நூல்வெளி ஆக்கம் ஜோஸபின் விஸ்பர் சார்லி ட்ராம்ப்

நூல்வெளி

ஆக்கம்

ஜோஸபின் விஸ்பர்
 சார்லி ட்ராம்ப்

தொகுப்பாளர்கள்

ஷான் ஜே கிறிஸ்டின்
வர்னிகா விஷ்வதி

மின்னூல் பதிப்புரிமை

ஆரா பிரஸ்

வெளியீட்டு உரிமை

Komalimedai.blogspot.in

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 2015 ன் கீழ் வெளியிடப்படும் இந்நூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம், வேறுவகையில் பயன்படுத்தும்போது, பதிப்புரிமை நிறுவனங்களை குறிப்பிடவேண்டும்.



 









1

இது யாருடைய வகுப்பறை
இரா.நடராசன்
பாரதி புத்தகாலயம்

இந்த நூல் ஆசிரியர்களுக்கானது என்பதை முதலிலேயே கூறிவிடவேண்டிய அவசியம் உள்ளது. படித்துவிட்டு தூக்க மருந்தாக பயன்படுகிறது என்று கூறக்கூடாது. இந்த நூலில் கல்வி எப்படி இருக்கவேண்டும், பள்ளி என்பது என்ன, இதற்கான சிந்தனைகளை தோற்றுவித்தவர்கள் யார், அதன் பின்னிருந்த நோக்கம் என்ன என்று தீவிரமாக வரலாற்றுத்தகவல்களோடு பேசுகிற கல்வி குறித்த முக்கியமான நூல் இது.
குழந்தைகளுக்கு கருணை போல ஒவ்வொரு ஆட்சியிலும் இடும் திட்டங்களுக்கெல்லாம் யுனிசெப், யுனெஸ்கோ உதவி செய்கிறது என்பது முக்கியமான தகவலாக உள்ளது. 
பின்லாந்து கல்வி உலகிலேயே சிறந்ததாக உள்ளது என்பதையும் எப்படி அவை கட்சி பேதமில்லாமலும் அமைக்கப்படுகிறது என்பதையும் சிறப்பாக விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். மேலும் வகுப்பினை எப்படி இயங்க கூடிய உயிர்ப்பானதாக மாற்றமுடியும் என்பதை கூறுகின்ற விளக்கங்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காக போராடிய போராளிகளின் குறிப்பும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது.
அரசு மீதும், அரசியல்வாதிகள் மீதும்  கடுமையான விமர்சனத்தை வைத்தபடியே நூலின் ஒவ்வொரு அத்தியாயங்களும் கடக்கவேண்டியதாக உள்ளது. நூலின் ஆசிரியர் தலைமை ஆசிரியர் என்பது வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. கடுமையான தூக்கம் வருவதுபோலான தகவல்களை சிரமப்பட்டு தாண்டிவிட்டால் பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவுகிற முக்கியமான நூல் என்று கூறலாம்.
நூலின் ஒவ்வொரு பகுதி முடிந்தபின்னும் அதன் பின்னால் உள்ள பின்னிணைப்பு நூல்கள் பெரிதும் பயன்படக்கூடியன. இதோடு பாரதி தம்பி எழுதிய கற்க கசடற எனும் விகடன் பிரசுர நூலையும் வாசிப்பது கல்வி குறித்து மேலும் அறிந்துகொள்ள பெரும் உதவியாய் இருக்கும்.


























2
பூனை அனைத்தும் உண்ணும்
ஹஸீன் 
அடையாளம் பிரஸ்


இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழ் ஈழ முஸ்லீம்களின் வாழ்க்கையினைப் பேசுகிறது. நிகழ்காலம், இறந்த காலம் எனப்பயணித்துப் பாய்ந்துசெல்கிறது மொழிவளம் கொண்ட ஹஸனின் உரைநடை. இந்நூலில் மொத்தம் 12 சிறுகதைகள் உள்ளன. இதிலுள்ள முதல் கதையான செங்கவெள்ளை அனைவரும் படித்திருக்க, படிக்கவேண்டிய ஆவல் ஏற்படுத்தும் கதை. மையம் முயல்வேட்டைதான்.

