பக்கத்திலே நரவலே கிடந்தாலும், அங்கேயே எலையைப் போட்டு சோறு திம்பேன் - ஒரே உலகம் ஒரே பாரதீயன்
















இக்னோர் தி ட்ரூத் ஃபார் செல்ஃப் பெனிஃபிட்ஸ் என்ற வாக்கியம் மனதிற்குள் ஆழமாக ஒலிக்கத் தொடங்கியது. எங்கிருந்து இந்த வாக்கியம் தோன்றியது என யோசித்தாலும் எதுவும் உடனே நினைவுக்கு வரவில்லை.





ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து கிலோமீட்டர் சென்றே தீர வேண்டும் என்ற லட்சியத்தை பேருந்து ஓட்டுநர் மனதில் கொண்டிருந்தார். எனவே, பேருந்தை ஏராளமான டிவிஎஸ் 50, ஸ்கூட்டிகள கூட முந்திக்கொண்டு சென்றன. பழனிக்கு கூட நாம் முன்னே நகருகிறோமா இல்லை நிற்கிறோமா என்று சந்தேகமாக இருந்தது. நல்லவேளை ஜன்னலில் காட்சிகள் மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருந்தன.

பேருந்தில் மெல்ல மக்கள் கூட்டம் நிரம்பத் தொடங்கியது. பெண்களுக்கு இலவசம் என்பதால் நிறைய பெண்கள் ஏறுகிறார்கள் என்று தோன்றியது. ஆனால் கண்டக்டரின் முகம் ஏறும் பெண்களைப் பார்த்து நல்லவிதமாக யோசிக்கவில்லை.

‘’பொம்பளைங்களுக்கு இலவசம்னு சொன்னதும் சொன்னாங்க. முதல்ல மாதிரி யாரும் கரெக்ட்டா கையைக்காட்டி ஏறது இல்ல. அவிங்க பாட்டுக்கு சிரிச்சுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்காங்க. பஸ்சு பக்கத்துல வந்ததும் ஏதோ எஸ்கேஎம் முட்டக்கம்பெனி வண்டி மாதிரி நிற்கும் கையைக்கூட பெருசா காட்டறதில்ல. ஏறுனாலும் சீட்டுதா வாங்கறாய்ங்கலா அதுவும் இல்ல. இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிருச்சு’’ என்றார் எச்சிலைத் தொட்டு டிக்கெட்டுகளை எண்ணிப்பார்த்தபடி. உட்கார்ந்தவரின் அருகில் முப்பதைந்து வயது மதிக்கத்தக்க முன்வழுக்கை ஆள் வெள்ளைச்சட்டையும், காக்கி பேண்டும் அணிந்திருந்தார். கண்டக்டர் சொன்னதைக் கேட்டதும் ஏதோ தொண்டை விக்கிக்கொண்டதைப் போல க்ளக் க்ளக் என சிரித்தார்.

அவரது சிரிப்பு பழனிக்கு நண்பன் 420யை நினைவுபடுத்தியது. ஒருமுறை அவன் அரிசிக்கடைக்காரரின் ஊனமான பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறேன் என்றான். ஏதோ, அந்த பெண்ணைக் காரணம் காட்டி கம்பெனிக்கு ஏதோ சலுகை வாங்க யோசித்திருந்தான்.

‘’இங்க எல்லாமே லாப நஷ்ட கணக்குத்தான். புள்ளைவளுக்கு நம்மோட காசு, பேரு, புகழ் எல்லாமே வேணும். நமக்கு அவளுக அழகு, உடம்பு தேவைப்படுது. எல்லாமே லாபம் கொடுக்குற டீலிங்கா இருக்கணும். எனக்கு அதுதே முக்கியம்’’ என்று சொல்லியிருந்தான். அப்படிப்பட்ட அவனே செட்டியார் பெண்ணை கல்யாணம் செய்து கூட்டி வந்து ஊரில் ரகளையானது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

