நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும் - ராபர்ட் புல்லார்ட், ஃபேஷன் டிசைனர் கேப்ரியல்லா, ஜான் கெர்ரி

 












ராபர்ட் புல்லார்ட் 

robert d bullard



நான் வியட்நாம் கால கடற்படையில் பணிபுரிந்தவன். ஒருவகையில் பூமர் என்று கூறிக்கொள்வதில் பெருமைதான். 1979ஆம் ஆண்டு தொடங்கி சுற்றுச்சூழலுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறேன். அன்று செய்த வேலைகள் இன்று தலைப்புச்செய்தியாக நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடப்புகாலத்தில் புதிய தலைமுறையினரான மில்லியனியல், ஜென் இசட், எக்ஸ், ஒய் ஆகியோர் நிறையபேர் வந்துவிட்டனர். 


எனவே, நாம் எதிர்கால தலைமுறையினருக்காக காலநிலை பாதிப்புக்கு தீர்வு தேடும் இனக்குழுவை உருவாக்கும் தேவையிருக்கிறது. மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி வீடு, போக்குவரத்து, உணவு, நீர், ஆரோக்கியம், தூய ஆற்றல் வளங்கள் கிடைக்கவேண்டும்.அதற்கான அரசு கொள்கைகளை வகுக்க நாம் ஒன்றாக சேர்ந்து வலியுறுத்த வேண்டும். காற்று மாசுபாடில்லாத சூழ்நிலை அனைவரின் உரிமை. வேதி தொழிற்சாலைகள், குப்பைகள் கொட்டப்பட்ட நிலங்கள் இல்லாத இடத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவேண்டும் என்ற கனவு எனக்குள்ளது. 


இன்றைய உலக நாடுகளில் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தெருக்களில் களம் கண்டு போராடி வருகிறார்கள். போராட்டத்திற்கு தன்னார்வலர்கள், வழிகாட்டிகள், தொழில்துறை வல்லுநர்கள் என அனைவரின் தேவையும் உள்ளது. ஒன்றாக சேர்ந்து போராடும் போராட்டத்தில் நிறவெறி, சுகாதாரம், பொருளாதாரம் சார்ந்த பாகுபாடுகள், வேறுபாடுகளை களைய வேண்டியுள்ளது. புதிய தலைமுறையினரோடு, அறிவியல் தீர்வுகளோடு காலநிலை மாற்ற போராட்டங்கள் நடத்தப்படவேண்டியுள்ளது. 


காற்றை கவனித்து அதன் மாசுபாட்டு அளவைக் கவனித்து பதிவு செய்து தகவல்களை சேகரிப்பது முக்கியம். இவற்றோடு களச்செயல்பாட்டிலும் கவனம் செலுத்துவது அவசியம். நிறவெறி சார்ந்த பிரச்னைகளை களைந்தால் சூழல் பிரச்னைகளை சரியாக கையாள முடியும். அமெரிக்க அதிபர் பைடன் ஜஸ்டிஸ் 40 என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார். அதன் அடிப்படையில், பொருளாதார பிரச்னைகள் உள்ள இனக்குழுக்களை மேம்படுத்த, அமெரிக்க அரசு நிதியுதவியை முதலீடுகளை வழங்குகிறது. 


அமெரிக்காவில் குடியுரிமை, பெண்கள் உரிமை, அமைதி மற்றும் நீதிக்கான போராட்டங்கள் மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இப்போது நடக்கும் சூழல் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. நாம் ஒன்றாக சேர்ந்து உழைத்தால், எதிர்காலத்திற்கான செயல்பாடுகளை யாருமே தடுத்துவிட முடியாது. காலநிலை மாற்ற நடவடிக்ககைகள் செயல்பாட்டிற்கு வர நாற்பது ஆண்டுகள் காத்திருக்க முடியாது. நான் இளைஞர்களை நம்புகிறேன். நாம் ஒன்றாக சேர்ந்து போராடி, ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டு மாற்றங்களை உருவாக்குவோம். தேவையைத் தீர்ப்பதற்காக பணம் தேவை. அதிகாரத்தின் பின்னே அது தொடராமல் இருக்கட்டும்.


time


2



கேப்ரியல்லா ஹார்ட்ஸ்ட்


gabriela hearst


by cady lang


நாம் எதற்கு மதிப்பளிக்கிறோம் என்பதிலிருந்துதான் நம்முடைய சிந்தனை, செயல் உருவாகிறது. நேரம், மனநிலை என திட்டமிட்டு சூழலுக்கு உகந்த பொருட்களை உருவாக்குகிறேன். எதிர்காலத்தில் இதற்கான பலன்கள் தெரியும். நான் செல்லும் பாதை பற்றிய கவனத்தைக் கொண்டிருக்கிறேன். நம் அனைவருக்கும் அழகாக தெரியவேண்டும் என்று ஆசை. நான் செய்ததெல்லாம் அதில் குறிப்பிட்ட கவனத்தைக் கொண்டுவந்ததுதான் என்றார் கேப்ரியல்ல ஹார்ட்ஸ்ட். 


கேப்ரியல்லா, 2015ஆம் ஆண்டு தனது பெயரில் உடை பிராண்டு ஒன்றை உருவாக்கினார். அதில் அவர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துமே சூழலுக்கு உகந்தவை. பிளாஸ்டிக் சிறிதும் இல்லாதவை. தயாரிக்கும் உடைகள், பேக்குகள் அனைத்துக்குமே கிராக்கியுள்ளது. ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெருகி வருகிறார்கள். 2020ஆம் ஆண்டு ஹார்ட்ஸ்ட் உருவாக்கிய ஆடைகளை நடிகை ஆஞ்சலினா ஜோலி, சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், ஜில் பைடன் ஆகியோர் அணிந்த பெருமை மறக்கமுடியாதது. 


உருகுவேயில் உள்ள சான்டா இசபெல் என்ற பதினேழாயிரம் ஏக்கர், பண்ணையை சொந்தமாக கொண்டிருக்கிறார். வீட்டுக்கு தேவையான பொருட்களை, போர்வைகளை தானே உருவாக்கிக்கொள்ளும் திறனை கேப்ரியல்லாவின் அப்பா கொண்டிருந்தார். எனவே, அதிக பொருட்களை வீணடிக்க கூடாது என மனதில் பதிந்துவிட்டதுபோல. ஃபேஷன் துறையில் வேலைக்கு வந்தாலும் கூட தனது சிறுவயது நினைவுகளை அவர் கவனத்தில் கொண்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டு ஃபேஷன் நிறுவனமான சோலில் மூன்று ஆண்டுகள் கிரியேட்டிவ் இயக்குநராக வேலை செய்து, அதன் பொருட்களை சூழலுக்கு உகந்ததாக மாற்றி சான்றிதழும் பெறவைத்திருக்கிறார். தொழில் ரீதியாக வெற்றிகளை பெற்றாலும், சூழலோடு இணைந்து பயணிக்கும் நோக்கத்தை இன்று வரை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே பேணுகிறார். 

டைம் வார இதழ் 


3



ஜான் கெர்ரி



கடந்த மார்ச் ஆறாம் தேதி அமெரிக்க அரசின் சூழல் தூதர் பதவியிலிருந்து ஜான் கெர்ரி ஓய்வுபெற்றார். அவருக்கு வயது எண்பது. அரசு பதவிகளில் நாற்பது ஆண்டுகள் இயங்கியுள்ளார். மக்களவை உறுப்பினர், அதிபர் வேட்பாளர், செயலாளர், அரசு அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை சுமந்துள்ளார். இப்போது அவருக்கு ஓய்வு பெறும் வயதுதான். ஆனாலும் தனியார் துறையில் காலநிலை மாற்றத்தை சமாளிக்க முதலீடுகளை திரட்ட உள்ளார். 


எவரிடே இஸ் எக்ஸ்ட்ரா என்ற பெயரில் தனது சுயசரிதத்தை எழுதியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் உலக நாடுகளின் தலைவர்களை அனுசரித்துப் பேசி, வெப்பமயமாதலுக்கு எதிராக வேலை செய்ய முயன்றார். அந்த கலந்துரையாடல் முடிந்தபிறகு காரில் வந்துகொண்டிருந்தபோதுதான். அவருக்கு பெருமைக்குரிய எவால்ட் வோன் கிலெய்ஸ்ட் எனும் புகழ்பெற்ற விருதுக்கு தேர்வாகியுள்ள செய்தி கிடைத்தது. காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை  அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து போராடவேண்டியுள்ளது. சொல்வதற்கு கடினமாக இருந்தாலும், நாம் சந்தித்து வரும் பிரச்னைகள் நமது முன்னோர்கள் எதிர்கொண்டதை விட வேறுபட்டவை என விழா மேடையில் பேசினார். 


பெருந்தொற்று காலத்தில்தான் ஜான் கெர்ரி, சூழல் தூதர் பணியை ஏற்றுச் செய்யவேண்டி வந்தது. அப்போது அமெரிக்கா, சூழல் ஒப்பந்தங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டிருந்தது. ஜான் கெர்ரி, இப்போது பல்வேறு நாடுகளுடன் சூழலுக்காக பேசி ஒத்துழைப்பை பெற்று வருகிறார். சூழலுக்கான திட்டங்களை தீர்மானிப்பதில் அவர் முக்கியமான குரலாக ஆளுமையாக மாறி உள்ளார். 


டைம் வார இதழ் 

ஜஸ்டின் வோர்லேண்ட்















கருத்துகள்

பிரபலமான இடுகைகள்