எங்கள் வீடு தீப்பற்றி எரியும்போது வேடிக்கை பார்க்க முடியாது! - நேமொன்டோ நென்க்யூமோ













 பூமியின் காவலர்கள் - நேமொன்டே நென்க்யூமோ


சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அமேசான் காடுகளில் கச்சா எண்ணெய்யை தோண்டி எடுப்பதில் என்ன பிரச்னை என்று.... அவர்கள் அப்படி ஒவ்வொரு முறை கேட்கும்போதும் எனக்கு அளவற்ற கோபம் உருவாகிறது. உங்கள் வீட்டில் நெருப்பு பிடித்து எரியும்போது, அதை அணைக்க முயற்சிப்பீர்கள்தானே? நிச்சயம் அமைதியாக நின்று எரியும் நெருப்பை வேடிக்கை பார்க்க மாட்டீர்கள்தானே? 


உங்களது வீடு, உறவினர்கள் வீடு, உங்கள் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் நெருப்பால் அழிவைச் சந்திக்கும்போது அதைத் தடுக்க முயல்வீர்கள்தானே? உங்கள் நாட்டை அணுக்கதிர்வீச்சிலிருந்து எதற்காக பாதுகாக்க நினைக்கிறீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?


எங்கள் வீடுகளும், மக்களும் அழிவை, பேரிடரை சந்திக்கும்போது வெளிப்புற மக்கள் கேட்கும் இத்தகைய கேள்விகள் பொருத்தமற்றதாக தோன்றுகிறது. மேற்குலகினரின் குடியேற்றம் எங்கள் இன மக்களின் வாழ்க்கையை வீடுகளை வாழ்வாதாரத்தை அழித்தொழித்தது. இப்போது என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல உயிரைப் போராடி தக்க வைத்திருக்கிறேன். மேலும் பல்வேறு போலியான செய்திகளை பரப்பி எங்கள் வீடுகளை அழிப்பவர்களைப் பற்றியும் பேச நினைக்கிறேன். 


வாவோரானி பழங்குடி மக்கள் சார்பாக என்னிடம் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது. எங்கள் வீடுகளை, நிலப்பரப்பை காக்கவேண்டிய பொறுப்பு எனக்குள்ளதால், வெளிப்புற மக்களின் கேள்விகளை எதிர்கொண்டு வருகிறேன். ஈகுவடார் அரசு, நாங்கள் நீதிமன்றத்தில் கடுமையாக போரிட்டு வென்றும் கூட நிலத்தில் எண்ணெய் அகழ்ந்தெடுக்க தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அரசின் கொள்கை, சட்டங்கள் ஆகியவற்றில் இல்லாத ஒன்றை எங்களை கேள்வி கேட்பவர்களிடம் கூறுகிறேன். அதுதான் மரியாதை. 


அமேசான் மழைக்காடுகளில், எண்ணெய் அகழ்ந்தெடுப்பதை எதற்கு தடுக்கவேண்டும்?  வாவோரானி மக்களாகிய நாங்கள், நிலத்தில்  நடக்க விரும்புகிறோம். நாங்கள் எதையாவது யோசிக்கும்போது, காட்டுக்குள் நடந்துசெல்வோம். நடந்துகொண்டே பாடுவோம். எங்கள் பாடல்கள்தான் காட்டில் பழுக்கும் பழங்களாக மாறுகின்றன. காட்டுக்குள் எங்கு நடந்து சென்றாலும், அங்குள்ள அனைத்து உயிரினங்களோடும் நாங்கள் உரையாடுவது வழக்கம். நகரத்தில் உள்ளவர்கள் தெருப்பெயர்களை, கடைகளை நினைவில் வைத்திருப்பது போல காட்டிலுள்ள பறவைகளை தாவரங்களை, மரங்களை நினைவுகொண்டிருக்கிறோம். நகரத்திலுள்ள தெருக்களும், கடைகளும் மூச்சுவிடாது. வானத்தில் பறக்காது. அவற்றுக்கு அந்த திறன் கிடையாது. 


காடுதான் எங்களுக்கு காய்கறிக்கடை, மருந்துக்கடை, வன்பொருள் கடை, திரையரங்கம், உடற்பயிற்சி சாலை, பூங்காவாக உள்ளது. காட்டுக்குள் சென்றுதான் உணவு, மருந்து, கருவிகள் என பல்வேறு பொருட்களைப் பெறுகிறோம். கச்சா எண்ணெய்யை அகழ்ந்தெடுக்க நினைக்கும் அரசியல்வாதிகள், நிலத்திற்கு கீழே உள்ள எண்ணெய் வளத்தை பற்றி அறியாத முட்டாள்களாக பழங்குடிகளை ஏளனம் செய்கிறார்கள். உண்மையில் அவர்கள்தான் இயற்கையை சரியாக புரிந்துகொள்ளவில்லை. நிலத்தின் கீழுள்ள கச்சாஎண்ணெய், எங்கள் முன்னோரின் உதிரம். அதை துளையிட்டு உறிஞ்சுவது, முன்னோரின் கல்லறையை தோண்டுவது போன்றதாகும். 


காட்டில் எங்கள் வாழ்க்கை சிறப்பாக உள்ளபோது கல்லறையைத் தோண்டுவதற்கு என்ன அவசியம் வந்தது? எங்களுக்கு எண்ணெய் வேண்டாம். காட்டிலுள்ள இயல்பான வாழ்க்கை போதும். அங்குள்ள தாவரத்தை பயன்படுத்தி எப்படி நோய்களை குணப்படுத்துவது என்று தெரியும். எந்த பாடலைப் பாடியபடி அதை நோய்களை குணப்படுத்த வெட்டவேண்டும என்று அறிவோம். காட்டில் பனைமரங்கள் பழுத்து விழும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குரங்குகளின் இனப்பெருக்க காலம் தொடங்குவதை நாங்கள் அறிவோம். அந்த பழங்கள் இல்லாமல் அவற்றின் வாழ்க்கை நிறைவடையாது. எங்கள் தேவையைத் தவிர மேலதிகமாக காட்டிலிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. 












nemonte nenquimo


time



கருத்துகள்