உடற்பயிற்சியை ஊக்குவிக்க என்ன செய்யலாம்?
சும்மா செய்யுங்க ப்ரோ
இதயத்தசைக்கு நல்லது, மண்ணீரலுக்கு மிக நல்லது என்றெல்லாம் உடற்பயிற்சியை சிலர் கூறுவார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். எளிமையான உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.அவ்வளவுதான். பலாபலன்களை ஆராய்ந்து படிப்பவர்கள், உடற்பயிற்சியை செய்ய மாட்டார்கள் என மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் சேகர் விளக்கி, நோ ஸ்வெட் ஹவ் சிம்பிள் சயின்ஸ் மோட்டிவேஷன் கேன் பிரிங் யூ எ லைஃப்டைம் ஃபிட்னெஸ் என்ற நூலைக்கூட எழுதியிருக்கிறார். நாளையைப் பற்றிய யோசனை வேண்டாம். இன்று உடற்பயிற்சி செய்யுங்கள். நாளைக்கு வேலையை நாளை பார்ப்போம்.
எளிய உடற்பயிற்சி போதும்
இணையத்தில் அனடோலி என்ற உடற்பயிற்சி வல்லுநர் இருக்கிறார். ஜிம்களுக்கு போய் அங்கு போலியாக எடையைத் தூக்கி வீடியோபோடும் ஆட்களை கிண்டல் செய்வதே அவர் வாடிக்கை. அவர் அளவுக்கு பார்பெல் தூக்கி பயிற்சி செய்யவேண்டியதில்லை. புஷ் அப் எடுக்கவேண்டியதில்லை. உங்களால் முடிந்த பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சியை நீங்கள் தண்டனையாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்போதுதான் அதை தொடர்ந்து செய்யமுடியும்.
பழக்கமே சிறக்கும்
காரை ஓட்டக் கற்கும்போது கண்ணாடியைப் பார்ப்போம். பின்னால் வரும் வண்டிகளை கவனிப்போம். கியரை போடுவோம். மாற்றுவோம். அருகில் இருப்பவர்களைக் கூட பெரிதாக கவனிக்க மாட்டோம். பழகியபிறகு, ஏஆரின் பாடல்களைக் கேட்டபடி எஃப்1 ரேசில் ஓட்டுவது போல ஓட்டுவோம். தொடங்கியதுதான் தெரியும். அதற்கு இடையில் எப்படி ஓட்டினோம், சில இடங்களை எப்படி கடந்தோம் என்பதெல்லாம் நினைவிலேயே இருக்காது. அதேதான் உடற்பயிற்சியிலும் கூட. குறிப்பிட்ட நேரத்திற்கு எழ அலாரம் வைக்கிறீர்கள். எழுந்து பயிற்சி செய்துவிட்டு குளிக்கிறீர்கள். சாப்பிடுகிறீர்கள். வேலையைப் பார்க்கிறீர்கள். இதை மறுக்க கூடாது என்பதாக உடற்பயிற்சி மாற வேண்டும். செய்வதை தவறவிடக்கூடாத பழக்கம் என மாற்றிக்கொள்வது முக்கியம். பலாபலன்களைப் பற்றி யோசிப்பது, பத்திரிகைகளுக்கு கட்டுரையாக இடத்தை நிரப்ப அவசியம். நமக்கு உதவாது.
நண்பா நண்பா
சாம்பார் வடை தின்று உடற்பயிற்சியை முடிக்கும் நண்பர்களை சந்திக்கிறீர்களா? அவர்களை விட்டு விலகுவதே உங்கள் மனநலனுக்கு நல்லது. உங்களுக்கும் காபி, மைசூர் போண்டா வாங்கிக்கொடுத்து வயிறு வீங்க வைப்பார்களே தவிர உடல்நிலை சற்றும் பயிற்சியால் முன்னேறாது. உடற்பயிற்சி மீது ஆர்வம் கொண்டவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு ஊக்கம் தரும். பயிற்சி செய்யும்போது நம்பிக்கை வரும்.
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்
கூடவே உடற்பயிற்சி செய்யும் ஆன்ட்டிகள், இளைஞர்கள் என யாராகவேண்டுமானாலும் இருக்கலாம். இத்தனை நாட்களுக்குள் இப்படியான முன்னேற்றம் என சவால் விட்டு அதை வென்று காட்டலாம். அல்லது தோற்றும் போகலாம். அதெல்லாம் உங்களது மன உறுதியைப் பொறுத்தது. சவால் விடுவது சிலரை மன ரீதியாக தீவிரமாக முடுக்கும். அனைவருக்கும் இது பொருந்தாது. ஆனால் பெரும்பாலானவர்கள் சவாலில் வெல்லவே முயல்வார்கள். சவாலும் கூட நல்லதுதான்.
பணத்தை முதலீடாக உடற்பயிற்சியில் போட்டு அதை மறக்காமல் இருப்பது. குறைந்தபட்சம் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் பணம் போய்விடும் என நம்மில் பலர் நினைப்பார்கள் . பயிற்சி செய்வார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை பெட்டாக கட்டிக்கூட உடலை மேம்படுத்தலாம்.
கையில், காதில், கண்ணில் அணியும்படி ஏராளமான டிஜிட்டல் டிராக்கர்கள் வந்துவிட்டன. அவற்றை ஆர்டர் செ்யது அணிந்து உடற்பயிற்சி செய்யலாம். உடலை தீவிரமாக கண்காணித்து உடல் எரிக்கும் கலோரிகளை அளவிடலாம். பக்கத்தில் இருக்கும் ஆட்களை விட அறிவியலை நம்பலாம். ஏமாற்றாது. இன்று சாதாரணமாகவே ஆபீசுக்கு ஸ்மார்ட் வாட்ச்சுகளை பலரும் அணிந்து வரத் தொடங்கிவிட்டனர். எனவே அதை வாங்குவதும் பயன்படுத்துவதும் பெரிய பிரச்னையாக இராது.
கருத்துகள்
கருத்துரையிடுக