கல்வியின் ஒளிக்கீற்று

  கல்வியின் ஒளிக்கீற்று

அசாம் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தில் மக்களின் பங்களிப்போடு செயல்பட்டுவரும் கல்விக்கூடம் இலவச கல்வியை 500 குழந்தைகளுக்கு வழங்கிவருகிறது.

ப்ரசாந்தா மஜூம்தார்
தமிழில்: வின்சென்ட் காபோ

12 ஆண்டுகளுக்கு முன்பு அசாம் - மேகாலயா எல்லையிலுள்ள பமோகி எனும் பழங்குடிமக்கள் வாழும் கிராமத்தில், 27 வயதான அறிவியல் பட்டதாரியான உத்தம் தெரோன் தம் மக்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை கூறியபோது, அவரது நண்பர்களின் கேலிச்சிரிப்பில் கிராமமே அதிர்ந்தது.

தன் எண்ணத்தில் உறுதியாக இருந்த தெரோன் கைவிடப்பட்ட மாட்டுக்கொட்டகை ஒன்றினை வகுப்பாகக்கொண்டு நான்கு மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கத்தொடங்கினார். இன்று 500 க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகளிலிருந்து இளம்வயதினர் வரை தோராயமாக இவரது பரிஜித் அகாதெமி மூலம் 100% கல்வி அறிவினைப் பெற பெருமையோடு பயணித்துக்கொண்டிருக்கின்றனர். மாணவர்கள் மோகியிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பழங்குடி குக்கிராமங்களிலிருந்தும் தெரோன் பள்ளிக்கு கல்வி கற்க வருகிறார்கள்.

பள்ளியின் நோக்கம் குறித்து தெரோன் கூறுகையில், அடித்தட்டு மக்களுக்கு தரமான கல்வியை தரவேண்டும். இந்த அகாதெமி நர்சரியிலிருந்து 10 வது வரையிலான கல்வியை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. 
'' எங்கள் கிராமத்தில் உள்ள ஏழைக்குடும்பங்கள் தமது வாழ்வினை நடத்த வீட்டில் அரிசியில் தயாரிக்கும் பீரினை மாணவர்கள் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக பள்ளிக்கு செல்லாமல் அவற்றைக் காய்ச்சி விற்பதை பார்த்த பின்னரே இந்த குழந்தைகளுக்கான கல்விமையத்தைத் தொடங்கினேன் '' என்று கூறும் தெரோனின் தந்தை ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓட்டுநர் ஆவார். 

2006 ல் தெரோன் கிராமத்திலுள்ள பெண்களுக்கு கல்வி கற்பிக்க முயற்சித்தார். பெண்கள் தம் குடும்ப வருமானத்திற்கும் தம் பங்கை செலுத்த வேண்டி இருந்ததால், அவர்கள் அபூர்வமாகத்தான் வகுப்பிற்கு வர முடிந்தது என்பதால் அத்திட்டத்தை இடையிலேயே நிறுத்திவிட்டார். கல்விக்கான திட்டங்கள் குறித்து தன் நண்பர்களிடம் கூறியபோது, அனைவருமே ஏளனம் செய்து சிரித்தனர். அவரது பெற்றோர்கள், அவர் தம் எதிர்காலத்தை பாழடித்துக்கொள்வதாக கருதினர்.

தொடக்கத்தில் கல்விமையத்திற்கு குழந்தைகளைப் பெறுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. பெரும்பாலான பெற்றோர் தம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்த சந்தேகமும், அவநம்பிக்கையும் கொண்டிருந்தனர்.
'' அது ஒரு அமைதியான புரட்சிதான் எங்களுக்கு. நான் பல கிராமங்களுக்குச் சென்று, மக்களோடு கலந்துரையாடி அவர்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கமுடியும் என்று பேசினேன் ''

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலுள்ள மக்கள் அளித்த நன்கொடை பங்களிப்புகளால், இன்று சிறிய கூடாரம் 13 வகுப்பறைகளாக மாறி இருக்கிறது. கல்வி மையத்தில் உள்ள விருந்தினர் அறை மற்றும் உறங்கும் அறை பதினைந்து மாணவர்களுக்கு வீடாக உள்ளது.

ஃபேஸ்புக்கில் தெரோன் இந்தியாவிற்கு வெளியே உள்ள மக்களுக்கு பள்ளி குறித்த அறிமுகத்தை செய்தார். இதன்மூலம் மக்களிடமிருந்து கிடைத்த நன்கொடைகள் இவர்களது பொருளாதாரத்தை சீரமைக்க, இப்போது உள்ள 23 ஆசிரியர்களுக்கு ரூ.1500 – 4000 வரை தொடர்ந்து ஊதியம் அளிக்க முடிகிறது.

யுகே, ஆஸ்திரேலியா, கனடா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தையல், கணினி, நெசவு மேலும் பல்வேறு பயிற்சிகளைக் கற்பிப்பதில் பங்கேற்று உதவுகிறார்கள். மேலும், மாதத்திற்கு ரூ.10000 னை உணவு  மற்றும் தங்கும் வசதிகளுக்காக பள்ளிக்கு நன்கொடையாக அளிக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக பீர் தயாரித்து விற்றுவந்த மாணவர்களுக்கு ஒளிக்கீற்று போன்ற எதிர்காலத்தை காட்டிய தெரோனை நாயகனாக பார்க்கிறார்கள் மக்கள். பத்தாவது படிக்கும் ரூபாலி ''சார் எங்கள் வாழ்வையே மாற்றிவிட்டார் '' என்று உற்சாகமாக கூறுகிறார். தெரோன் விளையாடிக்கொண்டிருந்த எட்டுவயதான மூன்றாவது படிக்கும் கௌதமைச்சுட்டிக்காட்டி, ஆங்கிலத்தில் பேசக்கற்றுக் கொண்டது, அவனை தன்னம்பிக்கையுள்ளவனாக மாற்றியுள்ளது என்கிறார். 

தெரோன் தன் செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் அரசு இவரின் முயற்சிக்கு ஆதரவு அல்லது அங்கீகாரம் அளிப்பது இன்னும் இதனை விரிவாக்க உதவக்கூடும். தன்னலம் கருதாத அன்பின் முன் புகழ் சிறியதுதானே!

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 29.1. 2015



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்