சொத்துக்களை எரி, சிறையில் அடை, வணிகத்தை தடு - இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடமான உத்தர்கண்ட் மாநிலம்!

 








அதீத இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடம்!


இந்தியாவிலுள்ள உத்தர்கண்ட் மாநிலம் கடவுளின் நிலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பல நூறு கடவுள்கள் இருக்கிறார்கள் எந்த கடவுளுக்கு சொந்தமான நிலம் என்றால், இந்துக்கடவுள்களுக்கான நிலம் என பல நூற்றாண்டுகளாக கூறி வருகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களும், புனிதப்பயணம் செய்வதற்கான இடங்களும் உள்ளன. 


கடந்த பத்தாண்டுகளாக வலதுசாரி மத அடிப்படைவாதிகள், உத்தர்கண்ட் மாநிலத்தை அதீத தேசியவாதத்தை அரசியல் சக்தியாக பயன்படுத்தி வருகிறார்கள். அங்குள்ள முஸ்லீம் சிறுபான்மையினரை பகிரங்கமாக மிரட்டியும், இனப்படுகொலை செய்வோம் என சூளுரைக்கவும் தொடங்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மூன்றாவது முறையும் வெறுப்பு, பிரிவினை கருத்துகள், முஸ்லீம்களை அடிப்போம், துரத்துவோம், 400 இடங்கள் வென்றால் அரசியலமைப்பை மாற்றுவோம், மசூதியை இடிப்போம் என ஆக்கப்பூர்வமான பல்வேறு வாக்குறுதிகளை பாரதீயன்கள் வெளிப்படையாக அளித்து வருகிறார்கள். 


கல்வி அறிவு இல்லாத மூடநம்பிக்கையில் ஊறிய, தனது வாழ்க்கையை முன்னேற்ற வானத்தில் இருந்து கடவுள்தான் வரவேண்டும் என நம்புகிற வட இந்தியர்கள் வலதுசாரி மத அடிப்படைவாதிகளை வெல்ல வைக்கவே வாய்ப்புகள் அதிகம். கடந்த பத்தாண்டுகளில் பாரதீய ஆட்சியில், 200 மில்லியன் சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மெல்ல தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்து வருகிறார்கள். இந்துக்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முஸ்லீம் சொத்துக்களை அழிப்பது, மசூதிகளை கோவிலாக்குவது, மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என படுகொலை செய்வது, முஸ்லீம் கடைகளை புறக்கணிப்பது, வணிகத்தை சிதைப்பது, போலிச்செய்திகளை வாட்ஸ்அப் தளத்தில் பரப்புவது என கடினமான உழைத்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது பெரிய நாடாக முன்னேறியுள்ளது என்று பெருமை வேறு பேசப்படுகிறது. 


பொதுவெளியில் முஸ்லீம்கள் நடமாடவே பெரும் அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது. அடுத்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தை வடக்கு நண்பர்கள் அமைத்துக்கொடுத்துவிட்டு, தென்னிந்தியா வந்துவிடுவார்கள்.அப்படியான சூழல் அமைந்தால் இந்தியா, இந்து நாடாக அதிகாரப்பூர்வமாக மாறிவிடும். 


2021ஆம் ஆண்டு உத்தர்கண்டின் ஹரித்துவாரில் தர்ம சன்ஸ்தான் என்ற பெயரில் மாநாடு ஒன்று நடந்தது. இதை வலதுசாரி கூலிப்படை ஒன்று ஒருங்கிணைத்தது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் பாரதீய கட்சி பிரபலங்கள். செய் அல்லது செத்துமடி பாணியில் இரண்டு மில்லியன் முஸ்லீம்களைக் கொல்ல வேண்டும் என தீர்மானம் போடப்பட்டு அதை அங்கு வந்திருந்தவர்களும் ஏற்றனர். ஏறத்தாழ இது ஜெர்மனியில் ஹிட்லர் செய்த யூத இனப்படுகொலையை ஒத்தது. மாநாடும், தீர்மானமும் உலகளவில் கவனம் பெற, கண்துடைப்பிற்காக பூசாரிகளும், கூட்டத்தில் பங்கேற்ற குண்டர்கள் சிலரும் கைதானார்கள். பிறகு, சட்டப்பூர்வ உரிமைகள் மூலம் பிணை வழங்கப்பட்டு வெளியே வந்துவிட்டனர். 


முஸ்லீம்களுக்கு மெக்கா என்பது போல இந்துக்களுக்கு ஹரித்துவார் இருக்கவேண்டும் என்பது இந்துத்துவ குண்டர்களின் எண்ணம். முஸ்லீம் என்ற மதமே உத்தர்கண்ட் மாநிலத்தில் இருக்க கூடாது. அங்கே வாழ்ந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் உயிருடன் இருக்கக்கூடாது என எண்ணுகிறார்கள். அதை பாரதீய கட்சி தனது எல்லையற்ற அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றிக்கொடுக்கிறது. முஸ்லீம்களை பகிரங்கமாக கொல்ல, சொத்துக்களை கையகப்படுத்த முடியாதே? எனவே, இந்து தேவ பூமி, ஜிகாதிகளின் கையில் இருக்கிறது என வாட்ஸ்அப் வழியே பாரதீய பக்தர்களுக்கு, செய்தி அனுப்பிவைக்கப்படுகிறது. இதன் நோக்கம், உடனே ஆயுதங்களுடன் வந்து இந்து தேவ பூமியைக் காப்பாற்றவேண்டும் என்பதேயாகும். 