பிறரைப் பார்த்து பொறாமைப்படுவதும், தன்னுடைய நலனுக்காக யாரையும் சளைக்காமல் பயன்படுத்துவதும் அவன் வாடிக்கை. அதை அவன் பெரிதாக மாற்றிக்கொள்ளவில்லை. அதிலும், தன்னிடமே பணம் ஐயாயிரம் கடன் வாங்கிவிட்டு அலையவிட்டது நினைவுக்கு வந்தது. பிறகு சில ஆண்டுகளாக பேசவில்லை. பணத்தை கொடுத்தால் பணம் கிடைக்கும், இல்லேனா உறவு மிச்சமாகும். ரெண்டுலா ஏதாவது ஒண்ணுதான்டி மாப்ளே என கண்ணுச்சாமி மாமா கூறிச்சிரிப்பார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊர்ப்பக்கம் வருவார். ராசு அண்ணன் வீட்டுக்கு வருபவர், இரவில் பிள்ளையார் கோவில் கல்லுக்கட்டில் சரக்கு அடித்துவிட்டு பேசுவார்.

அரிசிச்சோறு திங்கோணும்னா கவுண்டு வீட்டு விசேஷத்துக்கு கீது போனாதே உண்டு. இல்லன்னா கோவிலு கும்பாபிஷேகம். வேற வழியில அரிசிச் சோத்த கண்ணுல பாக்க முடியாது. பக்கத்துல பீயே பேண்டு வச்சிருந்தாலும் அரிசிச்சோறு கெடச்சா அங்கேயே நின்று திம்பேன். காசு இல்லாத கொடுமை, அப்படி எல்லாம் யோசிச்சிருக்கேன். இன்னைக்கு நெலம பரவாயில்லை

என்றவரின் முகம் இருட்டிலும் வந்துபோன இருசக்கர வண்டி வெளிச்சத்தில் இறுக்கமாகி தளருவது தெரிந்தது. கண்ணு மாமா, லாரி ஓட்டி சம்பாதித்து மகளுக்கும் பெண் பார்த்து மணம் செய்துவைத்துவிட்டார். அப்பாவின் மரியாதைக்காக, அவனுக்கு பெண்ணைக் கொடுக்க பிரியம் இருந்தது. ஆனால், உடல் முழுக்க செதில் செதிலாக உதிரும் அலர்ஜி பிரச்னையில் கல்யாணம் எல்லாம் எதுக்கு என கொடுத்த ஜாதகத்தை வேண்டாம் என திருப்பிக்கொடுக்க சொல்லிவிட்டான்.

மன்னாரடி பாளையம் நால்ரோடில் வடக்கு நண்பர்கள் ஏறினார்கள். எப்போதும் போல திபு திபுவென ஏற, பஸ் படிக்கேட்டே சற்று வளைந்து நிமிர்ந்தது. தூக்கியெறியப்பட்ட எவரெடி பேட்டரி மீது அடிக்கும் வாடை அவர்கள் மீது வீசியது.

தண்ணி இல்லாத இடத்தில இருந்து வந்தவனுக சரி. இங்கதே தண்ணி இருக்குதே கொஞ்சம் குளிச்சி தொலைஞ்சா என்ன? நாத்தம் கொடல புடுங்குதுடா சாமி…. என் அருகில் உட்கார்ந்திருந்தவர் சட்டென சொன்னார். கண்டக்டர் டிக்கெட்டை கொடுத்து காசை வாங்கிப் போட்டுக்கொண்டர்.

இன்னைக்கு நம்ம ஊருல விவசாய வேலை, பேக்டரி வேலன்னு அத்தனையும் இந்திக்காரனுவதே பாக்கறானுக. இப்படியே போச்சுன்னா, நம்மூரு புள்ளைகளையே பொண்ணுகேட்டு வருவானுக பாரு… என வழுக்கைத் தலை ஆள் பேச அருகிலிருந்த பலரும் பீதியாக தலையசைத்தனர்.

