ஏஐ காரணமாக பிங்க் சிலிப் வாங்கப்போகும் தொழிலாளர்கள்! - முக்கிய தொழில்துறைகள்

 













ஏஐ மூலம் பாதிக்கப்படும் தொழில்துறைகள் 


கூகுள், ஏஐ ஆராய்ச்சியில் அதிக காலம் இருந்தாலும் கூட அதை வருமானத்திற்குரிய பொருளாக மாற்றத் தவறிவிட்டது. அந்த தவறை ஓப்பன் ஏஐ செய்யவில்லை. அதனால்தான் எழுத்து, புகைப்படம், வீடியோ என பல்வேறு பொருட்களை சந்தைப்படுத்தி முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது. 


ஏஐ மூலம் நிறைய விஷயங்களை செய்துகொள்ளலாம் சிட்டி வங்கி, ஜே பி மோர்கன் ஆகிய நிறுவனங்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றுடன் ஒப்பந்தமிட்டு வேலைகளிலும் பயன்படுத்தி வருகின்றன. ஒரேவிதமான வேலையை செய்பவர்களுக்குத்தான் வேலை போகுமே தவிர கிரியேட்டிவிட்டியாக வேலைபார்ப்பவர்களுக்கு ஏஐயால் பாதிப்பு நேராது என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.


முதுகலைப் பட்டம் பெற்றவர்களின், முனைவர் பட்டம் பெற்றவர்களின் வேலைகள் 57 சதவீதம் ஏஐயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஒற்றை டிகிரி வாங்கி கல்யாணப்பத்திரிகையில் போட்டு சந்தோஷப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு அறுபது சதவீதம் பாதிக்கப்படலாம். இதையெல்லாம் இந்திய அரசின் புள்ளிவிவரத்துறை கூறினால் சந்தேகப்படலாம். ஆனால், மெக்கின்சி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. போலிச்செய்தியல்ல உண்மைதான். 

பொறியாளர்கள், கட்டுமான வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலருக்கும் பிங்க் சிலிப் கொடுக்கப்பட அதிக காலம் இல்லை. கொஞ்சம் காலம் உள்ளது. அதற்குள் என்னென்ன பாதிப்பு வரும், எந்தெந்த துறை பாதிக்கப்படும் என பார்த்துவிடலாம். 


வங்கிகள், செயற்கை நுண்ணறிவை பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றன. எதற்கு? வாடிக்கையாளர்களின் குணங்களை, தேர்வுகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்ளத்தான். இன்று நிறைய வங்கிகள் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற வலைத்தளத்தில் ஏஐ பாட்களை இயக்கி வருகின்றன. இனி சேவைகளைக் கூறவும் கூட மனிதர்கள் தேவையில்லை. கணினியும், வழிகாட்டும் குரலும், ஏஐயின் புத்திசாலித்தனமும் போதும். மைக்ரோசாப்ட் இந்த வகையில் ஆலி.ஏஐ என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளது. சாட் ஜிபிடியின் ஆற்றலுடன் செயல்படுகிறது. வங்கியின் தகவல்,பாதுகாப்பு, உள் செயல்பாடுகளை ஆலி திறம்படச் செய்கிறது. 


சட்டம்


சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி,  போலியாக வழக்குகளை புனைந்த வழக்குரைஞர்கள் இருவருக்கு ஐந்தாயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்ட அமெரிக்க செய்தியை அறிந்திருப்பீர்கள். ஆக, சட்டங்கள், வழக்குகளை கூட போலியாக புனைந்து குழப்பம் ஏற்படுத்தலாம். சட்டப்படி சரியான தகவல்களைக் கொடுக்க நிறுவனங்களே இல்லையா என பதற்றம் கொள்ளவேண்டியதில்லை. லெக்சிஸ் நெக்சிஸ், தாம்சன் ராய்ட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. தாம்சன் ராய்ட்டர்ஸ் சாட் ஜிபிடி 4 இல் இயங்கும் கோ கவுன்சில் என்ற ஏஐ மென்பொருளை கையகப்படுத்தியுள்ளது. இதைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தின் சுருக்கம், சட்டப்பூர்வ ஆராய்ச்சி என பல்வேறு வேலைகளை சட்ட உதவியாளராக மாறி செய்கிறது. எனவே, வழக்குரைஞர்களின் வேலைகளும் அபாயத்தில்தான் உள்ளன. ஏஐயுடன் இணைந்து பயணிப்போருக்கு பெரிய பயமில்லை. 



பொறியியல் 


சீமன்ஸ், ஆட்டோடெஸ்க், போயிங், பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் அனைத்துமே ஏஐயை, பல்வேறு வித ஆப்களை தனது பொருட்கள் தயாரிப்பிற்கு பயன்படுத்துகின்றன. அவற்றில் சில தவறுகள் நேர்வது உண்மையாக இருந்தாலும் எதிர்காலத்தில் அவை நிவர்த்தி செய்யப்படும். கட்டுமான வடிவமைப்பை பொறுத்தவரை ஏற்கெனவே ஏராளமான ஆப்கள் பயன்பாட்டில் உள்ளன. மனிதர்களை வேலைக்கு எடுப்பதை விட ஆப்களை வைத்தே அந்த மனிதர்கள் செய்யும் வேலையை செய்து சற்று பணத்தை சேமிக்க கட்டுமான நிறுவனங்கள் யோசிக்கலாம். உதாரணத்திற்கு எக்ஸ்கூல் என்ற கட்டுமான வடிவமைப்பு ஆப் உள்ளது. இதை ஒருவர் பயன்படுத்தி ஐந்து வடிவமைப்பாளர்களின் வேலைகளை செய்து வாங்கிவிட முடியுமாம். அப்படியென்றால் எதற்கு ஐந்து பணியாளர்களுக்கு வெட்டி சம்பளம்? அதுதான் விஷயம். 


ஆராய்ச்சித்துறை


இதில் ஏற்கெனவே கூகுளின் ஆல்பாஃபோல்ட், செல்களில் உள்ள அமினோ அமில வரிசையை எளிதாக கணித்தது. மனிதர்களை விட ஆராய்ச்சி தளத்தில் ஏஐ சிறப்பாக செயல்பட முடியும். இதற்கு ஏராளமான தகவல்களை அதற்கு அளிக்கவேண்டியுள்ளது. அப்படி செய்தால் நோய்களுக்கு தேவையான மருந்துகளை கூட வேகமாக கண்டுபிடித்துவிடலாம். 


என்விடியா, காலநிலையைக் கணிக்கும் எர்த் 2 என்ற ஏஐயை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் அடுத்த பதினான்கு நாட்களுக்கான வானிலையை ஆயிரம் மடங்கு வேகமாக கணித்துவிடலாம். சில ஆய்வகங்கள், தூய ஆற்றல் கண்டுபிடிப்புகளுக்கான பொருட்களை ஏஐ பயன்படுத்தி தேர்ந்தெடுத்து வருகிறார்கள். துல்லியமாக, கொள்கை மீறாமல் ஆய்வுகளை செய்ய ஏஐ உதவுகிறது. 



மென்பொருள் ஆராய்ச்சி


மைக்ரோசாப்டின் கிட்ஹப் கோபைலட், அமேசானின் கோட் விஸ்பர் ஆகிய மென்பொருள் வசதிகளைப் பயன்படுத்தி ஒரு நிறுவனம் தனக்கு தேவையான கோடிங் வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். கிட்ஹப்பில் ஏராளமான கோடிங் வல்லுநர்கள் புழங்கினர். இப்போது மைக்ரோசாப்ட் அதை வாங்கியுள்ளதால் நிலைமை என்னாகும் என்று தெரியவில்லை. கோபைலட் வசதியை தனது கணினிகளிலும் புதியபட்டன் வைத்து சேர்க்க மைக்ரோசாப்ட் முயல்கிறது. 


அதிக நேரம் பிடிக்கும் வேலைகள் ஏஐ வசம் செல்லக்கூடும். தினசரி செய்யும் ஒரேவிதமான சலிப்பூட்டும் வேலைகளை கணினி செய்யும். மனிதர்கள் அதோடு இணைந்து குழுவாக வேலை செய்யும் நிலை உருவாகலாம். புதிதாக யோசித்து, அதை விளக்கி பிறரோடு இணைந்து செயல்படும் விதமும் சற்று மாறி ஏஐயுடன் சேர்ந்து பணிபுரிவதாக சூழல் மாறலாம். மனிதர்களின் நச்சு மனநிலையோடு ஒப்பிடுகையில், ஏஐயுடன் வேலை செய்வது அந்தளவு சிரமமாக இருக்காது. எந்த வேலை செய்தாலும் அதில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த துறையில் நிலைத்து நின்று சாதிக்கமுடியும். ஏஐ, இணையத்தில் உள்ள ஏராளமான தகவல்களை பயிற்சி செய்து வருவதால், அதனுடன் போட்டிபோடுவது திறமைசாலிகளுக்கு தினந்தோறும் புதிய சவால்களைத் தரும். 


டைம் இதழ்

கருத்துகள்