உடல்பசி, வயிற்றுப்பசி என இரண்டாலும் தவிக்கும் ராமோஜி ராவின் சுயசரிதை! - ராமோஜியம் - இரா முருகன்

 












ராமோஜியம் 

இரா முருகன்

கிழக்கு பதிப்பகம்


பிரிட்டிஷாரின் ஆட்சியில் நடக்கும் கதை. அக்காலகட்டத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கிளர்க்காக வேலை செய்யும் ராவ்ஜி, அவரது மனைவி ரத்னாபாய் ஆகியோரின் வாழ்க்கை கதைதான் நாவல். 


கொரிய டிவி தொடர்களில் பன்றிக்கறி, மாட்டிறைச்சி, நூடுல்ஸ், முட்டை எப்படி நீங்காமல் இடம்பெறுகிறதோ அதுபோல இந்த நாவலெங்கும் உணவு வகைகள் ஏராளம். தாராளம். உணவு கதையில் ஒரு பாத்திரம் போலவே வருகிறது. ராவ்ஜிக்கு அரசு வேலை என்பதால் அவர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவரது உறவினர்கள் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் அத்தனை ருசியாக, வகை வகையாக சமைத்து போடுகிறார்கள். கும்பகோணத்தில் டீ ஆபீசராக சென்று வேலை பார்த்து, அங்கு விடுமுறைக்கு வந்திருந்த இளம்பெண் ரத்னாபாயை காதல் வலையில் வீழ்த்துகிறார். அவருமே வீழ்கிறார். பிறகுதான் அரசு தேர்வு எழுதி கிளர்க்காக சென்னையில் உத்தியோகமாகிறது. அதை வைத்தே மராட்டிய மாமனார், மச்சினன் ஆகியோரை சரிகட்டி ரத்னாவை கல்யாணம் செய்கிறார். 


1975 நாவலைப் போலவே இதிலும் நாயகன் ராவ்ஜி, அரசு விவகாரங்களை விமர்சிக்க விரும்பாத குடும்பஸ்தான். அவருக்கு காலை, மதியம், மாலை, இரவு என திருப்தியாக உணவு கிடைத்தால் போதும். அதுவும் ரத்னாபாய் மனைவியாக வந்தபிறகு சாப்பாட்டு கஷ்டமும் ஓய்ந்துவிடுகிறது. உணவும், சரசமுமாக வாழ்க்கை போகிறது. அந்த நேரத்தில் தசாபதி என்ற திரைப்படம் பிரபலமாகி வருகிறது. அதில் தெலக்ஸ் புவனா என்பவள் நாயகி. அவளைப் பார்த்து முதல் பார்வையிலேயே காதல் வயப்படுகிறார் ராவ்ஜி. அலுவலகத்தில் வேலை செய்யும் சூப்பரிடெண்டன்ட் பந்துலுவின் அத்தை மகள்தான் தெலக்ஸ் புவனா என தெரிந்துகொண்டு அவளை சந்திக்க போகிறார். ஒருகட்டத்தில் அந்த உறவு, பாலுறவு வரை நீண்டுவிடுகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதே கதையின் இறுதிப்பகுதி. 


கதையில் பெரிய முரணோ, நாயகன் அல்லாடி செய்யவேண்டிய விஷயங்களோ இல்லை. உணவு மீது மட்டுமே அலாதியான பிரியம். வெறி. பைத்தியம் என வைத்துக்கொள்ளலாம். வயிற்றுப்பசி தீர்ந்துபோன நேரத்தில் உடல் பசி ஊறுகிறது. அதுவும் கூட மனைவி ரத்னாபாய் இருக்கும் வரை பெரிதாக தெரிவதில்லை. ஆனால் அவள் சொந்த ஊருக்கு போன நேரத்தில் ராவ்ஜி சபலப்பட்டு தெலக்ஸ் புவனாவின் மெத்தைக்கு தாவுகிறார். நடிகையாக இருந்தாலும் புவனாவுக்கு நல்ல குடும்பம் தேவையாக இருக்கிறது. பொறுப்பான புருஷனான ராவ்ஜியைப் பார்த்ததும் அவளுக்கும் மனதில் ஆசை துளிர்விடுகிறது. அந்த உறவுக்கு எதிர்காலம் இல்லை என்பதை அவள் உணர்ந்தே இருக்கிறாள். ஆனால் ராவ்ஜியோடு கூடியிருக்கும் சந்தோஷம் முக்கியம் என நினைக்கிறாள். அதன் மூலம் கருத்தரிக்கிறாள். ஆனால் அந்த குழந்தையை கலைத்துவிட்டு, இயக்குநர் ஒருவனை மணக்கிறாள். இந்த வகையில் அந்த உறவு முடிந்துபோகிறது. 


பின்னாளில் தெலக்ஸ் புவனாவுக்கு விவாகரத்து ஆனாலும், ராவ்ஜியின் மகள் சுதந்திராவுடன் தொழில் உறவு நீடிக்கிறது என்பதாதக நாவல் நிறைவு பெறுகிறது. 


ராமோஜியம் கதையில் வரும் பெண்கள் அழுத்தம் திருத்தமானவர்கள். உறுதியான மனநிலை கொண்டவர்கள். ஆனால், ஆண்கள் அந்தளவு திடமாக இல்லை. குறிப்பாக கங்கா பாத்திரத்தைக் கூறலாம். அவளை மணக்க கோபு ஆசை கொண்டிருந்தது, இறுதியாகவே ராவ்ஜி அறிகிறான். ஆனால் அதை கோபு முன்னரே வெளிப்படுத்தியிருந்தால் கங்கா இறந்துபோயிருக்கமாட்டாள். கங்காவுக்கு பெற்றோர் பார்க்கும் வரன்கள் தட்டிப்போகும்போதுதான், அங்கு விருந்தாளியாக தங்கியுள்ள ரத்னாவுக்கும் ராவ்ஜிக்கும் காதல் தொடங்கும். 


ரத்னாபாய் பற்றி தமிழ் திரைப்பட நாயகி போல இறுதியாக வசனம் பேசுவது அலுப்பாக இருக்கிறது. ராவ்ஜி, புவனா மீதான தனது ஆர்வத்தை மறைப்பதில்லை. திரைப்படத்தை முதல் முறை பார்த்தது தொடங்கி மனைவியிடம், புவனாவின் அழகைப் பற்றி வியந்து பேசுகிறான். மனதிற்குள்ளாக மனைவி, புவனா என இரண்டு பேரின் அழகு எப்படியானது என ஒப்பிட்டு பார்க்கிறான். ரத்னாவை விட புவனாவின் பாத்திரம் வலுவாக தோன்றுகிற இடம் இறுதியாக வருகிறது. 


நாவலில், சரித்திர காலகட்டக்கதை இரண்டு பகுதியாக நடைபெறுகிறது. இரண்டிலும் புவனா, ரத்னாபாய் ஆகியோர் வருகிறார்கள். நிகழ்கால கதையில், தெலக்ஸ் புவனா, சினிமா நடிகை. சரித்திர காலகட்டத்தில்  தாசி. இன்னொரு கதையில். பொட்டுக்கட்டிவிடப்பட்ட நாட்டியக்காரி. 


நாவலில் பந்துலு, சுபாங்கி அம்மாள், ராமாராவ் மாமா, விடோப்பா, கேளப்பன், விலாசினி, குந்தி, வெள்ளையன் கழுதை, மணவாள நாயுடு, பீமாராவ், பூர்ணா, சுமித்ரா கவுர் என நிறைய பாத்திரங்கள் வருகிறது. அதில், பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு சந்தோஷத்திற்கான ஏக்கத்தோடு இருக்கும் தெலக்ஸ் புவனா பாத்திரமே வலுவானதாக தெரிகிறது. நாவலில் இரண்டு கதைகளில் வரும் புவனா பாத்திரம் ஒன்றில் நடிகை, இன்னொன்றில் தாசி. இரண்டிலுமே வேதனையான முடிவுகள்தான் கிடைக்கிறது.


அன்புக்காக ஏங்கி, அதை தவறான நபர்களிடம் எதிர்பார்த்து தன்னையே அழித்துக்கொள்ளும் பாத்திரம். தெலக்ஸ் புவனா, சினிமா தொழிலுக்கு வருவது கூட நிர்பந்தம்தான். புகைப்படக்காரனை நம்பி மணம் செய்துகொள்பவள், விலைமாதாக விற்கப்பட்டு அங்கிருந்து தப்பி வந்து நடிகையாகிறாள். அவளுக்கு நிம்மதியான குடும்பச்சூழல் தேவையாக இருக்கிறது. அதனால் உறவினரை தனது அம்மா போல வீட்டில் வைத்துக்கொள்கிறாள். அந்த நேரத்தில் ராவ்ஜியின் உறவு கிடைக்கிறது. தற்செயலாகவே என வைத்துக்கொள்ளலாம். அவன், தன் மனைவி ரத்னாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, குணம் பார்த்துத்தான் அவளுக்கு அவன் மீது காதல் பிறந்திருக்கவேண்டும். 