கண்டக்டர், அதே டெல்லிக்காரனுவ இந்திக்கார நாய்களுக்கு இங்கேயே ரேஷன் சாமானெல்லாம கொடுக்க ஏற்பாடு பண்றானுக பாத்தியா… இவனுக அங்க உதவாக்கரை நாய்களுக்கு ஓட்டப்போட்டுப்புட்டு ரயிலு புடிச்சு டிக்கெட் எடுக்காம நம்மூருக்கு வந்துர்றானுவ. நம்மோட எல்லா எடத்திலியும் எசிலி போட்டுக்கிட்டு சம்பளத்த கொறைக்கறானுக.. சின்னசாதி பயலுக

சின்னசாதி பயல் என்பதைக் கேட்டதும் பழனிக்கு ஒருமாதிரி இருந்தது. உள்நாட்டில் பிழைக்க வழிதேடுபவனை என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது? தொழிற்சாலை கட்டுவது கடினம். அதில் வேலைக்கு ஆட்களை சேர்ப்பதை விட கோவிலை கட்டி பிச்சைக்காரர்களாக மக்களை மாற்றலாம் என அரசு நினைக்கிறது.

பஸ்சில் இப்போது கூட்டம் நிற்கத் தொடங்கிவிட்டது. வந்த வடக்கு நண்பர்கள் படிக்கட்டு அருகே தங்களது கடப்பாரை, மம்முட்டி வைத்துக்கொண்டு நின்றுகொண்டார்கள். சிவப்பு, மஞ்சள், பச்சை என வானவில்லின் அனைத்து நிறங்களையும் ஏழு வடக்கு நண்பர்கள் தேநீர் சட்டையாக தைத்துபோட்டிருந்தார்கள். அதில் ஒருவனுக்கு மண்வெட்டி போல நீள் சதுர முகம். அவன் எதையோ குறிப்பாக பார்த்துக்கொண்டிருந்தான். பழனி வெளியில் பார்வை ஓட்டி சட்டென பஸ்சுக்குள் பார்க்க, மஞ்சள் சேலையும், கறுப்பு ஜாக்கெட்டும் போட்டிருந்த பெண்ணின் வெள்ளை நிற பிரா வெளியே தெரிந்தது. அதை மண்வெட்டி முகக்காரன் தாபத்தோடு பார்த்தான். பெண்களுக்கு நுட்பமான உணர்வுண்டு அல்லவா. டக்கென ஏதோ உறுத்தவே ஸ்ட்ராப்பை உள்ளே இழுத்து விட்டுக்கொண்டாள்.

பழனி, நோக்கியா போனை சர்வீஸ் சென்டருக்கு கொடுத்திருந்தான். அதை வாங்குவதற்கு மூன்று முறை போனபிறகும் சரியாகவில்லை. இதில் என்ன பிரச்னை என்றால் போனைவிட அதை சரி செய்ய கொடுத்த மெக்கானிக் மதுரைக்காரர் என்பதே சிக்கல். எனவே, இருமுறை சென்றபோதும் வர நேரமானது என தாமத அறிக்கையைக் கொடுத்தார். ஆள் நல்ல தெலுங்கு செட்டியார் போல தாட்டியமான உடம்பு. தங்கச்சங்கிலி பொருத்தமில்லாமல் எருமைக்கு மூக்கணாங்கயிறு போல தொங்கியது. தலையை நவீன பூந்தொட்டி கட்டிங்கிற்கு ஒப்புக்கொடுத்திருந்தார்.