யாரும் உறங்கவில்லை கதை சிங்களவர்களுக்கும் ஈழ முஸ்லீம்களுக்கும் இடையிலான சிக்கலான முரண்பாடுகளை பேசுகிறது. ஓரிரவில் நிகழும் வன்முறை அவர்களின் வாழ்வை எப்படி மீளமுடியாதபடி குலைத்துப்போடுகிறது என்பதை சிறப்பாக வெளிப்படுத்தும் சிறுகதை எனலாம்.

ஆண்சிறகு படபடப்பு, எனது விழியில் அலையும் உனது கூந்தல் எனும் இரு சிறுகதைகளும் ஒன்றின் தொடர்ச்சி மற்றொன்றாக உருவாகியுள்ளது. காதலும், காதல் நிமித்தமான நடவடிக்கைகளைக்கொண்டுள்ள சற்று இலகுவான இத்தொகுப்பின் கதைகள் என இவற்றையே சொல்லமுடியும்.

பூனை அனைத்தும் உண்ணும் என்னும் கதை குறுநாவலாக உள்ளது. ஓரளவு விரிவாக இஸ்லாமிய சமூக பழக்க வழக்கங்களை  சிறு காதல்கதையோடு பேசுகிறது. நிஸ்தார், சிபானி, உபைதார், முயாரிஸ், என பள்ளி செல்பவர்களின் வாழ்வு நம்முன் விரிகிறது. சற்று கவனமுடன், சிரத்தை எடுத்து படிக்கவேண்டிய தொகுப்பு இது. நஷ்டமொன்றுமில்லை. இலக்கணம் போல புரியாமல் போய்விட வாய்ப்பு சிறிது உண்டுதான். புனைவு வெளிப்பூனை இது. 


     3
அக்பர்
என்.சொக்கன்
கிழக்குப்பதிப்பகம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தநூல் வரலாற்று நூல் என்று சொன்னால் அடிக்கவருவீர்கள். அக்பரின் வாழ்வை ஓரளவு முழுமையானதாக அதன் முழுமையான தகவல்களின் விடுபடல்களோடு பேசுகிற முதல் நூல் என்று கூறலாம். இதனை ஒரே மூச்சில் கீழே வைக்காமல் படித்துவிடமுடிவதே என்.சொக்கனின் எழுத்தின் வீச்சினை உணர்த்தும்.

ஹூமாயூன் அனைத்தையும் இழந்து பின் போராடுகிற பதினைந்து வருட போராட்டங்கள் வீழ்ந்து கிடக்கும் நம்பிக்கையை மேலே எடுத்து வருவதற்கான முயற்சிகள், அந்த தருணத்தில் நடக்கிற திருமணம் என அத்தனை திருப்பங்கள் அவருக்கு நடைபெறுகின்றன. இதற்கான காரணமாக அவரின் குணத்தை கூறுகிறார் ஆசிரியர். ஏனெனில் தந்தை சேர்த்த பெரும்பகுதி சொத்துக்களை தன் காலத்தில் இழந்துவிடுகிறார். காரணம் சகோதரர்களின் எதிர்ப்பு, துரோகம் என பல்வேறு காரணங்களை கூறலாம். ஆனாலும் தன் தம்பிகளை மென்மையாக கையாள்கிறார் ஹூமாயூன்  ஏன் இப்படி என்றால், தந்தை பாபர் வாங்கிக்கொண்ட சத்தியம்தான் எனும்போது ஆச்சர்யம் தீருவதில்லை.

ஹூமாயூனின் காத்திருப்புதான் வாசிக்க வாசிக்க பெரும் ஆச்சர்யம் ஊட்டுவது ஏனெனில் நிலைமைகளை அவ்வளவு சிக்கலானதாக உள்ளது. தளராத நம்பிக்கை பின்னாளில் கைகொடுக்கிறது அவருக்கு, அவரின் மகனான அக்பருக்கு என்றும் கூறலாம். சிறுவனாக இருப்பதிலிருந்து தொடங்குகிறது அவரின் அரச வாழ்வு. 

இந்நூலில் உள்ள சில தகவல்களை நாமே பின்னிணைப்பாக கொடுத்துள்ள நூல்பட்டியல் பார்த்து உறுதி செய்துகொண்டு தொடர்வது முழுக்க அக்பர் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக்கக்கூடும். அக்பரின் கல்வி கற்காத தன்மை குறித்த செய்திகளை ஏறத்தாழ எழுதப்பட்ட ஆனால் உறுதி செய்யப்படாத தகவல்களையும் அப்படியே கூறுவிடுகிறார் ஆசிரியர்.

