சூழலுக்கு உகந்த விவசாயத்தை கையில் எடுத்து சாதித்த கியூபா!
















பசுமை சூழலை உருவாக்க அதுதொடர்பான ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தேவை. அவை வளரும்போதுதான், அதைச் சார்ந்த வணிகமும் உருவாகும். மக்களும் அதன் பயனை உணர்வார்கள். இப்படியான மாற்றம் பலவந்தமாக இல்லாமல் இயல்பாக மடைமாறுவது நடக்கும்.




அரசு கட்டமைப்பு அளவில் பொதுப்போக்குவரத்தில் முதலீடு செய்து அதை பரவலாக்க வேண்டும். அலுவலகத்திற்கு காரில் அல்லது பைக்கில் செல்கிறீர்கள். என்ன காரணம், நேரத்திற்கு பேருந்தோ, ரயிலோ கிடைக்காததுதான். அலுவலகத்திற்கு அருகிலேயே செல்லும்படியாக ரயில் வசதி இருந்தால், கார், பைக்கில் முதலீடு செய்யவேண்டியதில்லைதானே?




காய்கறிகளை நாமாகவே உற்பத்திசெய்துகொள்வதோடு பள்ளி, கல்லூரிகளையும் உருவாக்கிக்கொண்டால் ஆற்றல் அதிகம் தேவைப்படாது. தூய ஆற்றல் ஆதாரங்களே போதுமானது. அடிப்படையில் ஆற்றலை செலவழிப்பதில் சிக்கனம் தேவை.




1990ஆம் ஆண்டில் கியூபாவிற்கு சோவியத் யூனியன் அளித்து வந்த எரிபொருட்கள் குறைந்துவிட்டன. எனவே, அதைத் தவிர்த்து பொருளாதாரத்தை இயக்க முயன்றனர். பொதுப்போக்குவரத்தில் அரசு முதலீடு செய்தது. மண்புழு உரத்தை தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஊக்கம் கொடுத்தது. தூய ஆற்றல் ஆதாரங்களில் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியது. உலகளாவிய நிதி அமைப்பு, கியூபா சூழலுக்கு உகந்த நாடுகளில் ஒன்று என பாராட்டியது. கார்பன் வணிகத்தை அந்நாடு செய்யவில்லை. அதை முழுக்க தனது செயல்பாட்டில் வெட்டிவிட்டது.

















பெருநிறுவனங்கள், சூழலியலை பசுமை முதலாளித்துவமாக கட்டமைத்து அதை வைத்து லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் மேக உடைப்பு, பருவமழை தவறுவது, வெப்பமயமாதல் என நடக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இதைக்கடந்து பணக்கார நகரங்களில் காலநிலை மாநாடு தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இத்தகைய மாநாடுகளின் முன்னே பழங்குடிகள் போராடி வருகின்றனர். இந்த நூலை எழுதும்போது கூட ஈகுவடார் அரசு பழங்குடிகளின் நிலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க முயன்று வருகிறது. இதற்காக, ஜனநாயக முறையில் நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பையும் கூட சட்டவிரோதம் என்று கூறிவிட்டது.



சோசலிசவாதியின் கொள்கைகளுக்கும் சூழல் சோசலிசவாதியின் செயல்பாடுகளுக்கும் நோக்கங்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. சோசலிசவாதி, தொழிற்சங்கங்கள் செயல்பாடு, ஒற்றுமை, செல்வந்தர்களின் செல்வத்தை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிப்பது என யோசித்து வேலை செய்வார்கள்.




சூழல் சோசலிசவாதியின் நோக்கம், கொள்கை இதிலிருந்து வேறுபட்டது. அவர்களின் செயல்பாடு, அரசியலோடு நெருங்கிய தொடர்புடையது. கொள்கைகளை அரசியல் சார்ந்து சட்டமாக மாற்றும்போது, அன்றைய கால சமூகத்தின் நடைமுறைகளை தெரிந்தோ தெரியாமலோ கூட சேர்த்துக்கொண்டுவிட வாய்ப்புண்டு. எனவே, அதில் கவனம் தேவை. நாளைய சமூகம் பற்றிய ஒருவரின் கனவு, அவருக்கு சொர்க்கமாக இருக்கலாம். ஆனால், இன்னொருவருக்கு சிறை போல தோன்றலாம். எனவே சூழல் சார்ந்த கொள்கை, செயல்பாடுகள் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவது முக்கியம்.




அனைத்து சூழல் பிரச்னைகளுக்கும் எளிமையான தீர்வுகளே பதிலாக அமையாது. சில சமயங்களில் நாம் நினைக்கும் தீர்வுகள், பிரச்னைகளை மேலும் ஆழமாக்கிவிடும் ஆபத்தும் உண்டு. அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரேவித தீர்வு நிவாரணியாக அமையாது என்பதை புரிந்துகொள்வது அவசியம். பிரச்னையை ஆராய்ந்து பார்த்து மக்களின் பல்வேறு வித கருத்துகளை எடைபோட்டு தீர்வைக் கண்டறிவது அவசியம்.




சூழல் சார்ந்த வேளாண்மைக்கு நம்மாழ்வாரை வம்புக்கு இழுக்கப்போவதில்லை. பெட்ரோலை அடிப்படையாக கொண்ட உரங்களைத் தவிர்க்க வேண்டும். பன்மைத்தன்மை கொண்ட பயிர்களை விதைக்கவேண்டும். குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி பயிர்களை வளர்க்கவேண்டும். இதில் மின்சாரம், நீர்,இயற்கை உரம் என அனைத்துமே பொருந்தும். உள்ளூர் மக்களின் தேவைக்கு பொருட்களை விளைவித்தால் போதும். கலிபோர்னியா பாதாம் பருப்பை, தமிழ்நாட்டிலுள்ள ஒருவர் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது அவசியமா? அந்த பொருள் எவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்திருக்கும், அதற்கான செலவுகள், அதை பாதுகாக்க ஆன செலவு என அனைத்துமே விரயம். உலகமயம் பொருட்களை விற்க உதவுகிறது. ஆனால் அது சூழலை கடுமையாக பாதிக்கிறது.




கொல்கத்தாவில் மரபாக விவசாயம் செய்து வந்தவர்களை பெருநிறுவனங்கள் அரசியல்வாதிகள், அறிவியலாளர்களை வைத்து மடைமாற்றியது. குறைந்த காலம், அதிக விளைச்சல் என்று சொல்லி விதைகளை விவசாயிகள் தலையில் கட்டினர். இதனால் விவசாயிகளுக்கு மெல்ல கடன் சுமை தலையில் ஏறியது. நினைத்தளவுக்கு விளைச்சல் வரவில்லை. எனவே, விவசாயிகள் கடன்தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள தொடங்கினர். பெருநிறுவனங்களிடம் விதை தானியங்களை வாங்கத் தொடங்கிய விவசாயிகளால், மரபாக விளைந்த தானியங்கள் மெல்ல அழியத் தொடங்கின. இதனால், விதை நிறுவனங்களை மட்டுமே சார்ந்து விவசாயிகள் இயங்கும்படி ஆனது. விவசாயிகளின் நிலையை அங்கு ஆராய்ச்சி செய்த டாக்டர் டெபல் டெப் வெளிக்கொண்டு வந்தார்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்