ஈகோ சோசலிசம் - முதலாளித்துவத்ததிற்கு மாற்றா?
ஜனநாயகப் பாதை வழியாகவே சர்வாதிகாரம் உள்ளே நுழைகிறது. இதை தவறு என்று சொல்ல முடியாது. அந்தந்த காலகட்ட மக்கள் சர்வாதிகாரியை அவர்களாகவே வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். பின்னாளில் செய்த தவறின் விளைவை அனுபவிக்கிறார்கள். அரசும் அதன் செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது.
இந்தியா போன்ற நாட்டில் என்ஜிஓ அரசு என்பது சற்று புதிது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற ஒன்றை காங்கிரஸ் காலத்தில் வலதுசாரி ஆளுமைகள் நடத்தினர். அந்த போராட்டத்தின் வழியாக ஆம் ஆத்மி கட்சி தோன்றியது. இந்த கட்சியின் செயல்பாடு, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒத்தது. மக்களுக்கு நன்மை கிடைத்தாலும் கூட அக்கட்சி தலைவர், தவறான குற்றச்சாட்டில் சிறைபடும்போதுகூட மக்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை, சாலையில் நின்று தாங்கள் தேர்ந்தெடுத்த முதல்வரை விடுவியுங்கள் என்று கோஷமிடமில்லை. அமைதியாக அரசு காரியங்கள் நடைபெறுகின்றன. இப்படிக்கூட அரசு செயல்பட முடியும் என்ற ஜனநாயக அவலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஒரு நாட்டில் எதற்கு போராட்டம் நடைபெறுகிறது? மக்களின், விவசாயிகளின், தொழில்துறையினரின், சிறுபான்மையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். அதை கவனித்தில் கொண்டு நிறைவேற்றி வைக்க போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் உண்ணாவிரதப் போராட்டமும் ஒன்று. உணவே இல்லாமல் பட்டினி கிடந்து சோறு கிடைக்காதா என அல்லாடுபவர்கள் நாட்டில் பலருண்டு. சோறு இருந்தும் அதை சாப்பிடமாட்டேன் என உறுதியாக போராடுவதே உண்ணாநோன்பு. இதை காந்தி கடைபிடித்தார். இதன் நோக்கம் ஒருவரின் உடலை அவரே முன்வந்து வருத்திக்கொள்வதுதான். ஆனால், அது பலரையும் தன்னை நோக்கி கவர்ந்து இழுக்க வைக்கும் ஒன்றாக உள்ளது.
அதேசமயம் சர்வாதிகார ஆட்சியில் அகிம்சைப் போராட்டம் என்பது எந்தளவு பயன்தரும் என்பதற்கு விவசாயிகளின் அமைதிப்போராட்டமும், அவர்களை அடித்து உதைத்து கொல்ல முயலும் டெல்லி போலீசாரின் முயற்சியுமே எடுத்துக்காட்டு. அணுக்க முதலாளித்துவத்தில் ஊறிப்போன அரசு, எளிய விவசாயிகளின் குரலுக்கு எதற்கு மதிப்பளிக்கவேண்டும், பிரச்னைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்? புரையோடிப்போன புண்ணை, சீழ்வடியும் சூழலை போராட்டங்கள் அடையாளம் காட்டுகின்றன. அதை சரிசெய்தால் நாடு வளம் பெறும். இல்லையெனில் வளம் குன்றி படுக்கையில் வீழும்.
போராட்டங்கள் அதன் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், பின்னாளில் பலருக்கு ஏதாவது ஒருவகையில் உந்துசக்தியாக இருக்கிறது. சமூக மாற்றங்களை இதில் கருத்தில் கொள்ளலாம். கருக்கலைப்புக்கு ஆதரவான போராட்டம், ஊழலுக்கு எதிர்ப்பு, விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை, சிறுபான்மையினரின் உரிமை என போராட்டங்களின் வழியாகவே பிரச்னை அடையாளம் காணப்படுகிறது. அதன் பின்னே உள்ள பல்வேறு பிரச்னைகள், அம்சங்கள் பேசப்பட்டு முழுமையாக ஆராயப்படுகிறது. அதன் வழியாகவே புதிய மனிதர்கள் வெளி வருகிறார்கள். போராளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். அடுத்த தலைமுறை தலைவர்கள் உருவாகிறார்கள்.
உலகில் அனைத்து உயிரினங்களும் ஒன்றுதான். மனிதர்கள் உயிர்களை மேலாண்மை செய்பவர்களாக தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் இயற்கையில் மனிதன், மரம்,பறவை என அனைத்தும் ஒன்றுதான். மனிதர்கள், தங்களை மட்டுமே உயர்ந்தவர்களாக நினைத்துக்கொள்வதில் இயற்கையின் அழிவ தொடங்குகிறது. தேவையை இயற்கை நிறைவுசெய்யக்கூடும், ஆனால் பேராசைக்கு அதனிடம் எந்த பதிலும் இல்லை.
பெருந்தொழில்களை விட சிறுகுறு தொழில்களை உருவாக்குவதில் செய்வதில் மனிதர்கள் கவனம் செலுத்தவேண்டும். வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்ட பொருளாதாரமே பெரிய தொழிற்சாலைகளை நம்பியுள்ளது. இது ஆபத்தானது. எதிர்காலத்தில் சூழல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். மனிதர்களுக்கு எழும் தேவைகளை தீர்ப்பதாகாது. பணத்தின் பின்னே அடிமை போல செல்வதற்கே வழிவகுக்கும்.
ஒரு நாட்டில் உணவுப்பயிர்களின் உற்பத்தி குறைந்து பணப்பயிர்களின் உற்பத்தி கூடினாலே அபாயம் நெருங்கிவருகிறது என்று பொருள். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை கிடைக்காமல் போனால், அவர்கள் எதற்காக உணவுப்பயிர்களை அரும்பாடுபட்டு விளைவிக்கவேண்டும்? சூழல் மாசடையாமல் உணவுப்பயிர்களை விளைவிக்க அரசு விவசாயிகளை ஊக்குவிக்கவேண்டும். பரப்புரைகள், ஆலோசனை, நிதியுதவி தேவை. வெறுமனே அவர்களின் மீது கார்பன் வரிகளை திணிப்பதால் எந்த மாற்றமும் வந்துவிடாது.
முதலாளித்துவம், கம்யூனிச நாடுகளையும் பொருளாதார வளர்ச்சி வலையில் சிக்கவைத்துவிட்டது. சீனா, ரஷ்யாவில் கூட கோலா, மெக்டொனால்ட் வந்துவிட்டது.அதையும் குடித்து, சாப்பிட்டு மகிழ்ச்சியடையத் தொடங்கிவிட்டனர். முதலாளித்துவத்திற்கு மாற்றான வேறு கருத்தியல் ஏதும் இல்லை. சூழல் சோசலிசம் எந்தளவு தனிநபருக்கு, மக்களுக்கு உதவும் என்று தெரியவில்லை.
இன்று, ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது முதலாளித்துவ கருத்தியலாலேயே உருவாகிறது.இதன் மறுபக்கம், இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லால் பழங்குடி மக்கள் இடம்பெயர்க்கப்படுகிறார்கள். அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் கண்முன்னே அழிக்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி சரிந்து பொருளாதார வளர்ச்சி வீழ்ந்தால், வேலைவாய்ப்புகள் குறையும், பணிகள் நடைபெறாது, பணப்புழக்கம் சீரற்றுப் போகும். உடனே அரசியல்வாதிகள் திகைத்துப்போய் முந்தைய ஆட்சியாளர்களை புகார் சொல்லத் தொடங்குகிறார்கள். இதெல்லாம் நிர்வாக செயலற்ற தன்மை ஏற்படுத்தும் பதற்றக்குறைபாடு.
சூழல் சோசலிசம் என்பதை முதலாளித்துவதற்கு எதிராக பசுமைக்கட்சியினர் முன்வைக்கிறார்கள். இதன் அர்த்தம், நாம் கற்காலத்திற்கு பயணிப்பதல்ல. உரோம யானை, டைனோசர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆராய்ச்சிகளை செய்யப்போவதில்லை. ஆனால், முந்தைய கால மனிதகுலத்தினர் விட்டுச்சென்ற மிச்சம் மீதி இயற்கை வளங்களை கெடாமல் பார்த்துக்கொள்ளலாம். நாம், நமது முன்னோர்கள் என அனைவருமே இயற்கை வளங்களை அழித்துவிட்டு அதற்கு குற்றவுணர்ச்சி கொண்டவர்கள்தான். இதில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.
Eco-socialism (also known as green socialism, socialist ecology, ecological materialism, or revolutionary ecology) is an ideology merging aspects of socialism with that of green politics, ecology and alter-globalization or anti-globalization. Eco-socialists generally believe that the expansion ... Wikipedia
கருத்துகள்
கருத்துரையிடுக