வீட்டுல கொஞ்சம் பிரச்னைங்க… போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வர்றேன் என அவராகவே ஒரு தகவலை சொல்லிச் சென்று ஏசியைப் பார்த்து நின்றார். பழனி நின்று கொண்டு இருக்க, அங்கேயே இருங்க சொல்லிவிட்டு அறையை சற்று கூட்டிவிட்டு அவர் திரையை விலக்கிவிட்டு தன்னுடைய கடைக்குள் சென்றுவிட்டார். கடை என்பது பெரிதாக ஒன்றுமில்லை. ஒரே கடையை இரண்டாக பிரித்திருந்தார்கள். சாம்சங், ஆப்பிள், நத்திங் எல்லாம் தனியாக பழுது பார்த்தனர். அவை தவிர பிற்போக்காக உள்ள சந்தையில் இருக்கிறதா இல்லையா என தெரியாத நிறுவனங்களை மதுரைக்காரர் பழுதுபார்த்தார்.

நோக்கியாவுக்கு போக்கிடம் வேறு எங்கு. அவரிடம்தான் என போக வேண்டியிருந்தது. அவரின் பழுதுபார்க்கும் கடை பெருந்துரை சாலையில் இருந்தது. அங்கு வேறு பாலம் கட்டி நகரத்தின் போக்குவரத்து பிரிக்கப்பட்டிருந்தது. பாலத்தின் கீழே நவீன கழிப்பறை சொல்லாமலேயே இயங்கி வந்தது. பல இடங்களில் ஆரஞ்சு வண்ணம்தான்.

ஜபாங்கு என்ற பரோட்டா கடை அங்கு விசேஷம். கடையின் முன்னே சாக்கடை அடைத்துக்கொண்டு நின்றது. கறிக்கொழம்பு ஊத்தித் தின்னமுன்னா, சாக்கடை நாத்தம் கூட தெரியாது போல என பழனி நினைத்துக்கொண்டான். கடையில் அவன் போன காலை நேரத்திலேயே நல்ல கூட்டம். அப்படியே நடந்து சென்றால் பெருந்துறை சாலை முழுக்க சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள்தான். பிணத்திற்கு கூட வைத்தியம் பார்த்து பில் கொடுக்கும் ஆட்கள் என கிண்டல் செய்த விஜயகாந்தின் படம் நினைவுக்கு வந்தது. செந்தில் மருத்துவமனை கடந்து சுதா மருத்துவமனையைத் தாண்டிய பிறகுதான் செல்போன் பழுதுபார்க்கும் கடை.

டூதவுசண்ட் போர் ஹன்ரட் ருப்பீஸ்…. கேஷா கொடுத்திருங்க என்றவர் போனை ஏராளமான ரப்பர் பேண்டுகளைப் போட்டு கட்டிக் கொடுத்தார். பழனிக்கு அதைப்பார்த்ததுமே போனை அப்படியே கொண்டுபோய் குழிதோண்டி புதைத்துவிடவேண்டியதுதானா என்று தோன்றியது.

ஒருமணி நேரம் அப்படியே இருக்கட்டும். அப்புறமா சார்ஜ் போடுங்க. வேலை செய்யும் என்றார் மதுரைக்கார மச்சான். காசை வாங்கிக்கொண்டவர், ரசீதை எழுதிக்கொடுத்துவிட்டு தொந்தியில் தாளம் தட்டிக்கொண்டு திரையை விலக்கிக்கொண்டு உள்ளே போய்விட்டார். அவரது கடையில் முதல் பகுதியில், டேபிள், சேர் போடப்பட்டிருந்தது. உள்ளே இருந்த அறை திரைச்சீலையால் தடுக்கப்பட்டிருந்தது. அங்கு நிறைய வல்லுநர்கள் வரிசையாக உட்கார்ந்து போனை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர். விலை அதிகமான போன்களை பழுதுபார்ப்பவர்களும் அங்கு இருப்பார்கள் என பழனி நினைத்துக்கொண்டான்.

அம்மாவின் போனை எடுத்து வந்திருந்தான். அதில் நண்பன் 420 யை அழைத்தான். எடுத்தவன், அன்று தனக்கு லீவுதான். சோலாரில் இருப்பதாக சொன்னான்.

நீ நேரா காளமாட்டுச்செலைக்கு வந்திரு. அங்கிருந்து உன்ன நானு வண்டில கூட்டிக்கிட்டு போறேன்.

