நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை!

 













நல்லிதயம் கொண்ட கூலிக்கொலைக்காரன், சட்டவிரோத உறுப்பு விற்கும் குழுவோடு மோதும் கதை!


கில் இட் 


கொரிய டிராமா


12 எபிசோடுகள்


ராக்குட்டன் விக்கி 


ரஷ்யாவில் இருந்து கொரியா வரும் கூலிக்கொலைகாரன், ஆதரவற்ற குழந்தைகளின் உறுப்புகளை திருடி பணக்காரர்களுக்கு  வழங்கி வரும் குழுவை அறிந்து அதை அழிக்க முயல்வதே கதை. இப்படி செய்வதில் அவனுடைய கடந்த கால வரலாறும், பறிகொடுத்த அன்புக்குரிய உயிர்களும் உள்ளன. 


நாயகன் கிம் சோ ஹியூனுக்கு அதிக வசனங்கள் இல்லை. அவனுக்கும் சேர்த்து அவனுடைய தோழி ஹியூன் ஜின் பேசிவிடுகிறாள். அவள் பேசாதபோது கிம்மின் துரோக நண்பன் பிலிப் அதை செய்கிறான். எனவே வசனம் இல்லையே என கவலைப்படவேண்டியதில்லை. பிலிப் தனது நண்பன் கிம்முக்கு செய்யும் துரோகம் சாதாரணமானதில்லை. கிம் காக்க நினைக்கும் அவனது தங்கை போன்ற சிறுமியை காசுக்காக கொல்ல காட்டிக்கொடுக்கிறான்.


ரஷ்யாவில் இருந்து கொரியாவுக்கு நாயகன் கிம் வருவதற்கு, அவனது வளர்ப்பு அப்பா வாங்கிக்கொண்ட சத்தியமும், அவர் துப்பாக்கிக் காயம் பட்டு இறந்துபோவதுமே முக்கிய காரணம். அதோடு, அவனது கடந்த கால வரலாறுக்கும் கொரியாவிற்கும் சம்பந்தம் உள்ளது.எனவே, அவன் கூலிக்கொலைகாரனாக தேர்ச்சி பெற்று வேலைகளை எடுத்துச் செய்யத் தொடங்குகிறான். அவனுக்கு தொழில் சொல்லிக்கொடுத்த வளர்ப்பு தந்தை டிமென்சியா வந்து வேதனைப்பட்ட சூழ்நிலையிலும் கூட இரக்க மனம் கொண்ட கிம்முக்கு கொலை செய்வது தவறான தொழில், அதை தான் கற்றுக்கொடுத்து பெரும் பிழை செய்துவிட்டோம் என வருந்துகிறார். 


இறுதிநேரத்தில், அவனிடமும் அதைக் கூறி மன்னிப்பு கேட்கிறார். ஆனால் வருத்தப்படுவதற்கான காலம் கடந்துவிட்டது. கிம் ஏற்கெனவே கொலைகளை பிழைப்புக்காக செய்யத் தொடங்கிவிட்டான். அவனுடைய நண்பன் பிலிப், கிம்மை வைத்து சம்பாரிக்க, சம்பாதித்த பணத்தை பெண்களுக்கு, சூதாட்டத்திற்கு என செலவிடத் தொடங்கிவிட்டான். வளர்ப்பு தந்தை விதிகளை பின்பற்றியவர். ஆனால், அவரது இடத்திற்கு வரும் பிலிப், கிம்மை எப்படியாவது கொலைகளை செய்து வைக்கவேண்டும். தான் பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறான். ரெட் மாஃபியாவை கொரியாவிற்கு கூட்டி வந்தபோதும் கூட அவன் வருத்தப்படுவதில்லை. 


ஒருகட்டத்தில் பிலிப், நீ கூலிக்கொலைகாரன்தான். உன்னோடு கையில் இருக்கிற ரத்தத்தை கழுவ முடியாது. நீ இப்படித்தான் வாழ்ந்தாகணும் புரிஞ்சுக்கோ... காதலை, காதலியை மறந்துரு. அவள நினைச்சா, நாம ரெண்டுபேரும் ஜெயிலுக்கு போயிருவோம் என்கிறான். 


ஏறத்தாழ அதுதான் யதார்த்த நிலைமை. 


கிம் அதை உணர்ந்தே இருக்கிறான். அந்த பயணத்தை அவன் தவிர்க்க விரும்பவில்லை. ஆனால் குழந்தைகளை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் குழு மீது இரக்கம் காட்ட அவன் தயாராக இல்லை. அதற்காக பலரையும் கொல்வதில்லை. இறுதியில் கூட மருத்துவமனை தலைவரை கொல்லாமல் காவல்துறையில் ஒப்படைக்க நினைக்கிறான். ஆனால் அவர்கள் ஆளை விட்டு குழந்தைகளை கடத்த முயன்றபோதுதான், ஆராய்ச்சியாளர் கியூன் வூசொன்ன வார்த்தை நினைவுக்கு வருகிறது. 

அவன நீ கொன்னே ஆகணும். கொல்லாதவரை தப்பான விஷயங்கள் நிக்காது. கொழந்தைகளைக் காப்பாத்து என்று சொல்லி சிறை செல்கிறார். அதை நினைவில் கொள்ளும்போதே அவனுடைய முடிவு உறுதியாகிவிடுகிறது. காவல்துறை, நீதித்துறை என அனைத்து இடங்களிலும் கைக்கூலிகள் வரிசைகட்டுகிறார்கள். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் கிடைப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களையே நீதித்துறை குற்றவாளி என்று சொல்லி சிறையில் தள்ளுகிறது. ஹியூன் வூ கூட தனது மனைவி, பிள்ளையைக் கொன்றதற்காக இறுதியாக சிறைக்கும் செல்கிறார். ஆனால் அவர் கொலை செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட சற்று நெஞ்சம் நிம்மதி அடைந்திருக்கும்.


வில்லனை, தேச துரோகியை கிம் சுட்டுக்கொல்ல, காவல்துறை பதிலுக்கு அவனை சுட்டு உடலை சல்லடையாக்குகிறது. அவனின் தோழி ஹியூன் ஜின் அருகே அமர்ந்து அழ தொடர் நிறைவடைகிறது. நீதித்துறைக்காக அழுவதா, நீதியை நிறைவேற்றியவனை காவல்துறை கொன்றுவிட்டதே என அழுவதா?


தொடரில் வில்லனுக்கு பணபலம், அதிகார பலம் என அனைத்துமே இருக்கிறது. ஆனால் நாயகனுக்கு எதிராக எதையும் செய்வதில்லை. அதுதான் அவரை பலவீனமாக்குகிறது. இறுதியாக நாயகன் துப்பாக்கி எடுத்து வந்து வீட்டுக்குள் வைத்தே கொன்றுவிட்டு தானும் இறக்கிறான். இறுதி சண்டைக்காட்சி நன்றாக எடுக்கப்படவில்லை. அதில், கிம்மின் துரோகம் செய்யும் நண்பன் இறப்பது கூட செயற்கையாக உள்ளது. 


நாயகன் கிம், கூலிக்கொலைகாரன், அவன் தன் வேலைகளை செய்யவென தனி அறையை கால்நடை மருத்துவமனையில் வைத்திருக்கிறான். ஆனால் அதற்கு பாதுகாப்பு எந்திரம் கூட வைப்பதில்லை, கேமராவும் இல்லை. நம்பவே முடியவில்லை. அப்படியான அறையில்தான் ஏராளமான துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் இருக்கின்றன. ஒழுங்காக பூட்டிக்கூடவா வைக்காமல் இருப்பான்?


தொடரில் காதல் காட்சிகள் கிடையாது. நாயகனின் பால்ய தோழி ஹியூன் ஜின். இந்த பாத்திரம் பிறரின் உணர்வுகளை எப்போதும் புரிந்துகொள்வதே கிடையாது. நான் போலீஸ் அதிகாரி. நான் கேட்டால் நீ பதில் சொல்லணும் என்ற பாணியில்தான் பேச்சு உள்ளது. நிறைய இடங்களில் அதுவே அப்பாத்திரத்தை முதிர்ச்சி இல்லாததாக மாற்றுகிறது. இவளுக்கு காதல் என்பது இறந்துபோன பத்திரிகைக்காரர் மீது இருக்கிறது. அவர், கூலிக்கொலைகாரர்களால் கொல்லப்படுகிறார். அதை சிறுமி ஒருத்தி பார்த்துவிட, அவளது சாட்சியம் வேண்டி துரத்துகிறாள். காதலனுக்காக நீதி.


ஒன்பது ஆண்டுகளாக சிறுமியை தேடுகிறாள். அதன் வழியாக நீதி கிடைக்கும் என ஹியூன் ஜின் நம்புகிறாள். ஆனால் அந்த சம்பவம் சிறுமிக்கு பெரிய மனநிலை பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அவள் அதைப் பேசுவதையே தவிர்க்கிறாள். இந்த சம்பவம் தவிர்த்து சொந்த குடும்ப ஆட்களே பாலியல் சீண்டல், அடி, உதை என சிறுமியை சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். பிடிஎஸ்டி என சொல்வார்களே அந்தளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளாள். அவளுடன் ஹியூன் ஜின் பேசும் உரையாடல்கள் அனைத்துமே சாட்சி சொல்ல எப்ப வரே என்பதாகவே இருக்கும்.  


குழந்தைகளை செயற்கை முறையில் ஆய்வகத்தில் உருவாக்கி வளர்த்து சிறுவர்களான பிறகு அவர்களின் உடல் உறுப்புகளை வெட்டி வயதான பணக்கார ஆட்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் வில்லனின் திட்டம். அதை ஏற்கெனவே வெற்றிகரமாக செய்துவிடுகிறான். அதற்கு குறுக்காக வரும் ஆராய்ச்சியாளர் கியூன் வூவின் குடும்பத்தைக் கொல்கிறான். அவனையும் கொல்ல முயன்று தோற்கிறான் வில்லன். 


சமூகத்தில் உள்ள பெரிய பணக்காரர்கள், ஏன் அட்டர்னி ஜெனரல் கூட அவரது கண்பார்வையற்ற பேரனுக்காக அநீதிக்கு துணைபோகிறார். தொடரில் அதற்கு என்ன தண்டனை என்றெல்லாம் பேசவில்லை. இறந்துபோன குழந்தைகளின் சடலங்களை காவல்துறை கண்டுபிடிக்கிறது, ஹியூன் ஜின் அவளது இறந்துபோன காதலனின் கொலை சாட்சியை பாதுகாக்கிறாள் என கதை முடிகிறது.


கொரிய டிராமாவில் தனது இழப்புகளைக் கடந்து அநீதியாக இறக்கும் குழந்தைகளைப் பற்றிய அக்கறை மூன்று பாத்திரங்களுக்கு மட்டுமே உள்ளது. யூன் ஹை என்ற வில்லனின் அருகில் உள்ள பெண்மணி, ஆராய்ச்சியாளர் கியூன் வூ, கிம் சோ ஹியூன். இவர்கள்தான், மீதியுள்ள குழந்தைகளை எப்படியேனும் காக்கவேண்டும் என உயிரை பணயம் வைக்கிறார்கள். யூன் ஹை என்ற பெண்மணி கொல்லப்படுகிறாள். அதற்குப் பிறகு கடைசியாக நாயகனும் இறக்க, கியூன் வூ மட்டும் சிறையில் அடைக்கப்படுகிறார். 


சைக்கோ வக்கீல், தனக்கு புகழும் பெயரும் தேட நினைக்கிறார். டிடெக்டிவ் ஹியூன் ஜின்னை காதலிக்க மணக்க நினைக்கிறார். ஹியூன் ஜின்னோ, அவளது காதலனுக்காக பழிவாங்க நினைக்கிறாள். வழக்குகளை வெற்றிகரமாக தீர்க்க நினைக்கிறாள். அதைத்தாண்டிய சமூக அக்கறை அவளுக்கு இல்லை. பிலிப்புக்கு, பெண்ணும் சூதாட்டமும் இரு கண்கள். அதை விட்டுக்கொடுக்காமல் வாழ கிம்மை கொலை செய்ய வைத்துக்கொண்டே இருக்கிறான். கிம் இவர்களை அமைதியாக பார்த்துக்கொண்டே இருக்கிறான். தான் செய்யவேண்டியதை திட்டமிட்டு செய்துகொண்டே வருகிறான்.  


வலுவான கதை. அதை வேகமாக்கும் திரைக்கதை. சிறப்பான நடிகர்கள் என களமிறங்கி வெற்றி கண்டுள்ள தொடர். 


கோமாளிமேடை டீம் 

Kill It (Korean: 킬잇; RR: Kirit) is a 2019 South Korean television series starring Jang Ki-yong and Nana. It aired on OCN from March 23 to April 28, 2019. A passionate animal lover and skilled veterinarian, no one would suspect that Kim Soo-hyun (Jang Ki-yong) is actually one of the most ... Wikipedia

கருத்துகள்