எர்டோகனுக்கு ஆதரவில்லாத நிலைமை - உள்ளூர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி
துருக்கியில் அதிபருக்கு எதிரான நிலை - உள்ளூர் நிர்வாகத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி
துருக்கியில் அதிபராக உள்ளவர் ரிசெப் எர்டோகன். இவரது கட்சி, நீதி மேம்பாட்டு கட்சி. அண்மையில் அங்கு நடந்த உள்ளூர் தேர்தலில் அவரது கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிகாரத்தை சுவைத்து வரும் எர்டோகனுக்கு இது பெரிய சறுக்கல்.
துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, குடியரசு மக்கள் கட்சி. இந்த கட்சியினர், உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டு 36 முனிசிபாலிட்டிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர், புர்சா, அன்டால்யா ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளடங்கும்.
தேசிய அளவிலான தேர்தலில் எர்டோகன் வென்று ஓராண்டு கூட நிறைவடையவில்லை. அதற்குள் அதிபருக்கும், அவரது கட்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் எதிர்க்கட்சிகள் 37 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. 2019ஆம் ஆண்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதிபரின் நீதி மேம்பாட்டுக் கட்சி, 36 சதவீத வாக்குகளை உள்ளூர் தேர்தலில் பெற்றது. அதிபரின் கட்சி, இஸ்தான்புல் நகரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்க இழப்பு. எர்டோகன், இஸ்தான்புல்லிதான் படித்து வளர்ந்தார். 1994ஆம் ஆண்டில், அங்குதான் மேயராக நின்று வெற்றிபெற்றார். அங்குள்ள மக்கள்தொகை 16 மில்லியன் ஆகும். இவர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் ஜிடிபி முப்பது சதவீதமாக உள்ளது.
2019ஆம் ஆண்டு, இஸ்தான்புல்லை நீதி மேம்பாட்டுகட்சி, சில எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆண்டது. தற்போது அதன் வேட்பாளரான முராட் குரும் என்பவரை விட எக்ரம் இமாமோக்ளூ , மேயர் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வாக்கு சதவீதமாக 51 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தோற்றாலும் இம்முறை எக்ரம் வென்று காட்டிவிட்டார்.
உள்ளூர் தேர்தல் வெற்றி மூலம் குடியரசு மக்கள் கட்சி, துருக்கியின் தெற்கு, வடக்கு, மேற்கு பகுதிகளை ஆதிக்கம் செய்கிறது. அதிபரின் நீதிமேம்பாட்டுக் கட்சி துருக்கியின் மத்திய , தென்மேற்கு பகுதிகளை ஆதிக்கம் செய்கிறது. தென்மேற்கு பகுதிகளில் கடந்த ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்தான்புல்லை அடுத்து தலைநகரான அங்காராவில் எதிர்க்கட்சி வேட்பாளர் 61 சதவீத வாக்குகளைப் பெற, ஆளுங்கட்சியோ 32 சதவீத வாக்குகளோடு திருப்தியடைந்தது.
தேசிய கரன்சியான லிரா மதிப்பு பாதாளத்தில் கிடக்கிறது. பணவீக்கம் எழுபது சதவீதமாக உள்ளது. நடைமுறையில் நூறு சதவீதம் என சில நாளிதழ்கள் தகவல் கூறுகின்றன. தினசரி வாழ்க்கைச்செலவே சமாளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏற்றம் உள்ளது. இனி நாம் வாழ முடியாது. தட்டில் சோற்றை வாங்கி வயிறு நிறைய உண்ண முடியாது என்ற நிலையில் மக்களின் மனநிலை மாறியுள்ளது. அதைத்தான் உள்ளூர் வாக்குப்பதிவு தகவல்கள் காட்டுகி்ன்றன. சென்ற ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் பிளவுற்று தோல்வியைச் சந்தித்த எதிர்க்கட்சிகளுக்கு உள்ளூர் முனிசிபாலிட்டி தேர்தல் வெற்றி சற்று நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
எர்டோகன் தற்போதுள்ள பதவியை ஏற்கும்போது, இதுவே தனது கடைசி தேர்தல் என்று கூறினார். ஆனால் அவர் 2028ஆம் ஆண்டு வரை அதிபராக இருப்பார். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவார் என அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். எர்டோகனுக்கு போட்டியாக இஸ்தான்புல் மேயர் தேர்தலில் வென்ற எக்ரமை பலரும் குறிப்பிடுகிறார்கள். எதிர்காலத்தில் அவர் அதிபராக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ஐஇ
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக