ஒரே உலகம் ஒரே பாரதீயன் - அனுபவக்கதை - 1
அன்று நல்ல நாளா என்று பழனிசாமிக்கு தெரியவில்லை. ஆனால், அன்றுதான் ஈரோட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் முன்னதாகத்தான் 420 சரணுக்கு போன் செய்திருந்தான். முதலில் ஏர்செல் அலுவலகம் திறந்திருந்தவன். அரிசிக்கடைக்காரரின் ஊனமான பெண்ணை நோட்டம் விட்டு திரிந்தான். பிறகு என்னவானதோ, தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிருபராகி கலெக்டர் ஆபீஸ் உள்ளே பணியாற்றிய பெண்ணை கல்யாணம் செய்துகொண்டான்.
எப்பட்ரா கல்யாணமெல்லாம்?
அது அப்படித்தான் லவ்வாயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
நீ எதுவும் பண்ணுலியா?
நான் பண்றதுக்கு கையில் காசும் இல்ல. வேலையும் இல்ல. நான் ஈரோட்டுக்கு வர்றேன். நோக்கியா போன்ல பிரச்னை. அங்க கஸ்டமர் சர்வீஸ் சென்டர் எங்கிருக்கு? உனக்குத் தெரியுமான்னு கேட்கத்தான் போன் பண்ணேன்.
பெருந்துறை ரோட்டுல ஒண்ணு இருக்கு. நோக்கியா போனுங்கறேயே என்ன போனு பட்டன் போனா?
பட்டன் போனா… ஆண்ட்ராய்ட்தான். டச் போனு. அங்க வந்துட்டு வேல முடிஞ்சா உன்ன பாக்க வரலாமா?
நா ரொம்ப பிஸி. இருந்தாலும் உன்ன பாக்க முடியுமான்னு தெரில. நீ பன்னீர் செல்வம் பார்க்குக்கு வந்துட்டு கூப்பிடு. பார்ப்போம்.
சரண் சாதாரண ஆள் கிடையாது. பல ஆட்களையும் பேசி கரைத்து கடன் வாங்கிக்கொண்டு ஓடிவிடுவான். அவனை கடன்காரர்கள் போனிலும் நேரடியாகவும் துரத்திக்கொண்டே இருப்பது வாடிக்கை. ஓடுவதில் வீரன்.
ஊரில் இருந்த பழனிச்சாமிக்கு சோறு தின்றவுடன் கழிவறைக்கு ஓடவேண்டிய கழிச்சல் நோய் இருந்தது. அப்படியான ஒரு நேரத்தில், மலக்குழியில் அமர்ந்திருந்தபோது போனில் அழைப்பு வந்தது. சென்னையில் இருந்து தனபாலன் என்பவர் பேசினார். கடன் கொடுத்தாராம். இப்போது சரண் அவரது அழைப்பை ஏற்பதில்லை. அவனுடைய பிரண்ட் என்பதால் பழனிக்கு ஏதாவது தெரியும் என நினைத்து போன் செய்தாராம். பழனிக்கு வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. தே****யா பயல்களா, அதுக்கு நா என்னடா பண்ணட்டும்? என மனதில் சொல்லிக்கொண்டான். போனில் எனக்கும் அவனுக்கும் அவ்வளவா பேச்சு வார்த்தை இல்லீங்க என முடித்துக்கொண்டான். எதிர்முனையில் உள்ளவர் அதை நம்பவில்லை என்பது அவரது குரலில் தெரிந்தது. இதுபற்றியெல்லாம் பழனி கவலைப்படுவதில்லை. ஏனெனில் 420 சரண் தங்கியிருந்ததே தனபாலனின் அறையில்தான். அவனை பழனி அங்குதான் சந்தித்தான். அப்போதே சரணின் மனதில் ஏதோ வன்மம் தகிப்பதை உணர்ந்தான். அவன் மீது வெயிலில் காயாத துணியில் வீசும் புழுங்கல் வாடை வீசிக்கொண்டே இருக்கும். சென்னையில் இருந்தவரை எந்த வாசனை திரவியமும் அவனது மீது வீசிய புழுங்கல் வாடையை மாற்ற முடியவில்லை.
இதெல்லாம் பதினைந்து பி பஸ்சில் ஏறி மெல்ல ஈரோடு செல்லும் வழியில் செல்லும்போது நினைவுக்கு வந்தது. பழனிக்கு மனதில் தோன்றிய ஒரே ஆசுவாசம். சரண் இப்போது திருமணம் செய்துகொண்டான். குழந்தை பிறந்திருக்கிறது. அவனது வாழ்க்கையும் முன்னிருந்த கள்ள மனமும் மாறியிருக்கும் என நினைத்தான்.
இரட்டை வயல் சென்று திரும்பிய பதினைந்து பி பஸ்சுக்கென மிராசுதார்பாளையத்தில் யாரும் காத்திருப்பதில்லை. தனியார் பஸ், அனிருத் பாட்டிசைக்கிறது. அரசு பஸ்சில் உடைந்துபோன ஜன்னலை திறக்கவே முடிவதில்லை. பயணிகளை கொண்டுபோய் ஈரோட்டுக்கு சேர்க்கும் நேரம் தனியாருக்கு முக்கால் மணி நேரம் என்றால் அரசு பஸ்சுக்கு ஒரு மணிநேரம் பத்து நிமிடமாகிறது. அப்புறம் எப்படி எத்தனை பேர் வருவார்கள்?
எட்டு முக்கால் ஆகிக்கொண்டிருக்கிறது. முன்பை விட வெயில் உக்கிரமாக இருந்தது, புதிதாக கட்டிய மாரியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்பிக்கொண்டிருந்தார்கள். பழனி நின்றிருந்த பேருந்து நிறுத்தத்தில் நேர் எதிரே சென்ற சாலை கால்நடை மருத்துவமனை, பிறகு அப்படியே நேராக சென்றால் வளைந்து திரும்பினால் அவனது வீட்டுக்கு அழைத்து செல்லும். அதற்கு முன்னதாகவே திரும்பினால் சூ.து. பாளையத்திற்கு போகலாம்.
மிராசுதார் பாளையம் முன்னர் ஆட்கள் நிரம்பிய ஊர்தான். ஆனால் இன்று ஆட்கள் நகரங்களுக்கு பிழைக்க போனதால் ஆட்கள் நடமாட்டமே குறைவு. பிள்ளைகளை கூட்டிவந்து வேனில் வைத்து அனுப்பிவிட்டு செல்லும் அம்மாக்கள் மட்டும்தான் தென்பட்டார்கள். புதிதாக கட்டிய பேருந்து நிறுத்தத்தில் இரும்பு நாற்காலிகள் நகராமல் இருக்க கற்கள் வைக்கப்பட்டிருந்தன. கொடுமுடி செல்பவர்கள் அந்த இடத்தில் நின்று செல்வார்கள். கொரோனா வந்தபிறகு பேருந்தில் செல்லும் பயணிகள் குறைந்துதான் போய்விட்டார்கள். மிராசுதார் பாளையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கமலாபாளையம் இருந்தது. அங்குதான் அரசுப்பள்ளி உள்ளது. அதற்கு செல்ல மாணவர்கள் நீலநிற சீருடையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள்.
பழனிக்கு அந்த சிறுமிகள் தன்னுடைய நெற்றியைப் பார்ப்பதாக தோன்றியது கீழே குனிந்துகொண்டான். நெற்றியில் அலர்ஜி காரணமாக தோல் உரிந்து வெள்ளையாக வெளியே தெரிந்தது. நெற்றி மட்டுமல்ல தலை முழுவதும் செதில் செதிலாக தோல் உரிந்து வந்துகொண்டிருந்தது. தலைமுடியை கோதி தோல் விழுந்து வெள்ளையான இடத்தை மறைத்தான். டைட்டன் வாட்சை பார்த்தான். மணி எட்டரை ஆகிவிட்டது. இன்னும் பத்து நிமிடத்தில் பஸ் வந்துவிடும்.
அந்த நேரத்தில் ஒரு பையன் அவனது அம்மாவை இறக்கிவிட்டான். அவனுக்கும் அவனது ஆறு வித்தியாசம் என்ன பத்து வித்தியாசங்கள் சொல்லலாம் போல.. அந்தளவு இருவரும் வேறு வேறு ஆளாக இருந்தார்கள். அப்பா ஜாடையாக இருக்கோம் என பழனிக்கு சிந்தனை சென்றது.
எஸ்எஸ்டி சென்றபிறகு கோவில் தேர் போல அரசு பஸ் வந்தது. பின்புறமாக ஏறிக்கொண்டான். கடைசி இருக்கையில் உட்கார நினைத்தான். அங்கே முழுக்க நான்கு மாணவர்கள் ஆறுபேருக்கான இருக்கையை நிறைத்து உட்கார்ந்திருந்தார்கள். அனேகமாக கமலாபாளையத்தில் இறங்குபவர்களாக இருப்பார்கள். அடியே என்னால உள்ளே பூந்துது தன்னால என வரிகள் அவர்கள் வைத்திருந்த போன்களில் இருந்து கசிந்தது. இதுல ஆடுறவ செமையாக இருக்கிறாலல்லோ என பூந்தொட்டி போல தலைமுடி வைத்திருந்தவன் சொல்ல… மற்றவர்கள் அந்த பெண்ணை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பழனிக்கு அரசு பஸ்சில் போவது வாடிக்கைதான். ஆனால் ஓவ்வொருமுறையில் பதினெட்டு ரூபாய் டிக்கெட் காசு போக இருபது ரூபாய் கொடுத்தால் இரண்டு ரூபாய் வருவதில்லை. அது என்னவிதமான தந்திரம் என்று தெரியவில்லை. கேட்டால் கொடுத்துக்கொள்ளலாம் என கறார் காட்டுகிற கண்டக்டர்களே வருகிறார்கள்.
அப்போதும் பொங்கல் தின்று காபி குடித்து வந்ததுபோல நிதானமாக இருந்தார் நடத்துநர். ஐந்து அடி உயரத்தில் பெரும்பகுதி தளர்ந்து தொங்கும் சதைதான். கன்னச்சதைகள் கறைபடிந்தது போல கீழே தொங்கின. வயிறு வெளியே தள்ளியிருந்தது. எங்க என்று கேட்டு இடத்தைச் சொல்லியதும் எச்சிலைத் தொட்டு டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு இந்தா என இரண்டு ரூபாயை கையில் அழுத்திவிட்டு சென்றார்.
பரலோக பிதா தன்னை ரட்சித்திருக்கிறார் என பழனி நினைத்துக்கொண்டான். இரண்டு மெலடி சாக்லெட் வாங்கி தின்ன யோசனை சென்றது. கமலாபாளையத்தில் பஸ் நின்றது. நீலச்சட்டை மாணவர்கள் வேகமாக கீழே இறங்க, அவர்களைத் தொடர்ந்து வேலைக்கு செல்லும் பெண்கள் மேலே ஏறினர்.
‘’ஏம்மா, எங்க இறங்கணும்னு முன்னாடியே சொல்லணும். திடீர்னு எந்திரிச்சு எடத்தச் சொல்லக்கூடாது. நிறுத்தமாட்டனாமா? ‘’ என நடத்துநர் அலறினார். பெண்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர்கள் சீட்டு தேடும் வேட்டையை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
பழனி, வலதுபுறமாக ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தான். கண்ணாடியை உயர்த்த முயன்றான். என்ன முயன்றும் முடியவில்லை. பசையால் ஒட்டவைக்கப்பட்டது போல இருந்தது. அவனைப் பார்த்த நடத்துநர், ஏம்பா, அதை நீக்கணும்னு பாக்கறே, அதை தூக்க முடியாது விட்ரு என்றார்.
இலவச டிக்கெட்டு கவருமென்டு கொடுத்ததுல இருந்தே லேடீஸ் கூட்டம் அதிகமாயிருச்சுங்களா என்றார் பழனிக்கு அருகில் இருந்தவர். அவரிடம் லேசாக முட்டைக்கவிச்சி அடித்துக்கொண்டிருந்ததது.
ஏய் முட்டக்கம்பெனி நீயா, ஓசு டிக்கெட்டு எல்லாம் சரித்தேன். ஆனா நஷ்டத்தை யார் ஏத்துக்கறது நாமதானே, ஏறுறாளுக இறங்கறாளுக ஒரு மரியாதையும் கெடையாது. என பேசிக்கொண்டே டிக்கெட் எண்ணிக்கையை அட்டையில் எழுதிக்கொண்டிருந்தார். பனங்காரப்பட்டி நிறுத்தத்தில் வெள்ளைச்சட்டையும் காவி வேட்டையுமாக சிலர் ஏறினார்கள். ஏறியதும் கையிலிருந்து பெட்டியைத் திறந்து பயணிகளுக்கு ஏதோ கொடுக்கத் தொடங்கினர். பழனி என்னமோ ஏதோவென எட்டிப்பார்த்தான். லட்டுகளை வேகமாக கொடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தனர்.
ஏய் யாருயா அது மொதல்ல டிக்கெட்டு வாங்கு. அங்க என்ன ஏவாரம் பாத்துட்டிருக்கே என கண்டக்டர் எரிச்சலானார்.
அண்ணே, அயோத்தில ராமர் கோவிலு கட்டிட்டாங்க. அதுக்குத்தே லட்டு இந்தாங்க உங்களுக்கும் என லட்டை கண்டக்டர் வாயிலேயே திணித்தார் வாட்டசாட்டமான வாலிபர்.
காவி வெங்கட்டுதானே நீயி. ரெண்டு நாளுக்கு முன்னாடிதே உங்கம்மா நீயி அவங்களை உடம்பு சரியில்லீனா கூட ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போகமாட்டீங்கறேன்னு ஒப்பாரி வெச்சிட்டிருந்தது. நீயி என்ன லட்டு குடுத்துக்கு கிட்டு இருக்கே?
சலபதி அண்ணே, எல்லாத்தையும் ராமர் பாத்துக்குவாரு. கவலையேபடாதீங்க. இஸ்மாயில் கடையில ஏதோ மளிகைப்பொருள் வாங்கியிருக்கு. அதை குழம்பு வச்சு சோறு தின்னதிலிருந்தே ஒடம்பு சரியில்லாத போச்சு. அவன் கடையை தீய வெச்சு எரிச்சுட்டம்முன்னா எல்லா பிரச்னையும் தீந்துரும்.
ஒங்க ஆத்தாவுக்கு என்ன வயசுடா, துள்ளி விளையாடறவளா என்ன, கடனுக்கு பொருளு கொடுக்குற இஸ்மாயிலு நல்ல மனுஷன்.. அவங் கடைய போயி கொளுத்தறன்னு பேசற.. புத்தி கெட்டுப்போச்சா….
அண்ணே என்னன்னே நீங்க, நம்ம இந்துக்களோட வாழ்க்கை கெட்டுப்போனதே அவன மாதிரி முஸ்லீமாலதே. எங்க தலைவர் எப்படி பேசி நல்லா புரிய வெச்சார் தெரியுமா?
சரியான கிறுக்கு புன்னையா இருக்கியேடா, உன்ற தலைவன் இந்திலே புழுவறத ரேடியோக்காரன் தமிழ்ல டப்பிங் பண்ணி ஊரைக் கெடுக்குறானுக. நீ அந்த பீ திங்கிற நாய்க பேச்ச கேட்டுட்டு செயிலுக்குத்தா போவப்போற பாரு.
அண்ணே நீங்க தேசத்துகு எதிரா பேசுறீங்கன்னே…. நாமள்ள பாரதீயன்ஸ் ஆயிட்டோம். இந்தியாங்கற பேர மட்டும் பாரத் மாத்திட்டம்னா போதும். அமெரிக்காவுக்கு அப்புறம் நாமதான்.
எதில, பிச்சை எடுக்கிறதுலயா இல்ல மக்கள சுட்டுக்கொல்றதிலயா?
வளர்ச்சின்னே வளர்ச்சி…
போதுண்டா, கொஞ்சோ தள்ளி நில்லு உன்னோட ஊட்டு சட்டியில ஒருவாய் சோறு கெடையாது. பூணூல் அய்யருக்கு பொச்சு கழுவ போயிட்டான் என்றபடி கடைசி இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டார் கண்டக்டர். காவி வெங்கட், தலையை மொட்டையடித்திருந்தார். செந்தூரத்தை திலகம் போல இட்டிருந்தார். அவரைப் பார்த்தால் வட இந்திய ஆள் வேட்டி கட்டிக்கொண்டிருப்பது போல இருந்தது. ஆள் ஓங்குதாங்காக இருந்தார். அவரது உயரமான உடலுக்கு சட்டை சிறியதாக இருந்தது. இடுப்புச்சதை சற்றே பிதுங்கி வெளியே தெரிந்தது.
கண்டக்டரை சுற்றி இருந்தவர்களுக்கு கண்களிலேய பீதி தெரிந்தது. கையில் வாங்கிய லட்டை வழுக்கை தலை மனிதர் இப்போது சாப்பிடலாமா இல்லை அப்புறமா என ஊசலாட்டதுடன் கையில் வைத்திருந்தார்.
அவரைப் பாத்த காவி வெங்கட், அண்ணே சீக்கிரம் லட்ட தின்னுங்க. செஞ்சி எத்தன நாளோ தெரியில. பேக்கரில போயி ராமர் கோயிலுக்கு காசு குடுன்னோம். காசெல்லாம் கெடையாதுன்னு சொல்லி, கண்ணாடி பொட்டிக்குள்ள மிச்சமீதி விக்காம இருந்தத எல்லாம் எடுத்து குடுத்துட்டான. கெட்டுப்போச்சுன்னா பொருளு வீணாயிரும்னே… என சொல்ல வழுக்கைத் தலைக்கு அப்போதே முகத்தில் வியர்வை பூக்கத் தொடங்கியது.
-------
கருத்துகள்
கருத்துரையிடுக