35 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளிக்காக, குற்றவாளிகளை நெருப்பால் கொல்லும் சீரியல் கொலைகாரன்!

 













chimera


k drama 

16 episodes


Chimera (Korean: 키마이라; RR: Kimaira) is a South Korean television series directed by Kim Do-hoon and written by Lee Jin-mae. Starring Park Hae-soo, Lee Hee-joon and Claudia Kim, the series tells the story of three leading characters who dig through secrets of the past 30 years to find ... Wikipedia

கிமேரா என்றுதான் தொடரில் உச்சரிக்கிறார்கள். எனவே அப்படியே தொடருவோம். 


1984ஆம் ஆண்டு கிமேரா என்ற கிரேக்க புராணக்கதையில் வரும் மிருகத்தின் அடையாளத்தை வைத்துக்கொண்டு கொலைகாரர், மூன்று பேர்களைக் கொல்கிறார். அந்த மூன்று பேருமே ஹான்மியாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஐந்து ஆராய்ச்சியாளர்களில் ஒரு பெண் ஆராய்ச்சியாளர் காணாமல் போகிறார். உயிர்தப்பும் மற்றொருவர் சியோரன் என்ற பெருநிறுவனத்தின் குடும்பத்தில் பெண் எடுத்து மருமகனாகிறார். எளிமையாக முதலாளி ஆகிறார். 


35 ஆண்டுகள் கழித்து ஆராய்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் செய்தியை பத்திரிகையில் எழுதிய  முன்னாள் ஊழல் பத்திரிக்கைகாரர் திடீரென காரில் வைத்து எரிக்கப்படுகிறார். காரில் லைட்டர் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. அதில் கிமேரா என்ற கிரேக்க புராண விலங்கின் படம் உள்ளது. இந்த பத்திரிகையாளர், போலீஸ்காரர்களுக்கு காசு கொடுத்து செய்தியைப் பெற்று தனது சுயநலனுக்கு உண்மையை மறைத்து எழுதிய நபர். 


உண்மையில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஆராய்ச்சியாளர்கள் கொலை வழக்கில் சியோரன் தொழிற்சாலை தொழிலாளி குற்றவாளி என கூறப்பட்டு, லாக்கப்பில் இருக்கும்போது தற்கொலை செய்துகொள்கிறார். பிணக்கூராய்வு கூட செய்யாமல் உடனே உடலை எரித்துவிடுகிறார்கள். காரணம், தொழிலாளியின் குடும்பம் சோற்றுக்கு செத்த ஆட்கள். கொலைகாரன் மனைவி என ஊரே உலகமே தூற்ற வயிற்றில் குழந்தையோடு தொழிலாளியின் மனைவியும் இறந்துபோகிறார். ஒரே ஒரு சிறுவன் மட்டுமே இருக்கிறான். அவனும் ஒரு காலகட்டத்தில் நிம்மோனியா வந்து செத்துப்போகிறான். போலீஸ் விசாரணையில் இந்த விவகாரம் தெரிய வருகிறது. ஆனால் உண்மையில் யார் கிமேரா என யாருக்குமே தெரியவில்லை. 


காவல்துறை ஒருபக்கம் விசாரிக்க  இன்னொரு பக்கம் சியோருன் என்ற பெருநிறுவனமும் தனது செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை, ஊடகம், வழக்குரைஞர்கள் என அனைத்து இடங்களிலும் தகவல்களை சேகரிக்கத் தொடங்குகிறது. அதனுடைய தலைவர், அவரின் மச்சான் என பலரும் கிமேரா வழக்கில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர். 


