சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் சமூகப் பகிரல் தத்துவம்!
முதலாளித்துவத்தில் அடிப்படையானது லாபம். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஆப்பிள், கூகுள் தங்கள் அலுவலகங்களை திறப்பது குறைந்த கூலியில் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற கருத்தில்தான். தொழிலாளர் சங்கம் அமைத்து அடிப்படையான உரிமைகளை கேட்க முடிந்தால், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஆசியா பக்கமே தலைவைத்து படுக்காது.
ஒரு தொழிலில் முதலீடு செய்து கிடைத்த லாபத்தை மறுமுதலீடு செய்யவேண்டும். தொடர்ச்சியாக லாபம் வரவேண்டும். லாபம் வரவில்லையா? லாபம் கிடைக்கும் இடத்திற்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். இப்படித்தான் வெளிநாட்டு முதலீடுகள் செயல்படுகின்றன. லாபத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சியை பல்வேறு நாடுகள் அடைய முயன்று வருகின்றன. இதன் மறுபுறம் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை அவலமான வறுமைக்குள் தள்ளப்படுகிறது. பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். சாமானிய மக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்கியாவது உயிர்பிழைக்க முடியுமா என அல்லாடுவார்கள். முதலாளித்துவத்திற்கு கருணை தெரியாது. இரக்கம் கிடையாது. மனிதநேயம் பார்க்காது.
மக்களை தேவையற்ற ஏராளமான பொருட்களை வாங்க வைத்து கடனில் மூழ்கடித்து குறைந்த சம்பளத்தில் வேலை வாங்குவது முதலாளித்துவத்தின் சிக்கலான வலையமைப்பு. பொருட்களை நுகரத் தொடங்கிவிட்டால், அவற்றை கைவிட்டு எளிமையான தேவையான பொருட்களை வைத்து வாழத் தொடங்குவது கடினமாகிவிடும். அதீதமான உற்பத்தி, அதற்கான சந்தையைத் தேடும். இப்படித்தான் பல்வேறு ஏழைநாடுகள் குறிவைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளின் சந்தையாகின்றன. அங்கும் பல்வேறு பாகுபாடுகளை உருவாக்கி பொருட்களை விற்கத் தொடங்குகின்றனர்.
இன்றைக்கு வளரும் நாடுகள் என்று கூறப்படுவை கூட செழிப்பான பொருளாதாரத்தை வளர்ச்சியே இல்லாமல் எட்டி வருகின்றன. அதாவது இத்தகைய நாடுகளில் பொருட்களின் நுகர்வு தீவிரமாக இருக்கும். இது ஒரு அடிமைத்தனம். அரசு அதை மக்களிடம் பணப்புழக்கம் இருக்கிறது என நினைத்துக்கொள்கிறது. குறிப்பிட்ட சேவையை அனைத்து மக்களும் அடையவில்லை. குறிப்பிட்ட தேவைகளை தீர்த்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், உள்நாட்டு உற்பத்தி சிறப்பாக இருக்கிறது. பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என நாளிதழ்கள் செய்தி வெளியிட்டால் முதலாளித்துவ பொருளாதாரம் சிக்கலில் உள்ளது என்று பொருள்.
பல கோடி மக்கள் ஒருவேளை உணவுக்கு தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருக்கும்போது, தொழிலதிபர் மகனுக்கு ஆடம்பர மணம் செய்விக்கிறார். அதில் ஆயிரம் வகை உணவுகளை பரிமாறினால், அதை எப்படி புரிந்துகொள்வது? அவருக்கு இருக்கும் அதே ஆணவம்தான், பெரும்பாலான தொழிலதிபர்களுக்கு உள்ளது. அவர்கள் மட்டுமே வளருவார்கள். முதலாளித்துவம் பணக்காரர் - ஏழை என்ற இடைவெளியை வலுவாக்குகிறது.
முதலாளித்துவம் பொருளை உடமையாக, உரிமையாக கொள்வதை அடிப்படையாக கொண்டது. டச்சு, ஆங்கிலேயே அரசு ஆப்பிரிக்க பழங்குடி மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டது. உண்மையில் திருடியது. இதன் வழியாக, அம்மக்களுக்கு அந்த நிலம் அவர்களே அடிமையாக உழைத்தாலும் அவர்களுக்கு சொந்தமில்லை என்று கூறப்பட்டது. பொதுமக்கள் பலரின் நன்மைக்காக வளங்களை பகிர்ந்துகொள்ளலாம் முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை.
புதிதாக பொருட்களை தயாரித்து, அதை மக்களை வாங்க வைக்க விளம்பரச்செலவு மட்டுமே 2008ஆம் ஆண்டு 700 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செலவாகியுள்ளது. நுகர்வை அதிகமாக்கி, பொருட்களை வேகமாக பயன்படுத்தி தூக்கியெறியச்செய்வதே வணிக நிறுவனங்களின் நோக்கம். இதன்மூலம் மக்கள் வளர்ச்சி அடைகிறார்களோ இல்லையோ வணிகம் வளரும். லாபம் பெருகும். பின்விளைவாக, இயற்கை சீர்கேடு அடைகிறது. பொருளாதார வளர்ச்சியில் உச்சம் தொட்ட நாடுகளில் நிலம், நீர், காற்று என பலவும் மாசடைந்து இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு. முதலாளித்துவம் இயற்கைக்கு எதிரி என தீர்மானமாக கூறிய ஜோயல் கோவெல் என்பவர், மூன்று முக்கிய அம்சங்களை எடுத்து வைத்தார்.
முதலாளித்துவம், தனது பேரளவிலான உற்பத்தி மூலமே இயற்கையை நாசம் செய்கிறது.
முதலாளித்துவம் வேகமாக விரிவடைந்து செல்வதில் எந்த முறையும் நெறியும் இருக்காது. ஏழை, பணக்காரர் இடைவெளியை அதிகரிப்பதோடு, இயற்கை சார்ந்து சீரழிவுகளை உருவாக்குகிறது.
ஜோயல் கூறிய கருத்து அவர் வாழ்ந்த காலத்தில் இரும்புத்தாதுவை உருக்கியெடுக்க செய்த முயற்சிகளை அடிப்படையாக கொண்டது. ஆனாலும் அடிப்படையாக விஷயங்களை அவர் கூறிவிட்டார்.
ரஷ்யாவில் அமலான சோசலிசம், ஜனநாயகத்தன்மை குறைந்த காரணத்தால் நல்ல நோக்கம் கொண்ட திட்டங்கள் கூட பிரச்னைக்குரியதாக மாறிவிட்டன. காலப்போக்கில் இயற்கையை நாசப்படுத்தும் இயல்பைக் கொண்டதாக இருந்தன. குறிப்பிட்ட பயிர்களை விளைவிக்கும் அரசின் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். செர்னோபில் அணு உலையை விபத்தாக எடுத்துக்கொள்வோம். முறையான பாதுகாப்பு விஷயங்களை கைக்கொள்ளாமல் செய்ததால், அங்கு ஏற்பட்ட விபத்தில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர் எலினார் ஆஸ்ட்ரோம். அரசியல் அறிவியல் துறையில் விஞ்ஞானி. உலகளவில் விவசாயிகள், பழங்குடிகள் நிலங்களை பிறருடன் பகிர்ந்து விவசாயம் செய்து செல்வத்தைப் பெறுகின்றனர் என்று ஆய்வில் கண்டறிந்தனர்.
சோசலிசம் நெகிழ்வுத்தன்மையும், மையப்படுத்தாத தன்மையும் கொண்டிருந்தால் மக்களுக்கு பயன் கிடைத்திருக்கும். ஆனால், பன்மைத்தன்மை கொண்ட மக்களுக்கு மையப்படுத்திய ஒரேவிதமான கொள்கை, திட்டங்கள் பயன்தரவில்லை. அதேசமயம், சோசலிசம் மக்களை ஒன்றுபடுத்தியது. சமூகத்தை பாகுபாடு கொண்டதாக பார்க்கவில்லை. இதற்கு மாற்றாக முதலாளித்துவம் நுகர்வை ஊக்குவித்தது.
ஒரு பொருளை வாங்கினால் அதை மீண்டும் பழுதுபார்த்து பயன்படுத்துவதே நமது வழக்கம். அதை நுகர்வு கலாசாரம் ஊக்கப்படுத்தவில்லை. மாறாக வேலை செய்யவில்லையா, தூக்கிப்போட்டுவிட்டு புதியதாக வாங்கு என கூறியது. பழைய பொருள் ஒன்றை திரும்பத் திரும்ப பயன்படுத்தினால் வணிகம் வளராது. லாபத்தில் நஷ்டமாகும். பழுதுபார்ப்பதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தடுக்கும் முனைப்பைக் காட்டியது. இன்று நவீன செல்போன் ஒன்றை பழுதுபார்க்கும் காசில் புதிய போன் ஒன்றையே வாங்கிவிடலாம்.
இப்படி சேரும் எலக்ட்ரானிக் குப்பைகளை என்ன செய்வது? அது அப்படியே கிடக்கட்டும். நாம் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் பிடித்து போய்விடலாம் என உலக பணக்காரர்கள் பேட்டி கொடுக்கிறார்கள். இதுதான் முதலாளித்துவ சிந்தனை. ஒரு பொருளை உருவாக்குகிறார்கள். அதை காசு கொடுத்து தனிநபர் வாங்குகிறார். அதைப் பயன்படுத்தி பயன் பெறுகிறார். அதன்மூலம் நிறையப் பேர் பயனடையலாம் என்றால் அதை அவர் பிறருக்கும் பகிர்ந்தளிக்கலாம். குறிப்பிட்ட பொருளின் உற்பத்தியை அதிகரிக்காமல் பயன் பெறலாம். இதை சமூக பகிரல் என தத்துவவாதி யோச்சாய் பென்க்ளர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக