மக்களின் ஆசைகளை நிறைவேற்றி வைத்து அவர்களை குற்றப்பங்காளிகளாக்கும் சூப்பர் ஆப்!

 









விஷ்ஷர் 


சீன தொடர் 


12 எபிசோடுகள்



போனில் தானாகவே வந்து அமரும் விஷ்ஷர் ஆப்பில், உங்கள் ஆசைகளைக் கூறினால் அது நிறைவேற்றப்படும். பதிலுக்கு அந்த ஆப் சொல்லும் ஒரு வேலையை நீங்கள் செய்யவேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆசையை நிறைவேற்ற கோரிக்கை அனுப்பமுடியும். இப்படி மக்களின் பேராசையைத் தூண்டும் ஆப்பின் பின்னணி, அதிலுள்ள மனிதர்களின் நோக்கம் பற்றி பத்திரிகையாளர் ஆராய்ந்து கண்டுபிடித்து தடுக்கிறார். 



பனிரெண்டு எபிசோடுகளே நீளம் என்று சொல்லுமளவு பாத்திரங்களின் நடிப்பு எரிச்சல் ஊட்டுகிறது. அதிலும் நா டு என்ற பாத்திரத்தில் வரும் பத்திரிகையாளர் தோற்றம், நடிப்பு என அனைத்துமே மிகையாக இருக்கிறது. வயதானவர் போல காட்ட முகத்தில் தாடியை நடவு செய்து இருக்கிறார்கள். அது அவருக்கு ஒட்டவே இல்லை. அவரின் பாத்திரம் கடைசிவரை குழப்பமானதாகவே இருக்கிறது. நேர்மையானவரா, சந்தர்ப்பவாதியா, புத்திசாலியா என ஏதும் புரிவதில்லை. 


கற்பனையான ஒரு நகரை காண்பிக்கிறார்கள். அந்த நகரை முப்பது நாட்களில் அழிப்பதுதான் திட்டம். அதற்காக விஷ்ஷர் ஆப் வருகிறது. இந்த ஆப், மக்களின் ஆசையை நிறைவேற்றி வைத்து பதிலுக்கு அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகிறது. ஒருவர் விஷ்ஷர் ஆப்பை பயன்படுத்த விரக்தியான நிர்க்கதியான சூழல் போதுமானது. பணக்கார, ஏழை இடைவெளி உள்ள சமூகத்தில் துயரம், வலி, வேதனை என ஏகத்துக்கும் இருக்கிறது. எனவே, விஷ்ஷர் ஆப்பை ஏவி விடுகிறார்கள். அது ஒருவரின் போனில் அமர்ந்தாலே அவரைப் பற்றிய அனைத்து கடந்தகால, நிகழ்கால, எதிர்கால விஷயங்களை எடுத்துக்கொள்கிறது. முழுக்க ஒருவரை கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. 


ஆப்பைத் தடுத்து மக்களைக் காப்பாற்றி....ஒருவகையாக தொடர் முடியும்போது ஏற்படும் மன மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. 


லூ லிக்கும், அவளது பால்ய கால தோழனுக்குமான காதல் உரையாடல் காட்சி சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். அவன், லூ லி மீது வைத்துள்ள காதலை ஒரு மோசடி வழியாக உணரும் இடமும், மனம் வருந்தி அவளிடம் மன்னிப்பு கேட்பதும் நன்றாக வந்துள்ளது. 


க்யூ வென்டாங், பரிதாபமான பாத்திரம். மக்களின் சுயநலத்திற்கு பலியாகி தன்னை முழுக்க பழிவாங்கும் வெறியில், வன்மத்தில் அழித்துக்கொள்கிறான். உலகை மாற்றுவோம் என்று பேசி இறுதியாக வில்லனாகும் பாத்திரம். இந்த பாத்திரத்தில் நடித்தவர், தனது விரக்தியை வேதனையை வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக உள்ளது. 


விஷ்ஷர் ஆப்பிற்கு எதிராக ஒரு சக்தி வேண்டுமே? அதுதான் எக்ஸ் ஏஜென்சி. இதுவே சமூக அமைதியை பாதுகாக்கும் அமைப்பு. இதற்காக சில மனிதர்களை தயாரித்து அவர்கள் மூலமாக தீவிரவாத தடுப்பு பணிகளை செய்கிறது. இந்த அமைப்பிற்கு பெரியதாக காட்சிகள் இல்லை. பெரும்பாலும் அனைத்து காட்சிகளிலும் பத்திரிகையாளர் நா டு, அவரது வக்கீல் நண்பர் இருக்கிறார். நா டு பாத்திரத்தை விட க்யூஃபென் பாத்திரத்தில் நடித்த அறிவியலாளர் நன்றாக செய்திருக்கிறார். 


விஷ்ஷர் ஆப் மூலம் எப்படி குற்றச்செயல்களை செய்கிறார்கள், அதன் விளைவாக கல்லூரி மாணவன் லாரி விபத்தில் கொல்லப்படுவது சுவாரசியமான காட்சி. அதன் பின்னணியில் உள்ளவர்கள் தாங்கள் எப்படி அந்த குற்றத்தில் பங்களித்துள்ளோம் என்பதை க்யூ வென்டாங் மூலம் உணர்ந்து பதற்றமடைவது முக்கியமான காட்சி. 


தொடரின் பின்னணி இசை, அதன் மையப்பொருளுக்கு ஏற்ப பொருத்தமாக உள்ளது. 


ஒரு நகரம் அழியப்போகிறது. அதைக் காக்க அந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று சொல்ல முயன்றால் பரவாயில்லை. மக்கள் எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால் அவர்களினும் மேலான மாமனிதன் வந்து அவர்களை காப்பாற்றவேண்டும் என கதை இறுதியில் பெரிய ஏமாற்றமளிக்கிறது. 


பணமின்றி குதிரை பண்ணையில் வேலை செய்தபடி க்யூ வென்டாங் படிக்கிறான். அவனது அப்பா அறிவியலாளர், அம்மா மருத்துவர். அம்மா புற்றுநோயால் இறந்துவிட, அப்பாவும் வேலையாக சென்று திரும்பி வருவதில்லை. இந்த சூழலில் ஆதரவற்று வளரும் க்யூ வென்டாங் உலகின் மீது எப்படி அக்கறை கொண்டவனாக இருக்கமுடியும்? ஆனாலும் பாதிப்புகளை முன்னுணர்ந்தவனாக தடுக்க முயல்கிறான். அதை அக்காலகட்டத்தில் யாரும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் புரிந்துகொள்ளும்போது க்யூ வென்டாங் எதிரிகளோடு கைகோத்துக்கொள்கிறான். இதை உண்மையில் விரக்தி என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும். மனிதர்கள் மீதான விரக்தி, ஏமாற்றம் அவனை அதீத எல்லைக்கு முடிவெடுக்க தள்ளுகிறது. 


லூ லி முதலில் க்யூ வென்டாங்கை காதலித்தாலும் விஷ்ஷர் ஆப்பை உருவாக்கியது அவனது தந்தை என்றதும் அவனிடமிருந்து விலகத் தொடங்குகிறாள். ஏனெனில் ஆப்பை அழிக்கவேண்டும் என்பவன், அவனது தந்தையை எதிர்த்து நிற்க முடியாது என்ற யதார்த்தத்தை அவன் அறிகிறாள். தனக்கு தெரிந்த உண்மையை அவள், வென்டாங்கிடம் கூறியிருந்தால் நேர்மையான உறவாக இருந்திருக்கலாம். ஆனால் அவள் அதை செய்வதில்லை. இதனால், வென்டாங் லூ லி கூட தன்னை நம்ப மறுக்கிறாள். துரோகம் செய்துவிட்டாள் என புரிந்துகொள்கிறான். சண்டைபோட்டுவிட்டு பிரிந்துசெல்கிறான். லூ லிக்கு நெருக்கமானவர்கள் அனைவருமே மழை பெய்யும்போது சண்டை போட்டு பிரிந்துசெல்கிறார்கள். 


நா டு பாத்திரம் தனக்கு எதிரி என விஷ்ஷர் ஆப் ஆட்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். அப்புறம் ஏன் முகூர்த்தம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். டக்கென வாய்ப்பு கிடைத்தபோது கொல்ல வேண்டியதுதானே? ஆனால் அதை செய்வதில்லை.  வாங் மெய்பேன் என்ற பெண் கொலைக்கு முயல்கிறார். ஆனால் அது சிறப்பான முடிவை தருவதில்லை. 


புதுமையான கதை கிடையாது. டெக் பின்னணி, கற்பனை நகரம், கிராபிக்ஸ் என்பதில் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம். 


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்