டாய்ச்சி கல்லை அடைவதற்காக அழிக்கப்படும் இனக்குழு!

 











டாய்சீஸ் பீஸ்ட் மவுண்ட்


சீன திரைப்படம்


ஒன்றரை மணிநேரம்


ஐக்யூயி ஆப்



டாய்ச்சி இனக்குழுவில் டாய்ச்சி கல் உள்ளது. அது சக்திவாய்ந்த ஒன்று. அதை கையகப்படுத்தினால் அவர் சகலகலா வல்லவன் ஆகிவிடலாம் என நம்பிக்கை, வதந்தி எல்லாம் இருக்கிறது. இதை யாரோ பரப்பிவிட பல்வேறு சக்தி வாய்ந்த இனக்குழுக்கள் டாய்ச்சி இனக்குழுவை ஓரிரவில் தாக்கி அழிக்கின்றன. அதில் மிஞ்சுவது, நாயகனும் அவனது தோழியும்தான். இருவரும் சிறு வேலைகளை செய்து பிழைத்து வருகிறார்கள். தங்கள் குடும்பத்தை அழித்த பகைவர்களை பழிவாங்க நாயகன் நினைக்கிறான். அதற்கான காலமும் வருகிறது. உண்மையில் அவனது இனக்குழுவைக் காட்டிக்கொடுத்த துரோகி யார்? அவன் அம்மா வயிற்றில் இருந்த பிறக்கும் தருவாயில் இருந்த குழந்தை எங்கே? டாய்ச்சி கல் சக்தி வாய்ந்த ஒன்றா என்பது பற்றிய கேள்விகளுக்கு படம் விடை தருகிறது. 


பழிவாங்கும் வெறி நம்மை அழித்துவிடும் என சொல்லி படத்தை சோகமான முடிவுடன் முடித்திருக்கிறார்கள். சோகம் என்று சொல்வதா, விதி என்று சொல்வதா? நாயகன், அவனுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போக அவள் எதிரியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துபோகிறாள். இவனும் கூட நினைவிழந்து போகுமளவு அடித்து உதைக்கப்படுகிறான். இதிலிருந்து மீள்பவன், பழிவாங்கும் வெறியை ஒதுக்கிவிட்டு தான் கற்ற கலையை, தத்துவத்தை நிதானமாக புரிந்துகொள்ளத் தொடங்குகிறான். அதன் பொருட்டே டாய்ச்சி கல்லை பாதுகாக்க தன்னையே தியாகம் செய்கிறான். இத்தனைக்கும் அவனது தங்கை யார் என சற்று முன்னர்தான் அறிந்திருப்பான். ஆனால் அவர்கள் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். 



டாய்ச்சி தற்காப்புக்கலையின் அடிப்படை தத்துவங்களை விளக்கி எடுத்துக்காட்டுடன் விளக்கியிருக்கிறார்கள். அதை நாயகன் புரிந்துகொள்ளும் விதம் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. நிலத்தை துளையிடும் விலங்கு, பாறைகளை குடையும் விலங்கு, சிலந்தி, பந்து போன்ற இரட்டை எலிகள் என படத்தில் நிறைய ஆச்சரியமான விலங்குகளோடு நாயகன் சண்டை போடுகிறான். படத்தில் நாயகனோடு, அவனது தந்தையும் பீஸ்ட் மவுண்டில் சிறைபட்டுவிடுவதாக கதையில் காட்டப்படுகிறது. அதுகூட அவர்கள் சார்ந்த குடும்பத்திற்கான நன்மைக்குத்தான். 


நாயகனின் அம்மாவின் அண்ணன், தாய்மாமன்தான் தீயசக்தி கொண்ட வில்லன். அவன் தன்னுடைய பெயரில் செல்வாக்கில் இனக்குழுவை உருவாக்க நினைக்கிறான். ஆனால், அவனது கெட்ட எண்ணம் அறிந்தோ என்னமோ, குழுத்தலைவர் பதவி நாயகனின் அப்பாவிற்கு வழங்கப்படுகிறது. டாய்ச்சி கல்லை அவர் அதற்கென சில கடவுச்சொற்களை போட்டு பராமரிக்கிறார். டாய்ச்சி கல் என்பது ஒரு சக்திதான். ஆனால் அதை ஒருவர் கட்டுப்படுத்த, பற்றில்லாத மனமும், தெளிவான புத்தியும், டாய்ச்சி கலையில் கட்டற்ற தேர்ச்சியும் பெற்றிருக்கவேண்டும். இல்லையெனில் ஒருவரின் உடலை, மனதை அக்கல் களங்கப்படுத்திவிடும். 


தாய்மாமன், நாயகனை ஏமாற்றி பீஸ்ட் மவுண்டிற்கு கூட்டிச்சென்று டாய்ச்சி கல்லை அடைய நினைக்கிறார். அவரது உண்மையான குணத்தை நாயகனின் தோழி கண்டுபிடிக்கிறாள். ஆனால் அதை முதலில் சொல்லும்போது நாயகன் ஏற்பதில்லை. பிறகு தெரிய வரும்போது காலம் கையில் இருப்பதில்லை. 


பீஸ்ட் மவுண்ட் என்பது டாய்ச்சி இனக்குழுவின் பொக்கிஷங்களை பாதுகாத்து வைப்பதற்கான இடம். அங்கு இனக்குழுவின் அடிப்படை விஷயங்களைக் கற்றவர்கள் மட்டுமே போய்வர முடியும். வெளியாட்கள் உள்ளே போனால், அங்கேயே கொல்லப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. 


பேராசை, பழிவாங்கும் வெறி ஆகிய சிந்தனைகள் அதையொட்டிய செயல்பாடு ஒருவரை எளிதாக வீழ்த்திவிடும் என்பதை காட்சி ரீதியாக கூறும் படைப்பு. 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்