நாய் போல ஒடுங்கி வாழும் இளைஞன் வீர தீர சூரனாகி வாள் எடுக்கும் கதை!

 










சோல் ஆஃப் பிளேட்ஸ்


சீன திரைப்படம் 


ஐக்யூயி ஆப்


நாம்கூங் என்ற குடும்பம் வாள் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் அரும்பாடுபட்டு வாள் ஒன்றைச் செய்கிறார். ஆனால் அப்படி செய்யும்போது மனதில் உருவாகும் ஆசை,வாளில் தீய ஆன்மாகவாக மாறுகிறது. எனவே, அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அந்த நேரம் பார்த்து புகழ்பெற்ற வாள்வீரர், அதை திருடிக்கொண்டு செல்கிறார். அவருக்கு அந்த வாளை வைத்து நிறைய விஷயங்களை சாதிக்க ஆசை. உண்மையில் அந்த வாளைத் தேடி ஏராளமானவர்கள் சுற்றி வருகிறார்கள். அந்த வாள் யாருக்கு கிடைத்தது என்பதே கதையின் இறுதிப்பகுதி. 


படத்தில் நாயகனுக்கு பெயரே நாய்தான். மிஸ்டர் நாய் என அழைத்து தூற்றுகிறார்கள். அவனது இளமைக்காலம் கொடுமைகள் நிறைந்தது. ஒரு துண்டு இறைச்சிக்காக நாயுடன் சண்டையிட்டு வாழ்கிறான். அப்படியே வாழ்ந்து கோழைத்தனமும், உயிரைக் காப்பாற்றி்க்கொள்ளும் சாதுரியமும் வருகிறது. ஆனால் வீரம், தைரியம், நேர்மை வரவில்லை. இதை அவன் மெல்ல கற்றுக்கொண்டு வாளை எப்படி கையில் எடுத்து வாளின் ஆன்மா இருந்தாலும் இல்லையென்றாலும் வீரனாக இருக்கிறான் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார்கள். 


படம் நெடுக நாயகன் கோபம்கொள்வான் என எதிர்பார்த்து நாம்தான் கொலைவெறி கொள்கிறோம். நாய் என பிறர் சொல்வதற்கு ஏற்ப அடங்கி அநீதி கண்டால் கூட வாலை குறுக்கிக்கொண்டு தள்ளிப்போகிறார். விபச்சார விடுதிக்கு இரண்டு மூட்டை அரிசி கொடுத்து வாங்கப்பட்ட பெண் தன்னைக் காப்பாற்ற நாயகனிடம் கெஞ்சுவாள். நாயகனுக்கு அப்போது தைரியம் இருக்காது. பிறகு, காசு சேர்த்துக்கொண்டு அவளைப் பார்க்க வரும்போது, அவளை வல்லுறவு செய்து சித்திரவதை செய்து கொன்றிருப்பார்கள். அவளது உடல்தான் அவனுக்கு காணக்கிடைக்கும். அப்போதும் கூட அவனுக்கு தன் மீது கோபமோ, குற்றவுணர்ச்சியோ வராது. 


ஒன்றரை மணி படத்தில் கடைசி பதினைந்து நிமிடங்களில் நாயகனுக்கு வீரம் வந்து வில்லியை பழிவாங்கி.... ஒருவழியாக நீதி நிறைவேற்றப்படுகிறது. 


படத்தில் நாயகன் என்று காட்டப்படுபவர் நாயகன் அல்ல. ஆன்மாவைக் கொண்ட வாளை திருடி வரும் வாள்வீரர் இருக்கிறார் அல்லவா, அவர்தான் நாயகன். தவறாக செயல்பட்டு நிறைய வீரர்களைக் கொன்றதால் தனது கரத்தை தானே வாளால் வெட்டி செயலிழக்கச் செய்துகொண்டு அமைதியாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் திருப்பம் என்பது, அவருடன் வாழும் மகள் போன்ற பெண்தான். அவள் யாரென படத்தின் இறுதியில்தான் சொல்கிறார்கள். சுவாரசியமான விஷயம் அது. 


மற்றபடி, நாயகனைத் தேடி நாம்கூங் குடும்ப வீரர்கள் வருவது, அதில் ஒரு பெண் தன்னுடைய உடலைக் கொடுத்து ஆன்ம ஆற்றல் வாளைத் தேடச்சொல்வது என்ற காட்சிகள் எல்லாம் பார்த்தாலே சூழ்ச்சி வலை என எவருக்கும் தெரியும். ஆனால் நாயகனுக்கு தெரியவில்லை. ஆம். நாயகன் ஒரு கண்ணில்லாத நாய்தான். 


படத்தில் வாள் சண்டை போடும்போதே துப்பாக்கியின் அறிமுகத்தைக் காட்டுகிறார்கள். துப்பாக்கி தோட்டாக்களிலிருந்து நாயகன் தப்புவது எல்லாம் பார்த்தாலே சிரிப்பு வரும் சிஜி.... குறைந்தபட்சம் துப்பாக்கியைத் திருடி சுட்டால் கூட நியாயமாக இருந்திருக்குமே இயக்குநர் ஜி?


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்