விலங்கு மனிதர்களின் உலகில் நாயகன் தனது வலி நிரம்பிய இறந்த காலத்தை தேடும் பயணம்!

 














பிரியூ ஆப் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 


சீன தொடர் 


24 எபிசோடுகள்


ஐக்யூயி ஆப் 



இத்தொடரில் காட்டப்படும் உலகில் மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள். விலங்குகளாக உள்ளவர்களின் உடலில் மனித மரபணுக்கள் சேர, அவர்களுக்கு மனித உருவம் கிடைக்கிறது. விலங்கு, மனிதர்கள் என இருவருக்குமிடையே உள்ள முரண்பாடு, தகராறுகள் சில இடங்களில் நடக்கிறது. அதைத் தடுத்து இணக்கமான மனித, விலங்கு உறவைப் பேண பாட் என்ற அமைப்பு உள்ளது. அதுதான் சீனதொடரின் தலைப்பு. அமைப்பிற்குள், காவலராக எதிர்பாராத திருப்பமாக அப்பாவி கால்நடைமருத்துவர் ஒருவர் வந்து சேருகிறார். அவரைத் தவிர பிறர் அனைவருமே விலங்குகள். நாயகன் ஹாவோ யுன் மட்டுமே மனித இனம். பிறர் அனைவருமே விலங்குகளாக இருந்து மனிதர்களாக மாறியவர்கள். 


நாயகன் ஹாவோ யுன், அவனுக்கு உயரதிகாரியாக வூ ஆய்ஆய் இருக்கிறார். இவர்தான் நாயகி. ஈல் மீன் இனம். இருக்கும் பாட் அதிகாரிகளிலேயே பேசுவதற்கு முன்னாடியே கைநீட்டிவிடும் கோபக்காரி வூ. இவளுக்கு கீழே ஹாவோ யுன் வேலை பார்க்கிறான். பாட் அமைப்பினர், அவனது நினைவுகளை அழிக்க முயல்கிறார்கள். ஆனால் அவனது நினைவு மட்டும் அழிய மாட்டேன்கிறது. பாட் அமைப்பினர் நினைவுகளை அழிக்கும் விவகாரம், உலக மக்களுக்கு தெரியாது. எனவே ஹாவோ யுனை பாட் அமைப்பில் நிர்பந்தமாக வைத்துக்கொண்டு வேலை கொடுக்கின்றனர். 


தொடர் நகைச்சுவையான மையத்தைக் கொண்டுள்ளது. இந்த கதையை வைத்துக்கொண்டு நெகிழ்ச்சி, துயரம், வலி, வேதனை என பல்வேறு உணர்வுகளை வழக்குகள் வழியே பார்வையாளர்கள் உணரும்படி வைத்திருக்கிறார்கள். அதிலும் ஃபோர்டி என வரும் பார்டர் கூலி நாய் பாத்திரம் அருமை. 


ஹாவோ யுனுக்கும், ஃபோர்டிக்குமான உறவு அந்தளவு நெருக்கமானது. ஏறத்தாழ ஒரு நண்பனைப்போல நெருங்கிய குடும்ப உறவைப் போல அந்த நாயை அவன் பார்த்துக்கொள்வான். ஆனால் அந்த நாய் உண்மையில் யார் என உண்மையை உணர்வது சுவாரசியமாக அதேசமயம் நெகிழ்ச்சியான காட்சி. அதில் ஹாவோ யுன், ஃபோர்டி என இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 


விலங்காக இருந்தாலும் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் தனிமை, காதல், அந்தரங்கம், வசதியான வாழ்க்கை, பாசம் என நிறைய கதைகள் சிறப்பாக உள்ளன. ஹாவோ யுன் கதையில் வந்தபிறகு, வூவின் கோபம் கூட சற்று குறைந்துபோகிறது. அவனது அலசி ஆராயும் அறிவு காரணமாக உண்மையான குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். முடிந்தவரை தவறை உணர வைத்து திருந்த வைக்கிறார்கள்.


பாட்டின் இயக்குநர், குற்றவாளிகளை சிறையில் பிடித்து அடைப்பதை விட முக்கியம், அவர்களை திருத்தி சமூகத்தில் வாழ வைப்பதுதான் என்று கூறுகிறார். ஆனால் அவரது கீழே உள்ள ஏஜென்டுகள் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. 


பாட் அதிகாரிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் கூட ஒருவரை காயப்படுத்துவது கிடையாது. குடை, மயக்க ஊசிகள், மின் அதிர்ச்சி கருவி ஆகியவைதான். கொலைகார கருவிகள் ஏதும் கிடையாது. நாயகனை இறுதியாக அவனும் விலங்கு என்றாக காட்டிவிடுகிறார்கள். எதற்கு என்று தெரியவில்லை. அதற்கு பதிலாக வௌவாலான துவானுக்கும், இளம்பெண்ணுக்குமான காதலை காட்டிவிட்டார்கள். 


மனிதன், விலங்கு காதலிக்க கூடாது என்று பாட் அமைப்பின் விதியே உள்ள நிலையில் அந்த காதல் எப்படி அங்கீகரிகப்பட்டு திருமணம் செய்வார்கள் என்று தெரியவில்லை. அறிவியல் ரீதியாக மனித இனத்தினர் விலங்குகளை மணம் செய்தால் குழந்தை ஊனமாக விபரீதமாக பிறக்க வாய்ப்புள்ளது. அதையும் தொடரில் கூறிவிடுகிறார்கள். அப்புறம் எப்படி வௌவால் இளம்பெண்ணை காதலிக்கும் என்கிறீர்களா? அப்படி காதலிக்க பாட்டின் இயக்குநர் லீயே ஓகே சொல்லிவிடுகிறார். 


நாயகி வூ ஒரு ஈல். அந்த இனத்திற்கு பெண்ணாக இருப்பவர்கள், இருபத்திரெண்டு வயதில் உடல் முழுக்க மாறி ஆணாக மாறுவார்கள். எனவே, உடல் மாறுவதற்கு முன் பெண்ணாக இருக்கும்போதே மணமாகி குழந்தை பெற்றுவிடுவார்கள். அவளுக்கு நாயகன் ஹூவா யுன் மீது காதல். அதை வெளிப்படையாக அவனுக்கு கூறுகிறாள். ஆனால் அவனுக்கோ அவள் பாலினம் மாறி ஆணாக மாறுவாளே என தயக்கம் இருக்கிறது. ஒருகட்டத்தில் தயக்கம் உதறி காதலை சொல்லும் எபிசோட் அழகு. 


தொடர் முழுக்க நாயகன், நாயகி, அவர்களின் நண்பர்கள் என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில், முகம் தெரியாத முக்கிய மனிதர், பின்னணி இசை அமைத்த இசையமைப்பாளர்தான். அவருக்கான பணிதான் அதிகம். அனிமேஷன் படத்திற்கு இணையான நாயகனின் உடல்மொழிக்கு, சளைக்காமல் இசை அமைப்பதே பெரும் சவால். 


சீனத்தொடர்கள் பெரும்பாலும் சாகசம், காதல், பொறாமை என்று சென்றுகொண்டிருந்தது. உண்மையில் நகைச்சுவைக்கென தனி உலகை படைத்து, சிறப்பாக கதை சொல்லி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். தொடரின் டைட்டில் கார்டைப் பார்த்தாலே நாயகன், நாயகி பாத்திரங்களை எளிதாக புரிந்துகொள்ளலாம். அடுத்த சீசனுக்கான லீடை கொடுத்து தொடரை முடித்திருக்கிறார்கள். 


மனதில் எந்த சுமையும் இல்லாமல் நகைச்சுவை தொடர் ஒன்றைப் பார்க்க நினைக்கிறீர்களா? இந்த தொடரைப் பார்க்கலாம். 


கோமாளிமேடை டீம் 

Bureau of Transformers is a Chinese drama that premiered in 2019. It is a fantasy-comedy series that revolves around a secret organization known as the Bureau of Transformers, which deals with creatures that can shapeshift between human and animal forms. The drama follows Hao Yun, a veterinarian who accidentally discovers the existence of these creatures and is forced to join the Bureau to help track them down and regulate their activities.

கருத்துகள்