பழனி, காளை மாட்டு சிலை சந்திப்புக்கு என தனியாக பஸ் ஏறவில்லை. அப்படியே நடக்க தொடங்கினான். வெயில் நன்றாக அடித்து காய்ந்தது. வியர்வை உடலில் துடைக்க துடைக்க பெருகியது. நெற்றியில் பெருகிய வியர்வை கண்களில் நிறைந்து கரித்தது. பாதையே சில நொடிகள் தெரியாமல் நடக்கும்போது தடுமாறினான். பின்னே வந்த தமிழர், கிறுக்குத்தாயோலி செத்துரப் போறடா ங்கொம்மால என்றார்.

வெற்றிக்குறி காட்டிவிட்டு ஓரமாக நடக்கத் தொடங்கினான். மாயாபஜார் கடை தொங்கி இடது ஓரமாக சென்றால், சிறுதானியக்கடை, மளிகைக்கடை, ஜூஸ்கடை என வந்தது. தனபால் டீக்கடை மூடிக்கிடந்தது. பழனியின் உறவுக்காரர்கள் நடத்தும் கடை. சொந்தக்காரன் வந்துவிட்டால் வந்துவிட்டானே என மைதா மாவில் தோசை செய்துபோடும் அன்பும் அக்கறையும் காண்பிப்பவர்கள். அந்த அனுபவத்திற்கு பிறகு அங்கு செல்வதையே விட்டுவிட்டான்.

பிரயோஜனம் என்றால் வழிந்து வந்து பேசுவதும், கால் காசு பயனில்லை என்றால் முகத்தை திருப்பிக்கொண்டு செல்வதும்தானே உறவுகளின் வழக்கம். தானும் அப்படியே இருந்துவிட்டு போகலாம் என்பதே பழனியின் எண்ணம்.

வெயில் உக்கிரத்தில் வியர்வை சட்டை முதுகுப்புறம் முழுமையாக நனைத்து வியர்வை பேன்டின் இடுப்பு பகுதியை தாக்கிக்கொண்டிருந்தது.சென்னிமலை பஸ் போகும் முக்கைக் கடந்து தார்பாய் ஹோட்டல் இரண்டைக் கடந்திருப்பான். அங்கு, செல்போன் சிம் கொடுக்கும் ஜியோ கம்பெனி ஆட்கள் நின்றிருந்தார்கள். நீலக்கலர் சட்டை அணிந்தவன், தனது விவோ போனை பழனியைப் பார்த்துதும் நீட்டினான். ஒரே ஒரு போட்டோ எடுங்கண்ணே.. ஒண்ணே ஒண்ணு என்றான்.பழனியா சிக்குவான். கையை மறுத்தபடி ஆட்டிக்கொணேட விலகிச்சென்றான். கூட இருப்பவன் கெட்டவார்த்தை கூறியதைக் கேட்டான். இப்படி சாடை பேசுபவர்களை அவன் முன்னர் வேலை செய்த இடத்திலேயே கண்டிருக்கிறான். தொடக்கத்தில் கொதித்த ரத்தம் இப்போது குளிர்ந்துவிட்டது.

காளை மாட்டு சிலை பக்கத்தில் நிற்கவென பஸ் ஸ்டாப் மட்டுமே இருந்தது. கரூர், கொடுமுடி, பழனி, தாராபுரம் செல்லவேன ஆட்கள் பத்து பேர் நின்றிருந்தார்கள். அதற்கு மறுபுறம் சென்னிமலை, வெள்ளோடு செல்பவர்களுக்கான பெருங்கூட்டம் நின்றிருந்தது. அதையொட்டிய ஆவின் பாலகத்தில் பால் கொதித்துக்கொண்டிருந்தது. அதற்கெல்லாம் மேலாக ஆகாயத்தில் கண்ணை ஓட்டினால் வெற்றி மசாலாவுக்காக லோஹிப்பில் தொப்புள் தெரியும்படி நடிகை சியாமளா பேட்டியா சமையலறையில் நின்றபடி புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

