அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்!

 














அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்!


அல்டிமேட் நோட்


சீன டிராமா


34 எபிசோடுகள்


ஐக்யூயி ஆப்



1976ஆம் ஆண்டு குயின் மதர் என்ற தொன்மை கால ராணி வாழ்ந்த இடங்களை ஆராய்ச்சி செய்யப்போன ஆராய்ச்சியாளர்கள், காணாமல் போகிறார்கள். உயிருடன் வந்தவர்களில் மிகச்சிலரே  இருக்கிறார்கள். காணாமல் போன ஆராய்ச்சியாளர்கள் பற்றிய வீடியோ டேப்புகள் மூன்று நபர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதை துப்பாக கொண்டு பலரும் குயின் மதர் மாளிகையை அடையாளம் காண தேடிச்செல்கிறார்கள். இந்த பயணத்தில் மிஸ்டிக் நைன் எனும் பழைய புகழ்பெற்ற குழு உறுப்பினர்களின் புதிய தலைமுறை ஆட்கள் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் என்ன உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பதே கதை. 


தேடல் பயணத்தில் பலருக்கும் பல நோக்கம் இருக்கிறது. பெரும்பாலான ஆட்கள் நல்ல காசு கிடைக்கும், பொக்கிஷம் கிடைக்கும் என நம்பி வருகிறார்கள். ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை அமரத்துவம் பற்றிய உண்மைகள் கிடைக்கும் என வருகிறார்கள். அப்படியான உண்மையைத்தான் அல்டிமேட் என்கிறார்கள். இதை அறிந்தவர்கள் யாரும் சுயநினைவுடன் இருப்பதில்லை. பிறரைக் கொல்லும் வெறிபிடித்தவர்களாக மாறுகிறார்கள். அல்லது மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். இந்த வகையில் மிஸ்டிக் நைன் என்ற குழுவில் பெரும்பாலான ஆட்கள் இறந்துபோகிறார்கள். இந்த மர்மங்களை அந்த குழுவின் அடுத்த தலைமுறையினர் நிர்பந்தம் அல்லது ஆர்வம் பேரில் கண்டுபிடிக்க செல்கிறார்கள். அம்புட்டுத்தேன் மெயின் கதை. 


இந்த சீனத் தொடரை நன்றாக புரிந்துகொள்ளவேண்டுமா? அப்படியெனில் லாஸ்ட் டாம்ப் என சீனத்தொடர்கள் உள்ளன. அவற்றை பணம் கட்டி வரிசைக்கிரமமாக பார்த்துவிட்டால் கதையில் நாயகனுக்கு கிடைக்கும் துப்புகளை, நண்பர்கள், எதிரிகள், முன்னோர்கள் பற்றி  எளிதாக புரிந்துகொள்ள முடியும். வூ, ஷி, ஹூவா என மூன்று குடும்பங்களுக்கு இடையில் வணிகம் தொடர்பாக நட்பு தொடர்பாக பல்வேறு பூசல்கள், தாவாக்கள் தகராறுகள் உள்ளன. அதையெல்லாம் தாண்டி அவர்கள் தம் முன்னோரின் ஆராய்ச்சியில் இணைவது எப்படி, குகையில் உள்ள துப்புகளை எப்படி கண்டறிகிறார்கள் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். ஆபத்துகளை எதிர்கொள்ளும் பகுதிகள், அதை தீர்ப்பது சுவாரசியமாகவே உள்ளது. மோசமில்லை.


சீனாவின் பெரும் நிலப்பரப்பு, அதிலுள்ள கலாசார பொக்கிஷங்கள் பற்றி சொல்லுவதற்கு வாய்ப்பான தொடர். இதில் வரும் நாயகன் வூசி, தற்காப்புக்கலை வல்லுநர் அல்ல. அவன் கையில் உள்ளது டார்ச் லைட் மட்டுமே. அதை வைத்து குறியீடுகளை அறிந்து பல்வேறு பொறி அமைப்புகளை திறக்கிறான். அந்த பணியில் ஆபத்து வரும்போது நாயகன் வூசியை, ஸாங் என்ற அவனது குங்க் பூ அறிந்த நண்பன் காக்கிறான். ஸாங்கின் பணி பெரும்பாலும் ஆபத்திலுள்ள, ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வூசியைக் காப்பாற்றுவது மட்டுமே. அவன் பிறரைப் பற்றியெல்லாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதேசமயம் அவன் புத்திசாலியுமல்ல. 


