சிறைக்கைதி பழிக்குபழி வாங்கி எதிரிகளை துண்டு துண்டாக வெட்டி எறியும் கதை!

 







வூ சாங் 


சீன திரைப்படம் 


ஐக்யூயி ஆப்



நாயகன் வூ சாங் ராணுவத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அண்ணன் இறந்துபோய் ஊதுபத்தி ஏற்றிவைத்திருக்கிறது. அண்ணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அண்ணனைக் கொன்றுவிட்டாள் என உண்மை தெரிகிறது. அண்ணியின் தலையை வெட்டிய கொழுந்தன், கள்ளக்காதலனை தேடி விலைமாதுவின் இல்லம் செல்கிறான். சண்டையிட்டு கொன்று இருவரின் தலைகளையும் எடுத்து அண்ணனின் அஞ்சலி செலுத்தும் இடத்தில் போட்டுவிட்டு காவல்துறையில் சரணடைகிறான். 


சிறைக்கு செல்பவனை, ஜெயிலர் மூலம் ஓட்டல் நடத்துபவர் சந்தித்து அவனது உதவியைக்கேட்கிறார். அதாவது, அவரது தம்பி நடத்தும் ஓட்டலை ரவுடி ஒருவன் பிடித்துக்கொள்கிறான். அவனை கொல்ல வேண்டும். இல்லையா அடித்து உதைக்கவேண்டும். சிறையில் உள்ளவனுக்கு ஓட்டல்காரர் ஐந்து நாட்கள் இறைச்சியும் மதுவும் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறார். நாயகன், சாப்பிட்ட சோறுக்கு நியாயம் செய்ய ரவுடியை சந்திக்க செல்கிறான். ரவுடியின் மனைவியை தூக்கி பீப்பாய் தண்ணீரில் தலைகுப்புற வீசுகிறான். ரவுடியை  அடித்து உதைத்து ஓட்டலை மீட்கிறான். என்னா அடி... மது வைத்துள்ள பானைகள் எல்லாம் சிதறுகின்றன. 


பிறகு ஒருநாள் பணக்காரர் ஒருவர், வூ சாங்கை அழைக்கிறார். தனது பாதுகாப்புக்கு ஆளாக வைத்துக்கொள்வதாக சொல்லி ஒரு வாரம் மது, இறைச்சி என  விருந்து வைக்கிறார். கூலிக்கு வேலை செய்பவனை முதலாளி தனது மேசையில் வைத்து எப்படி சோறு போடுவார்? வூ சாங்கிற்கு இதெல்லாம் மண்டையில் ஏறுவதில்லை. முதலாளி அவரது வளர்ப்பு மகளை மணம் செய்வதாக கூறும்போதேனும் உஷராகி இருக்கவேண்டும். அப்போதும் தேமே என்று இருக்கிறான். பிறகு அவனது அறையில் திருட்டுப்பொருள் இருக்கிறது என்று சொல்லி குற்றவாளி என்கிறார்கள். அவனை மணந்துகொள்வதாக சொன்ன வளர்ப்பு மகளை அடித்து உதைத்து சித்திரவதை செய்து கொல்கிறார்கள். அவளது ரத்த த்தில்  அவன் திருடன் என்பதற்கான சாட்சி வருகிறது. பிறகென்ன நாயகனை சிறைக்கு கொண்டு செல்கிறார்கள். 


செல்லும் வழியில் படுகொலை செய்ய முயல்கிறார்கள். வூ சாங் அசருவானா, அத்தனை பேரையும் அங்கேயே அறுத்து்ப்போட்டுவிட்டு தன்னை மாட்டிவிட்ட முதலாளி, நீதிபதி, ஓட்டலை ஆக்கிரமித்த ரவுடி ஆகியோரை கொலை செய்கிறான். பிறகு காயம்பட்டு சுயநினைவு இழந்த அல்லது இறந்துபோன தனது காதலியின் உடலை தூக்கிக்கொண்டு நடந்துசெல்வதோடு படம் நிறைவு பெறுகிறது. 


படத்தில் எந்த லாஜிக்கும் கிடையாது. நீங்களும் கேள்வி கேட்க கூடாது. படம் நெடுக நாயகனின் அசுரபலம், கூலி கொலைகாரர்களை எப்படி அடிக்கிறான் என்பதை மட்டும் பாருங்கள். படம் எடுக்கப்பட்டதே பழிக்குப்பழி வாங்குவதை எந்தளவு அழகாக காட்ட முடியும் என்பதற்காகத்தான். ரத்தம் தெறிக்கும் சீனப்படம். 


இருபது, இருபத்தைந்து பேர்களை நாயகன் படத்தில் கொல்கிறார். எதிரிகளை முற்றாக அழித்துவிட்டாலே, அவனுக்கு பிரச்னை வந்திருக்காது. வூ சாங் வீரன்தான். ஆனால் புத்திசாலியல்ல. நிறைய இடங்களில் அவன் வீராப்பாக பேசுகிறானே ஒழிய அது அவன் உடல்மொழிக்கு பொருத்தமாக இல்லை. குறிப்பாக மது அருந்திவிட்டு ஹேப்பி பாரஸ்ட் ஓட்டலுக்கு செல்லும் காட்சி. 


அண்ணனைக் கொன்றவர்கள் இருவரை கொன்று சிறை சென்ற கைதிதான் நாயகன். அவன் எப்படி நாயகன் என்று அழைக்கப்படுவான்? அதிலும் தண்டனை அனுபவிக்கும் காலத்தில் அவன் எப்படி சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டலில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்? வளர்ப்பு மகள் சரி, அதற்காக சிறைக்கைதியை மணந்துகொள் என்று பெற்றோர் சொன்னால் உடனே ஏற்றுக்கொள்வாளா என்ன?


மேற்சொன்ன கேள்விகளுக்கான பதில்களை மறந்துவிட்டு படத்தை பாருங்கள். 


ரத்தக்களறியில் திளையுங்கள்.


நிஜத்தில் நம்மை கிண்டல் செய்த சித்திரவதை செய்த ஆட்களை கொல்ல முடியாது. கொல்லவேண்டும். இதயத்தில் வாளை பாய்ச்ச நினைத்திருப்போம். கழுத்தை வெட்டலாம் என கனவு கண்டிருப்போம். அதையெல்லாம் நாயகன் வூ சாங் நிறைவேற்றுகிறார். மனம் சற்றே நிம்மதியில் நீச்சலடிக்கிறது.


ரத்தவெறியாட்டம்


கோமாளிமேடை டீம் 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்