நடப்பு காலத்தில் டிடெக்டிவ் சா, அவருக்கு மேலதிகாரி ஹான் டுக் ஆகியோர் சேர்ந்து காரில் எரித்துக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் பற்றி துப்புதுலக்குகிறார்கள். சூதாட்டக்காரரான முன்னாள் பத்திரிகையாளருக்கு அத்தனை கெட்ட பழக்கங்களும் இருக்கிறது. அவருக்கு மருத்துவர் ஒருவர் காசு கொடுத்து உதவுகிறார். ஆனால் பத்திரிகையாளர் எப்படி இறந்துபோனார் என்று கொரிய ஆட்களுக்கு தெரியவில்லை. இங்குதான் நாயகி அறிமுக காட்சி. அவர், கொரியாவில் பிறந்து தத்து கொடுத்து அமெரிக்காவில் வளர்ந்த பெண், எஃப்பிஐயில் வேலை செய்கிறார். கொரியாவிற்கு பயிற்சி ஒன்றுக்காக வருகிறார். வந்தவர் ஹான்மியாங் பல்கலையில் குற்றவாளிகளை புரோஃபைல் செய்வது பற்றி வகுப்பு எடுக்கிறார். அவரிடம் டிடெக்டிவ் சா மற்றும் ஹான் உதவி கேட்க அவரும் உதவி செய்ய ஒப்புக்கொள்கிறார். 


இறந்துபோனவர்கள் அனைவருக்குமே வெவ்வேறு விதமான அளவில் நெருப்பால் கொடூரசாவு ஏற்படுகிறது. அதில் அனைத்திலும் நெருப்புக்கு முக்கிய இடமுண்டு. செய்த குற்றத்தை, பாவத்தை, பாவிகளை நெருப்பு தூயதாக்கும் என கிமேரா கொலைகாரனின் குறிப்பு கூறுகிறது. யூஜென் என்ற அமெரிக்க ஏஜெண்ட், கொல்லப்பட்ட பின்னணியை கண்டுபிடித்துக்கொடுக்கிறார். டிடெக்டிவ் சா அவரை அப்படியே பின்தொடர்கிறார். அவரது மேலதிகாரி ஹானைக் கூட காப்பாற்ற முடியாமல் போகிறது. சா செய்யும் தவறால், கண்ணெதிரே எரிந்து சாம்பலாகிப் போகிறார். 


இந்த வழக்கு தொடர்பாக யுபிஎஸ் டிவி செய்தியாளர் கிம், மூளை அறுவைசிகிச்சையாளர் லீ, சியோரன் நிறுவனத் தலைவர் சியோன் டே, காவல்நிலைய  தலைவர் சேவன் ஆர்வமாக இருக்கிறார்கள். இவர்களில் உண்மையி் கிமேரா யார் என்பதே இறுதிப்பகுதி. 


தொடங்கிய முதல் எபிசோடிலிருந்து கடைசி எபிசோடு வரை சீரியஸாகவே தொடர் நகருகிறது. இறுதியாக யார் கொலையாளி என்று காட்டுவது அருமை. உண்மையில் அந்த பாத்திரத்தை யாரும் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது. சிங்கத்தலையும், ஆட்டு உடலும், பாம்பு வாலும் கொண்ட கிமேரா மனிதனுக்குள் உள்ள நன்மை, தீமை என்ற இருவகை இயல்பை வெளிக்காட்டுகிறது. டிஹெச் 5 என கூறப்படும் வேதிப்பொருளின் பாதிப்பு, அதை தடுப்பது பற்றி தொடரில் பெரிதாக பேசவில்லை. ஏனெனில் இந்த வேதிப்பொருள் தொடர்பாகவே பலரும் இறந்துபோகிறார்கள். ஆனால் இறுதிவரை அதற்கான எந்த தீர்வும் தொடரில் கூறப்படவில்லை. 


சியோன் டே வுடன் காதல் உறவு கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் ருயாங் சூவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அதை வளர்க்கும்போது தீவிபத்து ஏற்பட குழந்தை இறந்துபோகிறது. பிறகுதான் அவருக்கு சா என்ற மகன் பிறக்கிறான். உண்மையில் அதற்கு அப்பா யார் என்று தொடரை முழுதாகப் பார்த்தும் புரியவில்லை. 


மூளை மருத்துவரான லீ, இங்கிலாந்தில் சிறப்புபடை வீரராக இருந்தவர். ஆனால் அதைக்காட்ட சற்று வலிமையான சண்டைக்காட்சிகளை வைத்திருக்கலாம். மனவலிமையில் புத்திசாலித்தனத்தில் அவரை மிஞ்ச தொடரில் யாருமே இல்லை. நாயகனுக்கு புத்தி குறைவு. முரட்டு வேகம் மட்டுமே உண்டு. யூஜின் மட்டுமே டாக்டர் லீ கூறுவதை ஓரளவுக்கேனும் புரிந்துகொண்டு மர்மங்களை விடுவிக்க நட்பு ரீதியில் முயல்கிறாள். தொடரில் காதலும் கிடையாது. அதற்கான முனைப்பும் இல்லை.  


ஆ.. மறந்துவிட்டோமே.. காவல்துறை அதிகாரி ஹான்டுக்கிற்கும், டிடெக்டிவ் சாவின் அம்மா சா என் சூவிற்கும் இடையே காதல் உறவு இருக்கிறது. அதாவது, ஹான்தான் சா என் சூவைப் பாதுகாக்கிறார். ஒற்றை ஆளாக சா என் சூ, உணவகம் வைத்து நடத்தி மகனை வளர்க்கிறார். அவருக்கு பாதுகாப்பு தருவது ஹான்தான். அந்த காதல்தான். சா என் சூ செய்த முந்தைய குற்றங்களைக் கூட மறைக்கச் செய்கிறது. 


டீமென்சியா வந்தவரை எப்படி பார்த்துக்கொள்ளவேண்டுமென்று கூட டாக்டர் லீ, சாவுக்கு கூறுவதில்லை. ஏன்? இத்தனைக்கும் அவர்தான் நிஜமும் மாயக்காட்சிகளும் உங்களுக்குத் தெரியும் என்று கூறுகிறார். ஆனால் அவரை நர்சிங் ஹோமில் சேர்த்துங்கள் என்று கூறுவதில்லை. அப்படி சேர்த்துவிட்டால், கதையில் நிறைய விஷயங்களை கூற முடியாமல் போய்விடும் என இயக்குநர் நினைத்தார் போல. 


டாக்டர் லீ, டிடெக்டிவ் சா, யூஜென் என அனைவருமே பாத்திரம் அறிந்து புரிந்து நடித்திருக்கிறார்கள். யாருமே சோடை போகவில்லை. மிகை நடிப்பும் இல்லை. டிடெக்டிவ் சா, யூஜென் என இரண்டு பாத்திரங்களுமே குற்றவுணர்ச்சியும், துயரத்தையும் மனதில் சுமந்துகொண்டு வலம் வருகிறார்கள். 


ஒரு மனுஷனை அப்படியே பார்த்து புரிஞ்சுக்குங்க. எழுதி வெச்ச தகவலா பாக்காதீங்க... 


அவன் என் வீட்டுக்கு வந்தப்போ, எப்படி பெயில் கெடச்சுது, என் வீட்டு அட்ரஸ் எப்படி தெரியும்னு கேட்டனே தவிர அவனோ மனசுக்குள்ள என்ன விஷயம் இருக்குன்னு கேட்கல... நா அவனை முழுசாக பாக்கல.. புரிஞ்சுக்க முயற்சி பண்ணல....


என்னோட டீம் லீடரோட இத்தன நாளு பழகியும் அவரப்பத்தி எதுவுமே தெரியல. இப்போ என்னோட அம்மாவப் பத்தியும் கூட தெரியல. இந்த நிலைமைல நா என்ன செய்யட்டும்? யார நா நம்பறது?


ஒரு மனுசனை முழுசா புரிஞ்சுக்க முயற்சி பண்ணறோம். ஆனால் அது நடக்கிறதில்ல. ஒரு மனுஷனை முழுசா புரிஞ்சுக்கணும்னு நினைச்சா நாம தோத்துத்தான் போவோம். இதை தெரிஞ்சுக்கிறதுதான் முக்கியம். 


என்னை மாதிரி ஆட்கள் செய்யறது எதுவும் குற்றம் கெடையாது. எல்லாமே தவறுகள்தான். 


என உரையாடல்கள் எல்லாமே சிறப்பாக காட்சிகளுக்கு பொருத்தமாக உள்ளன. 


தொடரில் இறுதிவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. இறுதியாக டிடெக்டிவ் சா தானே முன்வந்து டாக்டர் லீயிடம் மன்னிப்பு கேட்கிறார். அவரது அப்பா இறந்துபோனதில் அவருக்கு ஒரு பங்கியிருப்பதை உணர்ந்துகொண்டு அதை செய்கிறார். ஆனால் லீ மறுத்துவிடுகிறார். ஒரு பெருநிறுவனம், வழக்குரைஞர்கள், காவல்துறையில் சில ஆட்களை வைத்து நினைத்த விஷயங்களை செய்ய முடிகிறது. லீ சான் வூ என்பவர் இறந்துபோவது சிறிய உதாரணம். டிஹெச் 5 மூலம் நிறையப் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் கிடைப்பதில்லை. கதை சியோன் டே இறந்துபோவதோடு முடிவது ஏமாற்றமாக உள்ளது. அவர் உருவாக்கிய பிரச்னைகள் அழியவில்லை. அவர் அழிந்துவிடுகிறார். அதனால் என்ன பயன் கிடைக்கும்? 



நீதியை நிலைநாட்டும் நெருப்பு. ஒருவகையில் தசை பொசுங்கி இறந்துபோகும் மனிதர்கள், தவறு செய்தவர்களுக்கு இறப்பை மரணத்தை நினைவுபடுத்தும் அடையாளமாக மாறுகிறார்கள். அதன் வழியாகத்தான். காவல்நிலைய தலைவர் சேவான் இறப்பதற்கு முன்னர் டிடெக்டிவ் சாவிடம். நேர்மையாக இருப்பது முக்கியம். யாருக்கும் பணிந்து நேர்மையை கைவிட்டுவிடக்கூடாது என கூறுகிறார். மதுபோதையில் குற்றக்கூட்டாளிகளிடம் தான் நினைத்துப் பார்க்க முடியாத தவறை செய்துவிட்டதாக அழுகிறார். 


குற்றவுணர்ச்சியில் பெரிதும் பதற்றமடைகிறார். இறந்தவர்களில் ஹான் டுக் மட்டுமே தனது இறப்பை அமைதியாக ஏற்றுக்கொள்கிறார். ஏனெனில் அவர் பாதுகாக்க வேண்டிய உயிரை அவர் காலத்தில் பாதுகாத்துவிடுகிறார். இறுதியாக அவர் காதலித்த பெண்ணிடம் விடைபெற்றும் விடுகிறார். அந்த காட்சி நெகிழ்ச்சியானது. ஏனென்றால், அங்கு டிடெக்டிவ் சாவும் இருப்பார். தனது குழுத் தலைவர் அம்மாவிடம் கூறுவதைக் கேட்டுக்கொண்டே இருப்பார்.  

முக்கியமாக பின்னணி இசை, தீம் என இரண்டுமே நெஞ்சில் பரபரப்பை, திடுக்கிடலை, திகிலை வரவைக்கின்றன.


குற்றமழிக்கும் நெருப்பு


கோமாளிமேடை டீம் 


According to Greek mythology, the Chimera, Chimaera, or Chimæra (/kaɪˈmɪərə, kɪ-/ ky-MEER-ə, kih-; Ancient Greek: Xίμαιρα, romanized: Chímaira, lit. 'she-goat') was a monstrous fire-breathing hybrid creature from Lycia, Asia Minor, composed of different animal parts. Wikipedia



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்