15 நொடி குரல் இருந்தால் போதும்- பேச்சு, பாட்டு எதையும் உருவாக்க முடியும்!
ஏஐ மூலம் எந்த குரலிலும் எந்த மொழியிலும் பேசலாம்!
ஓப்பன் ஏஐ நிறுவனம், அடுத்த சர்ச்சைக்குரிய தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இதன்படி, ஏதேனும் ஒருவரின் குரலைக் கொடுத்தால், அதை வைத்து தேசியகீதம் பாடச்சொன்னால் அல்லது குத்துப்பாட்டு பாடச்சொன்னால் கூட அதைச் செய்யமுடியும். மார்ச் 29 வெளியாகியுள்ள இந்த குரல் எஞ்சினில் ஒருவர் பதினைந்து நொடிக்கு குறையாத ஆடியோ கிளிப் ஒன்றை பதிவேற்றினால் போதும். அதை வைத்து, பல்வேறு மொழிகளில் அந்த குரலை பேச வைத்து பாடவைத்து மஜா செய்ய முடியும். தற்போதைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குரல் எஞ்சின் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு குரல் வழியாக பாடங்களை எளிதாக நடத்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும் இது பிரயோஜனமாக இருக்கும். எழுத்து வழியாக ஒலி என்ற நோக்கத்தில் குரல் எஞ்சின் செயல்படுகிறது. மாணவர்களுக்கு பல்வேறு குரல் சாம்பிள்களை வைத்து குரல் பதிவுகளை உருவாக்கி பாடங்களை நடத்த முடியும். படிக்கத் தெரிந்தவர், தெரியாதவர் என அனைவருக்கும் பயன்படும்படியான படைப்பு இது. இதன் தயாரிப்பில் சாட்ஜிபிடி 4 பயன்பாடும் உள்ளது.
2022ஆம் ஆண்டு தொடங்கி, குரல் எஞ்சின் ஆராய்ச்சி தற்போது நல்ல நிலையை எட்டியுள்ளது. ஓப்பன் ஏஐ, எழுத்து வழி ஒலி என்ற வழிமுறையில் முக்கியமான இடத்தை அடைந்துள்ளது. குறிப்பிட்ட சாம்பிள்களை வெளியிட்டுள்ளது. விபத்தில் குரலை இழந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூட குரல் எஞ்சினைப் பயன்படுத்தலாம். அந்த வகையில் லிவோக்ஸ் எனும் தகவல்தொடர்பு ஆப்பில், குரல் எஞ்சின் வசதியை ஓப்பன் ஏஐ பயன்படுத்த அனுமதித்துள்ளது.
நடப்பு ஆண்டில் அறுபது நாடுகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில் குரல் எஞ்சின் வெளியீடு தவறாக பயன்படுத்தப்படவே வாய்ப்பு அதிகம். ஒருவரின் குரல் சாம்பிளை வைத்து முழுநீள உரையாடல், பாடலை உருவாக்க முடியும் என்பதும், அதை எளிதாக பிறர் கண்டுபிடிக்க முடியாது போவதும் நிச்சயம் ஆபத்தானதுதான். எது உண்மை, எது பொய் என கண்டறிவது கடினம். அதிலும் மதவாதம், வெறுப்பரசியல் பேசும் கட்சிகள், இத்தகைய தொழில்நுட்பங்களை எளிதாக பயன்படுத்தி தங்கள் லட்சியங்களை அடைய முயல்வார்கள்.
ஓப்பன் ஏஐ, குரல் எஞ்சின் மூலம் கிடைக்கும் பயன்களை முன்வைத்து அதனால் ஏற்படும் ஆபத்துகளை மறைக்க முடியாது என சிக்னல் ஆப்பின் நிறுவனர் மெரிடித் ஒயிட்டேகர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஓப்பன் ஏஐ, நாங்கள் பல்வேறு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு குரல் எஞ்சினை வெளியிடவிருக்கிறோம். சட்டப்பூர்வ அங்கீகாரத்தோடுதான் செயல்பாடுகள் நடைபெறுகின்றன என எப்போதும் போல வழமையான விளக்கத்தை அளித்துள்ளது. ஓப்பன் ஏஐ, ஏற்கெனவே குரல் வழி காணொலி தொழில்நுட்பத்தை வெளியிட்டது அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் எழுத்து வழி குறிப்புகளின் வழியாக வீடியோக்களை உருவாக்க முடியும். எதிர்காலத்தில் குரல், வீடியோ என இரண்டுமே உண்மையா, உடான்ஸா என கண்டுபிடிக்கவே மல்லுக்கட்ட வேண்டிவரும். அதிலும், காவல்துறையினருக்கு கிடைக்கும் வீடியோ, குரல் வழி பதிவுகளை உண்மையா, பொய்யா என ஆராய்வதில் மண்டை காயப்போகிறது.
ஐஇ கட்டுரையைத் தழுவியது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக