பசுமைக் கட்சியின் தொடக்கம், தேவை என்ன?






















அரசியலில் சூழல் கொள்கைகளை பெரும்பாலான கட்சிகள் பேசுவதில்லை. இதற்கு காரணம், அப்படியெல்லாம் பேசினால் கட்சிக்கு நிதி, நன்கொடை கிடைக்காது. குறிப்பாக அந்நிய முதலீடு சுத்தமாக வராது. ஆனாலும் கூட உலகளவில் க்ரீன்ஸ் என்ற பசுமைக் கட்சி தனது சூழல் கருத்துகளை சொல்லி அரசில் பங்கு வகித்து தனது அதிகாரத்தை செல்வாக்க வெளிப்படுத்தி வருகிறது.




உலக நாடுகள் முழுக்க பசுமைக்கட்சி இயங்கி வருகிறது. இந்தியாவில் கூட பசுமைக்கட்சி உள்ளது. ஆனால், அதிகளவு பிரபலம் ஆகவில்லை. எனவே, வட இந்தியாவில் அந்த கட்சியை இப்படியொரு கட்சி உள்ளதா என்ற அளவில் மட்டும் பார்த்து வருகிறார்கள். சாதி, மதம் பார்த்து வாக்களிக்கும் பின்தங்கிய இந்தியா போன்ற நாட்டில் சூழல் கொள்கைகளை கருத்தில் கொண்டு அதற்கு வாக்களிக்க அதிக காலம் தேவை. கட்சியாக தன்னை பிரபலப்படுத்தவே பசுமைக்கட்சி இன்னும் மெனக்கெட வேண்டும்.




சூழல் என்று சொன்னால், பெருநிறுவனங்கள் அருகில் வரமாட்டார்கள். தேர்தல் நிதி கொடுக்கமாட்டார்கள். பொதுவாக வணிக நிறுவனத்திற்கு எப்படி பணம் கிடைக்கும்? ஏனெனில் எந்த அளவுக்கு இயற்கை வளத்தை சுரண்ட முடியுமோ அப்படி செய்தால்தான் ஜிண்டால், டாடா, ரிலையன்ஸ் ஆகியோர் வளர முடியும். கொள்ளையடித்த பணத்தைப் பற்றி யாராவது தவறாக பேசிவிட்டால் என்ன செய்வது என அறக்கட்டளை தொடங்கி ஏழை, பாழைகளுக்கு சிறிது பணத்தை கிள்ளிக் கொடுக்கலாம். அதையே எங்களது பெருந்தன்மை பாரீர் என வதந்தீ, டெய்லி புஷ்பம் ஆகிய நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்களை அளிப்பார்கள். அப்புறம் என்ன திருடனுக்கு, திருடிய சாமர்த்தியத்தை பாராட்டி விருதுகளும் கொடுத்தால் எப்படியிருக்கும்?




மேற்கு நாடுகளில் ஐம்பது அறுபதுகளில் பல்வேறு உரிமைப் போராட்டங்களை மக்கள் நடத்தினர். அதன்வழியாகவே பசுமைக்கட்சி பின்னாளில் கவனம்பெற்றது. சூழல் இலக்கு, தொழில்நுட்பத்தை திணிக்காத இயல்பு, மையப்படுத்தாத தன்மை, மக்களுடன் பிரச்னைகளில் பங்கேற்கும் பண்பு ஆகியவை பசுமைக் கட்சி உறுப்பினர்களிடையே இருந்தது. அதை அவர்கள் முக்கிய அம்சமாக கூறி பிரசாரம் செய்தனர்.




அரசியல்கட்சிகளைப் பொறுத்தவரை மரபான, புரட்சிகர கட்சிகள் உண்டு. அவையும் மக்களின் ஆதரவைப் பெறவேண்டி நிறைய விஷயங்களில் தங்களின் வெளிப்படையான கருத்துகளை தெரிவிக்க மாட்டார்கள். மதச்சார்பற்ற இந்தியா என்று சொல்லி, கோவில்களைப் பற்றி பேச இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தயங்குகிறதே அதுபோலத்தான். இதே காங்கிரஸில் தலைவராக இருந்த முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரு, தனது கருத்துகளை வெளிப்படையாக கூறத் தயங்கியதே இல்லை. காலப்போக்கில் அத்தகைய தலைவர்களின் நன்னோக்கங்கள் கூட காலாவதி ஆகிவிடுகிறது. அதற்கு பிறகு வருபவர்கள், கட்சியின் லட்சியம், நோக்கம் பற்றியெல்லாம் பேசாததே இதற்கு காரணம்.




1980களில் பசுமைக்கட்சி ஐரோப்பாவில் தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனால், மரபான பழைமைவாத கட்சிகளோடு முரண்பாடு ஏற்பட்டது. அவர்கள் பசுமைக்கட்சியினரை ஒழிக்க முயன்றனர். அந்தக்காலத்தில் சூழல் சார்ந்த கொள்கைகள், அதை வைத்து அரசியல் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. தொண்ணூறுகளில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தனர். இப்படி பின்னடைவு ஆனாலும் கூட அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றி பெற்று பிறகட்சிகளோடு கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். பல மாற்றங்களையும் வலியுறுத்தும் செல்வாக்கைப் பெற்றனர்.

theeran sagayamuthu - brotherhood society




கருத்துகள்