சூழல் மாநாடுகளை இயக்கும் பெட்ரோலிய, நிலக்கரி பெருநிறுவனங்கள் - மாறாத கொள்கைகள், அபகரிக்கப்படும் பழங்குடிகளின் நிலங்கள்




















சூழல் மாநாடுகளை கவனித்தால், அதில் பங்கேற்பவர்கள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், சூழல் ஆர்வலர்கள் என இருப்பார்கள். ஆனால் அதன் பின்னணியில் இருந்து அனைத்தையும் இயக்குவது, பெருநிறுவனங்கள்தான். எனவே, மாநாடுகளில் எடுக்கும் முடிவுகள் வணிகத்தை பாதிக்காதவாறு மாற்றிக்கொள்கிறார்கள். சூழலைக் காப்பது பற்றி பேசினால், பொருளாதார வளர்ச்சி ஏழைகளின் வாழ்வை மாற்றியமைக்கும் என அதை மறுத்து பேசுகிறார்கள். ஏழை மக்களின் வறுமை, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என்ற லேபிள்களின் பின்னணியில் பெரு நிறுவனங்களின் லாபவெறி மட்டுமே உள்ளது. போட்ட முதலீடுகளுக்கு குறையாத லாபம் வரவேண்டும். அதை சூழல் கட்டுப்பாடுகளுக்கு இசைந்து குறைத்துக்கொள்ள மனம் வரமாட்டேன்கிறது என்பதே உண்மை.




காலநிலை மாற்ற மாநாடு நடக்கும் இடங்களுக்கு வெளியில் இளைஞர்கள், சூழல் ஆர்வலர்கள் உலக நாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பலருக்கும் பழகிவிட்டது. சூழல் பிரச்னைகள் மேற்கு நாடுகளில் எண்பதுகளிலேயே தொடங்கிவிட்டன. அப்போதே அதை சரிசெய்யவேண்டும் என கூறத் தொடங்கிவிட்டனர். சூழல் மேம்பாட்டிற்கான வணிக கௌன்சில் என்ற உலகளாவிய அமைப்பு இயங்கி வருகிறது. இதில், உள்ள அமைப்புகள் அனைத்துமே நிலக்கரி, கச்சா எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து சூழல் ஒப்பந்தங்களை மாற்றி தங்களின் வணிகம் பாதிக்காதவாறு மாற்ற முயல்கிறார்கள்.




பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளியேறும் நாடுகள், குறைவாக வெளியேற்றும் நாடுகளுக்கு நிதியுதவி செய்யவேண்டும். இதை கார்பன் வணிகம் என்று கூறுகிறார்கள். எதிர்காலத்தில் இதை நிறைய நாடுகள் கவனத்தில் கொள்ள வாய்ப்புண்டு. கார்பன் வணிகத்தைப் பொறுத்தவரை அனைத்து நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செய்யவேண்டிய விஷயம். கடல்நீர் மட்டம் உயர்வது, லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களை அச்சுறுத்துகிறது. அதேசமயம், கார்பன் வணிகம் வெற்றிகரமாக நடைபெற்றால் அதில் லாபம் பெறுவதும் கூட வங்கிகளை அதிகமாக கொண்ட இதே நகரங்கள்தான்.




கார்பன் வணிகத்தைப் பொறுத்தவரை, பெருநிறுவனங்கள் மாசுபாட்டை பிறர் பொருட்படுத்தாமலிருக்க மரக்கன்றுகளை நடுவது, திட்டங்களுக்கு நிதியளிப்பது என மாசுபாட்டை குறைக்க பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்தனர். இதெல்லாம் தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும் பின்னாளில் இத்திட்டங்கள் பல்லிளிக்கத் தொடங்கின. மாசுபாடு குறையவில்லை. லாப சதவீதமும் அதிகரித்தது. ஆனால் நிறுவனங்கள் தாம் கொடுத்த வாக்குறுதிப்படி, பதிலீடான மாசுக்கட்டுப்பாட்டு செயல்பாடுகளை இழப்பீட்டை மக்களுக்கு வழங்கவில்லை.




இப்போது பெருநகரங்களில் மாங்குரோவ் காடுகள் உருவாக்கப்படுவது கூட இந்த வகையில்தான். இதில் பயன்படுத்தப்படும் தாவரங்கள், மரங்கள் எல்லாமே அந்த நிலத்திற்கு சொந்தமானவை கிடையாது. நிறுவனங்கள் வளர்க்கும் காடுகளில் கூட இதுபோல அந்நிய தாவரங்கள் அதிகளவு நட்டு வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் சூழலுக்கு அந்நிய தாவரங்கள், மரக்கன்றுகள் வளர்ந்து என்ன பலன்களைத் தரும் என்று தெரியவில்லை. இப்படி நிறுவனங்கள் மாசுபாட்டைக் குறைக்கிறேன் என்ற பெயரில் ஏதேனும் ஒன்றைச் செய்துவிட்டு அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொண்டன. இதை கார்பன் ஆஃப்செட் என்று குறிப்பிடுகின்றனர். 2010ஆம் ஆண்டு கார்பன் வணிகம் 62 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

மாசுபாட்டை ஒழிக்கிறேன் என்ற பெயரில் செயல்படும் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் கரிம எரிபொருட்களை ஆதரிக்கும் நிறுவனங்களால் தொடங்கப்பட்டவை. அப்படியல்லாமல் செயல்படும் சூழல் அமைப்புகளுக்கு நிதியளித்து தன்வசம் இழுக்கவும் பெருநிறுவனங்கள் தயங்குவதில்லை. எனவே, புதிய சூழல் கொள்கைகள் உருவாக்கப்பட்டால் அவற்றை பெருநிறுவனங்கள் அமலுக்கு வரும்முன்னரே அறிந்துகொண்டு வியாபாரத்தை மேம்படுத்திக்கொள்கின்றன. ஆபத்து வரும் என்றால் கொள்கைகளை மாற்ற நிதிநல்கையை பயன்படுத்திக்கொள்கின்றன.




சந்தையில், பசுமை தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்கள் இயங்கினால், அவை தோல்வியுறும் என அறிக்கையை வெளியிட்டு அதன் பங்குகளை முன்னமே வாங்கி வைத்து லாபம் சம்பாதிப்பதையும் பெருநிறுவனங்கள் செய்கின்றன. இதை ஷார்ட் செல்லிங் என ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். இப்படியும் ஏராளமான நிறுவனங்கள் சந்தையில் நிதியை சம்பாதிக்கின்றன. ஆக, நிறுவனம் முன்னேறினாலும், தோற்றாலும் கூட லாபம் பெறுவது குறையாது. பாதிக்காது.




சந்தையில் மாசுபாடு எப்போது குறைகிறது? எப்போதும் குறையாது.ஆனால் கச்சா எண்ணெய் விலை அதிகமாகி, பயன்பாடு குறைந்தால் அதில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும். இதனால் காரணமாகவே 2005 -2008 ஆகிய காலகட்டங்களில் உலகமெங்கும் பசுமை இல்ல வாயுக்களின் சதவீதம் குறைந்துபோனது. இதற்கு காரணம், கச்சாஎண்ணெய் விலை அதிகரிப்பு மட்டுமே. கரிம எரிபொருட்களை குறைவாக பயன்படுத்தவேண்டுமென எந்த பெருநிறுவனங்களும் சிந்தனை அளவில் கூட நினைக்கவில்லை.








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்