காதலை வெளிப்படுத்த உடலை அவனுக்கு கொடுக்கிறாள். சபலமான நேரத்தில் ராவ்ஜிக்கு அவளது இன்பம் தேவையாக இருக்கிறது. அதேநேரம், அவளை மணக்கவோ, அங்கீகரிக்கும் எண்ணமோ அணுவளவும் ராவ்ஜியின் மனதில் தோன்றுவதில்லை. அவனுக்கு அப்போதைக்கு தேவை இன்பம் துய்க்க ஒரு உடல். அவ்வளவுதான். இதேபோல சரித்திர கதையில் ராமோஜி ஆங்ரே வருகிறார். அவர் புவனலோசனி என்ற தாசிகுலப்பெண்ணை வண்ணமயில் கப்பலில் காண்கிறார். அந்தப் பெண், அவரைக் கண்டதும் காதலில் வீழ்கிறாள். பதிமூன்று நாட்கள் கப்பலில் துன்பம் துய்க்கிறார்கள். அன்றைய சமூக அமைப்பு கிடக்கட்டும். காதல் செய்யும் நேரத்தில் கூட புவனாவை தாசிப்பெண்ணே என அழைக்கிறார் ராமோஜி. அதையும் அந்த பெண் தன்மானம் இல்லாமல் ஏற்றுக்கொண்டு காதலிக்கிறாள். பின்னாளில், அவர் மீது கொண்ட காதலுக்காக எலிப்பொறி சத்திரத்தை கட்டுகிறாள். பிறகு, ஏவல் பில்லி சூனியத்தால் உடல், மனம் கெட்டு நோய் வந்து கடலில் விழுந்து இறந்துபோகிறாள். 


இக்கதையில் ராமோஜிக்கு, திருமணமாகி ரத்னா என்ற மனைவி இருக்கிறாள். ஆனால் கதையில் அவளைப் பற்றி பெரிதாக பேசுவதில்லை. கப்பல் தலைவரான ராமோஜிக்கு புவனாவுக்கு கொடுக்கவேண்டிய சமூகமுறைப்படி மரியாதை என்னவென்று தெரிகிறது. அதனால், சாதுரியமாக தன் உயிரைக் காப்பாற்றி காதலித்து உடலையும் மனதையும் கொடுத்தவளுக்கு சமூக அங்கீகாரம் கொடுக்க மனம் வரவில்லை. கவனமாக அதை தவிர்த்துவிடுகிறார். 


ஒரு நெடுங்கதை, இரண்டு குறுங்கதை என மூன்றிலும் புவனா என்ற பாத்திரம் வருகிறது. அனைத்திலும் அவளது வாழ்க்கையை பிறர்தான் தீர்மானிக்கிறார்கள். அவள் நினைத்தபடி வாழ்க்கை பயணிக்கவில்லை. அதில் பலரும் தலையிடுகிறார்கள். அவரவருக்கான சுயநலம்தான். அதில் அதிகம் பாதிக்கப்படுவது புவனாதான். ரத்னா, இறுதியாக ராவ்ஜியிடம் மஞ்சள் பத்திரிகை கிசுகிசு படித்துவிட்டு பாதியானாலும் உண்மைதானே என்று கேட்பது இருவரது உறவின் அவநம்பிக்கையைக் காட்டுகிறது. இதை விட கேளப்பன், விலாசினி ஆகியோரின் கதை பரவாயில்லை. விலாசினி மீது மையல் கொண்டவன்தான் ராவ்ஜி. அதை மனைவி ரத்னாவே அறிவாள். மழைநாளில் ராவ்ஜி விலாசினியை வீட்டுக்கு கூட்டி வரும்போதுகூட கேளப்பன் அதை நட்பு நிமித்தமாகவே நினைத்துக்கொள்கிறார். அது அவரது மனைவி மீது வைத்துள்ள நம்பிக்கை.


இதை வைத்து ஒப்பிடும்போது, ராவ்ஜி - ரத்னா உறவு என்பது என்ன வகையானது. அரசு ஊழியன், அவனது வீட்டு சமையல்காரி என்ற அளவில்தான் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. ராவ்ஜிக்கு மனைவி இருக்கிறாள். கட்டுப்பாடானவள். ஆனால் காதலி புவனா அப்படியல்ல. சுதந்திரமானவள். ஒரே நேரத்தில் அவனுக்கு காதலியும், மனைவியும் தேவைப்படுகிறது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துகிறான். அதேநேரம் மஞ்சள் பத்திரிகை, அலுவலகம் என பரவும் வதந்திகளையும் பார்த்து மனதில் பயப்படுகிறான். 


அறுநூறு பக்கங்களுக்கு மேல் நீளும் கதையில், உணவு பற்றிய விவரணைகளே அதிகம். அதுதான் நூலை படிக்க வைக்கவும் உதவுகிறது. மற்றபடி ராவ்ஜி - ரத்னாபாய் வாழ்க்கை கதையில் பெரிய சுவாரசியம் ஏதுமில்லை. ரத்னாவை விட தெலக்ஸ் புவனாவின் வாழ்க்கை சாகசமானது. நெருக்கடிகளைக் கொண்டது. கதையில் அவளுடைய மன உணர்வுகைளச் சொல்லும் இடங்கள் மிக குறைவு. 


தன்னைப் பற்றிய கவனம் மட்டுமே கொண்டுள்ள, உணவுகளை உண்டு பேரானந்தம் அடையும் ஆன்மாவின் சுயசரிதை. 



https://tamil.wiki/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

https://tamil.wiki/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

கருத்துகள்