ஆழமான தொப்புள், குடம் போல மார்பகங்கள்…. நடிகைக்கு கோவில் என்ன வேறு என்ன தேவை வேண்டும் என நினைவுகள் மின்ரயில் வேகத்தில் ஓடின. ஈரோட்டில் ஐந்து நட்சத்திரம் என்ற பெரு நிறுவனமே கோலோச்சியது. தீவனம், தியானம், எண்ணெய், முட்டை, சித்த மருத்துவம் என கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தவர்கள். மறக்காமல் பொதுமக்கள் நலனுக்காக அவர்களின் ஐந்து நட்சத்திரங்கள் பொறித்த சாலை தடுப்பான்களை பெருந்தன்மையோடு வழங்கியிருந்தனர். அதே ஐந்து நட்சத்திரம்தான் காளைமாட்டு சிலையைக் கூட தானம் செய்து அதை பராமரித்தும் வந்தது. அதன் அருகிலேயே சித்த சிகிச்சையும், அதன் பொருட்களை விற்பனை செய்யும் கடையும் கூட இயங்கி வந்தது.

ஜூஸ் கடை ஓரமாக நிழல் தேடி சிலர் நின்றார்கள். பழனியும் அவர்களோடு சேர்ந்துகொண்டான். கொஞ்சநேரத்திலேயே காட்டஸ் மருத்துவமனை பக்கமிருந்து 420 பைக்கில் திகில் கிளப்பும் வேகத்தில் வந்தான். அவன் வேகத்திற்கு பிளாட்டினா ஒத்துழைக்க மறுத்து தடுமாறியது. பழனி பைக்கில் ஏறிக்கொண்டான்.

பட்டன் போனுக்கெல்லா ஈரோடு வரணுமா, எங்க டவுன அவமானப்படுத்துறியா, ஊர்லயே பாக்கவேண்டியதுதான?

நோக்கியா போனுன்னா பட்டன் மட்டும்தான என்ன? ஆண்ட்ராய்டும் இருக்குது தெரியோதோ?





விவோ, ஆப்போனு போய்க்குட்டு இருக்கு … நோக்கியாவ வாங்கிட்டு அத பழுதுபாக்கறன்னு வர்றயே இதெல்லாம் நியாயமா?

420, அப்படி பசித்த ஓநாய் போலவே இருந்தான். கல்யாணமாகி குழந்தைக்கு அப்பனாகிவிட்டிருந்தான் என்பதே ஆச்சரியமாக இருந்தது. பழுப்பு நிற டீஷர்ட் போட்டிருந்தான். இடுப்பில் கருப்பு நிற டிராக் பேண்ட் இருந்தது. ரேபான் குளிர் கண்ணாடி அணிந்திருந்தான். நேராக வண்டியை கரூர் செல்லும் வழியை நோக்கி திருப்பி இயக்கினான். பைக் காட்டஸ் மருத்துவமனையைக் கடந்து சாலையில் பாய்ந்தது. நாடார் மேடு அருகே உள்ள ஜூஸ் கடைக்கு வண்டியை விட்டான். கடை, அங்கு பெட்ரோல் பங்கை ஒட்டியிருந்தது. வண்டியை ஓரமாக நிறுத்தியவன், பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு லைஃபு எப்படிப்போகுது என்று கேட்டபடியே படியேறினான்.

ரெண்டு மின்ட் ஜூஸ்…அங்க கொண்டு வந்துருங்க என்று சொன்னபடி எப்போதும்போல கூனி நடந்து போனான். உடல் சென்னையில் இருந்ததை விட வற்றியிருந்தது போல பட்டது. குழந்தைக்காக உழைத்திருப்பான் என பழனி நினைத்துக்கொண்டான்.

----
ஏகாங்கி






கருத்துகள்