அடிமையின் காதல் - ஓரியண்டல் ஒடிசி - சீன தொடர்
ஓரியண்டல் ஒடிசி
சீன டிராமா
60 எபிசோடுகள்
டேங்க் பேரரசு காலம். மன்னர் நோயுற்றுவிட ராணிதான் நிர்வாகம் செய்கிறாள். அரசில் நிதி நிர்வாகம் செய்யும் அமைச்சர் வீட்டுப்பெண், அசட்டு துணிச்சல் கொண்டவள். நகரில் நடைபெறும் பல்வேறு மர்ம குற்றங்களை துப்புதுலக்குகிறாள். அதன் வழியாக அடிமை ஒருவனை விலைக்கு வாங்குகிறாள். அவன்தான் மூலே. அளப்பரிய வலிமை கொண்டவனுக்கு தொடக்கத்தில் பேச்சு வருவதில்லை. அனைத்தும் சைகைதான். கூடுதலாக, நகர தலைமைக் காவலன் ஒருவன் உதவிக்கு வருகிறான். இவர்கள் மூவரும் சேர்ந்து குற்றங்களின் பின்னணியை அடையாளம் காண்கிறார்கள். குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்.
அடிமை மூலேவுக்கு, தனது உரிமையாளரான யே யுன்னான் என்ற நிதிஅமைச்சரின் மகள் மீது காதல். ஆனால் யுன்னானுக்கு நகர தலைமைக்காவலர் மீது அதீத பிரேமம். இவரை அந்நாட்டு இளவரசி மிங்காய் காதலிக்கிறாள். இவளை, அடிமை வீரன் ஜென் ஜிங் காதலிக்கிறான். இவன், விபசார விடுதி ஒன்றைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்துகிறான். ஜென் ஜிங், தன்னை காதலிப்பது தெரிந்தாலும் இளவரசிக்கு அவன் மீது காதல் கிடையாது. அவனை வைத்து சில விஷயங்களை அடையலாம் என முயற்சி செய்கிறாள். அதுதான். ஒன்பது மாந்திரீக முத்துகள். இந்த ஒன்பதும் ஒருவரிடம் இருந்தால் அவரை யாராலும் வீழ்த்த முடியாது. ஏறத்தாழ அமரத்துவ வாழ்க்கை வாழலாம். ஆனால் இதை அடையும் போராட்டத்தில் ஏராளமான மனிதர்கள் இறந்துபோகிறார்கள்.
கதைக்கு வருவோம். இளவரசி மிங்காய், பல்வேறு நபர்களிடம் சென்றுவிட்ட மாந்தீரிக முத்துகளை சேகரிக்க தொடங்குகிறாள். இதற்காக பல்வேறு குற்றச் சம்பவங்களைச் செய்யத் தொடங்குகிறாள். ஆனால், இதெல்லாம் தலைமைக் காவலருக்கு தெரியவில்லை. அவரின் உயிரைக்கூட இளவரசி ஒருமுறை காப்பாற்றுகிறாள். அந்தக் காட்சிகளை பார்க்கவேண்டுமே அந்தோ பரிதாபம்... மரு வைத்தால் மாறுவேடம் என்பார்களே அதேவகையில் இங்கு மெல்லிய சல்லாத்துணி ஒன்றை இளவரசி முகத்தில் மூடியிருக்க, அதை தலைமைக்காவலர் அறிய முடியாமல் தடுமாறுகிறார். அய்யகோ...இப்படியான காட்சிகள் தொடரில் ஏராளமாக உள்ளன.
டேங்க் பேரரசு பற்றி நன்றாக தெரிந்துகொள்வோம். இங்கு அதிகாரம் கொண்ட பணபலம் கொண்டவர்களுக்கு மட்டுமே நீதி. மற்றவர்களுக்கெல்லாம் மனுநீதிதான். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்களே அதே கதைதான். அடிமை முறையை ஏற்கிற காலகட்டம். பிறருக்கு நீதி போதிக்கிற நாயகி யுன்னானுக்கு கூட அடிமைகளை நன்றாக நடத்துவேன் என்று கூற வருகிறதே தவிர அந்த முறை தவறு என்று தோன்றுவதில்லை. அசட்டு துணிச்சல் கொண்டவள். அவளது குடும்பத்தில் அவள் மட்டும்தான் சற்றே பரவாயில்லை ரகம். அவளது சித்தி, அவளது மகனும் தம்பியுமானவன் ஒரு சூதாடி. அப்பா, அரசில் செல்வாக்கு வளர்த்துக்கொள்ள துடிக்கும் ஒரு கோழை.
யுன்னான், தற்காப்புக்கலை கற்றவள். கூடவே தியான்சு என்ற புத்த துறவி உதவியுடன் பல்வேறு ஆயுதங்களைப் பெற்று நகரில் நீதியை நிலைநாட்ட முயல்கிறாள். ஆண் உடை, பெண் உடை என இரண்டிலுமே யுன்னானை பார்வையாளர்களான நாமே அடையாளம் காண முடிகிறது. ஆனால் பிறர் அடையாளம் காண முடியாமல் ஆண் என நினைக்கிறார்களாம். தலைமைக்காவலர் கூட ஏமாந்துபோகிறார். அவருக்கு யுன்னானை திருமணம் செய்ய ஆசை. ஆனால், அவருக்கு யுன்னான் அளவுக்கு நீதி, சட்டம் ஆகியவற்றில் தாராள மனம் கிடையாது. குற்றவாளியின் தரப்பையும் காது கொடுத்த கேட்கவேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாத ஆள். இவரைத்தான் யுன்னான் அரும்பாடுபட்டு காதலிக்கிறாள். தானும் ஒரு பெண் என அவருக்கு நிரூபிக்க மெனக்கெடுகிறாள். தொடரை சலிப்பாக்கும் காதல் காட்சிகள் இவை.
மூலே, யுன்னானைக் காதலிக்கிறான். ஒருமுறை அவளை உதட்டோடு உதடு வைத்து முத்தமும்கொடுத்து புரிய வைக்கிறான். ஆனால் அவளுக்கு அவன் அடிமை, தான் எஜமானன் என்ற எண்ணம் இருக்கிறது. வேறு உணர்ச்சிகள் வருவதில்லை. பிறர் நடைமுறையை எடுத்துச் சொன்னாலும் காதலை அவன் மறப்பதில்லை. தலைமைக் காவலனே ஒருமுறை மூலேவுக்கு உன்னை யுன்னான் திருமணம் செய்து வசதியாக வாழ முடியாது. எனவே, காதலிப்பதை கைவிடு என குட்டிக்கதை சொல்லி சண்டைபோடுகிறான். தலைமைக் காவலனின் குணம் யுன்னானோடு ஒப்பிடுகையில் படுமோசம். அதற்கேற்ப அவன், இளவரசி மிங்காயை மணம் செய்துகொள்ளும் நிர்பந்தம் நேருகிறது. சரியான முடிவு என அப்போதுதான் மனம் இலகுவானது. இளவரசியும், தலைமைக் காவலரும் நோக்கம் வேறு வேறு என்றாலும் பொறாமைமிக்க, தந்திரமிக்க ஆட்கள்.
மூலேவும், யுன்னானும் இந்த வகையில் சற்று அப்பாவிகள். நேரடியாக சண்டை போட்டு வெல்வது யார் என பார்க்கும் வெகுளிகள். மூலே, தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை முற்றாக இழந்தவன். அவனுக்கு தான் யார், எங்கிருந்து வந்தோம் என்பதெல்லாம் நினைவில் இருப்பதில்லை. அவனை போதைப்பொருள் விற்கும் குழு, அடிமையாக வைத்துக்கொள்கிறது. இளவரசியின் அடிமைதான் அவனுடைய எஜமானன். அவனிடமிருந்து யுன்னான் மூலேவை கருப்புசந்தையில் வாங்குகிறாள். அதற்கு பிரதியுபகாரமாக மூலே அவளை உயிராபத்து சமயங்களில் காக்கிறான். இந்த வகையில் தலைமைக் காவலனையும் கூட காப்பாற்றுகிறான். ஆனால், அந்த நன்றியுணர்ச்சியை அவர் தொடரில் எங்குமே காட்டமாட்டார்.
