எட்டு வஞ்சகர்களால் கொல்லப்பட்ட இரண்டு வாள் வீரர்களின் பிள்ளைகள் போடும் பழிக்குப்பழி திட்டம்!
தி ஹைடன் ஃபாக்ஸ்
சீன திரைப்படம்
ஒன்றரை மணி நேரம்
ஐக்யூயி ஆப்
இரண்டு சிறந்த வாள் வீரர்கள், எட்டு எதிரிகளால் நயவஞ்சகமாக வாளில் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களின் இறப்பிற்கு, அவர்களது பிள்ளைகள் பழிவாங்குவதுதான் கதை.
இந்த திரைப்படத்தின் பலமே சண்டைக்காட்சிகளும். திடீரென நடக்கும் பல்வேறு திருப்பங்களும்தான்.
ஒரே வரியில் மேலே கதையை சொன்னாலும் படத்தை பார்ப்பவர்களுக்கு நாயகன் யார், எதனால் இப்படி துரோகியாக மாறி நடந்துகொள்கிறான் என்பது புரியாது. அதற்கெல்லாம் இறுதியாகத்தான் பதில் சொல்கிறார்கள். திரைப்படம் எடுத்த வகையிலும் நிறைய மெனக்கெடல் உள்ளது. இறுதிக்காட்சி முழுக்க பனிபோர்த்திய இடத்தில் நடக்கிறது. அதுவே ஒரு சொல்ல முடியாத திகிலை, பயத்தை மனதில் ஏற்படுத்துகிறது.
ஹூ யிடாவோ என்ற வாள் வீரர் ஒரு பொக்கிஷத்திற்கான சாவியை வைத்திருக்கிறார். அதற்கான வரைபடமும் இருக்கிறது. அதைப் பெறவே எட்டு வில்லன்கள் அவரையும், இன்னொரு எதிராளியையும் திட்டமிட்டு மோதவிட்டு விஷம் வைத்து கொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியாத விஷயம், அந்த பொக்கிஷத்தை அவ்வளவு எளிதாக பெற முடியாது.
எட்டுபேர்களும் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு இன்னொருவரை வாய்ப்பு கிடைத்தால் கொல்ல நினைக்கிறார்கள். இவர்களிடம்தான் நாயகன் வேலை செய்கிறான். அடியாள் போலத்தான். கூடவே இளம்பெண் ஒருத்தியும் இருக்கிறாள். அவள்தான் அவனை வழிநடத்துகிறாள். இருவருமே எட்டு வில்லன்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அதை அவர்கள் படத்தின் இறுதியில்தான் கூறுகிறார்கள்.
படத்தில் நாயகனின் முகத்தை தெளிவாகவே பார்க்கவே முடியாது. இறுதி சண்டைக்காட்சியில்தான் அவரது முகமே தெரியும். விரக்தியும், சோகமும், நம்பிக்கையின்மையும் கொண்ட முகம். பழிவாங்குவதற்காகவே உயிர் பிழைத்து வாழ்பவர். அவரது வாழ்க்கை பற்றி இறுதியாக வில்லன் கூறுவதும் அதற்கு உடனடியாக எதிர்வினை தெரிவித்து சண்டையிடுவதும் கூட போலியானதுதான்.
இறுதியாக அவர் தனது அப்பாவைப்பின்பற்றி வாளால் செய்யும் ஒரு செயல்முறைதான், அவர் எந்தளவு பயிற்சி எடுத்திருக்கிறார் என்பதை சொல்வதற்கான காட்சி. வில்லனை கத்தியால் குத்தி பனிக்கட்டியில் நகர முடியாமல் செய்துவிட்டு வெடிகுண்டு வைத்து கொல்கிறார். கூடவே, எட்டு வில்லன்களை ஏற்பாடு செய்த அரசரையும் நாயகனும் நாயகியும் பழிவாங்குவதோடு படம் நிறைவு பெறுகிறது.
நட்பு, துரோகம், விசுவாசம் பற்றிய கேள்விகள் படத்தில் எழுந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அதைபற்றி எட்டு வில்லன்களும் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. ஆனால் பேசுகிறார்கள். படத்தில் கழுதைப்புலி பள்ளத்தாக்கு காட்சிகள் பீதியூட்டுபவை. குழந்தையின் சிரிப்பொலிபோல கத்திக்கொண்டு கழுதைப்புலிகள் பாய்வது, அவற்றை வீரர்கள் எதிர்கொண்டு தடுமாறும் காட்சி உண்மையில் பிரமாதம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக