நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு

 











நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு

மிஸ்டர் ஹெகல் அண்ட் மிஸ்டர் ஹைட்

லூயிஸ் ஸ்டீவன்சன்

நாவல் 

மொழிபெயர்ப்பு - ரகுநாதன்

ஒருவரின் மனதிற்குள் நன்மை, தீமை என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை தனியாக பிரித்து அதற்கென உருவம் கொடுத்தால் இரண்டு இயல்புமே சந்தோஷமாக இருக்குமே என மருத்துவர் யோசிக்கிறார். இதற்காக அவர் செய்த ஆய்வு விபரீதமான திசையில் செல்கிறது. அதன் விளைவுகள் என்னவென்பதே கதை. 


ஒருவரின் மனதில் இருக்கும நன்மை, தீமைக்கெதிரான போர் நிற்காத ஒன்று. காலம்தோறும் நடந்துகொண்டு இருக்கிற ஒன்று. இதை ஒருவர் தனித்தனியே பிரித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அது எப்படியொரு மோசமான தீர்வை நோக்கிச் செல்கிறது என்பதே கதை. 


வக்கீல் அட்வன்சன், அவரது நண்பர் என்பீல்ட், டாக்டர் ஜெகில், டாக்டர் லான்சன், ஜெகிலின் வேலைக்காரன் பூல் ஆகியோர்தான் நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள். ஒரு மனிதனின் மனதிலுள்ள நன்மை, தீமை ஆகிய இரு இயல்புகளுக்கான போராட்டம் அவனை எப்படியான நெருக்கடியில் தள்ளுகிறது என்பதே கதை. இதை கடிதம் வழியாக டாக்டர் ஜெகில் சொல்லும்போது யாருக்கும் மயிர்க்கூச்செரியும். அந்தளவு நம்ப முடியாத ஒரு கண்டுபிடிப்பை அவர் செய்கிறார். இதில் முக்கியமானது, அவரது எண்ணவோட்டம்தான். எல்லோரையும் விட தான் புகழ்பெற்றவராக வலம் வரவேண்டும் என நினைக்கிறார். அதற்காக அவர் உருவாக்கும் மருந்து, அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கிறது. 


நூலின் அட்டையிலேயே ஒருவரின் இருவகையான முகங்களை அடையாளம் காட்டிவிடுகிறார்கள். கதையில் ஹைட் பற்றி வரும் முதல் விவரணையே அவரின் இயல்பை புரிய வைத்துவிடுகிறது. கட்டற்ற சுதந்திரமான இயல்பு கொண்ட தீமையின் இயல்பு. யாருமே அவரை ஒருமுறைக்கு மேல் பார்க்க விரும்புவதில்லை. அந்தளவு வெறுப்பும் கோபமும் கொண்ட மனிதர். இந்த இயல்பு கெட்டிபட்டு அவர் பல்வேறு கெட்ட விஷயங்களில் ஈடுபடுகிறார். தொடக்கத்தில் சொந்த சுயநலனுக்கான செயல்களாக இருந்து அதன் வழியாக ஹைட் என்பவர் மெல்ல வலுப்பெறத் தொடங்குகிறார். ஹைட் பற்றி வக்கீல் அட்வன்சன் கவனம் கொள்ளத் தொடங்குவது, நண்பர் ஜெகில் வழியாகத்தான். மற்றபடி பிறரை அந்தளவு கவனத்தில் கொள்பவர் அல்ல. தனது சொத்துக்களை ஹைடிற்கு போய் சேரவேண்டும் என மருத்துவர் உயில் எழுதி வைக்கிறார். அப்படி தனக்கு தெரியாத ஹைட் யார் என்ற கேள்வி வக்கீலுக்கு எழ, நேரடியாகவே அவரை சந்திக்க நினைக்கிறார். சந்தித்தும் விடுகிறார். நண்பர் என்பீல்ட் ஏற்கெனவே ஒரு சம்பவத்தை அவருக்கு கூறியிருக்கிறார். அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட உருவத்தை அவர் கற்பனை செய்து வைத்திருக்கிறார். அதையும் மீறியதாக இருக்கிறது கள யதார்த்தம். 


நன்மை, தீமை இரண்டுமே மனிதனின் மனதில் இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. இதை தனியாக பிரித்துவிட்டால் என்ன என்று மருத்துவர் ஜெகில் நினைக்கிறார். தனது ஆராய்ச்சி அறிவு மூலம் அதை சாத்தியப்படுத்த முயல்கிறார். இதன்வழியாக தோன்றும் விபரீதமே ஹைட். 


வக்கீல் அட்வன்சனுக்கு இதில் புலனாய்வு பாத்திரம். அவர் மருத்துவர் ஜெகிலுக்கு அடிக்கடி உடல்நலமில்லாமல் போகிறது. அதைப்பற்றி அறிய நினைக்கிறார். மருத்துவரின் வேலைக்காரனே வந்து அவரை அழைத்து உதவி கேட்கும்போதுதான் நடந்த விபரீதம் அவருக்கு தெரிய வருகிறது. அதற்கு முன்னரே மருத்துவர் லான்யன் என்ற இன்னொரு நண்பர், உடல் நலிவுற்று இறந்துபோகிறார். அதற்கும் நண்பர் ஜெகில்தான் காரணம் என தெரிய வருகிறது. 


இன்று லூயிஸ் ஸ்டீவன்சனின் கதை என்பது சற்று பழமை ஆகிவிட்டது. அவர் எழுதிய கதை போலவே ஏராளமான அனிமேஷன் படங்கள், திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. எனவே, ஹைட் பற்றிய தொடக்க கட்ட ஆச்சரியம், மருத்துவர் ஜெகல் வீட்டிற்கு அவர் வந்துபோகிறார் என்றதுமே சற்று மங்கிவிடுகிறது. அதற்குப்பிறகு நாம் தேடுவது, மருத்துவர் தனது சொத்துக்களை எழுதி வைக்குமளவு ஹைட் என்பவர் யார், எங்கிருந்து வந்தார் என்பதை மட்டுமே. ஹைட் டார்வினியஸ் என்ற பிரபலமான மனிதரை கொலை செய்துவிடுகிறார். கொலை செய்ய பயன்பட்ட ஆயுதம் வக்கீல் அட்வன்சன் மருத்துவருக்கு பரிசாக கொடுத்த கைத்தடி. அப்போதே வாசகர்களுக்கு விஷயம் ஓரளவுக்கு புரிய வந்துவிடுகிறது. 


நாவலில் கதை நகர்வதே வக்கீல் அட்வன்சன் தனக்கு வரும் கடிதங்களை நிதானமாக படிப்பதில்தான். அதை அவர் படித்து முடித்தாலும் செய்வதற்கு ஏதுமில்லை. அதற்குள்ளாகவே நடக்ககூடாது என நினைத்த அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. ஹைட், மருத்துவரின் ஆராய்ச்சி சாலையில் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார். அப்படி நடந்ததற்கான காரணத்தை மருத்துவர் ஜெகில் விளக்கி எழுதியுள்ள கடிதம் படிப்பதற்கு பீதியூட்டும் வகையில் உள்ளது. 


பரிவும் கருணையும் உள்ள அதே மனதில்தான் குரூரமும், கோபமும், பழிவாங்கும் எண்ணமும் தோன்றுகிறது. இந்த இரண்டையும் அதனதன் போக்கில் பிரித்து தனியாக விட்டுவிட்டால் சுதந்திரமாக இருக்கும். நன்மை அதன்போக்கில் வளரும். தீமை அதன் போக்கில் வளரும் என்ற தத்துவரீதியான சிந்தனை கொள்கை அளவில் சரிதான். ஆனால் நடைமுறையில் அதற்கு பௌதிக உடல் தேவைப்படுகிறது. அதை செய்யும் முயற்சியில் ஜெகல் தன்னையே இழக்கிறார். அதன் விளைவுதான் அவரது பரிதாப முடிவு. 


சுவாரசியமான மையப்பொருளைக் கொண்டுள்ள மர்ம நாவல். 


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்