சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !

 












பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் 

தி லிஸ்டனர்


சீன டிவி தொடர் 


34 எபிசோடுகள் 



சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது. 


பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவருக்கு வளர்ப்பு தந்தை பேராசிரியர் லாங் சாமிங். இருவரும்தான் அடிக்கடி சந்திப்பார்கள். அலுவலக சந்திப்புகளில் மிங் சுவானின் சீடர்தான் அறிக்கையை சமர்பிப்பார். மிங் வெளியே சுற்றிக்கொண்டிருப்பார். 


இப்படியான நேரத்தில் அருகிலுள்ள நகரத்தில் மம்மி வழக்கு ஒன்று வருகிறது. அதாவது இறந்துபோனவர்கள்  உடலில் நீர்ச்சத்தே இல்லாமல் வறண்டு சக்கை போல உள்ளது. அதை லினன் துணி போட்டு கட்டி தூக்கி வீசிப்போயிருக்கிறான் கொலைகாரன். இந்த வழக்கு தொடர்பாக தேடும்பது குற்றவாளியின் முகம் என மிங் சுவானின் முகத்தை அடையாளம் காட்டுகிறார்கள். எனவே அங்கிருந்து பிக்சின் என்ற இளம்பெண், மிங்க் சுவானை குற்றவாளியாக்கியே தீருவது என விசாரிக்க அவர் உள்ள காவல்நிலையத்திற்கு வருகிறாள். அவள், ஏற்கெனவே மிங்கை குற்றவாளி என மனதில் தீர்மானித்துக்கொண்டு விசாரிக்கிறாள். அதை காவல்நிலைய தலைவர் முதலிலேயே அடையாளம் கண்டு கொள்கிறார். பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. 


ஆணவமாக, அலட்டலாக வழக்குகளை பிக்சின் விசாரிக்கிறாள். ஆனால் அந்த வழக்குகள் எதிலும் அவளால் சரியான குற்றவாளிகளை அடையாளம் காண முடிவதில்லை. அனைத்திலும் மிங் சுவானின் தடய அறிவியல் அறிவே, ஆதாரங்களை தேட உதவியாக உள்ளது. மேலதிகமாக அவரே விசாரணை செய்யவும் வருகிறார். பல நேரங்களில் குழுவுக்கு கேப்டன் லுவோ பிக்சன் தலைவரா, அல்லது மிங் சுவான் தலைவரா என எண்ணும்படியாக உள்ளது. அதேநேரம் மிங் சுவானுக்கு தன்னைப் பற்றி பிக்சன் விசாரிக்கிறாள் என்பதும் தெரிகிறது. விசாரிக்கட்டுமே என விட்டுவிடுகிறார். பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஒருகட்டத்தில் பிக்சன், மம்மி வழக்கில் முன்னேற முடிவதில்லை. 


அதேநேரம் பிற வழக்குகளை தீர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறாள். அதில் மிங் சுவான் காட்டும் புத்திசாலித்தனம் அவளை ஈர்க்க, ஆதாரமே குற்றங்களை அடையாளம் காண முக்கியம் என்ற கொள்கை மாறி, உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கவேண்டும் என மிங்கின் கொள்கைப்படி தடம் மாறுகிறாள். ஆம். அவனை காதலிக்கத் தொடங்குகிறாள். மிங்கைப் பொறுத்தவரை ஆபீசுக்கு வெளியில் வேலையைப் பற்றி பேசும் ஆள் கிடையாது. ஆனால், பிக்சன் போகும் இடமெல்லாம் வழக்கு பற்றியே பேசிக்கொண்டிருப்பாள். அவள் புறவயமான ஆள். மிங் அகவயமான ஆள். என்ன யோசிக்கிறான், என்ன செய்யப்போகிறான் என அவனாக சொன்னால்தான் உண்டு. அந்த மர்மமான குணமே பிக்சனை ஈர்க்கிறது. 


