அவசரகாலத்தையும், அதில் நடைமுறையான குடும்பக்கட்டுப்பாட்டு விவகாரத்தை அங்கதமாக்க முயலும் நாவல்! - 1975 - இரா முருகன்

 











1975


இரா முருகன்


கிழக்குப் பதிப்பகம் 


pages 449



விலங்குப்பண்ணை, 1984 ஆகிய நாவல்களை நினைவுபடுத்துகிற படைப்பு. அதாவது, நல்ல அவல நகைச்சுவையை படிக்கலாமே என தூண்டுகிற இயல்பு கொண்டது. காங்கிரஸ் அரசின் சர்வாதிகாரம், கண்காணிப்பு ஆகியவற்றை அவல நகைச்சுவையாக்கி ஆசிரியர் எழுதியுள்ள நாவல்தான் 1975. இரா முருகன், வங்கிப் பின்னணியைக் கொண்டு எமர்ஜென்சி காலகட்டத்தை பகடி செய்திருக்கிறார். இந்நாவலை கிழக்கு பதிப்பகம் எதற்கு வெளியிட்டிருக்கிறது என்ற காரணத்தை நாம் ஆராய அவசியமே இல்லை. வலதுசாரி பதிப்பகம். அதற்கு உகந்தபடி நாவலின் மையப்பொருளை தேர்ந்தெடுக்கிறது. 


இருபத்தொரு மாதங்கள் நீடித்த எமர்ஜென்சியை நினைவூட்டும் விதமாக அதே எண்ணிக்கையில் அத்தியாயங்கள் உள்ளன. சென்னை, திருநெல்வேலி, தில்லி என மூன்று நகரங்களுக்கு கதை நகர்கிறது. அதேபோல பாத்திரங்களும் மாறுகிறார்கள். அனைத்திலும் மாறாத ஒன்று, இருபதம்ச திட்டம். ஐந்து அம்ச கொள்கை, பேச்சைக் குறை. வேலையைச் செய் என்ற வாசகம் ஆகியவைதான். 


நாயகன் சிவசங்கரன் போத்தி வங்கி ஊழியன். அவனுக்கு அரசியலோ, தத்துவமோ, அப்பா வழியில் கூடக்குறைய கற்ற ஆயூர்வேதம் கூட முக்கியமில்லை. வங்கிப்பணியை எப்படியோ காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறான். ஆனால், அதையும் அவன் நேர்மையாகவே செய்கிறான். எந்த தவறுக்கும், அழுத்தங்களுக்கும் பணிவதில்லை. 


தான் செய்யும் வேலை வழியாக எமர்ஜென்சி காலத்தில் பிரச்னைக்கு உள்ளான மனிதர்களைப் பார்க்கிறான். சாமானிய மக்களுக்கு குறைந்த தொகை என்றாலும் கடன் கொடுக்கிறான். முன்னாள் ராணுவ வீரர் வினோத் மாத்தூர் செய்யும் தன்னார்வ பணியைப் பார்த்துவிட்டு, தமிழர் நடத்தும் பள்ளிக்கு 500 ரூபாயை தானாக முன்வந்து கொடுக்கிற கருணை உள்ளம் போத்தியுடையது. அதேநேரத்தில் அவனது நண்பன் ஆனந்தசாரதி, செய்யும் வேலையில் கமிஷன் அடிக்கிறான். அதைப்பற்றி சற்று சபலம் ஏற்பட்டாலும் அந்த வழியில் போத்தி நடப்பதில்லை. அப்பயணத்தில், தொடக்கத்தில் ராணுவ வீரரிடம் வேலை செய்த கணக்காளர் காசுக்காக தன்மானத்தை இழந்து நேர்மையற்ற ஒருவரிடம் வேலை செய்கிறார். அவரிடம் வயதான காலத்தில் தோளில் குறுகல் தொற்றிக்கொள்கிறது. அதைப் பார்த்து போத்தி மனதில் நினைக்கிறான். இவர், பழைய இடத்திலேயே கௌரவமாக இருந்திருக்கலாம் என... போத்தியின் எண்ணங்கள் இப்படியானவைதான். 



