வானவில்லை இதயங்களில் வரைபவர்
வானவில்லை இதயங்களில் வரைபவர்
மதுபானி வகை ஓவியங்களின் மூலம் பெறும் தொகையினை ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் செலவழிக்கிறார் மும்பையைச்சேர்ந்த அதிகாரி ஒருவர்.
சம்ஹதி மொகபத்ரா
தமிழில்: ஜோஸபின் கார்த்திக்
நீண்ட பகல்பொழுதின் வேலையின் பின் வணிக அதிகாரியான அம்ரிதா மிஸ்ரா வண்ணக்குப்பிகளோடும், தூரிகைகளோடும் அமர்ந்து ஒரு மரத்தின் கீழ் நிற்கும் கிராமத்துப்பெண் சித்திரத்திற்கு இறுதி வடிவமைப்புகளை கொடுக்கிறார். வளமான தூரிகை இழுப்புகள், பிரகாசிக்கும் வண்ணங்கள் என மதுபாணி முறையில் அமைந்த அவரின் ஓவியம் மெல்ல உயிர்பெற்று எழுகிறது.
27 வயதாகும் அம்ரிதா தன் வேலைநேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஓவியம் தீட்டுவது கலையின் மீதான நேசம் மட்டும் காரணமல்ல.
வணிக நிறுவன நிர்வாகியாக மும்பையில் பணிபுரியும் அம்ரிதா தனது மதுபானி ஓவியங்களை சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களிலும் விற்பதன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்.
எ.கா, மகராஷ்ட்ரா அகமதுநகரைச்சேர்ந்த ஹெச்ஐவியோடு, போராடும் ஆதரவற்ற பாட்டியோடு வாழ்ந்துவரும் அஜித்நாத்தின் கல்விச்செலவிற்கு பணம் தர அம்ரிதா முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்.
''ஒரு ஆவணப்படத்தில் கண்புரை அறுவை சிகிச்சை ஒன்றில் மையப்பாத்திரமாக அவனைக் காட்டியிருந்தார்கள். சிகிச்சைக்குப்பின் அஜித்நாத்தினை படிக்கவைப்பதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள் ஆவணப்படக்காரர்கள். ஆனால் அவர்கள் திரும்ப வரவேயில்லை. படப்பிடிப்பின்போது அணிந்திருந்த பள்ளிச்சீருடையை அணிந்தபடி, பள்ளிக்குச்செல்லும் நம்பிக்கையோடு, அவன் காத்திருக்கிறான் '' என்கிறார் அம்ரிதா. சைல்ட்லைன் இந்தியா அமைப்பிடம் பேசி, தெருவில் வாழும் குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு இருப்பிடம் அளித்து வறுமையோடு நாடோடி வாழ்விற்கு செல்வதை தடுக்க முயற்சிக்கும் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அம்ரிதாவின் கருணையான செயல்பாடுகளின் தொடக்கம் மார்ச் 2013 ல் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயதான சுகாசினி ஹடத்திற்கு உதவியதில் இருந்து தொடங்கியது.
'' அவருக்கு புற்றுநோய் என்று அறிந்ததும், அவரது மகன்கள் அவரை கைவிட்டுவிட்டனர். வீடு ஒன்றில் காவலராக பணிபுரியும் அவரின் கணவரின் குறைந்த சம்பளம் கீமோதெரபியின் நடுநிலைக்கு கூட போதுமானதில்லை '' என பரிதவிப்புடன் பேசுகிறார் அம்ரிதா.
அம்ரிதா சுகாசினியின் மருத்துவச்சிகிச்சைக்காக 60000 ரூபாயை திரட்டியதில் தன் ஒருவயது மகனின் பணமான 4000 ரூபாயும் அடக்கமாகும். அவரின் வருமானம் மற்றும் நன்கொடை உதவிகள் ஆகியவற்றை சிந்தித்தபோதுதான் பணத்திற்கான இன்னொரு மூலம் தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்.