மிங் சுவான், உயிரியல் பெற்றோரை தேடி வருகிறார். அவரது வளர்ப்பு பெற்றோர்தான் அவருக்கு மிங் சுவான் என பெயர் வைக்கிறார்கள். பிறகுதான், அவரை பேராசிரியர் லாங் தனது பிள்ளை போல பார்த்து வளர்க்கிறார். பிள்ளை, மாணவன் என வைத்துக்கொள்ளலாம். தனியாக வீட்டில் வசிக்கும் அவருக்கு நண்பர்கள் என்றால் காவல்துறையில் உள்ள டிங் என்பவர் மட்டுமே. மது அருந்தாத ஆள். பொதுவாகவே மிக குறைவாக பேசும் ஆள். வழக்கு தொடர்பாக மட்டுமே விவாதிப்பவர். சொந்த வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறார். இளமைக்கால நினைவுகள் ஏதும் இல்லாதவராக இருக்கிறார். அப்பா வெளிநாடு செல்ல, அம்மா மி்ங்கை பிரசவித்துவிட்டு இறந்துபோகிறார். அனாதை ஆசிரமத்தில் வளரும் மிங் பின்னாளில் தத்துகொடுக்கப்படுகிறார். இந்த மர்மங்களின் பின்னணி, அவரது அப்பா எங்கே, அவர்தான் மம்மி கொலைகளின் சூத்திரதாரியா என்பதை கூறுகிறார்கள். ஒரு வழக்கு முடிந்தவுடன் அந்த வழக்கு தொடர்பான சில காட்சிகளை நவீன நாடகம் போல செய்து காட்டுகிறார்கள். சலிப்பூட்டுகிறது. இயக்குநர் இதை ஒருமுறை செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் செய்வது அலர்ஜியை ஏற்படுத்துகிறது. 


மிங் சுவான், கேப்டன் லுவா, மிங்கின் சீடர், அவளின் காதலன் ஷியோபாய், அதிகாரி டிங், அவனின் மனைவியான காவல்துறை தலைவர் ஸாங் என முக்கியப் பாத்திரங்கள் அனைவருமே பரவாயில்லை ரகத்தில் நடிக்கிறார்கள். இத்தொடரில் நாயகன், நாயகியை முத்தமிடும் காட்சிகள் கிடையாது. கட்டி அணைக்கும் ஒரே ஒரு காட்சி உண்டு. 


கேட்பவன் என எதற்கு தொடருக்கு பெயர் வைத்தார்கள்? பிணங்களை கூராய்வு செய்யும் மருத்துவர், இறுதி நேரத்தில் அந்த மனிதன் என்ன யோசித்திருப்பான் என்பதை கற்பனை செய்யும் ஆர்வம் கொண்டவர். பிணம்,உயிருடன் உள்ள மனிதர்களுக்கு என்ன சொல்லவருகிறது என்பதை அறிய மிங் சுவான் முயல்கிறார். 


குற்றவாளி என பிறர் தீர்மானித்து அவர்களை மரியாதையின்றி நடத்தும்போது, மிங் சுவான் மட்டுமே அப்படி ஒரு குற்றம் செய்ய பின்னணி காரணம் என்னவென்று தேடுகிறார். அதுதான் தொடரை ஆச்சரியமான கோணத்தில் பார்க்கவைக்கிறது. 34 எபிசோடுகள் என்பது இந்த கதைகளுக்கு அதிகம். பெரும்பாலான குற்றவழக்குகள், முக்கியமான மம்மி வழக்கிலிருந்து காவலர்களை திசைதிருப்ப நடத்தப்பட்டது என்ற விவரம் தெரிய வரும்போது ஒரே நேரத்தில் ஆச்சரியமாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. 