போத்தி புரட்சியாளனா என்று கேட்டால் கிடையாது. ஆனால் நேர்மையானவர்களைப் பார்த்தால், உயரிய நோக்கத்திற்கு பாடுபடுபவர்களைக் கண்டால் அவனுக்குள் மரியாதை எழுகிறது. இந்த பண்பு நாவல் முழுக்க உள்ளது. இந்திரா மீது அவனுக்கு துவேஷம் ஏதுமில்லை. ரயில்கள், பஸ்கள் நேரத்திற்கு வருகின்றன. அலுவலகங்கள் சரியாக நடக்கின்றன. முக்கியமாக ஸ்ட்ரைக் நடப்பதில்லை. ஆனால், கூலிகள், விவசாயிகள், மெக்கானிக்குகள் என வலுக்கட்டாயமாக கூட்டிப்போய் குடும்பக்கட்டுப்பாடு - வாசக்டமி செய்து அனுப்புவதுதான் அவனுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதாவது, அவனுக்கு நெருக்கமானவர்கள் அரசின் இக்கட்டிற்கு ஆளாகும்போது மட்டுமே....இந்த விவகாரம் திருநெல்வேலியில் ஒருமுறை வருகிறது. ஆனால் டெல்லியில் அடிக்கடி வாசிக்கும்படியாகிறது. 


அதேநேரம் வங்கிப் பணியில் உள்ள அனைத்து சுகங்களையும் போத்தி அனுபவிக்கவே செய்கிறான். திநகரில் ஜனதா சாப்பாடு சாப்பிடுபவன், அன்லிமிடெட் என்பதற்காக மந்தைவெளிக்குச் சென்று மடம் ஒன்றில் சாப்பிட்டு வருகிறான். பல்வேறு வகையான தொடுகறிகளோடு சாப்பிடுகிறான். அதேநேரம் கொள்கை முக்கியம் என வாழும் குருநாதன் என்ற பத்திரிகைக்காரன் மஞ்சள் கதைகளை எழுதி தனது பிழைப்பை ஓட்டுகிறான் என்பதையும் அவன் பார்க்கிறான்.  ஒருசமயம், வங்கி நரிக்குறவர்களுக்கு கடன் கொடுப்பதாக வரும் பகுதி, அவர்களை திட்டமிட்டு அவமதிப்பது போலவே இருக்கிறது. அது ஏன் என்று புரியவில்லை. போண்டா என அவர்களது பெயர் பதிவேட்டில் பதியும் நொடியில் இருந்தே இந்த சமாச்சாரம் தொடங்குகிறது. அதை ஜோக்காக வாசகர்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமா இரா முருகன் சார்? 


இந்திய வரலாற்றில் முக்கியமான அரசியல் நிகழ்ச்சியை எடுத்து நாவலாக எழுத தைரியம் தேவை. ஏனெனில் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும். அதிலும் நாவல் முழுக்கவே அவல நகைச்சுவையாக செல்லும் வகையில் முயன்றிருக்கிறார். நூலில் உள்ள நகைச்சுவை அனைத்துமே படித்து யோசித்துப் பார்த்து புன்னகைத்துக்கொள்பவைதான். அதுவும் மிக அரிதாகவே நடக்கிறது. அற்பமான சிறுமையான வார்த்தை விளையாட்டு ஜோக்குகள் இல்லை. தஞ்சம்மாவின் தமிழ் மட்டுமே அப்படியான இயல்பில் உள்ளது. 


பாருக்குட்டி, கேளு நாயர், பட்டா, ரவீந்திரன், சீனிவாசன், குல்கர்னி, வாஸ்வானி, காலு கபூர், மெக்கானிக் அவ்தார்சிங், ஜஸ்பீர், பாயல், பழனி , நிருபர், ஜெபர்சன் வாத்தியார், ஒண்டிப்பிலி என நிறைய பாத்திரங்கள் வேடிக்கையான இயல்புகளைக் கொண்டவர்களாக நாவலில் வருகிறார்கள். 


போத்தி, மெக்கானிக் அவ்தார் சிங் அளவுக்கு கூட துணிச்சலாக இருப்பதில்லை. சிக்கலில் சிக்குவதில்லை. அவனது வண்டி காவல்துறையில் சிக்கும்போது கூட, அவ்தார்சிங்கிற்கு என்ன ஆனது என்பதை விட தனது வண்டி பாதுகாப்பாக இருக்கவேண்டுமே என நினைக்கிறான். பதறுகிறான். தனது வங்கிப்பணியில் கிடைக்கும் சவுகரியங்களை அனுபவித்துக்கொண்டு அமைதியாக சமூகத்தை வேடிக்கை பார்க்கிறான். அந்தப் பார்வையைத்தான் அதைத்தான் எழுத்தாளர் இரா முருகன் எழுதுகிறார். அவனோடு ஒப்பிடுகையில் பட்டா பரவாயில்லை. விதிகள் அனைவருக்கும்தானே என எண்ணி, ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் வங்கியில் கடன்பெற்று வாங்கிய டிவிக்கான தவணைத்தொகையை சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொள்ளலாமா என்று கேட்டு கடிதம் எழுதுகிறான். அதற்கு அவன் பல்வேறு அவமதிப்புகளை சங்கடங்களை பணி ரீதியாக சந்திக்க நேருகிறது. 


பட்டாவை தனியாக எடுத்து எழுதினாலே சிறப்பான அங்கத நாவல் கிடைத்துவிடும். போத்தியை இந்த நாவலுக்கு நாயகனாக்கியதாலேயே நிறைய இடங்களில் அவல நகைச்சுவை எடுபடவில்லையோ என்று தோன்றுகிறது. போத்தி, வங்கிப் பணியாளரான வேலை செய்யும் நடுத்தர மேல்தட்டு வர்க்கமாக இருந்து மேல்தட்டு வர்க்கம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். நாவல் முடியும்போது, அவருக்கு திருமணமாகி பதிமூன்று ஆண்டுகள் தில்லியில் வாழ்ந்துவிட்டு பிறகு இரு குழந்தைகளோடு புரமோஷனும் வர அப்படியே பல்வேறு மாநிலங்களுக்கு நகர்ந்து செல்கிறார். தன்னுடைய நிலையில் இருந்து பிறரைப் பார்க்கிறார். ஏழைகளை, மத்திய  வர்க்கத்தையோ அவர் பெரிதாக கண்டுகொள்வதில்லை. தன்னுடைய வாழ்க்கை தாண்டி சமூக பிரச்னைகள் எதற்கும் குரல் கொடுக்காத பார்வையாளர். அமைதி காக்கும் பார்வையாளர். 


அவசர கால அலங்கோலங்களை துணிச்சலாக எழுதிய இரா முருகன் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலகட்டமான நடப்பு காலகட்டம் (2014 தொடங்கி..) பற்றிக்கூட எழுதலாம். மறைமுகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டும், பத்திரிகைகள் தொழிலதிபர்களுக்கு விற்கப்பட்டும், அதன் பங்குகள் மாற்றப்பட்டும், நேர்மையான பத்திரிகையாளர்கள் பணியில் இருந்து துரத்தப்பட்டுக்கொண்டும் உள்ள சூழ்நிலையை  புனைவெழுத்தாக பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும். 


நாவலாக வாசிக்கும்போது 449 பக்கங்களை வங்கி வேலை முறைகள், சிக்கல்கள், அரசின் சட்டங்கள், சாப்பிடும் உணவுகள் என வேகமாக வாசிக்கலாம். எங்கும் தட்டு தடுமாறி பெரிதாக யோசிக்கவேண்டியதில்லை. படித்து முடித்தபின்னரும் கூட பெரிதாக ஏதும் நினைவில் தங்குவதில்லை. எளிமையான நூல். 


கோமாளிமேடை டீம் 



எழுத்தாளரை பின்தொடர.....

https://www.eramurukan.in/
















கருத்துகள்