பழங்குடிகளின் வாழ்வாதாரங்களை சட்டம் மூலமாக பறிக்கும் தரகு கும்பல்கள்!
உலக நாணய நிதியம், உலக வர்த்தக கழகம் ஆகிய அமைப்புகள் உலக நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டும் பெருநிறுவனங்களுக்கு தரகர்கள் போலவே செயல்படுகின்றன. இயற்கையை சுரண்டுவதோடு, பழங்குடிகளை வாழ்வாதார நிலத்திலிருந்து வெளியேற்றும் வகையில் சட்டங்களை திருத்த அரசுகளை வற்புறுத்துகின்றன. அப்படி சொல்லித்தான் நிதியுதவிகளை தாராளமாக தருகின்றன. நவ தாராளவாத நிறுவனங்களான இத்தகைய அமைப்புகளே இயற்கை அழிக்கும் ஆபத்தான சக்திகள்.
நவ தாராளவாத நிறுவனங்களோடு அமைப்புகளோடு போராடுவது எளிதல்ல. சமூக வலைத்தள ஆப்களை விலைக்கு வாங்கும் அரசுகள், அதன் வழியாக போராட்டம் பற்றி, போராட்டக்காரர்கள் பற்றிய மோசமான அவதூறுகளை பரப்புகின்றன. மக்களை சாதி, மதம், இனம் வாரியாக பிரிக்கின்றனர். பிறகு எளிதாக இயற்கை வளங்களை வேட்டையாடுகின்றனர். அரச பயங்கரவாதம் சட்டப்பூர்வமாக இயங்கத் தொடங்கிவிட்டது.
சோசலிசவாதிகள், சூழலியலாளர்கள், சூழல் சோசலிசவாதிகள் பழங்குடிகளுக்கு ஆதரவாக நிற்பது அவசியம். அப்போதுதான், காடுகளை பறிக்க முயலும் கொள்ளையர்களை தடுத்து மக்களுக்கு உதவ முடியும். சுரங்கம், கச்சா எண்ணெய், உயிரி எரிபொருள் ஆகியவை இயற்கை வளங்களை சுரண்டி மாசுபடுத்துபவை. இந்த தொழில்களுக்கு பெருநிறுவனங்கள் காலம்தோறும் அரசுகளை நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றன. இதற்கு சூழல் சோசலிசவாதிகள், நேரடியாக எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
இனவெறி பிடித்த அரசுகள், ஆபத்தான வேதி தொழிற்சாலைகளை சிறுபான்மை மக்களின் குடியிருப்புகளுக்கு அருகில் அமைக்கிறார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் மக்களின் நிலம், நீர், காற்று என அனைத்துமே கெட்டு பல்வேறு நோய்கள் வந்து இறந்துபோகிறார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், அத்தகைய இடங்களில் சமூக அக்கறை என்ற பெயரில் மருத்துவமுகாம்களையும் வேதி தொழில் நிறுவனமே நடத்துவதுதான். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய உண்மைகளை மறைத்து வைக்க முடியும்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சூழல் போராளி, சஜிதா கான். இவர், அவரது இனக்குழு அருகில் ஆபத்தான தொழிற்சாலைகள் இயங்கி வந்ததை அறிந்து அதை மூட முயன்றார். ஒருகட்டத்தில் அவரே புற்றுநோய்க்கு பலியானார். நேரடியாக தொழிற்சாலையை மூடச்சொன்னால் நச்சு வாயுக்களை குறைத்துக்கொள்வதாக அந்த தொழிற்சாலை வாய்ஜாலம் காட்டியிருக்கிறார்கள். நிலத்தில் கொட்டப்படும் கழிவுகள், நீர்நிலையில் எளிதாக கலந்து நோயை உருவாக்கும் என்ற உண்மையை மக்கள் உணரவில்லை. நோயைத் தீர்க்க மருந்து சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் அதற்கு முன்னர் நோய் உண்டாவதற்கு என்ன காரணம் என்பதை அறிவது முக்கியம். நல்ல மருத்துவர் நோய் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய முயல்வார்.
மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதியாக மாறினாலும் கூட தான் பின்பற்றும் கொள்கைகளை மறக்காத சூழல்வாதிகள் உண்டு. அதில் ஒருவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் ஓரிகிளாஸ். மார்க்சிய தத்துவத்தை ஆழக்கற்றவர். தொழிற்சங்கவாதி. அவரது இனக்குழு வாழும் இடத்திற்கு அருகில் வேதிப்பொருட்கள் கழிவை தொழிலாளர் கட்சி கொட்டுவதற்கு திட்டமிட்டது. அதை தீர்மானமாக எதிர்த்தவரை உடனே கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. நிக் அதைப்பற்றியெல்லாம் கவலையே படவில்லை. தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். பொய்யான, போலியான வாக்குறுதிகளை அவர் போலியாக கூட கேட்க தயாராக இருக்கவில்லை.
பின்னாளில் லெய்சார்ட் நகர மேயராக நின்று வெற்றி பெற்றார். உறுப்பினர்கள் கூட்டத்தில் வலதுசாரி உறுப்பினர்கள் பேசும்போது காதுகேட்கும் கருவியை ஆஃப் செய்து வைத்துவிடுவது அவரது வழக்கம். அந்தளவு தான் நம்பிய கருத்துகள் மீது நம்பிக்கை வைத்திருந்தார். பொதுமக்கள், அரசு நிர்வாகம் தீட்டும் திட்டங்கள் பற்றி தங்கள் கருத்துகளை கூறும் செயல்பாடுகளைக் கொண்டு வந்தார்.
சூழல் சோசலிசவாதியின் போராட்டம் குறிப்பிட்ட புள்ளியில் முடிவுக்கு வருகிறது என்று எப்போதும் கூறமுடியாது. பசுமைக்கட்சியினருக்கு அடிப்படையான ஆதரவாக தொழில்சங்கங்கள் உள்ளன. தொழிலாளர்களின் உற்பத்தி, அதன் விநியோகம் எல்லாமே சூழல் மாசுபாடு, பாதுகாப்பு தொடர்பானவை. இந்த தொழிலாளர்கள் அனைவருமே பசுமைக் கட்சியின் அடிப்படை கொள்கைகளை புரிந்துகொண்டவர்கள் என்று கூற முடியாது. அப்படி எதிர்பார்க்கவும் முடியாது. தொழில் சார்ந்து, சுயநலம் கொண்டு நிலக்கரி உற்பத்தியை, அணு ஆயுதங்களை, விமானநிலை விரிவாக்கத்தை, எட்டுவழி சாலைகளை ஆதரிக்கலாம். இதை பெரிதுபடுத்தவேண்டியதில்லை. முடிந்தால் சூழல் மாசுபாடுகளை விளக்கி கூறலாம்.
அணு ஆயுதங்களை தயாரிப்பதை விட காற்றாலை உற்பத்தியும் நிறுவுதலும் முக்கியம். தனிநபருக்கான கார்களை விட பொதுப்போக்குவரத்திற்காக பேருந்துகளும், ரயில்களும் கூடுவது அவசியம். தூய ஆற்றலை உருவாக்கும் அதேசமயம், மாசுபடுத்தலை அதிகரிக்க கூடாது. கொள்கைகளை, தத்துவங்களை ஒருவர் தீவிரமாக வாசித்திருந்தால் மட்டுமே அதை புரிந்துகொண்டு செயல்பட முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக