ஏஐ வரவால் மாறும் ஊடக செய்தியறை!

 










நவீன ஏஐகளால் செயல்வேகம் கூடும் ஊடகங்களின் செய்தியறைகள்


தமிழகத்தின் இதயத்துடிப்பு, நம்பர் 1 வார இதழ் என தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் வார இதழ்கள் எல்லாமே வலதுசாரி கட்சிகளால் வாங்கப்பட்டு, அஜண்டாவிற்கு ஏற்ப போலிச்செய்திகளை, மக்களை மடைமாற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. காசு கொடுக்கிறவனே கண்கண்ட தெய்வம் என மாறிவிட்டன. அதேசமயம் காலத்திற்கேற்ப எழுதும் செய்திகளை மேம்படுத்தி பல்வேறு வழிகளில் மக்களை அடைய முயற்சிக்கும் புதிய பாதைகளுக்கும் பஞ்சமில்லை. 


அமெரிக்காவிலுள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற நாளிதழ், டிக் டாக் அல்காரிதம் பற்றி ஆராய்ச்சி செய்தது. அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் அனைவருமே பெரும்பாலும் டிக்டாக்கில் பயனர்களாக இருக்கிறார்கள். சிலர் அதில் வியாபாரம் செய்கிறார்கள். நடிக்கிறார்கள். ஏதோ ஒருவகையில் அந்த ஆப்பில் இணைந்திருக்கிறார்கள். அதைவிட்டு விலகாமல் இருக்கிறார்கள். அப்படியென்ன சிறப்பம்சம் மனதை கட்டிப்போடும்படி இருக்கிறது என நாளிதழ் ஆசிரியர் குழு யோசித்தது. 2021ஆம் ஆண்டு, பதிமூன்று வயதான பயனர் ஒருவர் டிக்டாக்கில் கணக்கு தொடங்கினார். ஒன்லி பேன்ஸ் என்ற டிக்டாக்கின் கணக்கில் இணைந்தார். அது முழுக்க வயது வந்தவர்களுக்கான பதிவுகளைக் கொண்டிருந்தது. 


டிக்டாக் பார்ப்பவர்கள் அறிந்திருப்பார்கள். சிலநொடி பதிவுகளில் திறமையை வெளிப்படுத்தவேண்டும். எனவே, பெரும்பாலும் பெண்கள் ஆபாசமாக குத்தாட்டம் ஆடுவது, அங்க சௌந்தர்யங்களைக் காட்டுவது என இயங்குவார்கள். அப்படித்தான் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தனர். பதிமூன்று வயது பயனர், ஒன்லி ஃபேன்ஸ் கணக்கில் ஏராளமான் பாண்டேஜ் வகையறா ஆபாசங்களைப் பார்த்தார். அதாவது அவர் தேர்வு கடந்து அல்காரிதமே ஏராளமான காஜி சமாச்சாரங்களைக் காட்டியது. உண்மையில் இந்த பதிமூன்று வயது பயனர் என்பது மனிதர் அல்ல. அது ஒரு ஏஐ பாட். இதை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆட்களே உருவாக்கி, டிக்டாக்கில் உலவவிட்டு டிக்டாக்கின் அல்காரிதத்தின் பின்னணியைக் கண்டுபிடித்தனர். இதற்காக அக்குழுவினர் ஏராளமான ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி சோதித்தனர். ஆய்வு செய்தனர். 


அடுத்த உதாரணத்தைப் பார்ப்போம். 


லே மாண்டே என்ற பிரெஞ்சு பத்திரிகை புகழ்பெற்றது. ஆங்கில வழியில் ஒரு பதிப்பை வெளியிட முடிவு செய்தது. ஆனால் இதற்காக மொழிபெயர்ப்பாளர்களை பணியமர்த்தி அவர்களுக்கு மாச சம்பளம் கொடுக்க மனதில்லை. எனவே, கூகுள் ட்ரான்ஸ்லேட்டை நாடலாமா என யோசித்தனர். ஆனால் தரம் மிக மோசம் என்பதால், டீப் எல் என்ற மொழிபெயர்ப்பு ஆப்பை பத்திரிகையினர் பயன்படுத்தினர். மொழிபெயர்ப்பு மேம்பாட்டில் எடிட்டர்களும் உள்ளனர். இந்த வகையில் ஒருநாளுக்கு நாற்பது கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. இதுபற்றி பேசிய லே மாண்டே ஆங்கில பதிப்பு ஆசிரியர் எல்விரே காமஸ், இதே வேலையில் ஏழு பத்திரிகையாளர்களை வைத்தால் ஒருநாளுக்கு ஏழு கட்டுரைகள்தான் வெளியிட முயலும் என்றார். 


சாட்ஜிபிடியை பத்திரிகையாளர்கள் தங்களது சொந்த உதவியாளர் போல பயன்படுத்திக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. அதிக பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சுருக்குவது, தேவையான விஷயங்களை மட்டும் சுருக்கமாக தருவது, கட்டுரை எழுத சரியான சொற்களை, வார்த்தைகளை பரிந்துரைப்பது என சாட்ஜிபிடி உதவுகிறது. சந்தா கட்டி பயன்படுத்தினாலும் பயன் இருக்கிறது என்கிறார்கள். 


எந்த நிறுவனத்தின் விளம்பரமும் வாங்காமல் வாசகர்களின் நன்கொடையை மட்டும் வைத்தே வயர், நியூஸ் லாண்ட்ரி, நியூஸ் மினிட் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இணையத்தில் பெரும்பாலான செய்திகளை ஒருவர் இலவசமாக கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. அதிலும் ஏஐயைப் பயன்படுத்தினால் செய்திகளை பேரளவில் உருவாக்க முடியும். ஆனால் இதில் நாளிதழுக்கு பெரிய லாபம் கிடைக்காது. இப்போதே நஷ்டத்தில்தான் செய்திதுறை இயங்குகிறது. மேலும் ஏஐ ஈடுபடுத்தப்பட்டால் ஏற்படும் சேதம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்றார் ஊடக அதிபரான பேரி டில்லர். 


கூகுளில் தரவுகளைக் கொடுத்தால் அதை செய்தியாக்கிக் கொடுக்கும் ஜெனிசிஸ் என்ற ஏஐ மென்பொருள் உள்ளது. இதை ஒருவர் பயன்படுத்தினால், செய்தியாளர் இல்லாமலேயே சில முக்கிய செய்தி துணுக்குகளை வைத்தே முழு செய்திக்கட்டுரையை உருவாக்க முடியும். கடந்த ஆண்டு ஏப்ரலில் பஸ் ஃபீட் நிறுவனம், செய்திப்பிரிவை மூடிவிட்டு பதினைந்து சதவீத பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது. ஏஐ மூலம் செய்திகளை எழுதி வெளியிடத் தொடங்கியது. சிநெட் என்ற தொழில்நுட்ப வலைத்தளம், தனது பணியாளர்களுக்கு கூறாமல் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏஐயால் எழுதிய கட்டுரைகளை வெளியிடத் தொடங்கியது. இப்படி வெளியிட்டதை வாசகர்களுக்கும் அந்த நிறுவனம் கூறவில்லை. கட்டுரையில் பிழைகள் வந்தபிறகுதான் ஏஐ ஜாலம் தெரிய வந்திருக்கிறது. ஊழியர்கள் நிறுவனத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் எதிர்காலம் ஏஐதான். அதில் பெரிய மாற்றமில்லை.


பத்திரிகையின் பெயர், மதிப்பு கெடுவதை விட செலவு குறைகிறதே என்றே பத்திரிகை நிறுவனங்கள் நினைக்கின்றன. 


ஏஐ, கட்டுரைகளை எழுதுவது தொடக்கம் என்பதால் நிறைய பிழைகள் வருகின்றன. இந்த வகையில் இணையத்தில் ஏராளமான குப்பைக் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன என துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருவகையில் கணினி, ஏஐ எல்லாமே மனிதர்கள் எந்தளவு புத்திசாலி என்பதை உலகிற்கு கூற உதவுகின்றனர் என்று புரிந்துகொள்ளலாம். 


அமோஸ் ஜீபெர்க்

டைம் இதழ் 



கருத்துகள்