ரெட்


சீன திரைப்படம் 


ஐக்யூயி ஆப் 


சீன நகரம். அங்கு நடைபெறும் அரசியல் பிரச்னைகளால் அதன் நிம்மதியை அழிக்க சிலர் முயல்கிறார்கள். அதற்காக பேய் கொலை செய்கிறது என நம்பும்படியான ஜெகஜால பேய் முகமூடி தோற்றத்தில் சிலரை நெருப்பால் எரித்துக் கொல்கிறார்கள். அதைப்பற்றி காவல்துறை அதிகாரிகள் இருவர் எப்படி விசாரித்து அறிகிறார்கள் என்பதே கதை. 


சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மருந்துப்பொருள் பற்றிய கதை. ஆனால் அதை கதையில் கொண்டு வந்து விளக்குவதற்குள் நமக்கு படம் பார்க்கும் ஆர்வமே போய்விடுகிறது. நாயகன், காவல்துறை அதிகாரி. ஆனால் எப்போதும் சரக்கு போட்டுக்கொண்டு விலைமாதுக்களின் மடியே கதியென்று கிடக்கிறான். ஏன் அப்படி? அவனுக்கென்று முன்னாள் காதலி இருப்பாள். ஆனால் அவள் இன்னொரு வசதியான ஆளை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டாள் என்பதே காரணம். அந்த செய்தி, அதிலுள்ள உண்மை மனதை வருத்தும்போதெல்லாம் நாயகன் மது அருந்துகிறான். எப்போதெல்லாம் வருந்துகிறான்? எப்போதுமேதான். படம் முழுக்க நாயகன் மது போதையிலேயே இருக்கிறான். 


இவனுக்கு நேர் மாறாக ஆன்ம ஆற்றல் கொண்டவனாக இன்னொரு காவல் அதிகாரி, பச்சை மாவு பிடித்தது போல கும்மென குண்டடித்து காணக்கிடைக்கிறார். நடந்த கொலைகளை நெற்றில் பெருவிரல் வைத்தே அறியும் பார்வைத்திறன் கொண்டவர். வீரம் இருக்கும் அளவுக்கு விசாரிக்கும் திறமை இல்லை. எனவே நாயகனுடன் இணைந்து குற்றவாளியை பிடிக்க நினைக்கிறார். குண்டடித்த இரண்டாவது நாயகன், மாந்திரீக ஆற்றல் கொண்டவர்.


பேய்க்கொலைகள் புதிதல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு கொலைகள் நடந்திருக்கின்றன. அதிலும் குற்றவாளிகளை பிடிக்கமுடியவில்லை. சரி, இப்போது மூன்று பேர் செத்துவிட்டார்கள். மொத்தம் ஏழு கொலைகள். குற்றவாளிகளை பிடியுங்கள். ஏழு நாட்கள் தவணை என நீதித்துறை தலைவர் கூறுகிறார். நாயகனும் மது மயக்கத்தில் ஏற்கிறான். ஆனால் இறுதியாக ஆன்ம ஆற்றல் கொண்ட காவல்துறை அதிகாரியை குற்றவாளி என சொல்லிவிடுகிறான். 


நாயகனின் தோழி இருக்கிறாள். அவள் அவனை காதலிக்கிறாள். அவளுடைய அப்பாவும் கூட எரித்துக் கொலை செய்யப்படுகிறார். அப்போதும் கூட நாயகனுக்கு சூடு சொரணை, செயலில் வேகம் வரமாட்டேன்கிறது. 


படம் முடியும் நேரத்தில் அனைத்துக்கும் காரணம் தன் முன்னாள் காதலி என தெரியவருகிறது. அவளை பிடிக்கச்செல்கிறான். முன்னாள் காதலியின் கணவன் இறந்துவிடுகிறான். எனவே, அவள் மாமியாரின் கொடுமை தாளாமல் அவனோடு ஊரைவிட்டு ஓடிவிடலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறாள். நாயகன், முன்னாள் காதலியின் வாய் வழியாகவே நடந்த குற்றங்களை அறிகிறான். பிறகு என்ன செய்கிறான் என்பதே கதை. 



பொறுமையை சோதிக்கிற படம். படம் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட அதீத சக்திகளைப் பற்றி பேசுகிறதா, மனிதர்களின் அரசியல் தந்திரங்களை, சுயநலங்களைப் பேசுகிறதா என்று புரியவில்லை. இறுதியில் அடுத்த படத்திற்கு என்று சில காட்சிகளை வேறு வைத்திருக்கிறார்கள். போதுண்டா சாமி நிறுத்திக்கொள்வோம். 


இதிலும் அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்குகிறார்கள். ஆனால் அது நமது மனதிற்கு நெருக்கமாக இல்லை. எந்த பரிதாபமும் வருவதில்லை. இறுதியில் வில்லனைக் கூட நல்லவன் என்பது போல சுட்டிக்காட்டுகிறார்கள். இயக்குநர் ஐயா என்னதான் சொல்ல வருகிறீர்கள்? எந்த மனிதரும் முழுக்க நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை என அரிய கருத்தை கூறவா ஒன்றரை மணி நேரம் படம் எடுத்தீர்கள்? முன்பே கூட அதற்கு சில குறிப்புகள் கொடுத்திருக்கலாம். 


சுரத்தே இல்லாத விசாரணைக் காட்சிகளைக் கொண்ட படம். 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்