வூசி, ஃபேட்டி வாங்க் என இரு நண்பர்கள் அபாயத்தில் இருந்தால் ஸாங், வூசியை மட்டுமே தேர்வு செய்கிறான். வூசி, ஸாங், ஃபேட்டி வாங்க் ஆகிய மூவருமே நண்பர்கள். வூசி அகழ்வாய்வாளன். குண்டு வாங்க் சிறந்த வியாபாரி, ஸாங் குடும்பம் அற்றவன். வூசியோடு அல்லது குண்டு வாங்கோடு சுற்றி வருகிறான். அவனுடைய செலவுகளை பெரும்பாலும் வூசிதான் பார்த்துக்கொள்கிறான். அப்படியல்லாதபோது குண்டு வாங்க் அதை செய்கிறான். 


ஸாங் மட்டுமே பல்வேறு ஆபத்தான சூழ்நிலைகளில் வூசியைக் காப்பாற்றுகிறான். அவன் இல்லாத சூழலில் எதிரிகளை சமாளிக்க வூசி தடுமாறுகிறான். அவனுக்கு உடல் பலம் கிடையாது. மூளை பலம்தான். வூசிக்கு பேச்சு முக்கியம். தொடரில் அவன் பேசி்க்கொண்டே இருக்கிறான். ஒரு இடத்தில் தன்னால் பேசாமல் இருக்க முடியாது என்று கூற ஆநிங் என்ற இள்ம்பெண்ணிடம் கூறுகிறான். குண்டு வாங்கைப் பொறுத்தவரை நகைச்சுவை பாத்திரம். வூசியோடு இருந்து அகழாய்வில் கிடைக்கும் பொருட்களைப் பெற்று விற்று பணம் பார்ப்பவன். ஸாங்கைப் பொறுத்தவரை அவனுக்கு பேச்சு கிடையாது. வூசி சொல்லும் கட்டளைகளை ஏற்று செயல்படுபவன். குண்டு வாங்க், வூசியை யாராவது தாக்கினால் அடுத்தநொடி அவர்களை அடித்து உருள விடுவதுதான் அவனது வேலை. 


இப்போது தொடரின் கதைக்கு வருவோம். ஏற்கெனவே கூறியதுபோல நாவலில் இருந்து எடுத்த கதையை பல்வேறு பாகங்களாக வெவ்வேறு நடிகர்களை வைத்து எடுத்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஒரு சுற்று பார்த்துவிட்டால், இந்தக்கதைக்குள் தடுமாறாமல் நுழையலாம். பல பாக கதையில் இயக்குநருக்கு ஏற்றபடி நடிகர்களும் மாறுகிறார்கள். இதனால் தொடக்கத்தில் அவர்களைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வது சற்று கடினமாகவே தோன்றும்.  


வூசி, அவரது மாமா சான், ஹுவா என மூன்று ஆட்களுக்கு மூன்று வீடியோ டேப்புகள் வருகி்ன்றன. அஞ்சலில் அனுப்புபவர், ஆருடம் சொல்லும் பழங்குடி இன அம்மாள். வூசியின் வீடியோ டேப்பில் குறிப்பு, சாவி ஒன்று உள்ளது. அதைத் தேடிப்போனால் அது ஒரு கைவிடப்பட்ட ஆராய்ச்சி மையம். அங்கு அவனுடைய அத்தை உறவு முறை வரும் வென் ஜின் என்பவர் எழுதிய டைரி கையில் கிடைக்கிறது. கூடவே அங்கு, ஹூவா குடும்பத்தைச் சேர்ந்த ஹூவா லிங் என்பவர் ஜோம்பி மாதிரி மாறி அங்கு வருபவர்களை வேட்டையாட முயல்கிறார். எதனால் அவர் அப்படி மாறினார், அத்தை வென் ஜின் எங்கே இருக்கிறார், இருந்தாரா, இறந்துவிட்டாரா என்பதையெல்லாம் நிதானமாக கூறுகிறார்கள். 


சீசனுக்கு சீசன் நடிகர்களை மாற்றிவிடுகிறார்கள். இதனால் ரசிகர்கள் எரிச்சலாகி, தொடரில் செட் ஆக முடியவில்லை. அதே நடிகர்களை வைத்து சீசன் 2 எடுங்கள் என வேண்டுகோள் வைக்கிறார்கள். இயக்குநர்கள் மூன்று பேரின் காதுக்கு இதெல்லாம் கேட்குமா என்று தெரியவில்லை. வூசி, வாங், குண்டு வாங்க் ஆகியோரின் பாத்திரங்கள் புதிது கிடையாது. எப்போதும் நாயகனுக்கு நண்பனாக இருப்பவன் நகைச்சுவை செய்வான். இன்னொருவன் சீரியசாக இருப்பான் என்பதை இந்த கல்லறை தேடி செல்லும் ஆராய்ச்சி சீரிசை எதேச்சையாக பார்த்தவர்களுக்கு கூட தெரிந்துவிடும். எனவே, பாத்திரங்கள் அல்ல; அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்தான் சுவாரசியமானவை. 


இந்த தொடரில் வூசி தன்னைப் போன்ற உருவம் கொண்டவர் பைத்தியம் வந்தவர் போல ஓரிடத்தில் இருப்பதை வீடியோவில் பார்க்கிறான். உண்மையில் அது யார் என்பதை கண்டறிய நினைக்கிறான். கூடவே, ஸாங்கின் பூர்வீகம் தேடி செல்கிறார்கள். அவன் ஒரு அடிமை வீரன். அவனை வூசியின் மாமா சான் விலைக்கு வாங்குகிறார். அவனது சிறப்பே, தற்காப்புக்கலையும். புதிரான ரத்த வகையும்தான். அவனை பிணத்தை தின்னும் பூச்சிகள், பாம்புகள், அட்டைகள் என எதுவும் செய்வதில்லை. 


வூசி, குண்டு வாங் ஆகியோர் விஷக் காளான், அட்டைப்பூச்சி, கறுப்புமயிர் பாம்பு, சிவப்புத்தலை பாம்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். துரதிர்ஷ்டமாக காக்ஸ் ஹென்றியின் ஆளான ஆநிங் சிவப்புத்தலை பாம்பு கடித்து செத்துப்போகிறாள். அவள் இறக்கிறாள் என்பதை மறைமுகமாக முன்னமே சொல்லிவிடுகிறார்கள். அவளை வூசி காதலிக்கிறான். ஆனால் ஆபத்தில் எச்சரித்தும் அவள் அதை புரிந்துகொள்ளாததால் பாம்பு கடிபட்டு இறந்துபோகிறாள். 


வழக்கமான காதல்,மோதல், பொறாமை இல்லாத கதை. குகையில் குறியீடுகளை தேடுவது, சுவரில் உள்ள புதிர்களை தீர்ப்பது, ஆம்பர் உருவங்களோடு சண்டையிடுவது, பல்வேறு பொறி அமைப்புகளில் கால் வைத்து அம்பு, நெருப்பு, வீரர்கள் ஆகியோரோடு போராடுவது, காயமடைந்த நண்பர்களைக் கைவிடாமல் காப்பது என தொடர் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தியே நகர்கிறது. நாயகன் வூசிதான். அவனுக்கு இணையான இடம், மிஸ்டர் பிளாக் என்ற தற்காப்பு வீரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவனுக்கும் ஷியாவோ ஹூவாவுக்கும் ஏற்படும் நட்பு சிறப்பாக உள்ளது. ஷியாவோ ஹூவா, ஷி குடும்ப வாரிசு. பணக்காரன். பிளாக் கூலிக்கு வேலை செய்யும் ஆள். வூசி, வாங்க், வாங் ஆகியோரோடு வேலை செய்தவன். ஷியாவோ ஹூவாவோடு முதல் முறையாக வேலை செய்து நண்பனாகிறான். இருவருமே தற்காப்புக்கலையில் வித்தகர்கள். 


இவர்களோடு ஒப்பிடுகையில் நாயகன் வூசி பலவீனமான ஆள். கையில் டார்ச் மட்டும்தான் அவனுடைய ஆயுதம். ஆனால் அவனுடைய புத்திசாலித்தனம்தான் அவனது நண்பர்களை ஆபத்திலிருந்து காக்கிறது. அதிலும் அவன் ஆற்றில் இறங்கி ஸாங் குடும்ப வீட்டைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் மாயக்காட்சிகளை உணரும் காட்சி சிறப்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. குகையில் ஆம்பர் வீரர்களோடு சண்டையிட்டு உயிரைக் கையில் பிடித்தபடி அங்கிருந்து தப்பிப்பது சிறந்த சண்டைக்காட்சி எனலாம். 


உண்மையில் ஸாங் என்பவர், அன்றை கால மிஸ்டிக் நைன் குழுவின் தலைவராக காட்டப்படுகிறார். அதை வயதான ஹூவா உணர்கிறார். ஆனால் ஸாங்கிற்கு அதைப்பற்றிய எந்த நினைவும் இல்லை. ஏன் அப்படியானது என்பதை தொடர் விளக்க முயல்கிறது. அநேகமாக இதற்கடுத்த சீசன் அல்லது வேறு பெயரில் தொடர் வந்தால்தான் பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியும். ஏராளமான கேள்விகள் அப்படியே இருக்க தொடர் நிறைவடைகிறது. 


வூசி செய்த தவறான செயலால், அவனது இரு நண்பர்களும் பிறரும் குகைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் இறந்துபோய்விட்டதாக நினைக்கும் வூசி, தான் செய்து வந்த பணியைக் கைவிட்டு உடனே மாமாவின் வீட்டுக்கு திரும்புகிறான். அங்கே அவனைக் காண வரும் ஷியாவோ ஹூவா, வூசி அவனது மாமாவைப் போலவே இனி வாழ வேண்டும் என்று சொல்லி மாஸ்க் ஒன்றைக் கொடுக்கிறான். அதன் வழியாக அமரத்துவம் பற்றிய குறிப்பையும் கொடுக்கிறார்கள். 


தொடக்கத்தில் அமரத்துவம் பற்றிய கேள்விக்கு அது ராணி தயாரித்த மாத்திரை. அதை அவரே சாப்பிட்டார். அமரத்துவம் பெற்றார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கான பின் விளைவுகளாக ஒருவர் எந்த வயதில் மாத்திரையை சாப்பிடுகிறாரோ அதே வயதில் அப்படியே இருப்பார். ஆனால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது உடலில் இறந்துபோனவர்களின் வாசனை வீசத்தொடங்குகிறது. 


பிறகு அவர்கள் ஜோம்பி போன்றவர்களாக சுயநினைவு இழந்த ராட்சசர்களாக மாறிவிடுகிறார்கள். அவர்களுக்கு இயற்கையாக இறப்பு இல்லை. அதேநேரம் மனித சமூகத்தில் இயல்பாக வாழவும் முடியாது. அத்தை வென் அப்படி அமரத்துவம் பெற்றவர்தான். ஆனால், அவருக்கு உடல் மெல்ல மாறி ராட்சச தன்மை வரத்தொடங்குகிறது. அதை தடுக்க வூசியைப் பயன்படுத்தி ராணியின் மாளிகைக்குள் பத்து நாட்களுக்குள் நுழைந்து தீர்வு தேட முயல்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது ஒரு கதை. மற்றொரு கதை ஸாங்கின் பூர்வீகம் தேடுகிற கதை. 


ஒருவர் பேயை எதிர்கொள்வதை விட ஆபத்தானது, மனிதர்களின் இதயம் என்கிறார் வூசியின் தாத்தா. அதற்கேற்பவே ஷியாவோ ஹூவா பணக்காரன். அவன் வூசியின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி சில விஷயங்களைப் பெற முயல்கிறான். இதன் காரணமாக, வூசி அவனது இரு நண்பர்களையும் இழக்கிறான். கூடவே வயதான பாட்டி ஹூவாவும் குகைக்குள் சென்று காணாமல் போகிறார். 


இந்த துயரத்தால்தான் வூசி தன்னுடைய நிஜ அடையாளத்தை இழக்கும்படி ஆகிறது. அவனது மாமா சான் கூட உண்மையானவர் கிடையாது.இறந்துபோனவரின் அடையாளத்தை அவர் எடுத்துக்கொண்டு வூசிக்கு தான் கற்ற விஷயங்களை சொல்லித் தருகிறார். அவனையும் மிஸ்டிக் நைன் என்ற குழுவின் அடுத்தகட்ட ஆளாக தயாரிக்கிறார். ஆனால் இறுதியாக வூசி தான் நேசித்த காதலி, நண்பர்கள் என அனைவரையும் இழந்து சிலரின் பேராசைக்காக தன்னை பலி கொடுத்துக்கொண்டவனாக மாறுகிறான். 


தொடரின் ஒரு இடத்தில் ராணியின் மாளிகையில் என்ன இருக்கிறது என வூசி கேட்கும்போது அத்தை வென், அல்டிமேட் என்று சொல்கிறார். அது அனைத்து உயிர்களின் முடிவு என விளக்கமளிக்கிறார். தொடரின் இறுதியில் அதை வூசி மனமார உணர்ந்திருப்பான் என்றே தோன்றுகிறது. 


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்