அரசாட்சியைப் பிடிக்க மனிதர்களை அதீத ஆற்றல் கொண்ட கொலைமிருகங்களாக மாற்றும் மர்ம மனிதர்கள்!

 









டிரென்ஜி - ஃபயர் கிரின்


சீன திரைப்படம்


ஓன்றரை மணி நேர படம்


ஐக்யூயி ஆப்


டாங் மன்னர் கால ஆட்சியில் நீதித்துறையில் துணை இயக்குநராக பதவியேற்க வருகிறார் டி ரென்ஜி. துப்பறிவாளரான இவர், தலைநகரில் நடக்கும் ஃபயர் கிரின் வழக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து எப்படி துப்புதுலக்கி அரச துரோகிகளைக் கண்டுபிடித்து தண்டித்தார் என்பதே கதை. 


படத்தில் மெல்லிய காதல் ஒன்றுண்டு. அதுவும் இறுதியில் சில உண்மைகள் வெளியான பிறகு காணாமல் போகிறது. எனவே, பார்வையாளர்கள் வருந்த வேண்டாம். இங்கு ஷெர்லாக் ஹோம்ஸ் போல டி ரென்ஜி எப்படி துப்பறிகிறார், ஒரு மனிதனைப் பார்த்தால் எதையெல்லாம் கவனிக்கிறார் என்பதை பார்த்து வியக்கலாம். ஆச்சரியப்படலாம். படத்தில் அதற்கான நிறைய இடங்கள் உண்டு. 


டி ரென்ஜி, தலைநகரில் நீதித்துறைக்கு புதிய துணைத்தலைவராக பணிபுரிய வருகிறார். அவரது பலம் முழுக்க மூளைதான். தற்காப்புக்கலையோ, வாள் பயிற்சியோ கிடையாது. தெருவில் நி்ற்கும்போது ஒரு தேர் வேகமாக வருகிறது. அதிலிருந்து பெட்டி கீழே விழ, அதில் இருந்து வினோத விலங்கு ஒன்று ஓடுகிறது. பார்க்க, உடல் முழுக்க நெருப்பு பற்றி எரிவது போன்று உள்ளது. குதிரை போன்ற உருவம். குழந்தை ஒன்று தேர்சக்கரத்தில் அடிபட்டுவிடாமல் காக்க டிரென்ஜி முயல்கிறார். அப்போது அவருக்கு சிறப்பு போலீஸ் ஒருவர் உதவுகிறார். பின்னாளில் இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறுகிறார்கள். சிறப்பு போலீசுக்கு சம்பளம் குறைவு. அதேசமயம் சாப்பாடு மீது ஆசை அதிகம். எப்போதும் நெஞ்சில் கோழிக்கறி பார்சல் ஒன்றை சாப்பிட வைத்திருக்கிறார். 


நீதித்துறை தலைவரின் மகள் சூ, டி ரென்ஜி போன்ற வகையறா. இவளும் டி ரென்ஜி விசாரிக்கும் வழக்கில் இணைகிறாள். சூவுக்கு நகர் முழுக்க செல்வாக்கு உள்ளது. அதற்கு அவளது அப்பாவின் பதவி முக்கியக் காரணம். எனவே, போலீசுக்கு முன்னதாக சென்று குற்றவாளிகளை அடித்து உதைத்து விலங்கிடுகிறாள். அவளுக்கும் டிரென்ஜிக்கும் தொடக்கம் முதலே முட்டலும் மோதலுமாக உள்ளது. 


சிறப்பு போலீசும், சூவும் பேசிக்கொண்டே இருக்க கூடியவர்கள். நாயகன் டிரென்ஜி அந்த நேரத்தில் சூழலைக் கவனிக்க கூடிய ஆள். அவனது அறிவே அவர்களை ஆபத்திலிருந்து காக்கிறது. 


லி பி என்ற செல்வாக்கான அரசியல்வாதியின் பிள்ளைதான் விலங்காக மாறியவர் என்ற உண்மை தெரிய வருகிறது. ஏன் அப்படி மாறினார் என்பதைத் தேடும்போது விலைமாது ஒன்றுடன் ஏற்பட்ட காதலும் மணமும் டிரென்சி குழு அறிகிறது. அதில் பிரச்னை இல்லை. விலைமாதுவை சமூக, பொருளாதார, அரசியல் வட்டாரத்தில் மேலே உள்ளவர் திருமணம் செய்வது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும்? அதைதான் லிபியின் தாத்தாவும் கூறுகிறார். ஆனால் மகன் பெரும் படிப்பாளி என்பதால், அதை ஏற்க மறுக்கிறார். உள்ளபடியே கொஞ்சநாள் வாழ்கிறார்கள். பிறகுதான் லிபிக்கு உடல்நலம் சரியில்லாமல் விலங்காக மாறுகிறார். 


பின்னணி அரசியல்தான். கிளர்ச்சி அரசியலில் ஈடுபடும் குழு, மக்களின் சிலரைப் பிடித்து எறும்பு ஒன்றை கடிக்க வைத்து சுயநினைவே இல்லாத போர்வெறி கொண்ட விலங்காக மாற்றுகிறார்கள். இப்படி மாறியவர்கள் குணமாக வாய்ப்பில்லை. சாகும்வரை சண்டையிடும் வலிமை இந்த மனித விலங்குகளுக்கு உண்டு. இந்த பாதகத்தை யார் செய்தது என டி ரென்ஜி கண்டுபிடிக்கிறார். அவருக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படுவதில்லை. ஆனால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதிர்ந்து போகிறார்கள். 


கூலிக்கொலைகாரர்கள் வரும் சண்டைக்காட்சிகள் அனைத்துமே சிறப்பாக படமெடுக்கப்பட்டுள்ளன. டி ரென்ஜி, சிறப்பு போலீஸ் அதிகாரியைப் பற்றி அவர் யார் என யூகித்த விஷயங்களை சொல்லும்போதே அவரின் திறமை விளங்கிவிடுகிறது. சில துப்புகளை மட்டுமே வைத்துக்கொண்டு தேடித்தேடி பல்வேறு அம்சங்களை கண்டுபிடித்து ஒன்றுசேர்த்து விஷயத்தை புரிந்துகொள்கிறார். டி ரென்ஜி அரசு அதிகாரி. அவர் அரசரின் பிள்ளைகளில் யார் பக்கமும் நிற்காத ஆள். அரசியல் காரணமாகவே மனித விலங்குகள் உருவாகின்றன. அதைப்பற்றி டி ரென்ஜி கவலைப்படுவதில்லை. அரசியலோ, அரியணை ஆசையோ மக்களுக்கு துன்பம் நேரக்கூடாது என நினைக்கிறார். அதுதான் படத்தில் அவரது பாத்திரத்தின் தன்மை, இயல்பு. 



படத்தில் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு போலீஸ் அதிகாரி நண்பன், காதலி என இருவருமே கைவிட்டு போகிறார்கள். நண்பன் டி ரென்ஜியின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்துபோகிறான். காதலி, டிரென்ஜி வாங்கிக்கொடுத்த பரிசை அவனுக்கு திருப்பிக்கொடுத்துவிட்டு விலகிச் செல்கிறாள். இதற்கு அவளின் அந்தஸ்துதான் காரணம். 


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்