இந்தியர்களின் கால்களுக்கு அகலமான செருப்புகள்- புதிய காலணி அளவீடு பா

 











புதிய காலணி அளவு பா - அவசியம் என்ன?


இந்தியாவில் தற்போது செய்யப்படும் காலணிகளின் அளவுக்கு ஐரோப்பிய, இங்கிலாந்து நாட்டு அளவீடுகள்தான் பயன்படுகின்றன. அதை மாற்றும் விதமாக பா - பாரத் என்ற பெயரில் இந்தியர்களின் தனித்துவம் கொண்ட காலணி அளவீடு கொண்டு வரப்படவிருக்கிறது. இதற்காக தேசிய அளவிலான ஆய்வு நடைபெற்றது.


 2021-22 என இரண்டு ஆண்டுகளில் 1,01,880 மக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஐந்து வெவ்வேறு நிலப்பரப்புகளில் உள்ள எழுபது இடங்களில் உள்ள மக்களை இதற்காக தேர்ந்தெடுத்தனர். இந்தியர்களின் தோராய காலணி அளவைக் கண்டுபிடிக்க 3டி ஸ்கேனிங் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 


ஆண்களுக்கு பதினொரு வயதிலும், பெண்களுக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிலும் கால்களின் வளர்ச்சி கூடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட 3டி ஸ்கேனர்கள் மூலம் கால் அளவு, அதன் வடிவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களை விட இந்தியர்களின் கால் அகலமாக உள்ளது. மேற்குநாடுகளின் காலணி அளவு, இந்தியர்களுக்கு குறுகலானதாகவே இருந்துள்ளது. இதை மாற்றினால் அவர்களுக்கு கால் அளவை விட சற்று தாராளமான செருப்புகள் தேவை என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 


காலணி அளவு பொருந்தாதபோது என்ன ஏற்படும்? சிலர் இறுக்கமாகவும், சிலர் பெரிய செருப்புகளையும் ஷூக்களையும் வாங்கி அணிந்து வந்துள்ளனர். ஹைஹீல்ஸ் அணியும் பெண்கள் கூட இதில் தப்பிக்கவில்லை. குட்டையான செருப்பு, பெரிய செருப்பு என இரண்டிலும் கால்களில் ரத்த ஓட்டத்தைப் பாதிப்பதோடு காயங்களையும் ஏற்படுத்தும். செருப்பு காலைக் கடிப்பது, காயங்களை ஏற்படுத்துவது பெரிய விஷயமா என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால் அவர்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் ஏற்படும் ஆபத்தை யோசித்துப் பாருங்கள். ஒற்றைக் காயம் போதும். அவர்கள் மீதியுள்ள வாழ்க்கை முழுக்கவும் அவதிப்பட...


பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களின் காலணி அளவுகள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துவிட்டன. அவை அந்த நாட்டில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலானவை. வேறுவழியில்லாத நிலையில், இந்தியர்கள் ஐரோப்பியர்களின் கால் அளவுக்கு ஏற்ப தமது செருப்புகளை தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. ஆண்களுக்கு 5 முதல் 11, பெண்கள் 4 முதல் 6 என்ற அளவுகளில் காலணிகளைத் தேர்ந்தெடுத்து வந்தனர். 


இப்போது காலணி அளவுகளுக்குத் தேவையென்ன வந்தது. சுதந்திரமடைந்து எழுபத்தைந்து ஆண்டுகளாகியும் நாம் மேற்கு நாடுகளின் காலணி அளவை வெற்றிகரமாகவே பயன்படுத்தி வந்திருக்கிறோம் என நினைக்கலாம். ஆனால், முன்பைப்போல காலணி அளவுகள் மக்களுக்கு பொருத்தமாக இல்லை. இன்றைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் காலணிகளில் ஐம்பது சதவீதம் பொருத்தமாக இல்லை என திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. இந்தியர்களுக்கு என தனித்த காலணி அளவீடான பா மூலம் காலணி உற்பத்தியாளர்களும், மக்களும் முரண்பாடுகள் இல்லாமல் பயன்பெறுவார்கள். 


சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ (Scientific and Industrial

Research–Central Leather Research Institute (CSIR–CLRI) )என்ற ஆராய்ச்சி அமைப்பு, காலணி அளவுக்கான ஆய்வுகளைச் செய்துள்ளது. அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வுத்தகவல்கள் மூலம் 2025ஆம் ஆண்டு தொடங்கி, காலணி அளவுகள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. இப்போது பா அளவுகளைப் பற்றி எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 


அளவு 1 - குழந்தைகள் (0-1 வயது), அளவு 2 - (1- 3 வயது வரை), அளவு 3 (4-6 வயது வரை), அளவு 4 (7-11 வயது வரை) அளவு 5 சிறுமிகள் (12-13 வயது வரை) அளவு 6 பையன் (12-14 வயது வரை) அளவு 7 பெண்கள் (14 வயதுக்கும் மேல்), அளவு எட்டு - ஆண்கள் (15 வயதுக்கும் மேல்) 


காலணி வணிகத்திற்காக அளவு 3-8 ஆகியவை தொடக்கத்தில் அரசால் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. புதிய பா காலணி அளவீடு மூலம் நாட்டிலுள்ள எண்பத்தைந்து மக்கள் பயன்பெறுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலணி அளவுகளில் எட்டை மட்டும் இந்திய காலணி தயாரிப்பாளர்கள் கவனத்தில் கொண்டு மாற்றினால் போதும். அமெரிக்க அளவில் பத்து அளவுகள், ஐரோப்பிய அளவில் ஏழு அளவுகள் இருந்தன. இவற்றைப் பற்றி இனி கவலைப்படவேண்டியதில்லை. ஷூக்கள் அளவு, 5 மி.மீ கூடுதலாகப்போகிறது. பா அளவீடு மூலம் வணிகத்தில் தற்போதைக்கு உள்ள காலணிகள் சற்று மாறி, அகலமாக மாற்றப்படும். 


ஐஇ


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்