உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி எது?

 















உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி எது?


பைலேட்ஸ் 


இவ்வகை உடற்பயிற்சிகள் முழுக்க வயிற்றுத் தசைகளுக்கானது. வயிற்றை பழனி படிக்கட்டு போல அமைக்கவேண்டும் என்பவர்கள் இந்த வகை பயிற்சிகளை செய்யலாம். தொடக்கத்தில் யாராவது வழிகாட்டி இருந்தால் அவர்களை பின்பற்றலாம். பிறகு வழி தெரிந்தபிறகு பயணத்தை நீங்களே செய்துகொள்ளலாம். இணையத்தில் ஏராளமான சின்ன உடுக்கை இடை நங்கைகளே அவர்களாக விளம்பர ஆப்புடன் வந்து பயிற்சிகளை சொல்லித் தருகிறார்கள். எனவே, பைலேட்ஸ் பயிற்சி செய்யும்போது கடினமாக இருந்தாலும், அதை பெண்கள் செய்யும்போது பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. 


பைலேட்ஸ் பயிற்சியை கழுதைபோல உழைத்து செய்யவேண்டியதில்லை. இதில் முக்கியமானது சுவாசமும், வயிற்று தசைகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் கவனமும்..... அதில் கவனம் தவறினாலும் தசைகள் பயிற்சி காரணமாக வலிமையாகும். ஆனால் கால தாமதமாகும். எனவே, பயிற்சி செய்யும்போது கவனமாக செய்தால் எந்த பிரச்னையும் இல்லை. வயிற்றுதசைகள் வலிமையாவதோடு, இடுப்பு அளவும் குறையும். எனவே, பேண்டுகள் புதிதாக வாங்க வேண்டிய செலவைக் குறைத்துக்கொள்ளலாம். யூட்யூபிலேயே ஏராளமான பைலேட்ஸ் பயிற்சி வீடியோக்கள் கிடைக்கின்றன. நேரம் கிடைக்கும்போது செய்து தொந்தியை குறைத்து இழுத்து பின்னப்பட்ட நார்க்கட்டில் போல வயிற்றை மாற்றுங்கள். 


பூட்கிராம்ஸ்


புஷ்அப், ஸ்குவாட் என பல்வேறு ஏரோபிக் பயிற்சிகளைக் கொண்டது. ஏறத்தாழ ராணுவத்தில் புதிதாக சேரும் மாணவர்களுக்கான பயிற்சி என்று கிண்டலாக கூறுகிறார்கள். பூங்காவில் உள்ள உட்காரும் பெஞ்சுகள், டயர்கள், ஜிம்மில் உள்ள கெட்டில்பெல்ஸ் என பலதையும் இந்த பயிற்சியில் பயன்படுத்துகிறார்கள்.  பூட்கிராம் பயிற்சிகளை ஒருவர் செய்தால், பாரங்களை ஏற்றி இறக்குவது என்பதும், மாடிப்படிகள் ஏறுவதும் எளிதாக இருக்கும். அதற்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கவேண்டியதில்லை.  ஒரு நிமிடத்திற்கு பத்து கலோரிகள் என்ற அளவில் இந்த பயிற்சிமுறையில் ஆற்றல் எரிக்கப்படுகிறது. ஏறத்தாழ நீச்சல், மிதிவண்டி ஓட்டுவது ஆகியவற்றுக்கு நிகரான ஆற்றல் எரிப்பு. 


குறைந்த இடைவேளை எடுத்துக்கொண்டு பயிற்சிகளை கடுமையாக செய்வதை ஹிட் என்கிறார்கள் அந்தமுறையில் பயிற்சி செய்தால் இதயத்துடிப்பு எழுபத்தேழு சதவீதம் அதிகரிக்கும். முழு உடலுக்கான பயிற்சி என்பதால் அறைக்குள் செய்தாலும், பூங்காவில் சென்று செய்தாலும் சரி பயன்கள் ஒன்றுதான். வயது தடை கிடையாது. மனதில் உள்ள நம்பிக்கையே முக்கியம். நிதானமாக தொடங்கி வேகத்தை அதிகரித்துக்கொள்ளலாம். 



நீச்சல் 


முழு உடலுக்குமான பயிற்சி. யாரால் எடையைத் தூக்கமுடியவில்லை. ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னைகள் இருக்கிறது என்று கூறுகிறார்களோ அவர்கள் சட்டையை கழற்றிப்போட்டுவிட்டு நீச்சல் குளத்தில் குதித்துவிடலாம். ரத்த அழுத்தம், இதய நோய்களை குறைப்பதில் நீச்சலுக்கு நிகர் கிடையாது. இருந்தாலும் மோசமான அலுவலக அரசியல், நச்சு ஆட்கள் இருந்தால் அங்கிருந்து விரைவில் விலகிவந்து விடுவது நல்லது. நீரில் நீங்கள் நேர்மையாக நீந்தி பயிற்சி செய்வது முக்கியம். அப்போதுதான் தசைகள் நன்றாக பயிற்சிக்குள்ளாகி பயன் தரும். நீருக்குள் மூழ்கி மூச்சுவிட்டுக்கொண்டு நீந்துவது நுரையீரல் தசைகளை மேம்படுத்தும். மூச்சு இழுப்பது தெரியாது. ஆனால் அதை வெளியிடும்போது சற்று கடினமாக இருக்கும். நீரின் அடர்த்தி காரணமாகவே இப்படி நேருகிறது. 


அடிடாஸ் ஷூக்களைப் போட்டுக்கொண்டு ஓடும்போது, டிஐ சைக்கிள்களை ஓட்டும்போது உடலின் கீழ்ப்பகுதி அதிக பயிற்சிக்கு உள்ளாகிறது. ஆனால் நீச்சலில் உடலின் மேல்பகுதியும் தீவிரமாக இயங்குகிறது. நீராலோ என்னவோ, நிறையப்பேர் நீச்சல் பயிற்சியை பிற பயிற்சிகளை விட தேர்ந்தெடுக்கிறார்கள். வாரத்திற்கு மூன்று முறை நீரில் குதித்து பயிற்சி செய்தால் போதும். அதுவும் முப்பது நிமிடங்கள் போதுமானது. இதில் இடைவேளைகளும் உண்டு. 


யோகா


பாபா ராம்தேவ் செய்யும் குரங்கு வித்தைகளை எல்லாம் செய்யவேண்டியதில்லை. வேதாத்ரி மகரிஷியின் யோகப் பயிற்சி, ராமகிருஷ்ண மடத்தில் கிடைக்கும் எளிய நூல்களின் வழியாக பயிற்சிகளைச் செய்தாலே போதுமானது. உடலை வளைத்து நீட்டுவதால் என்ன கிடைக்கும் என பலரும் நினைக்கலாம். நிச்சயம், கட்டழகு கைகள், பழனி படிக்கட்டு போல வயிறு உருவாகாது. ஆனால் உங்கள் அலுவலக சகாக்கள் உருவாக்கும் மன அழுத்தம் குறையும், மனைவி, மக்கள்மாரை சிறிதுநேரம் மறந்துவிட்டு இருக்கலாம். உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும். பாரமாக இருந்த உடல் மெல்ல பறவையின் சிறகு போல மெல்லியதாக மாறும். 


மூச்சு, உடல் தசைகள் மீதான கவனம் முக்கியம். மற்றபடி யோகா பயிற்சிகளை இன்றைக்கு காலத்திற்கு ஏற்றாற்போல நிறைய மாற்றங்களை செய்து பயன்படுத்துகிறார்கள். எனவே, யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து செய்யும்போது கவனம் அவசியம். தவறாக செய்தால் உடல் தசைகள் கிழிந்துவிட, உறுப்புகள் பாதித்துவிடலாம். எனவே, வழிகாட்டி அவசியம். நீண்டகால நோய்கள் இருந்தால், அதைப் பொறுத்து சில யோகப் பயிற்சிகளை தவிர்க்கவேண்டியிருக்கும். 


மார்க்கம் ஹெய்ட்

டைம் இதழ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்