போதை கார்டெல் குழுவை அழிக்க கைகோர்க்கும் இரு நண்பர்களின் போராட்டக்கதை!

 


















சிட்டி ஆஃப் சாவோஸ் 


சீன தொடர்

24 எபிசோடுகள்

ஐக்யூஇ ஆப்


கலின்சியா என்ற  நாடு உள்ளது. அதில் புகழ்பெற்ற நகரம் லாங்புக். இங்கு போதைப்பொருட்கள் கார்டெல்கள் வலுவாக உள்ளன. அதில் முக்கியமான கார்டெல், செவன்ஸ்டார் சொசைட்டி. இந்த அமைப்பு, ஆர்எக்ஸ் 45 என்ற போதைமருந்தை தயாரித்து மறைமுகமாக விற்று லாபம் பார்த்து வருகிறது. நேரடியாக செய்யும் வியாபாரங்கள் தனி. குளியலறை, கடை, மதுபானம் விற்பது, வணிக வளாகங்கள், கிளப்புகள், சூதாட்ட மையங்கள்  என ஏராளமானவை நடைபெறுகிறது. 


சீனவீரர், இந்த போதைப்பொருள் மாஃபியாவை ஒழிக்க கலின்சியா வருகிறார். அதற்காக அவர் வேண்டுமென்றே குற்றம் ஒன்றில் சிக்கிக்கொண்டு லாங்புக் கடல் சிறைக்கு செல்கிறார். அங்கு, யு யோங்ஜி என்ற செவன்ஸ்டார் சொசைட்டியின் துணைத்தலைவர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொல்பவர்களை இடைமறித்துக் கொன்று அந்த மனிதனுக்கு நெருக்கமாகி போதை மாஃபியாவில் சேருகிறார். கூடவே, தீவின் சிறையில் இருந்த வார்டன் லாவோ பாயும் சேருகிறார். இவர், யு யோங்ஜியின் பள்ளிக்கால நண்பர். 


சீன வீரர் லூஜா, தன்னைப் பற்றிய ரகசியங்களை லாவோ பாயிடம் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார். பாய்க்கு தனது தம்பி சீனாவில் இறந்துபோன விஷயம் தெரியவருகிறது. அவனைக் கொன்றது யார் என தேடுகிறார். அதற்கு யூஜா உதவுகிறார். இருவரும் கைகோத்து லாங்புக்கில் உள்ள போதைப்பொருள் கார்டெலை அழிக்க முயல்கிறார்கள் அதில் வெற்றி பெற்றார்களா என்பதே கதை.  


சீன அண்டர்கவர் ஏஜென்ட் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை எந்தளவு பிரச்னைகளை எதிர்கொண்டு செய்துமுடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார்கள். மற்றபடி சீன நாட்டுப்பற்று என எதையும் காட்டி எரிச்சல் செய்யவில்லை. அதுவே நன்றாக இருக்கிறது. லூஜா பாத்திரத்தில் நடித்த நடிகர் தொடரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவரை சூப்பர்மேன் போல காட்டாமல் பலவீனம் கொண்ட மனிதராக காட்டியதே, அந்த பாத்திரத்தை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. லின்ஷியை காதலிக்கவில்லை என்று கூறியபிறகு, அதை தாங்கமுடியாமல் கதறி அழும் காட்சி இதற்கு உதாரணம். 


 இவருக்கு அடுத்து, வில்லனாக இருந்தாலும் யூ யோன்ஜாவின் பாத்திரம் அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளது. பார்க்க முரட்டு தனமான ஆளாக இருந்தாலும் நண்பன் என்றால் உயிரைக் கொடுக்கும் அவரது இயல்பு, நண்பன் ஷியாவோ வூவின் இறப்புக்கு பழிவாங்கத் துடிப்பது, அலட்சியமாக நடப்பது, குண்டுகள் இல்லாத துப்பாக்கியை வைத்து மிரட்டுவது என கவனிக்கும்படியான நடிப்பு. ஏறத்தாழ தொடரின் பெரும்பாலான எபிசோடுகளில் யூயோன்ஜா வந்துவிடுகிறார். 


லாவோ பாயைப் பொறுத்தவரை குற்றவுணர்ச்சியும், மனநல பிரச்னைகளும் கொண்ட மனிதராக வருகிறார். அவரது தந்தை போதை கார்டெலில் இருந்து இறந்துபோகிறார். அவரது இறப்பிற்கு பிறகு லாவோ பாய் மனமுடைந்து போகிறார். ராணுவத்திற்கு வேலைக்கு போகிறார். அந்த சம்பளத்தை வைத்து தம்பியையும், அம்மாவையும் காப்பாற்ற முடிவதில்லை. தம்பி, வறுமையை பொறுக்க முடியாமல் போதை கார்டெலில் வேலைக்கு சேருகிறான். சீனாவுக்கு ஆயுதங்களையும், போதைப்பொருளையும் கடத்தும் பணியின்போது சில உள்சதிகளால் இறந்துபோகிறான். அவன் இறப்பிற்கு தான்தான் காரணம் என லாவோ பாய் குற்ற உணர்வு கொள்கிறான். 


 தம்பியைக் கொன்றது யார் என தேடிவருகிறான். அவனது இந்த பலவீனத்தை வைத்து எதிரிகள் அவனை பல்வேறு வேலைகளை செய்ய வைக்கின்றனர். 


லூஜாவைப் பொறுத்தவரை லாவோ பாயை நம்பகமான ஆளாக பார்த்து இருவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்கிறார்கள். லூஜா புத்திசாலித்தனமாக சண்டைபோடும் ஆள். அவன் நிதானம் தவறும் இடம் அவனது காதலி லின் ஷி கொல்லப்படப்போகிறாள் என்ற செய்தியைக் கேட்கும்போது மட்டுமே. லாவோ பாய், சண்டைபோடுவதில் விற்பன்னன். ஆனால் அவன் அதன் பின்விளைவுகளை யோசிப்பதில்லை. தம்பியைக் கொன்றவர்களை பழிவாங்கும் வெறியில் அவன் செய்யும் செயல்கள் பலவும் பார்வையாளர்களுக்கே பீதியூட்டுபவை. மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு மணல் மூட்டையை குத்திக்கொண்டே இருப்பது, தனது கைவிரல்களை தானே முறித்துக்கொண்டு லூஜாவுக்கு போன் செய்வது ஆகிய காட்சிகளைக் கூறலாம். எளிதாக பாயை ட்ரிக்கர் செய்துவிட முடியும். 


இருபத்து நான்கு எபிசோடுகளில் கதையை வளவளவென சற்றே இழுத்தாலும் கூட சண்டைக்காட்சிகளை சிறப்பாக வைத்து தொடரை பார்க்கும்படி செய்திருக்கிறார்கள். இதில், செவன்ஸ்டார் கார்டெல் முதலாளி ஸெங்கின் மகளாக வரும் கிளாரா லீ கவர்ச்சியில் பின்னுகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்துமே அழகாக உள்ளது. அன்புக்கு ஏங்கி தவறான ஆட்களை நம்பி ஏமாறும் பாத்திரம். அவளிடம் நேர்மையாக நடந்துகொள்வது, லூஜா மட்டுமே. 


அடுத்து லூஜாவைக் காதலிக்கும் டாக்டர் லின் ஷி. இவர், தனது காதலனுடன் பிரேக் அப் செய்துகொள்ளும்போது ஹோட்டலில் லூஜாவை சந்திக்கிறார். அங்கேயே அவளுக்கு அவன் யார் என மனதில் குறுகுறுப்பு முளைவிடுகிறது. பின்னாளில் சிறையில், மருத்துவமனையில் என கத்திக்குத்து, தோட்டாக் காயம் என லூஜா அட்மிட்டாக, அவனுக்கு பேண்டேஜ் கட்டி, அறுவை சிகிச்சை செய்தே லின் ஷி காதலில் விழுகிறார். எப்படி பணக்கார டாக்டர், போதைப்பொருள் விற்கும் ரௌடியை காதலிக்கமுடியும் என கேட்க வாய்ப்புகள் அதிகம். அதற்கு டாக்டரே எளிமையாக ஒருகட்டத்தில் விளக்கம் அளிக்கிறார். அந்த எளிய வசனமே அழகாக உள்ளது. அதை தொடரைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். லின் ஷி பாத்திரம் குடும்ப குத்துவிளக்கு போன்றது. எனவே, கவர்ச்சியான உடை, படுக்கை அறை காட்சியெல்லாம் கிடையாது. கட்டி அணைப்பது, உதட்டு முத்தம் மாத்திரமே. பார்க்க பாந்தமான அழகிதான் இப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 


கார்டெல் முதலாளி ஸெங்கின் பாத்திரம் இறுதியாக பார்வையாளர்களுக்கு செமையான டிவிஸ்ட் ஒன்றறைத் தருகிறார். அதை உண்மையில் எதிர்பார்க்கவே இல்லை. அமைதியாக அனைத்தையும் யோசித்து திடமாக முடிவெடுத்து எதையும் செய்யும் பாத்திரம் இது. அமைப்பிற்கு தலைவனாக ஒருவன் எந்தளவு கவனத்தோடு செயல்படவேண்டுமோ அந்தளவு சிறப்பாக செயல்படும் மனிதர். இவர் நிதானம் என்றால் இவருக்கு அடுத்துள்ள துணைத்தலைவரான யூ யோன்ஜி, அதிரடியான யோசிக்காமல் வன்முறையில் இறங்கக்கூடிய பாத்திரம். இவருக்கும், இவரின் தம்பி மனைவிக்குமான உறவு சற்று வித்தியாசமானது. மேலோட்டமாக பார்த்தால் வன்முறையான ஆள்போல தெரிந்தாலும். ஆழத்தில் அன்பும், அக்கறையும், நட்பும் கொண்ட ஆள் யூ யோன்ஜி. 


லாவோபாய், ஹைலன் ஆகிய பாத்திரங்களுக்கு இடையிலான காதல் காட்சிகள் அவ்வளவு சரியாக இல்லை. நேர்த்தியும் கூடவில்லை. 


ரகசிய போலீசாக இருக்கும் லூஜா, எப்படி தனது உயரதிகாரியை வெளிப்படையாக பார்த்து பேசுகிறார். அதுவும் பொது இடங்களில் எளிதாக அவர்களை கண்காணிக்க முடியுமே? போதை கார்டெல் ஆட்கள் அல்லாமல் உள்நாட்டு காவல்துறையும் லூஜா மீது வழக்குப்பதிவுசெய்து விசாரிக்கும்போது அவர் போனில் எளிதாக பேசுவது, நேரடியாக போலீசின் இடத்திற்கு சென்று தகவல்களை கூறிவிட்டு வருவது பொருத்தமாக இல்லை. அவரை ரகசிய போலீஸ் என எளிதாக கண்டுபிடித்துவிட முடியும், ஆனால் போதை கார்டெல்கள் அதை செய்வதில்லை. செய்திகளை பரிமாறிக்கொள்ளும் முறை கூட சாதாரணமாக உள்ளது. நாயகன் சீனாக்காரன் என வேலை செய்யும் கார்டெல்களில் கூட சந்தேகமாக பேசிக்கொள்ளும்போது, அவனை போலீசார் கண்காணிக்காமல் இருப்பார்களா என்ன?




லாவோ பாய் பாத்திரம் தொடக்கத்தில் வலுவானது போல இருக்கிறது. ஆனால், தம்பி பற்றி யார் என்ன சொன்னாலும் நம்புவதாக இறுதியாக மாறுவது, அவரை பலவீனமாக மாற்றுகிறது. சண்டைபோடுவார்தான். ஆனால் அதில் எந்த புத்திசாலித்தனமும் இருக்காது. முரட்டு அடி. அம்புட்டுத்தேன். இறுதியாக ஹைலனுடன் ஒன்றாக சேர்ந்து வாழத் தொடங்குகிறார்.  


உள்நாட்டு காவல்துறையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு கீழே இளைஞன் ஒருவன், குட்டியூண்டு ஷார்ட்ஸ் போட்ட கவர்ச்சி போலீஸ் ஒருத்தி என மூன்றுபேர் குழு இருக்கிறது. இவர்கள் அளவுக்கு பரிதாபமான பாத்திரங்கள் தொடரில் யாரும் கிடையாது. செய்யும் ஆபரேஷன் அனைத்தும் தோல்வி அல்லது குற்றவாளிகளை போதை கார்டெல்களிடம் விட்டுக்கொடுத்துவிட்டு வரவேண்டியதாக உள்ளது. இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை சற்றேனும் புத்திசாலித்தனமாக வடிவமைத்திருக்கலாம். |


சீனா, தனக்கு ஆதரவான நாடு ஒன்றுக்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்க மறைமுகமாக உதவுகிறது. நேரடியாக அவர்களின் காவல்துறைக்கு துப்புதுலக்குவதில் பயிற்சியும் அளிக்கிறது என தொடரை முடித்திருக்கிறார்கள். நாயகன், தனது தலைவருடன் சீனாவுக்கு திரும்புகிறான். லூஜாவின் காதலி, தனது அம்மாவின் நினைவாக உருவாக்கிய ஆய்வு நிறுவனத்தில் செரிபெரல் பால்சி மருந்தை ஆய்வு செய்யச் செல்கிறாள். கதை அப்படியே நிறைவு பெறுகிறது. 


கோமாளிமேடை டீம் 


ஐக்யூயி ஆப்பில், தொடரை இயக்கிய இயக்குநருக்கு புகைப்படத்துடன் பெயரையும் போட்டு மரியாதை செய்திருக்கிறார்கள். அனைத்து தொடர் பற்றிய தகவல்களிலும் இயக்குநர் பெயரே முதலில் வருகிறது. அடுத்துதான் நடிகர் பெயர்கள் வருகிறது. இது ஒரு நல்ல முயற்சி. 


இந்த ஆப்பிலும் விளம்பர பயங்கரவாதம் உண்டு. தொடரில் இரு பாத்திரங்கள் முக்கியமாக பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென ரிசார்ட் விளம்பரம் ஒன்று வருகிறது. அதை ஸ்கிப் பண்ணிவிட்டு தொடரைப் பார்க்கவேண்டியதிருக்கிறது. எங்கு எப்போது விளம்பரம் வரும் என்பதை பார்வையாளர்கள் யூகிக்கவே முடியாது. தொடருக்கான ரேட்டிங் தொல்லை இடையறாமல் வருகிறது. எதற்கு என்று புரியவில்லை. கடைசி எபிசோடில் ரேட்டிங் பாப் அப் வந்தால் நியாயம் இருக்கிறது. ஐந்து எபிசோடுகள் பார்த்திருப்போம். ஆனால் அங்கு பாப் அப் வந்து தொல்லை செய்கிறது. 


ஒரு தொடரின் தலைப்பைப் பார்த்துவிட்டு கதை என்னவென்று பார்க்க நினைத்தால், தொடரின் முதல் அத்தியாயம் அதுபாட்டிற்கு தொடங்கி ஓடத்தொடங்குகிறது. அதிலும் விளம்பரம்தான் முதலில் வருகிறது. எதற்கு இப்படி ஒரு வசதி. தொடரின் கதைச்சுருக்கத்தைக் கூட பார்வையாளர் விளம்பரத்தைப் பார்க்காமல் படிக்க முடியாதா?



The City of Chaos” is a Chinese drama released in 2018. It tells the story of two men, Jia Luo and Zack Bai, who are trying to uncover the truth behind a series of mysterious events in the city of Lankupah. The drama focuses on an investigation team dealing with international drug trafficking organizations, involving suspicions, betrayals, and a gangster with multiple identities. The series is available with English subtitles on platforms like iQIYI.


 





கருத்துகள்