அரசின் சர்வாதிகாரம், பயங்கரவாதத்தை தட்டிக்கேட்கும் ஹேக்டிவிஸ்டுகளின் வரலாறு!

 










கோடிங் டெமாக்கிரசி

மௌரின் வெப்

எம்ஐடி பிரஸ்

கட்டுரை நூல் 



உலக நாடுகளில் உள்ள அரசு சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கணினி போராளிகளைப் பற்றிய நிறை, குறை, போராட்டங்கள், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிப் பேசுகிற நூல் இது. 


அடிப்படை மதவாத நாடுகள், மதவாத நாடாக மாறிவரும் இந்தியா போன்ற நாடுகள், ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தில் இயங்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில், ஜனநாயகம் கிடையாது. அதை மரபான ஊடகங்கள், பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள் பேச முடியாது. அப்படி பேசினால் உடனே அந்த நபர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிறையில் விசாரணையின்றி காலவரையின்றி வைக்கப்படுவார்கள். விஷம் வைத்து அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். இதுதான் சர்வாதிகார அரசில் உள்ளவர்களுக்கு நேரும் நிலைமை. ஆனால் இதெல்லாம் அடையாளம் தெரிந்து செயல்படும் ஆட்களுக்குத்தான். 


அதே சர்வாதிகார நாட்டில் இணையத்தில் இயங்கும் ஹேக்டிவிஸ்டுகள் உண்டு. இவர்கள் கணினி கோடிங்கைக் கற்றுக்கொண்டு அதை வைத்து அரசு செய்யும் குற்றங்களை உலகிற்கு கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் குழுக்களாக அல்லது தனியாக இயங்கி வருவார்கள். இவர்களை பிடித்து சிறையில் அடைப்பது கடினம். பெரும்பாலும் சர்வாதிகார அரசின் உளவுத்துறை ஆட்கள், ஹேக்டிவிஸ்டுகளைப் பிடித்தால் படுகொலை செய்வதே வழக்கம். உண்மையில் ஹேக்டிவிஸ்டுகள் செய்வதெல்லாம், ஜனநாயகத்தை காப்பாற்ற, அதற்கு நேரும் ஆபத்தை தான் கற்ற அறிவு மூலம் பிறருக்கு கூறுவதே ஆகும். 


இப்படியான ஹேக்டிவிஸ்டுகள் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா என பல்வேறு நாடுகளில் உண்டு. நூலின் ஆசிரியர், இப்படியான ஹேக்டிவிஸ்ட் அமைப்புகளைப் பற்றியும், அதைச்சேர்ந்தவர்களின் செயல்பாடுகள், செய்த தவறுகள், கற்றுக்கொண்ட விஷயங்கள், அவர்கள் மீது அரசு தொடுத்த வழக்குகள், பெற்ற தண்டனை பற்றி விரிவாக பேசுகிறார். 


ஜெர்மனியின் சாவோஸ் கம்ப்யூட்டர் கிளப் என்ற ஹேக்டிவிஸ்ட் அமைப்பு, சட்டவிரோத காரியங்களை செய்யாமல் அரசுக்கு அதன் அமைப்புகளின் தவறுகளை சுட்டிக்காட்டுகிற அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பும் ஏராளமான அரசின் நெருக்கடிகளை சட்டச் சிக்கல்களை சந்தித்து வந்துள்ளது. 


இந்தியாவில் கூட ஆதார் அட்டை தொடர்பாக தற்குறி அமைச்சர்கள் பேசிய பேச்சுக்கு ஹேக்கர்கள், அதன் உண்மை நிலையை மக்களுக்கு உடைத்து சொன்னார்கள். ஆதார் தகவல்களை எளிதாக ஒருவர் பெறமுடியும். அதற்கு இந்திய அரசு பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையெல்லாம் செய்யவில்லை என்பதே உண்மை. இதுபோன்ற உண்மையை பகிரங்கமாக மக்களுக்கு கூறும்  செயல்களை ஜெர்மனியில் சாவோஸ் கம்ப்யூட்டர் கிளப் செய்துவருகிறது. 


அரசின் சர்வாதிகார திட்டங்களை மக்களுக்கு முன்னமே தெரியப்படுத்தி அதை முடக்கும் செயல்பாடுகளை செய்கிறது. ஒருவகையில் அரசை ஜனநாயகப்பாதையில் நடக்க வைக்க மக்களின் அபிப்ராயங்களை சேகரிக்கிறது. இந்த வகையில் ஜெர்மனியின் பேரளவு கண்காணிப்பு திட்டங்களை முன்னமே வெளிப்படுத்தி தடுத்ததை முக்கியமான சாதனையாக கூறலாம். சாவோஸ் அமைப்பு, ஹேக்டிவிஸ்டுகளுக்கான மாநாடுகளையும் கூட நடத்தி வருகிறது. இதில், கோடிங் தெரிந்த வல்லுநர் அரசியல் அறிவைப் பெற முடியும். 


இணையத்தைப் பயன்படுத்தி வென்ற அரசியல்வாதிகள் கூட பின்னாளில் அதைக் கட்டுப்படுத்த, சுதந்திரத்தை மட்டுபடுத்த முயன்றுள்ளனர். உதாரணத்திற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி ஆகியோரைக் கூறலாம். சமூக வலைத்தளங்களின் வழியாக மக்களின் மனங்களை வென்று அதிபரானாவர் ஒபாமா. பின்னாளில், ஹேக்டிவிஸ்டுகளை எதிர்த்து ஏராளமான வழக்குகளைப் போட்டு அவர்களை ஒழித்துக்கட்டுவதில் ஒபாமாவின் அரசு தீவிரம் காட்டியது. இதைபற்றி நூலாசிரியர் மௌரின் விரிவாக விளக்கி எழுதியுள்ளார். அகண்ட பாரதத்தை எடுத்துக்கொண்டால் பிரதமர் மோடி, 2024 மக்களவைத் தேர்தலில் வென்றுவிட்டால் இணையத்தில் உள்ள அனைத்து வலைத்தளங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். ஏற்கெனவே அனைத்தும் தயாராக உள்ளன. செயல்படுத்த கூடுதலாக ஐந்து ஆண்டுகள் சர்வாதிகாரம் தேவை. 


சில நாடுகளில் ஹேக்டிவிஸ்டுகள், இணையத்தில் சுதந்திரத்தை வலியுறுத்தி பேசி பின்னாளில் அரசியல் கட்சிகளை தொடங்கி அதிகாரத்தை பெறவும முயன்றுள்ளனர். ஸ்பெயின் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் இதற்கு உதாரணம். 


இணையத்தில் சொந்த நாட்டு அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக பேசுவது, இயங்குவது, வலைத்தளங்களை முடக்குவது என்பது அரசியல் செயல்பாடு. இதை ஹேக்டிவிஸ்டுகள் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதற்கு சிலருடன் நூலாசிரியர் பேட்டி கண்டுள்ளார். பொதுவாகவே, ஹேக்கர்கள் என்பவர்களை இணையத் திருடர்கள் என்பது போல வெகுஜன பத்திரிகைகள், திரைப்படங்கள் காண்பித்துள்ளன. ஆனால் அதற்கான முழுமையான அர்தத்தை நூலை முழுமையாக படித்தால் அறிந்துகொள்ளலாம். அறிந்தபிறகு நீங்கள் ஹேக்கர்களை பார்க்கும் பார்வை, புரிந்துகொள்ளும் விதமே முழுமையாக மாறிவிடும். 


சமூக வலைத்தள நிறுவனங்கள், மக்களின் தகவல்களை விற்று அதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அனுசரணையாக இருந்த நிலையை தி அப்சர்வர் என்ற நாளிதழ் வெளிப்படுத்த முயன்றது. அதற்கு எதிராக பேஸ்புக் வழக்குதொடுத்த செய்தியைப் படிக்கும்போது வருத்தமாக உள்ளது. அந்த உண்மையை பின்னாளில் மறைக்க முடியாமல் ஒப்புக்கொண்டது. இணையத்தில் ஜனநாயகத்தைக் காக்கும் செயல்பாடுகளோடு ரிச்சர்ட் ஸ்டால்மனின் சுதந்திர மென்பொருட்கள் பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் எழுதியிருப்பது முக்கியமானது. 


அமெரிக்காவில், பொருளாதார மந்தநிலை தொடர்பாக பல்வேறு இடங்களில் ஹேக்டிவிஸ்டுகள் செய்த போராட்டம் ஈர்ப்புக்குரியதாக உள்ளது. பெரும்பாலும் இவர்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொண்ட அரசுகள் மிக குறைவு. ஜூலியன் அசாஞ்சே, எட்வர்ட் ஸ்னோடன் ஆகியோர் ஹேக்டிவிஸ்டுகள் வரிசையில் வருவார்கள். இவர்களின் செயல்பாடுகளையும் நூலாசிரியர் விளக்கி எழுதியுள்ளார். 


கணினியை வைத்தே நாட்டின் ஜனநாயகத்திற்கு, அரசு செயல்பாட்டிற்கு, மக்களின் நலனுக்கு பங்களிக்க முடியும் என்ற ஆச்சரியமான தகவலைக் கூறுகிறது இந்நூல். இணையம் மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத அம்சமாக மாறிவிட்ட சூழலில், அதன் பின்னணியில் இயங்கியவர்கள், இயங்குபவர்கள் பற்றி அறிய நூலை வாசியுங்கள். 



கோமாளிமேடை டீம் 


https://mitpress.mit.edu/books/coding-democracy

கருத்துகள்