தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம்!

 









தென்கொரிய மருத்துவர்கள் போராட்டம் எதற்கு?


தென்கொரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு, மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முயன்று வருகிறது. இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்ன காரணம்?


வேலை செய்யும் சூழ்நிலை மேம்படவில்லை. ஏற்கெனவே கொடுக்கும் ஊதியம் பற்றாக்குறையாக உள்ளது. இதில் கூடுதலாக மருத்துவர்களை கொண்டு வந்து இதே சூழ்நிலையில் தள்ளினால் அது தவறு என்பதுதான் மருத்துவர்களின் வாதம். சீனியர், ஜூனியர் என அனைத்து மருத்துவர்களும் இப்போது போராட்டத்திற்கு வந்துவிட்டனர். 


சியோலில் உள்ள ஐந்து பெரிய மருத்துவமனைகளில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் 39 சதவீதம் பேர் போராட்டத்தில் உட்கார்ந்துவிட்டனர். இதனால், அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டு உள்ளன. அவசரசிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளை திரும்ப அனுப்பி வருகின்றனர். அரசு,  இந்த விவகாரத்தில், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லை. அவர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்றால் மருத்துவர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். அதற்குத்தான் நாங்கள் மருத்துவர்களை அதிகம் பள்ளிகளில் சேர்க்க முயல்கிறோம் என்று கூறியுள்ளது. 


ஜூனியர், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோர் அனைவருமே தினசரி இருபது மணி நேரங்களுக்கு அதிகமாக வேலை செய்யவேண்டியுள்ளது. இந்த வகையில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் என கணக்கு வைத்துக்கொண்டால், எண்பது முதல் நூறு மணி நேரங்கள் வேலை செய்கிறார்கள். இந்த சூழ்நிலையை சீனியர் மருத்துவர்கள் கூட கண்டுகொள்வதில்லை. ஜூனியர் மருத்துவர்களுக்கு கிடைக்கும் ஊதியமும் குறைவுதான். இப்படிப்பட்ட அவல சூழ்நிலையில் இன்னும் கூடுதலாக பயிற்சி மருத்துவர்கள், வந்தால் நிலைமை எப்படியிருக்கும்?



தென்கொரிய அரசு 2035ஆம் ஆண்டுக்குள் பதினைந்தாயிரம் புதிய மருத்துவர்களை வேலையில் சேர்க்க முனைப்பு காட்டிவருகிறது. சிறிய நாடான தென்கொரியாவில் இந்தளவு எண்ணிக்கையிலான மருத்துவர்கள் என்பது பெரிய எண்ணிக்கை. மருத்துவர்களின் போராட்டத்தை முதலில் எதிர்கொண்ட அரசு, பணிக்கு வராதவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கூறியது. நகரங்களில் உள்ள ராணுவ, காவல்துறையினருக்கான மருத்துவமனைகளில் குடிமக்களை ஏற்றுக்கொண்டு சிகிச்சைகளை செய்ய உத்தரவிட்டது. 


கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் யூன் சுக் இயோல், மருத்துவர்கள் நோயாளிகளை பணயக் கைதிகளாக்கி வைத்துக்கொண்டு அரசை மிரட்டுகிறார்கள். அரசு, மருத்துவத்துறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மருத்துவப் பள்ளிகளில் உள்ள இரண்டாயிரம் இடங்களை அதிகரிக்கும் யோசனையுள்ளது என்று கூறினார். ஆனால், இவரது பேச்சுக்குப் பிறகு சீனியர் மருத்துவர்களும் வேலை செய்த மருத்துவமனையில் தங்கள் பணிவிலகல் கடிதங்களை வழங்கத் தொடங்கினர். எனவே, அரசு தனது பேச்சுகளில் சற்றே நெகிழ்வுத்தன்மையோடு இறங்கி வரத் தொடங்கியுள்ளது. 


அரசு தனது மருத்துவக்கோட்டா இடங்களை அதிகரிப்பது தவறு கிடையாது. ஆனால் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு சரியான ஊதியம், வேலைநேரம் குறைப்பு ஆகியவற்றை செய்துகொடுப்பதே சிறப்பானது. எதிர்காலத்தையொட்டி மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எத்தவறும் கிடையாது. ஏற்கெனவே உள்ளவர்களுக்கு சரியான சம்பளம் வழங்காதபோது, புதியவர்களுக்கு என்னவிதமான அனுகூலங்கள் கிடைத்துவிடமுடியும்? நீண்டகால நோக்கிலும் இது அதிருப்தியை நோக்கியே செல்லும். 


ஐஇ

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்