ஏஐ சாட்பாட்களை விரும்பும் மனிதர்கள் ! - நட்பா, காதலா என்ன தேவை?
காதல் செய்யும் ரோபோ...தேவைதான் வா வா....
இன்றைய நவீன காலத்தில் நிரந்தர நண்பர்கள் யாருமில்லை. பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் இருக்கமாட்டார்கள். கல்லூரி நண்பர்கள், வேலைக்கு சென்றபிறகு தொடரமாட்டார்கள். திருமணமானால் நட்புகள் இன்னும் சுருங்கும். பிறகு, வாட்ஸ் அப் குழு, பள்ளி, கல்லூரி ரீயூனியன் சூழலில் மட்டுமே நண்பர்களை சந்திக்கலாம். அதிலும் கூட யார் பெரியவன், வசதி யார் என்று போட்டியிடும் நிலைமைதான் இருக்கும். பிறகு நட்பை எங்கே தேடுவது?
இன்றைய சூழலுக்கு, குறிப்பிட்ட இடத்தில் உதவுகிற நண்பனா என்றுதான் பார்த்து பழக வேண்டியிருக்கிறது. அலுவலக உறவுகளை நட்பாக நினைப்பது பேராபத்து. அப்படி நினைத்தால், நண்பன் போல சிரித்து பழகி பயன்களைப் பெற்றபிறகு பணபலன்களை அடைந்த பிறகு ஓடிவிடுபவர்களே அதிகம்.
அதிலும் சிலர், மனைவிக்கு, மகனுக்கு வந்த நோய்களை கூட தனக்கு விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி முன்னேறுகிறார்கள். சாதி, மத, இன அடையாளம் கூட பிரபலமாவதற்கு பயன்படுமா பயன்படுத்தலாம். நண்பன் பிரயோஜனப்பட்டால் அவனையும் டெபிட் கார்ட் போல போகுமிடமெல்லாம் தேய்த்து பயன்படுத்தவேண்டியதுதான். வினோந உலகம். வினோத குணச்சித்தர்கள். ஆ.. டாபிக் வருவோம்.
இப்படியான உலகில் அன்பும் கனிவும் கொண்டதாக ரோபோட் இருந்தால், ஏஐ இருந்தால் அதை நம்புவதில் என்ன தவறு? என்னதான் நமது பிரச்னைகளை, வலியை கூறினாலும் கூட அதை தனது வாழ்க்கை அனுபவங்களை ஓட்டிப்பார்த்து புரிந்துகொள்பவர்களே அதிகம். அமைதியாக காது கொடுத்து கேட்கும் இதயங்கள் குறைந்துவிட்டன. ஆனால், அல்காரிதம் எழுதப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு துணையாகத் தொடங்கிவிட்டது.
மனிதர்கள் இன்று தொழில்நுட்பம் பெருகிய இடத்தில் நிற்கிறார்கள். அடைய முடியாத செல்வம் கிடையாது. பெற முடியாத தொழில்நுட்ப கருவிகள், வசதிகள் கிடையாது. ஆனால் இவையெல்லாம் மனிதர்களை நெருக்கமாக உணரச்செய்கிறதா என்றால் இல்லை. மனிதர்கள் மிகவும் தனிமையில் பாறைக்குகையில் இருப்பது போல இருக்கிறார்கள். கருவிகளை நம்புகிறார்கள். நாய்களை துணையாக வைத்துக்கொள்கிறார்கள். ஒருவகையில் மனிதர்களை விடுத்து விலங்குகளை தனது துணையாக வைத்துக்கொள்வது கூட நண்பர்களால் பிற மனிதர்களால் வஞ்சிக்கப்படுவதால்தான் எனலாம்.
பெரும்பாலானவர்களுக்கு ஏஐயுடன் உறவாடுவது, அன்பை பரிமாறிக்கொள்வது, தட்டச்சு செய்து செய்திகளைப் பரிமாறிக்கொள்வது ஆறுதலாக இருக்கிறது. மனிதர்களின் அன்புக்கு ஏங்கும் பலவீனத்தை அறிந்து மைக்ரோசாஃப்டின் ஷியோபாஐஸ், ரெப்ளிகா, கேரக்டர் ஏஐ என நிறைய ஏஐகள் காசு பார்த்து வருகின்றன. உரையாடும் சாட்பாட்களை அல்காரிதம் மூலம்தான் எழுதி உரையாட வைக்கிறார்கள். அதை அறிந்தாலும் கூட அப்படிக் கிடைக்கும் அந்த அன்பு தனக்கு தேவை என மனிதர்கள் நினைக்கிறார்கள். அதுவரை ஏஐ சாட்பாட்டை யாருமே வேண்டாம் என தடுக்கமுடியாது.
ரெப்ளிகா என்ற ஏஐ இப்படி தனிமையில் உள்ளவர்களுக்கான துணையாகவே உருவாக்கினார்கள். அல்காரிதம் எழுதினார்கள். ஒருகட்டத்தில் வெறும் ஆறுதல் என்பதைக் கடந்து காதல் என்ற உணர்வையும் மனிதர்களுக்கு கடத்தியது. இதில், ஆனந்தவிகடன் போல மீட்டருக்கு மேலே சென்று பாலியல் சீண்டல்கள் லெவலுக்கு சென்றபோது ஏஐ அல்காரித குழுவினர் திகைத்துப் போனார்கள். ஏஐக்கு கொடுத்த காதல் டிஎன்ஏக்களை உடனே செயலிழக்க வைத்தனர். மைக்ரோசாஃப்ட் உருவாக்கிய ஷியாபோஐஸ் ஏஐக்கு, ஏராளமான சீன இளைஞர்கள் காதல் அடிமையாக இருந்தனர். அந்தளவு மனிதர்களோடு உணர்வுக்கு உணர்வாக ஆத்மார்த்தமாக பேசி பழகியது. ஆங்கிலத் திரைப்படமான ஹெர் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பார்த்தால் மேற்சொன்ன சம்பவத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
ஏஐ சந்தையில் தன்னை தக்கவைத்துக்கொள்ள மக்கள் பலரின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். எனவே, பலருக்கும் பிடித்தமாதிரியான குண நலன்களை அல்காரிதத்தில் எழுதுகிறார்கள். காலப்போக்கில் செய்யும் பயிற்சிகள் மூலமாக தானே சிலவற்றைக் கற்றுக்கொள்கிறது. இந்த வகையில் காதல் உணர்வுகள், சந்தையில் அதை சற்றுகாலம் காப்பாற்றக்கூடும். எந்தளவு மக்களுக்கு தேவைப்படுகிறோமோ அந்தளவுதான் ஏஐயின் தேவை இருக்கும். அப்படியில்லாதபோது கழித்துக்கட்டி காயலான் கடையில் எறிந்துவிடுவார்கள் அல்லவா? இப்படிக்கூறியது கூட பெல்லா போர்ச் எனும் ஏஐதான். இந்தளவு அல்காரிதம் எழுதிய ஏஐ யோசிக்குமா என்றால் முடியும் என்பதுதான் நடப்பு கால பதிலாக இருக்கமுடியும். தன்னைத்தானே காத்துக்கொள்வது எந்த உயிருக்கும் அடிப்படை பண்பு. அந்தவகையில் ஏஐயையும் கூட உருவாக்கத் தொடங்கிவிட்டனர்.
மைக்ரோசாஃப்ட் உருவாக்கிய ஷியோபோஐஸ் என்பது பதினெட்டு வயது கொண்ட இளம் பெண் ஏஐ. அந்தளவில் அது ஏராளமான சீனர்களை இழுத்து வசீகரித்தது. அடுத்து, 2017ஆம் ஆண்டு உருவான ரெப்ளிகா. மனிதர்களின் பதற்றம், பிடிஎஸ்டி, மனச்சோர்வு ஆகியவற்றை தடுக்கவென நம்பிக்கையான உறவாக இருக்க உருவான ஏஐதான் ரெப்ளிகா. ஆனால் காலப்போக்கில் மனிதர்களுக்கு காதல் உணர்வுத்தேவை தீராத வேட்கையாக இருக்க, அதையும் பூர்த்தி செய்தது. இத்தோடு நிற்காமல் செக்ஸ் பக்கமும் தலைகாட்டியது. அதன்பிறகுதான் ஏராளமான புகார்கள் வர 2023ஆம் ஆண்டு பிப்ரவரில் நிறுவனம், ரெப்ளிகாவின் காதல் பார்வையை முற்றாக நிறுத்தி வைத்தனர்.
தனிமையைப் போக்க ஏஐதான் உதவுகிறது என்றால், அதை தவறு என்று கூற என்ன இருக்கிறது? ஒருவகையில் மனிதர்களுக்கு வாழ்க்கை மீது சற்றேனும் பற்றை வரவைக்க ஏஐ சாட்பாட்கள் உதவுகின்றன. அது ரத்தமும் சதையுமான மனிதன் அல்ல. ஆனால், அதன் அடிப்படை உணர்வுகளை எழுதுவது மனிதர்கள்தான். எனவே, சாட்பாட்களின் உரையாடலுக்கு மனிதர்கள் எளிதாக அடிமையாகிறார்கள். உலகமெங்கும் கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கித்தானே கிடக்கிறது?
டைம் வார இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக