அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்!
அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்!
இந்தியாவில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை தழுவுகிறார்கள் என குஜராத் மாநில பௌத்த அகாடமி செயலாளர் ரமேஷ் பேங்கர் கூறியுள்ளார். 1956ஆம் ஆண்டு, டாக்டர் பி ஆர் அம்பேத்கர், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து பௌத்த மதத்திற்கு மாறினார். சுதந்திர இந்தியாவில் நடந்த முக்கியமான கவனம் கொள்ளப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சி எனலாம்.
தற்போதைய நேபாளம்தான் சாக்கிய நாடு. அங்கு, இளவரசராக இருந்த சித்தார்த்தர் உலக உண்மைகளை கண்டறிந்து துறவு மேற்கொண்டார். அவர் ஞானம் பெற்று சீடர்களுக்கு நல்வழியை உபதேசிக்க தொடங்கிய பிறகு உருவானதுதான் பௌத்த மதம். கி மு ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்தம் உருவாகி வளரத் தொடங்கியது.
இந்த மதம், வேதகால இந்துமதத்திற்கு எதிரான கருத்துகளை, செயல்பாடுகளைக் கொண்டிருந்தது. சிராமணி இயக்கத்தின் விளைவாக தோன்றிய பௌத்த மதம், பிராமண சடங்கு, சமூக அமைப்பிற்கு எதிரானதாக இருந்தது என வரலாற்று வல்லுநர் எல்பி கோம்ஸ் குறிப்பிட்டார்.
சமண மதம், பௌத்தத்தை விட காலத்தே சற்று முந்தியது. இதன் சடங்குகளும் வேதகால இந்து மதத்தை விட மாறுபட்டது. அதிலும் சடங்குகள் என்பவை, ஆதிகால இந்து மதத்தை போல அல்லாமல் எளிமையாக இருந்தது. பௌத்தம், சடங்குகள் அற்ற மதம். அன்றைய இந்து மதத்தில் இருந்த விலங்குகளை பலியிடும் சடங்குகளை முற்றிலும் நிராகரித்தது. அது மனிதர்களை பாகுபடுத்திப் பார்க்கவில்லை. புத்தர் இறந்தபிறகு, பௌத்த சங்கம் உருவாக்கப்பட்டது. இதில் சீடர்களாக சேர்பவர்களுக்கு சாதி, மத வேறுபாடு பார்க்கப்படவில்லை. குறிப்பாக தீண்டத்தகாதவர்கள் என இந்து மதம் விலக்கியவர்களை பௌத்தம் அரவணைத்துக்கொண்டது.
வேதகால இந்துமதத்தின் அடிப்படைக் கட்டமைப்பே சாதியால் உருவானது. ஆனால் பௌத்தம் அதை நிராகரித்தது. இதனால்தான் அம்பேத்கர், பௌத்த மதத்தை பிரெஞ்சு நாட்டில் நடைபெற்ற புரட்சியை ஒத்தது என்று குறிப்பிட்டார். பின்னாளில் பௌத்தத்தின் அம்சங்களை இந்து மதம் உட்கிரகிக்க தொடங்கியது. இதன் காரணமாக பௌத்தம் மெல்ல மறையத் தொடங்கியது. கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தம் புகழ்பெறத் தொடங்கிய காலம் அது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் பௌத்தம் மதம், இந்தியாவில் காலூன்றத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் பௌத்தத்தை பரப்ப சித்த மருத்துவர் அயோத்திதாசர் மெனக்கெட்டார். இவர், தனது கருத்துகளைக் கூற ஒரு பைசாத் தமிழன் என்ற நாளிதழைத் தொடங்கி நடத்தினார். அன்றைய கால வெகுஜன மனிதர்களான கவிஞர் பாரதி, எழுத்தாளர் உ.வே.சா ஆகியோர், அயோத்திதாசரின் பணிகளை அறிந்தாலும் கூட அதைப்பற்றி கண்டும் காணாததுமாக இருந்தனர். மறைமுகமாக, தாழ்த்தப்பட்டோருக்கான அவரது சீர்திருத்தபணிகளை தாக்கி எழுதி வந்தனர். அதேகாலத்தில் கேரளத்தில் சகோதரன் அய்யப்பன், மிட்டாவாடி கிருஷ்ணன் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி வந்தனர்.
இருபதாம் நூற்றாண்டில் நிறைய சமூக அமைப்புகள் களத்தில் இறங்கி தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடின. கோவில் நுழைவு, பாதையில் செல்வதற்கான உரிமை, படிப்பதற்கான உரிமை, உதவிகள், தீண்டாமைக்கான சட்டங்கள் ஆகியவை அரசு மூலம் சட்டமானது.
1936ஆம் ஆண்டு அம்பேத்கர் மகர்களுக்கான மாநாடு ஒன்றை நடத்தினார். அதில், மக்களுக்காகவே மதம். மதத்திற்காக மக்கள் கிடையாது. நீங்கள் மனிதர்களாக நடத்தப்படவில்லையென்றால், மதம் மாறுங்கள் என்று பகிரங்கமாகவே பேசினார். பௌத்தம் பற்றி பல்லாண்டுகளாக படித்து புரிந்துகொண்ட வகையில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அம்மதத்தை தழுவினார். அன்று தொடங்கி இன்றுவரை மனிதர்களாக நடத்தப்படவேண்டும். கௌரவமாக தனது குடும்பம் பிழைக்கவேண்டும் என நினைப்பவர்கள் பௌத்த மதத்தை தழுவி வருகிறார்கள்.
ஐஇ கட்டுரையைத் தழுவியது.
தீரன் சகாயமுத்து
கருத்துகள்
கருத்துரையிடுக