சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா?









 சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா?


கணினி, இணையம் ஆகிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையில் நுழைந்தபோது நிறைய மாற்றங்கள் நடந்தன. வேலையிழப்பு, பழைய தொழில்கள் அழிவு இதெல்லாம் நடந்தது. பழையன கழிதல் புதிது கிடையாது. இப்போது அந்த இடத்தை ஓப்பன் ஏஐயின் சாட்ஜிபிடி பிடித்திருக்கிறது. 


கலிபோர்னியாவில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர், பீட்டர் பேக்கன், வகுப்பறையில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி பாடங்களை நேர்த்தியாக நடத்தி வருகிறார். அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவதோடு, அதைப்பற்றி ஜூம் மீட்டிங் கூட ஏற்பாடு செய்து பேசியுள்ளார். அனைத்து பாடங்களையும் ஆசிரியரே நடத்தாமல், சில எளிய விஷயங்களை சாட்ஜிபிடியிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அவரது கருத்து. பாடங்களை முற்று முழுதாக ஆசிரியர் கற்றுத்தருவது அழுத்தங்கள் நிறைந்த பாடத்திட்டத்தில் இயலாத ஒன்று. அதை சாட்ஜிபிடி மூலம் சாத்தியப்படுத்திக்கொள்கிறார் பீட்டர். 


தான் நடத்திய ஜூம் சந்திப்பில் கல்வியில் சாட்ஜிபிடி ஏற்படுத்தும் சாத்தியம், அதை எப்படி பயன்படுத்துவது என நாற்பது சக ஆசிரியர்களிடம் விவாதித்திருக்கிறார் பீட்டர். மருத்துவம் தொடங்கி ராணுவம் வரை செயற்கை நுண்ணறிவு மாற்றங்களை செய்து வருகிறது. சிலர் அதை ஏற்கிறார்கள். பாதகங்களை முன்னிறுத்தி பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் தொழில்நுட்பம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று.  பின்னாளில், சாட்ஜிபிடியை மாணவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என அரசுக்கு புகார் வர, அரசு அதன் பயன்பாட்டை தடை செய்தது. அதற்குளளாகவே ஆசிரியர்களுக்கான சாட்ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு வகுப்பறை என்ற பெயர்களில் சமூக வலைத்தளங்களில் குழுக்கள் உருவாகி இயங்கி வந்தன. இதில் லட்சக்கணக்கான உறுப்பினர்களும் இணைந்திருந்தனர் என்றால், அதன் செல்வாக்கைப் பார்த்துக்கொள்ளுங்கள். 


இதில் பாதகமான விஷயம், இணையத்தில் உள்ள தவறான போலிச்செய்திகளைக் கூட சாட்ஜிபிடி சங்கோஜம் பார்க்காமல் திரட்டி கட்டுரையாக தந்துவிடும் என்பதுதான். இதன் காரணமாகவே அதை அமெரிக்க அரசு பள்ளிகளில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. பொறுப்புணர்வோடு பயன்படுத்த கூறலாமே தவிர செயற்கை நுண்ணறிவை முற்றாக தடுப்பது தவறான நடவடிக்கை என பீட்டர் கருதுகிறார். 


சியாட்டிலுள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கணித வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த மாணவர், வெக்டார், திரிகோணவியல் ஆகியவற்றை சாட்ஜிபிடி மூலம் ராப் பாடலாக மாற்றி பாடிக்காட்டினார். கணித நிரூபணங்களைக் கூட ராப் பாடல்களாக பாடி போட்டியில் செயல்படுத்தி ஆச்சரியப்படுத்தினர். நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை, நவீன ஆங்கிலத்தில் மாற்றி அதன் கருத்து, மையப்பொருள் பற்றியும் கூட மாணவர்களுடன் ஆசிரியர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். 


வகுப்பறையில் ரீட் வைஸ் என்ற மென்பொருளை மாணவர்கள் பயன்படுத்தி, பீடிஎப் கோப்பில் உள்ள முக்கிய அம்சங்களை மட்டும் தொகுத்து வாசிக்கத் தொடங்கியுள்ளனர். போட்டோமேத் என்ற ஆப் மூலம், கணித பிரச்னைகளை படம் எடுத்து அதன் வழியாக நிரூபணங்களை எளிதாக அடையாளம் காண்கிறார்கள். 


எழுத்தாளர்கள் ஜார்ஜ் ஆர்வெல்லின், மார்க்கரேட் அட்வுட் நாவல்களைப் பற்றி சாட்ஜிபிடி எழுதிய கட்டுரை, அதற்கு எதிராக மாணவர்கள் எழுதிய கட்டுரை என உருவாக்கி போட்டிபோட்டு வருகிறார்கள். மாணவர்கள் பள்ளி முடித்து கல்லூரி செல்லும்போது, அதற்கான சிபாரிசுக் கடிதங்களை ஆசிரியர் எழுதித்தர செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்கள். பத்து மடங்கு சிறப்பாகவே இருக்கிறது என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 


இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு புரிந்துகொள்ளும் வகையில் கதாபாத்திரங்கள், முரண்பாடுகளைக் கொடுத்துவிட்டால் சாட்ஜிபிடி எளிதாக சிறுகதை ஒன்றை எழுதிவிடும். ஒருமுறை அதை சரிபார்த்துவிட்டு மாணவர்களுக்கு கூறிவிடலாம். இதனால் குழந்தைகளுக்கான கதை என எங்கும் தேடவேண்டியதில்லை. 


1.2


செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்பம். ஒரு கருவி. மனிதர்கள் திணறும் பிரச்னைகளுக்கு அது சில தீர்வுகளைத் தருகிறது. ஆனால் நிறையப் பேர் அதை மனிதர் போல நினைத்து மாணவர்களின் மனநலனை அது புரிந்துகொள்ளாது. அதற்கேற்ப அவர்களுக்கு விஷயங்களை கூறிச்செல்லாது என்று கூறுகிறார்கள். உண்மையில் செயற்கை நுண்ணறிவு அதற்கான திறன்களைக் கொண்டது என யாரும் கூறவில்லையே..


வகுப்பறையில் சாட்ஜிபிடி பாடம் நடத்தாது. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு அது கூடுதலாக நின்று உதவி செய்யும் உதவியாளர். அவ்வளவே. பாடங்களை வேகமாக விரைவாக நடத்த பதில்களை தேட செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. சில நாடுகளில் இணையத்தை அணுகுவது கடினமாக உள்ளது. அதை அணுகுபவர்கள், அணுக முடியாதவர்கள் என பாகுபாடு உருவாகுவது தவிர்க்க முடியாது. இப்படியான சமூக சூழலுக்கு அந்த நாட்டு அரசே காரணம். 


சாட்ஜிபிடி ஆங்கிலத்தில் இயங்குகிறது. மேலும், இணையத்தில் உள்ள மேற்குலக விஷயங்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறது. எனவே, வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், ஏழை, விளிம்பு நிலையில் உள்ளவர்களைப் பற்றிய அறிவு அதற்கு குறைவாகவே இருக்கும் என்று வாதம் உருவாகிறது. செயற்கை நுண்ணறிவு மாடல், அதற்கு எந்தளவு தகவல்களைக் கொண்டு பயிற்சி அளிக்கிறோமோ அந்தளவு மேம்பட்டதாக திறன் கொண்டதாக மாறும். 





ஒலிவியா வேக்ஸ்மேன்

டைம் 


கருத்துகள்