உயிரி எரிபொருள்(பயோ ஃப்யூல்) - காட்டிலுள்ள உயிரினங்களை அழிக்கும் எரிபொருளாக மாறிய கதை!





















கரிம எரிபொருட்களுக்கு மாற்றாக நிறைய நாடுகள் உயிரி எரிபொருட்களை பரிந்துரைக்கின்றன. அப்படி மாறினால் சூழலுக்கு ஆபத்து ஏற்படாது என பரப்புரை செய்யப்படுகிறது. உண்மையில் அது தவறான வாதம்.




உயிரி எரிபொருட்களை விளைவதற்கு பயன்படுத்தும் உரங்களுக்கு அடிப்படையானதே கரிம எரிபொருட்கள்தான். அவை இல்லாமல் எப்படி உயிரி எரிபொருட்களுக்கு அடிப்படையான பயிர்களை விளைவிக்க முடியும்? உணவுப்பயிர்களை விளைவிப்பது குறைந்துவரும் சூழலில் ஒருவர், உயிரி எரிபொருட்களுக்கான பயிர்களை விளைவித்தால் அங்கு சூழல் என்னாகும்? விரைவில் நாடு உணவு தானியங்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் என்பதே நடைமுறை உண்மை.





உயிரி எரிபொருட்களில் முக்கியமானது, பனை எண்ணெய். அதாவது பாமாயில். இதை எப்படி விளைவிக்கிறார்கள்? இந்தோனேஷியா, மலேசியா, கொலம்பியா ஆகிய நாடுகளில் மழைக்காடுகளை வெட்டி எறிந்துவிட்டு அங்கு பனைமரக்கன்றுகளை நட்டு பனை எண்ணெய்யை உற்பத்தி செய்கிறார்கள். உணவு பயிர்களுக்கு மாற்றாக பணப்பயிர்களை விளைவிப்பது, ஒருகட்டத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தைக் கொண்டு வரும். மேலும், அமெரிக்காவில் வாகனங்களுக்கு எரிபொருளாக சோளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன் விளைவாக அதன் விலை சந்தையில் அதிகரிக்கிறது. அப்போது அதை உணவுப்பொருளாக பயன்படுத்தும் மக்கள் எப்படி வாங்க முடியும்? மெக்சிகோ, மத்திய அமெரிக்காவில் சோளத்தின் விலை, மேற்சொன்ன காரணமாக விலையுயர்ந்து மக்கள் சிரமப்பட நேரிட்டது.




ஐரோப்பிய யூனியனில் ஐந்து சதவீத வாகனங்கள், உயிரி எரிபொருளில் இயங்கின. இப்படி இயங்குவதற்கு பின்னாளில் ஏராளமான பழங்குடி மக்களின் ரத்தம் சிந்தப்பட்டு இருக்கிறது. கொலம்பியாவில் அரசின் ராணுவம் பழங்குடிகளை அடித்து உதைத்து கை, கால்களை வெட்டி, தேவையென்றால் சிலரைக் கொன்று நிலங்களை கையகப்படுத்தி பனை மரங்களை நட்டனர். இப்படித்தான் பனை எண்ணெய் உற்பத்தியானது. இந்த எண்ணெய்யை அமெரிக்கா வாங்கி பயன்படுத்தியது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா காலத்தில், உயிரி எரிபொருள் பற்றிய பிரசாரம் கூடுதலாக இருந்தது. ஆனால் அவர்கள் மறந்தும் கொலம்பியாவில் பழங்குடிகளுக்கு நடந்த அநீதி பற்றி பேசவேயில்லை. அமெரிக்கா இப்படியென்றால், ஐரோப்பிய யூனியன் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆப்பிரிக்க மக்களைப் பயன்படுத்தி பனை மரக்கன்றுகளை நட்டன. ஆப்பிரிக்க நாட்டு பழங்குடிகள், மலேசியாவில் வாழ்ந்த பழங்குடிகள் ஆகியோர் மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டு பிழிந்தே உயிரி எரிபொருட்கள் பெறப்பட்டன. பசுமை எரிபொருளுக்கு பின்னே வீச்சம் அடிக்கும் பழங்குடிகளின் ரத்தம் மறைக்கப்பட்டது.




நிறைய நாடுகளில் எரிபொருளில் எத்தனால் கலக்கப்பட்டது. இது ஒரு உயிரி எரிபொருள்தான். ஆனால் அதனால் மாசுபாடு குறைந்துவிட்டதா என்றால் கிடையாது. ஆனால், எத்தனாலை ஒருவர் வாகனத்தில் பயன்படுத்துமாறு அரசால் வற்புறுத்தப்படுகிறார். நாடு என எடுத்துக்கொண்டால், அதில் தனிநபர்களால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறைவுதான். டாடா, ரிலையன்ஸ், அதானி ஆகிய தொழில்நிறுவனங்களில் வெளியாகும் ஆபத்தான வாயுக்களின் அளவே அதிகம. ஆனால் இந்த நிறுவனங்களும், அரசும் கைகோத்து பிரச்னையை மக்களின் தலையில் கட்டுகிறார்கள். பிரச்னையை பெருநிறுவனங்கள் உருவாக்க, தீர்வு தேடும் வேலையை மக்களுக்கு வம்படியாக கட்டாயப்படுத்தி கொடுக்கிறார்கள்.




அதிக விலை கொண்ட உயிரி எரிபொருள், மின் வாகனங்களை வாங்க வைப்பதன் மூலம் அரசு நிஜமான பிரச்னைகளிலிருந்து கவனத்தை திருப்புகிறது. இதற்கு தன்னார்வ நிறுவனங்கள் பலவும் உதவுகின்றன. உலகிலுள்ள நிலக்கரி, பெட்ரோல் நிறுவனங்கள்தான் பசுமை தினம், சூழல் தினம் ஆகியவற்றை நிதி செலவழித்து கொண்டாடி வருகின்றன.




இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பெருநிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு லாபம் என்பது தொண்ணூறு சதவீத த்திற்கும் மேலாக எண்ணெய்யை அகழ்ந்தெடுப்பதில் கிடைக்கிறது. மீதி நிலக்கரியில் கிடைக்கிறது. ஆனால் வெளியில் மாற்று ஆற்றல் என்ற பெயரில் திட்டங்களை உருவாக்கி விளம்பரப்படுத்துவதை கைவிடுவதில்லை. அந்த வகையில் கார்பன் வணிகத்தை செய்து முதலீடுகளை ஈர்த்துவருகிறது. லாபம் இல்லாத எதையும் முதலாளித்துவம் செய்யாது என்பதற்கு இந்த நிறுவனம் சிறந்த எடுத்துக்காட்டு.

கருத்துகள்