2017ஆம் ஆண்டு முதல் உத்தர்கண்டை பாரதீய கட்சியே ஆண்டு வருகிறது. ஆண்டுதோறும் ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய புனித தலங்களுக்கு பல லட்சம் மக்கள் புனிதப்பயணமாக வந்து செல்கிறார்கள். இதைப்பயன்படுத்தி அந்த மாநிலத்தை இந்து தேவ பூமியாக்கி, தங்களது அதீதி இந்துத்துவ கொள்கையை பரிசோதித்து பார்க்க பாரதீய கட்சி முயல்கிறது. 


இங்கு அமலுக்கு வந்த அரசின் கொள்கைத் திட்டங்களைப் பார்ப்போம். முதலில் லவ் ஜிகாத். 



முஸ்லீம் ஆண்கள், இந்துப்பெண்களை காதலித்து ஏமாற்றி மதமாற்றம் செய்கிறார்கள் என பாரதீய கட்சி லவ் ஜிகாத் என்பதை பிரசாரம் செய்தது. இதன் வழியாக மாநில அரசு முஸ்லீம் ஆண்களை காவல்துறை மூலம் அடித்து உதைத்து எளிதாக வழக்கு போட்டு சிறையில் தள்ள முடிந்தது. அடுத்து, முஸ்லீம்களின் சொத்துக்களை அழித்து அவர்களை மாநிலத்தில் இருந்து வெளியேற்றவேண்டுமே? அதற்கு லேண்ட் ஜிகாத் என்ற கொள்கை பிரசாரம். இதன் வழியாக புல்டோசர் வைத்து முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன. பின்னாளில் லேண்ட் ஜிகாத்தை நிறுத்தி வைத்தாலும் அதற்குள்ளாகவே ஏராளமான மசூதிகள், கடைகள் இடித்து நொறுக்கப்பட்டு தெருவில் கிடந்தன. 


உத்தர்கண்டில் ஹால்த்வானி என்ற பகுதி உள்ளது.இங்கு அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்கள் வசித்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரியில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மசூதிகளும், மதரசாக்களும் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக போராடிய முஸ்லீம் மக்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டனர். முதல்வரே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதால் ஐந்து முஸ்லீம்கள் இறந்தனர். ஒரு இந்து பலியானார். இந்த இறப்புகளுக்கு எவர் மீதும் வழக்கு பதியப்படவில்லை. மேலும் இறந்தவர்களை கலவரக்காரர்கள் என காவல்துறை கூறியதோடு நிறுத்திக்கொண்டது. முஸ்லீம்களின் வீடுகளுக்கு நெருப்பு வைத்தல், கார்களை உடைத்தல் என சொத்துக்களை சேதப்படுத்துவதையும் மும்முரமாக செய்துள்ளனர். இதில் காவல்துறை அதிகாரிகளே ஆர்வமாக ஈடுபட்டுள்ளதையும் முஸ்லீம் மக்கள் பதிவு செய்துள்ளனர். 


திருமணம், சொத்துரிமையை சீர்திருத்தும் யூனிபார்ம் சிவில் கோட் சட்டமும் விரைவில் அமலாகவிருக்கிறது. நாடாளுமன்ற இடங்களிலும் எண்பத்தைந்து சதவீதம் இந்துக்களே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் முஸ்லீம்களின் பிரச்னைகளைப் பற்றி யார் பேசப்போகிறார்கள்?


புரோலா என்ற சந்தைப்பகுதியில் முஸ்லீம்கள் கடைக்கு எக்ஸ் என சிவப்பு நிறத்தில் அடையாளமிடம்பட்டுள்ளது. இந்த அடையாளத்தை உள்ளூர் இந்துத்துவ கூலிப்படையினர் வைத்து, அவர்களை இடத்தை காலி செய்யுமாறு மிரட்டிவருகின்றனர். ஏற்கெனவே வியாபாரத்தை புறக்கணிக்க மக்களிடம் பிரசாரம் வேறு நடக்கிறது. இடத்தை காலிசெய்தால் உயிர் மட்டுமாவது தப்பும் என்கிற ரீதியில் மிரட்டல்கள் உள்ளன. 


இந்துக்களின் பணம் முஸ்லீம்களுக்கு எதற்கு செல்லவேண்டும்? அவர்கள் அதை வைத்து தீவிரவாதம் செய்கிறார்கள், மசூதி கட்டுகிறார்கள் என இந்துத்துவ கூலிப்படை ஆட்கள் பகுத்தறிவாக பேசுகிறார்கள். இதில் இன்னொரு ஆச்சரியம், பாரதீய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முஸ்லீம்கள் சிலரே வாக்களிப்போம் என்று கூறுவதுதான். ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் முற்றிவிட்டது. என்ன செய்வது? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். 


கார்டியன் நாளிதழில் ஹன்னா எல்லிஸ் பீட்டர்சென், ஆகாஷ் ஹாசன் எழுதிய கட்டுரையைத் தழுவியது. 


hannah ellis petersen

aakash hassan







 




கருத்துகள்