இறுதியாக மம்மி கொலைகாரன் யார் என்று தெரியும்போது, கொலையாளியை நம்ப முடியவில்லை. ஏனெனில் அதை செய்பவர் அந்தளவு உடல் வலு இல்லாதவர். ஆனாலும் தனது ஆசிரியர் இறந்துபோனதற்காக பழிவாங்குகிறார். அவர் கொல்லும் ஆட்கள் அனைவருமே அறிவியல் விஞ்ஞானிகள். கொல்லப்படும் விதம்தான் மிகவும் வலி நிறைந்த ஒன்று. ஒருவரின் உடலில் அறுபது சதவீதம் நீர் என்றால், அத்தனை நீரையும் வெளியேற வைத்து கொல்வது... இந்த செயல்முறையில் ஒரு அறையில் அடைத்து வைத்து அறை வெப்பநிலையை கூட்டிக்கொண்டே வந்து கொல்கிறார். பரிதாபமான சாவு. கொலைகாரர். ஏறத்தாழ நினைத்த இலக்கை, கொலைகளை செய்தே விடுகிறார். போலீஸ் கண்டுபிடிக்கும்போது பெரிதாக உயிர்வாழும் பழைய விஞ்ஞானிகள் யாரும் மிச்சமில்லை. ஒருவேளை விஞ்ஞானி இறந்திருந்தால், அவரது மகனை கொலைகாரர் கொல்கிறார்.


மிங் சுன்னுக்கும், பிக்சினுக்கும் வரும் காதல் என்பதே பொருந்தாத ஒன்றாக தோன்றுகிறது. ஏனெனில் அவர் சீரியல் கொலைகாரர் என நினைத்து பிக்சின் விசாரணை செய்து வருகிறார். இன்னொருபுறம் அவரது அப்பா சூ செபங், வெளிநாடு சென்று கொலை செய்தவர். கொலைகளை நிறுத்தாமல் செய்கிறார் என கூறுகிறார்கள். எப்படியானாலும் இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு பெண் எப்படி கொலைக்கு காரணமான, அந்த வம்சாவளியைச் சேர்ந்தவரை காதலிப்பார் அல்லது மணப்பார்?


நாயகன் மிங் சுன் எளிமையான ஆள். எப்போதும் டாக்சியில்தான் வருகிறார். பைக்கோ, காரோ கூட அவரிடம் இல்லை. அவசியம் என்றால் போலீஸ் காரில் இல்லை பெரும்பாலும் டாக்சியில் பயணிக்கிறார். நாயகி பிக்சின் பிரிட்டிஷ் வாகனமான ஜீப் எஸ்யூவியை பயன்படுத்துகிறார். வழக்குக்காக அலையும்போது மிங், பிக்சினின் காரில்தான் பயணிக்கிறார். இருவருக்குமான சமூக பழக்கவழக்கம், நட்பு என அனைத்துமே தலைகீழாக இருக்கிறது. காதலை பிக்சின்தான் வெளிப்படுத்துகிறார். அவர் சொல்வதற்கு முன்னரே குழுவில் உள்ள அனைவருக்கும் சங்கதி தெரிந்துவிடுகிறது. ஆனால், மிங் அதை கட்டக்கடைசியாகத்தான் கூறுகிறார். பிக்சினை இறுதியாக நாயகன் காப்பாற்றும் காட்சி கூட எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் முந்தைய வழக்கொன்றில் பிக்சின், மிங்கை குகை ஒன்றிலிருந்து காப்பாற்றுவார். அதற்கு பதிலாக அவர் ஏதாவது செய்யவேண்டுமே?


இந்த தொடரில் வரும் குற்றவாளிகள் அனைவருமே குற்ற உணர்ச்சியை ஆழ்மனதில் கொண்டிருக்கிறார்கள். அதனால் குற்றத்தை ஏற்கிறார்கள். ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டபிறகேனும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நடப்பு கால குற்றங்களுக்கு இதே அளவீடு பொருந்தாது. தான் செய்வது குற்றமே இல்லை என்று நினைக்கும் ஆட்கள் அதிகம். அங்கு மிங்கின் தத்துவங்கள் எப்படி பொருந்தும் என்று தெரியவில்லை. மனிதர்கள் பிறரை எளிதாக கொன்றுவிடக்கூடியவர்கள்தானா? என பிக்சினை அவர் கேட்கும் கேள்வி முக்கியமானது. தொடரில் வரும் நவீன நாடக பின்பகுதியை அடித்துவிட்டு பார்த்தால் தொடரை வேகமாக பார்க்கலாம். 


கோமாளிமேடை டீம்  



கருத்துகள்