'' அதனால் நான் மதுபானி ஓவியங்களை உருவாக்க நினைத்தேன். என் பள்ளிப்பருவத்திலிருந்து மதுபானி வகை ஓவியங்களினை மையமாகக்கொண்டு ஓவியம் வரைவதில் பெரும் ஆர்வமும், ஈடுபாடும் உண்டு. எனவே இதனைக் காரணமாகக் கொண்டு ஓவியம் வரைதலைத் தொடர்ந்தேன் '' என்று பூரிப்புடன் பேசும் அம்ரிதா சுயமான கற்றல்முறையினை கொண்டவர். மதுபானி ஓவிய வகையின் அடிப்படைகளை இணையம் மற்றும் புத்தகங்களின் மூலம் கற்றறிந்துகொண்டிருக்கிறார். சுகாசினிக்கு உதவி செய்யும்பொருட்டு 10 ஓவியங்களை ரூ.300 – 500 வரை விலை வைத்து விற்று உதவி செய்திருக்கிறார்.
'' மதுபானி ஓவியங்களின் மையக்கருவாக நான் கொள்வது ராமாயணத்தைத்தான். ராமனுக்கும், சீதைக்கும் நிகழும் திருமணத்தை ஒட்டி, ஜனக மன்னரின் நாட்டில் நிகழும் நிகழ்ச்சிகளைத்தான் பதிவு செய்ய முயற்சிக்கிறேன். ஒரு ஓவியராக வரையும் ஓவியங்களின் பின்னணி குறித்து அறிந்திருப்பது மிக முக்கியமும், அவசியமும் கூட '' என்று உற்சாகமாக பதிலளிக்கிறார் அம்ரிதா மிஸ்ரா.
பணிகள் ஓய்ந்து வீட்டிலும் வேலைகள் இல்லாதபோது அம்ரிதா ஓவியத்திற்கான மையக்கருக்களை சிந்தித்தபடி, எப்படி அதனை வெளிப்படுத்துவது என்று மெனக்கெடுகிறார். அம்ரிதா தற்போது பரிசுப்பொருட்கள், பேனாதாங்கிகள், காகிதப்பைகள், துணி வகைகள் ஆகியவற்றை உருவாக்கி வருகிறார். மரபான மதுபானி ஓவியர்களை அணுகி அதன் சூட்சுமங்கள், நுணுக்கங்களையும் கற்றுவருகிறார்.
தானேவைச்சேர்ந்த ஆதரவற்றோர் இல்லமான 'மாநிகேதன்' னை சேர்ந்த எட்டு வயதான அஞ்சலியின் கல்வி குறித்த ஆர்வத்தினை அம்ரிதா அடுத்த செயல்பாடாக கூறுகிறார். '' அஞ்சலி மற்றும் மற்ற குழந்தைகளைக் காண விழா நாளில் சென்றிருந்தேன். புதிய ஆடைகளிலும், செருப்புகளிலும் அவர்களை பார்ப்பது அபூர்வமான ஒன்றாக பெருமைபடும்படி இருந்ததை எப்படி விளக்குவது? என்று நெகிழ்ச்சியாகும் அம்ரிதா, அஞ்சலிக்கு ஆதரவாக அவள் தன்னைத்தானே கவனிக்கும் வரை உதவிசெய்ய இருக்கிறார்.
மதுபானி ஓவியத்தில் சிறந்தவராக உருவாகியபின், நிதி திரட்டுவதற்காக கண்காட்சி ஒன்றினை நடத்தவும் அம்ரிதா மிஸ்ராவிற்கு எண்ணமிருக்கிறது. தனது செயல்பாடுகள் யாருக்கேனும் பயன்படும்படி இருக்கவேண்டுமே தவிர பொருட்களை சேர்ப்பது அல்ல என்று கூறுகிறார்.
'' ஆவலோடு விரும்புகிற சாக்லெட்டை தவிர்த்துவிட்டு அதற்கான பணத்தின் மூலம் ஒரு ஏழைக்கு உணவிடுவது எப்படி? அறச்செயல்பாடென்பது நம்மிடம் நிறைய இருக்கும்போது செய்வது என்பதல்ல. நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதனை மற்றவரோடு பகிர்ந்துகொள்வதுதான் '' என்ற பெரும் நம்பிக்கையோடு கூறி, புன்னகையோடு விடைகொடுக்கிறார் அம்ரிதா மிஸ்ரா.
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 18.1.2015
கருத்துகள்
கருத்துரையிடுக