தியான்சு, மூலேவையும் யுன்னானையும் நெருக்கமாக கவனித்துக்கொண்டே இருப்பார். ஆனால் எதுவுமே சொல்லமாட்டார். இறுதியாக தலைமைக்காவலருக்கு இளவரசியுடன் மணமானபிறகு, யுன்னானை மூலேவுக்கு மலை உச்சியில் வைத்து மணம் செய்து வைக்கிறார். இந்த திருமணம் கூட பழிக்குப்பழி என்ற நோக்கத்தில் யுன்னான் செய்துகொள்வாள். மூலேவின் நல்ல இதயத்தை, நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும் என இயல்பை புரிந்துகொள்ள மாட்டாள். மூலேவை ஷியாகே என்ற பெண் அடிமை மட்டுமே புரிந்துகொண்டு அவனுக்கு உதவ முற்படுவாள். மூலேவுக்கும் ஷியாகேவுக்குமான காட்சிகள் நன்றாக உள்ளன. மூலேவின் இதயத்தைப் புரிந்துகொண்ட ஒரே தோழி அவள்தான்.
ஓரியண்டல் ஒடிசி தொடரில் வேடிக்கையான அதேசமயம் செய்யவேண்டிய காரியங்களை கிரமமாக செய்யும் பாத்திரம், புத்ததுறவி தியான்சுதான். பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் புத்த துறவிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர். யுன்னானுடைய வீட்டில் ஒளிந்திருந்து பல்வேறு கருவிகள், மாத்திரைகளை தயாரித்துக் கொடுக்கிறார். அவர் கூறும் நியாயத்தை யுன்னான் நம்புகிறாள். இறுதிவரையில் அவரை விட்டுக்கொடுப்பதில்லை. குரங்கு போல சேட்டைகளை செய்தபடி உள்ள துறவி சிறந்த மருத்துவரும் கூட. இவர்தான் தொடரில் சற்று இயல்பாக நடமாடும் பாத்திரமாக உள்ளார்.
இளவரசி மிங்காய், தனது திருமணத்திற்காக யுன்னானின் காதலனை மிரட்டி பணியவைத்து மணக்கிறாள். இதற்காக யுன்னானுக்கு விஷம் வைத்துவிடுகிறாள். இதை அறிந்தும் கூட அவளுக்கு திருமணம் செய்து வைக்கிறார் அரசி. அவரின் புத்திசாலித்தனம் சாமி ரங்கா....தான் வேண்டுவதை என்ன செய்தேனும் அடையவேண்டும். அவ்வளவுதான். இப்படிப்பட்டவள், தலைமைக்காவலரை விரும்புவது சட்டத்தை மீறிய குற்றவுணர்ச்சி காரணமா என்று தெரியவில்லை. அவன் சற்று சட்டங்கள் மீது பற்றுகொண்ட ஆள். அரச தரப்பு நியாயத்தை, சட்டத்தை மட்டுமே பார்க்கும் ஆள்.
நீதியைப் பார்ப்போம். அரசியை வைத்துக்கொண்டே தனது மகன் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கும் தாயைப் பற்றி அவர் கவலை கொள்வதில்லை. அதே இடத்தில் பொம்மலாட்ட தாயும் கூட வாளால் குத்தப்பட்டு இறந்துபோகிறார். அதற்கு காரணம் யார் என விசாரிப்பதில்லை. அரசியிடம் நேருக்கு நேராக யுன்னான் படுகொலைக்கு நீதி கேட்கும்போது, திருமணம் நடக்கும் வீடு என சாக்குபோக்கு வேறு சொல்கிறார். அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சரைக் காக்க இப்படியொரு பதுங்கல்.
மாந்திரீக முத்துகளை எடுக்கும் பணியில் அரசிக்கும் சுயநலம் இருப்பது இறுதியாக தெரிகிறது. ஆனால், இதற்கான வேலையில் ஏராளமான மக்கள் இறந்துபோகிறார்கள். தவறான வழியில் நடத்தப்படுகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் அரசி கவலையே படுவதில்லை. அரசியை கொலை செய்ய வரும் மக்களைப்பார்த்து அவர்களிடம் பேசித்தான் அவருக்கு தான் செய்த தவறான செயல்களே தெரியவருகிறது. பரிதாபம். அவருடைய பாத்திரம் வலுவாக இல்லை. தோற்றத்தில் கம்பீரமாக தோன்றினாலும் உள்ளே பலவீனம் அதிகம்.
மொத்தம் அறுபது எபிசோடுகள். அதில் மூலேவின் பின்னணி தெரிந்துகொள்ளவே 38 எபிசோடுகள் தேவைப்பட்டன. இழுஇழுவென இழுத்துவிட்டார்கள். அதிலும் ராக்குட்டன் விக்கி ஆப்காரர்கள் போடும் விளம்பரத்தொல்லை அதிகம். விளம்பர பயங்கரவாதம் என்றே கூறலாம்.
இத்தொடரில் வரும் பாத்திரங்கள் மனமார நேர்மை கொஞ்சமேனும் கொண்டுள்ளனர் என்றால் அது துறவி தியான்சு மட்டுமே. அவர் செய்வது கோமாளித்தனமாக இருந்தாலும், செய்யும் செயலின் பின்னணி பற்றிய கவனம் அவருக்கு உண்டு. தலைமைக்காவலருக்கு அன்றைய சமூக அந்தஸ்து, பணம், அதிகாரம் பற்றிய அக்கறை உள்ளது. அதன்படியே பிறருக்கான நீதியை வழங்குகிறார். அவர் சொல்லும் நீதி என்பது எளிய மக்களுக்கானது அல்ல. அவர்களை காக்கும் பொருட்டு கிடைக்கப்பெறுவதும் அல்ல. அரசிக்கு சார்பான நீதி.
யுன்னானைப் பொறுத்தவரை அவருக்கு பெரிய இழப்பு, அப்பாவின் அன்பு கிடைக்காதது. அவளுடைய அம்மா இறந்தபிறகு அவளை கவனிக்க யாருமில்லை. வீட்டு வேலைக்காரர்கள் சிலர் அனுசரணையாக இருக்கிறார்கள். அதற்குப்பிறகு அவளுடைய முழு ஆதரவாக அடிமை மூலே மாறுகிறான். மனிதர்களைப் பற்றிய துல்லிய மதிப்பீடு இருப்பதில்லை. எனவே, தலைமைக்காவலரை காதலிப்பதாக நினைத்து ஏமாந்துபோகிறாள். அவனோ, பெண்கள் பூச்சாடியை அலங்காரம் செய்து வீட்டில் இருந்தால் போதும். அரசியல், குற்றங்கள் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளவேண்டியதில்லை என நினைக்கும் கோணல் பார்வை கொண்டவன்.
மூலேவைப் பார்த்தால் நினைவுகள் அழிந்துபோய் அதைப் பெற போராடி வருபவன். யுன்னான் தவிர வேறு போக்கிடமற்றவன். அவளை பாதுகாப்பதைத் தவிர்த்த நேரம் உண்டுகொண்டோ, உறங்கிக்கொண்டோ, குதிரைகளிடம் பேசிக்கொண்டோ இருப்பான். சாதி, மேல், கீழ் பாகுபாடு பற்றியெல்லாம் தெரியாது. தன்னுடைய எஜமானரை அடிக்க முயன்றால் அவர்களை கொன்றுவிடுவதே மூலேவின் வேலை.
சில சந்தர்ப்பங்களிலேயே தலைமைக்காவலரும், மூலேவும் ஜென்ம எதிரிகள் ஆகப்போகிறார்கள் என பார்வையாளர்கள் அடையாளம் கண்டுகொள்ளலாம். சட்டம் என்பதை கண்மூடித்தனமாக நம்புபவன், தலைமைக் காவலன். சட்டமா அப்படியென்றால் என்ன, உயிர்காக்க என்ன செய்யவேண்டுமோ அதை நோக்கி நகர்பவன் மூலே. வாக்குறுதி கொடுத்தால் அதைக் காக்க எந்த எல்லைக்கும் செல்லும் தீர்க்கமான மனநிலை அவனுக்குண்டு.
யுன்னான், உடலுக்குள் சென்ற பட்டுப்புழுக்களை எடுக்க மூன்று நாட்கள் நெருப்பு மத்தியில் போராடுவது மூலே மட்டுமே. அவளுடைய அப்பா, சித்தி, தம்பி எல்லோரும் எனக்கென்ன என நகர்ந்துகொள்கிறார்கள். இருவருக்குமான நெருக்கத்தை துறவி தியான்சு கவனிக்கிறார். மனதிற்குள் குறித்து வைத்துக்கொள்கிறார். திருமணத்தையும் சரியான வேளையில் செய்து வைக்கிறார்.
மூலே அடிமையாக இருந்தாலும் அவன் சுலோ என்ற நாட்டின் இரண்டாவது இளவரசன். நினைவிழந்து அடிமையாக இருந்திருக்கிறான். அவன் நோக்கம், மாந்திரீக முத்துகள் என்பதை இறுதியாகவே அரசி அறிகிறார். அதை அறியும்போது மூலே, துறவியிடமிருந்து அதை லவட்டிக்கொண்டு தனது நாட்டிற்கு சென்றுவிடுகிறான். இழந்த நினைவுகளும் மீள வந்துவிடுகிறது. இப்போது, மூலேவின் எஜமானரான யுன்னான், முத்துகளை மீட்க வேண்டும். அல்லாதபோது அவளின் குடு்ம்பம், தலைமைக் காவலன் குடும்பம், துறவி தியான்சு என அனைவரும் சிரச்சேதம் செய்யப்படுவார்கள் என அரசி அச்சுறுத்துகிறார். இதை அறியும்போதே இனி என்ன ஆனால் என்ன என்று தோன்றிவிடுகிறது. அந்தளவு தொடரின் இயக்குநர் நம்மை சோதிக்கிறார். இனி என்ன யுன்னான் அடிமைபோல சுலோ நாட்டில் தென்படலாம். அவளை மூலே வாங்கலாம். வதைக்கலாம். காதலிக்கலாம். அந்த காதலை வைத்து மாந்திரீக முத்துகளை அவள் தனது நாட்டிற்கு கொண்டு செல்ல முயலலாம். இதுதான் கதையாக இருக்கப்போகிறது......கூடவே மூலேவின் அண்ணன் ஒருவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.அவன்தான் வில்லனாக இருக்கப்போகிறவன்....
நகைச்சுவை என்றால் அது நகைச்சுவையா என தோன்றும்படி காட்சிகள் இருக்கும். பெரிதாக ஒன்றும் நடந்துவிடாது, பார்த்துக்கொள்ளலாம் என உருளைகிழங்கு சிப்ஸை வாங்கி மென்றுகொண்டே பார்க்கவேண்டிய அசமந்த தொடர் இது.
கோமாளிமேடை டீம்
"An Oriental Odyssey" is a Chinese historical-fantasy drama set during the Tang Dynasty, starring Wu Qian and Zheng Ye Cheng. The drama revolves around the Nine Divine Beads created by the Goddess Nuwa to end a war between nine tribes. Due to their immense power, the beads were hidden away.3 The story follows Ye
கருத்துகள்
கருத்துரையிடுக