இதோடு நாம் புரிந்துவைத்திருக்கும் பொதுவான கருத்துக்களான பீர்பால் குறித்த புதிய செய்திகளையும் இந்நூல் அறியத்தருகிறது. அவரின் அரசவை குறித்த செய்திகளும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டு உள்ளன. அதோடு அக்பருக்கு பெரும் தலைவலியாக இருந்த ராஜபுத்திர வீரரான ராணாபிரதாப் குறித்தும் அப்போர் குறித்தும் தகவல்களை செறிவாக உள்ளன. வரலாறு என்பதே வலியவர்களால்தான் எழுதப்படுகிறது என்பதும், பெரும்பாலும் புகழ்ச்சியாகத்தான் எழுதப்படுகிறது என்பதால் பல்வேறு தகவல்கள் விடுபட்டு போகிறது என்பதையும் ஆசிரியர் தெளிவாக பதிவு செய்துவிடுகிறார். அக்பர் பற்றிய நேர்த்தியான அறிமுகத்திற்கு எளிமையான நூல் இது. 
















4
ஃபிராங்கென்ஸ்டைன்
மேரிஷெல்லி
தமிழில்: சிவன்
கலாநிலையம்

ஒரு கப்பலில்  அறிவு, தைரியம், சாகசம் ஆகியவற்றினைப்பெற பயணிக்கும் ஒருவர் தன் சகோதரிக்கு எழுதும் கடிதம் வழியே கதை தொடங்குகிறது. தன் பயணத்தின் இடையே பனியில் சிக்கிய ஒருவரை காப்பாற்றி தன் கப்பலில் ஏற்றிக்கொள்கிறார் அந்த சாகசப்பயணியான வால்டன். அவரைப்பற்றி அறிந்துகொள்ள முயற்சிக்கும்போதுதான் கதையே தொடங்குகிறது. அவரின் பெயர்தான் நூலின் தலைப்பு.

ஃபிராங்கென்ஸ்டைன் என்பவரின் இளமைக்காலத்தில் இருந்து இயற்கைக்கு மாறான தன் ரசாயன அறிவைப்பயன்படுத்தி மனிதனை மிஞ்சும் பலத்துடன், பல்வேறு புதைக்கப்பட்ட பிணங்களிலிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகளை சேர்த்து உருவாக்க முயற்சித்து தன் உடல்நலனை ,மனநலனை அம்முயற்சியில் பலியிடுகிறார். ஆனால் அதற்குள் அந்த உடலுக்கு உயிரை அளித்து விடுகிறார். பின் என்னவானது என்பதுதான் பரபரத்து தடதடக்கும் சாகசக்கதை.

அறிவியலை பயன்படுத்தி விபரீதமான படைப்புகளை படைக்கும் விஞ்ஞானிகளை பின்னாளில் ஃபிராங்கென்ஸ்டைன் மான்ஸ்டெர் என்று அழைக்கும்படி ஆனது இந்த நாவலின் புகழைக்கூறும். அதனை அறிமுகப்படுத்தியதே இந்த நாவலாசிரியரின் தீர்க்கதரிசன தன்மைக்கு  சான்றாக நாம் கூறலாம்.

தான் கற்ற அறிவை பரிசோதித்துப் பார்க்க முயலும் ஒருவனின் உணர்ச்சிவயப்பட்ட அறிவு எப்படி தன்னைச்சார்ந்தவர்களின் உயிருக்கு கெடுதலாக மாறுகிறது என்பதும், படைத்தவனை படைப்பு கேட்கும் உரையாடல் பகுதிகளும் வாசிக்க வாசிக்க பெரும் சுவாரசியமானது.

ஃபிராங்கென்ஸ்டைன் மனதில் எழும் அழுத்தமான குற்றவுணர்ச்சி இதில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதே நேரம் தான் உருவாக்கிய பலம் பொருந்திய படைப்பிற்கான முழுப்பொறுப்பும் உருவாக்கியவனைச் சார்ந்ததே எனும் அந்த உருவம் எழுப்பும் கேள்வியும் எளிதாக ஒதுக்கி விடக்கூடியதல்ல. அந்த உருவமும், ஃபிராங்கென்ஸ்டைன்  இருவரும் உரையாடும் பகுதி மிக முக்கியமான பகுதி எனலாம்.

கடும் புறக்கணிப்பிற்கு உள்ளாகும் அந்த மான்ஸ்டெர் பின் கேட்கும் ஒரு சகாயமும் நேர்மையானதுதான் என்று யாரும் ஒப்புக்கொள்வார்கள். அதன் கதை அப்படியே மனதை இளக வைக்கிற ஒன்றாக உள்ளது.
இந்நூலின் பலமாக உரையாடல்களை உறுதியாக கூறமுடியும். எண்ணங்கள் தோன்றுகின்ற தருணம் முக்கியமானவை என்றே படுகிறது. இதனூடே எலிசபெத், தந்தை, தாய், தம்பி, நண்பன் பல உணர்ச்சி நிரம்பிய கதாபாத்திரங்கள் பெரும் அலைக்கழிப்பிற்கு தன் செயலினாலே ஃபிராங்கென்ஸ்டைன் உள்ளானாலும், அவை நிறைவேறுவதில்லை. இதன் ஒரு பகுதியாக அவர் அந்த உருவத்திற்கான பெண் துணையை படைக்க முயற்சிக்கிற தன்மையினை கூறலாம். இறுதியில் அவரின் மரணத்தின் மூலம்தான் தன் அலைகழிப்பினை ஒழிக்க முடிகிறது. 

அடுத்த என்ன ஆகும் என்று எதிர்பார்க்க வைக்கும் நாவல் இது. இறுதியில் அந்த மான்ஸ்டெர் பேசும் உரையாடல்கள் முக்கியமானவை. மேரிஷெல்லியின் அற்புதமான  உணர்ச்சியூட்டும், கதையினை  அதிக சேதாரமின்றி சாகசத்தன்மையடன் மொழிபெயர்த்திருக்கிறார் சிவன். உலக இலக்கிய வரிசையில் இந்த நூல் முக்கியமானது எனலாம்.










5
நீலவானம் இல்லாத ஊரே இல்லை
க.சீ. சிவக்குமார்
உயிரெழுத்து
இந்த கட்டுரை நூல் மொத்தம் 33 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இது அனைத்தும் ஆசிரியர் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்தபோது தீவிரமான நிகழ்ச்சிகளாக இருந்திருக்க கூடும். ஆனால் அவை எழுத்தில் பகடியாக, சுய எள்ளல் சுவை அதிகமாக வெளிப்படுகிறது.

விபத்தில் உடைந்து கிடக்கும் கண்ணாடிச்சில்லுகளை ரசிப்பது, ரயிலை பிடிக்கும் மும்முரத்திலும் வானவில் ரசிப்பது, புனைப்பெயரில் ஆச்சர்யம் விதைப்பது, லைசன்ஸ் எடுக்கும் அரசுடனான போராட்டங்கள், விவசாயிகளை அரசு ஏய்க்கிற மணிஆர்டர் விஷயம், வழி கூறும் அருங்கலை விளக்கங்கள், அப்பாவியான கடன் வசூலிப்பவர் குறித்த செய்தி, கிரிக்கெட் சம்பவங்கள், பாக்கெட்டில் பேனா வைத்துக்கொள்வது என பல்வேறு கட்டுரைகளை சிரிப்போடுதான் கடந்துவர வேண்டியதிருக்கும். அதுதான் இந்த கட்டுரை நூலை படிக்க நம்மை தூண்டுவதுமாக இருக்கிறது.

முதலில் சாதாரணமாக படிக்கத் தொடங்குவோம். இதனை சற்று மெதுவாகத்தான் கவனமாக படிக்கவேண்டியிருக்கும். ஏனெனில் பல்வேறு தகவல்கள் கட்டுரை எங்கும் நிறைந்திருக்கின்றன.  பல்வேறு விஷயங்களை குறிப்பிட்ட காலத்திற்கான வாழ்வினையும், இந்நூல் நமக்கு மிக குறைவான சொற்களில் அறிமுகப்படுத்துகிறது. எளிமையான ஆழமான பொருள் தேடும் கட்டுரை நூல் இது.





6
ஆட்டம்
சு.வேணுகோபால்
தமிழினி

சு.வேணுகோபால் எழுதியுள்ள இந்த நாவல் ஒவ்வொரு இடத்திலும் முடிவில்லாது பங்கேற்று தோல்வி அல்லது வெற்றி முக்கியத்துவப்படும் ஆட்டங்களின் தொகுப்பு இடையறாது மனிதனை இயங்கச்செய்யும் காமம் பற்றியதும் கூட.

தேனியில் வாழும் வடிவேலின் வாழ்க்கையில் இடையறாது அவன் சந்திக்கும் பல்வேறு ஆட்டங்கள்தான் கதை. இளம் வயதில் கபடி விளையாடிக்கொண்டு இருக்கும்போது, ஏற்படும் ஒரு சாதி மீறிய காதல் அவன் வாழ்க்கையில் எப்போதும் தீர்க்கமுடியாத பல்வேறு சிக்கல்களை முடிச்சுக்களை இறுக்கமாக்கிவிடுகிறது. பின் அதன் விளைவாக ஏற்படும் ஒரு திருப்பமான தருணத்தில் குழந்தைகளோடு தன் ஊருக்கு வந்து வாழவேண்டி இருக்கும் சூழ்நிலை அமைய, இளம் வயதில் தனக்கு கிடைத்த மரியாதையைப் பெற்றால்தான் தனக்கு வாழ்வு சிறப்பாக அமையும் என்று நம்பி கபடியில் ஈடுபடுகிறான். அதில் வென்றானா இல்லையா என்பதுதான் முக்கியமான மையம்.

நூல் முழுவதும் காமம் வெவ்வேறு வகையில் ஒவ்வொரு உயிரினையும் வருத்தி தன் கட்டுப்பாட்டிற்குள் ஆணி அறைந்து இயல்பாக இருத்துகிறது. காளையன் தன் சித்தியிடம் உறவு கொள்வது குறித்த விவரிப்புகள் வடிவேலிற்கு ஏற்படுத்தும் கடும் கிளர்ச்சிகளை இங்கு குறிப்பிடலாம். தன் மனைவியின் பிரிவிற்கு பின் வடிவேலினால் இயல்பான வாழ்க்கைக்கு பிறகு திரும்பவே முடியாது போகிற நிலைமையில் ஒரு பெண்ணை கவரந்து இழுத்து தன் வலிமையை புத்தியை நிருபீக்க ஆடும் ஆட்டம் இது.

தோற்றுபோனாலும், உடல் ஒத்துழைக்காது கைவிட்டபோதும் ஆட்டம் முடியவில்லை. தொடர்ந்து நடைபெறுகிறது. அதுதான் தொடர்ந்த வாழ்விற்கான நம்பிக்கையாய் இருக்கிறது. கபடி ஆட்டத்தின் பல்வேறு நுட்பங்கள், நுணுக்கங்கள் விவரணைகள் சிறப்பாக கண்முன்னே கபடி தரையின் புழுதி வேர்வையோடு மணப்பதுபோல பதிவாகி உள்ளது. உணர்ச்சிகள் பெருகி சிதறுகிற உரைநடை வளம் கொண்ட நூல் இது.


7
பாஷோவின் ஜென் கவிதைகள்
எஸ்.ராமகிருஷ்ணன்
உயிர்மை

இந்தப்புத்தகம் ஜென் தத்துவ ஞானிகள் குறித்து எஸ்.ரா  தொடர்ச்சியாக பேசிய உரைகளின் எழுத்துவடிவம் ஆகும். நூல் முழுக்க ஜென் கவிதைகளின் அறிமுகம், அதனை எப்படி புரிந்துகொள்வது, ஜென் தோற்றுவித்த ஹைக்கூவின் அடிப்படை என்ன , நமது இயற்கை சார்ந்த ஜென் கவிதை புரிதலுக்கான வேறுபாடுகள் என்ன?, அர்த்தம் தேடும் அபத்தம் உள்ளிட்ட பலவற்றை கவித்துவ தனக்கேயுரிய மொழியில் கூறிச்செல்கிறார்.

ஜென் கவிதைகளை புரிந்துகொள்வதற்கான அறிமுக நூல் என்று கூட இதனை நாம் கொள்ளலாம். தத்துவஞானி பாஷோவின் வாழ்வும் இதில் கூறப்படுகிறது. மேலும் பல தத்துவஞானிகளின் கவிதைகளை இதில் கூறப்படுகின்றன. அவர்கள் இயற்றிய பல கவிதைகளின் விளக்கங்களும் உள்ளன.

இயற்கை குறித்த வியப்பு இல்லாமல் அதோடு ஒன்றிணைவது கிறித்த விளக்கங்கள் அற்புதமாக இருக்கின்றன. இதைக்கொண்டு ஜப்பான் மொழி அங்கு இருக்கும் நிலவு பார்க்கும் நாள் என்பதைப்பற்றி அறியும் போது நமக்கு ஆச்சர்யம் ஏற்படாமல் இல்லை. 

ஜென் கவிதைகளை அறிந்து கொள்ள கற்க, ஜப்பானியரின் மொழி கலாச்சாரம் குறித்த அடிப்படை அறிவு அவசியம் தேவை. அதனை இந்த நூல் நமக்கு  அளிக்கிறது. ஜென் கவிதைகள் அனைத்துமே மிக குறைவான சொற்களில் காட்சிரீதியான விளக்கத்தை மனதில் வாசிக்க வாசிக்க ஏற்படுத்துகிறது. புத்தர், ஞானம் உள்ளிட்டவற்றை பகடி செய்யும் தன்மையும் இதில் உள்ளதை வாசிக்கும் போது, அறிய முடிகிறது. ஜென் குறித்த நூல்களுக்கு எஸ்.ரா எழுதிய நூல் நல்ல அறிமுகம் என்று கூறலாம். இதோடு யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்து எழுதிய ஜென் கவிதைகள் நூலும்( உயிர்மை) இதோடு உதவக்கூடும்.





























     8
லண்டனில் சிலுவைராஜ்
ராஜ் கௌதமன்
                                               தமிழினி
ராஜ் கௌதமன் எழுதிய இந்த நூலின் சுவாரசியமே தன்னை சிலுவை ராஜ் என்று ஒரு கதாபாத்திரமாக படைத்துக்கொண்டு பயணக்கட்டுரையை எழுதியதுதான். பல்வேறு பயணக்கட்டுரைகளுக்கிடையே இந்த நூல் வேறுபாடு இத்தகைய விலகல் தன்மை கொண்டு தன்னை சுய எள்ளல், அங்கதத்திற்கு ஆட்படுத்திக்கொண்டு பயணிப்பதுதான்.

பயணம் செய்வதற்கு முன் அதற்கு நம்மை தயார் செய்வது கொள்வதிலிருந்துதானே பயணம் தொடங்குகிறது. அதோடு இதில் மற்றவர்களின் குணம் எப்படி? இந்தியர்களின் குணத்தை இந்தியர்கள்தானே அறிய முடியும்? அது குறித்தும் பல இடங்களில் பகடியாக பேசுகிறார் ஆசிரியர். சாதி தேடி நட்பு அமைக்கும் வியூகங்கள் குறித்த கடும் ஆயாசம் ஆசிரியரின் எழுத்தில் தெரிவது செயற்கை என்று ஒதுக்கி விடும் தன்மை கொண்டதல்ல.

வயிற்றெரிச்சல், பொறாமை இவற்றினால் சூழப்பட்டு வாழும் ஒருவருக்கு வேறிடத்திற்கு இடம்பெயர்ந்து ஐம்பது நாட்கள் வாழ்வது எவ்வளவு பெரிய ஆசுவாசமாக இருக்கும்! அதனை வாசிப்பவரும் உணர, அனுபவிக்க முடிகிறது என்பதும் முக்கியம். தன்னோடு பயணிப்பவர்களை பகடி செய்வது, டெக்ஸ்கோ எக்ஸ்பிரஸ் கடையில் சிகரெட் விலை தேடுவது, ஒயின் வாங்குவது, கழிவறை பிரச்சனைகள், முத்தக்காட்சிகளின் விவரணைகள், விதிகளின் ஆட்சி குறித்த நையாண்டி என்பதெல்லாம் குறிப்பிடத்தக்க பகுதிகள் எனலாம். சிலுவைராஜ் என்ற கதாபாத்திரத்தின் வழியே நகருகிற கதை இது. கட்டுரை என்று கூட சொல்லலாம். புனைவு, நிஜம் என இரண்டிற்கும் வாய்ப்பு அளிக்கும் சாத்தியம் கொண்ட எழுத்துக்கள் இவருடையது என்று உறுதியாக கூறமுடியும். பயண கட்டுரையில் இது ஒரு வசீகரவகையினை சார்ந்தது.



9
கங்கை கொண்ட சோழன் - 1&2
பாலகுமாரன்
விசா 

உடையாருக்குப்பின் பாலகுமாரன் எழுதியுள்ள மிகப்பெரும் வரலாற்று நூல் தொகுதிகள் இவை. இதில் மூன்றாவது பாகம் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் வாசிக்க கிடைத்த முதலிரண்டு பாகங்கள் மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

முதல்பாகம் முழுக்க சோழ அரசனின் நாடு குறித்த நிலைமைகள் செய்தியோடு, போர் புரிவதற்கான காரணங்கள் முழுமையாக தர்க்கபூர்வமாக முன்வைக்கப்படுகின்றன. ராஜேந்திர சோழரின் தங்கை குந்தவையின் உணர்ச்சிரீதியான செயல்பாடுகள் போரை வெகு அண்மையில் இழுத்து வருகின்றன. இதனால் ராஜேந்திரர் இதில் தலையிட்டு தங்கையையும், அவளின் மகனும், மருமகனுமான ராஜ நரேந்திரனை காப்பாற்ற வேண்டியிருக்கிறது.இதற்கிடையே மேலை சாளுக்கிய மன்னனான ஜெய சிம்மனால் வஞ்சனை செய்யப்பட்டு குந்தவையின் கணவரான விமலாதித்தன் கொல்லப்பட, கடுமையான போர்சூழல் ஏற்படுகிறது. இதற்கிடையே நாட்டிலுள்ள மக்களின் மனநிலை குறித்தும், பல்வேறு பிரிவினரிடையே உள்ள பூசல்களும் இதில் நான் உயர்த்தி, நீ உயர்த்தி என்று மேலேழ, சோழ நாட்டிற்கு அந்த சமயத்தில் ஸ்ரீ விஜயம் எனும் ஊரில் சோழ வணிகர்கள் கால் பெருவிரல் வெட்டப்பட்டும், கைகள் வெட்டப்பட்டும் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். எனவே போர் நிலம் மட்டுமில்லாமல் கடலுக்கும் விஸ்தீரணமாக மாறுகிறது. வந்தியத்தேவன், அருண்மொழிப்பட்டன் ஆகியோருக்கு இடையே நிகழும் உரையாடல்கள், வைத்தியர் ஞானசம்பந்தன், நாகமணி உரையாடல்கள், ராஜராஜ பிரம்மராயர் உள்ளிட்டோரின் அறிமுகங்கள் என வாசிக்க பல சுவாரசியங்கள் உள்ளன.

இரண்டாவது பாகத்தில் போர் மேலை சாளுக்கியத்தோடு தொடங்கிவிடுகிறது. இதில் சோழ அரசரின் மகனான ராஜராஜாதித்தன், இளவல் ராஜேந்திரன், மனுக்குல கேசரி சோழ கேரளன் ஆகியோரைப் பற்றிய விவரிப்புகள் மற்றும் முல்லைத்தீவு, ஸ்ரீ விஜயம், ஜெயங்கொண்டம், தஞ்சை, திருவொற்றியூர், திருமயிலை சேர நாடு என பல நிலப்பகுதிகளின் விளக்கங்களும், சீராளன் எனும் வேளாளர் தலைவனின் அறிமுகமும், அவன் மனைவி தாமரைச்செல்வி முண்டகக்கண்ணி எனும் இறைவியாக ஆகும் வரலாறும் கூறப்படுகிறது. மேலும் வீரமாதேவி முல்லைத்தீவுக்கு சென்று நாவாய்கள் குறித்து கற்பது, ராஜேந்திர சோழர் நாட்டில் இல்லாத போது பாண்டியர் இறங்கி கலகம் செய்வது உள்ளிட்டவை இந்த பாகத்தினை பரபரப்பானதாக மாற்றுகிறது. மெல்ல நிலத்திலிருந்து கடலுக்கு காட்சிகள் மாறுவதை இந்த பாகத்திலிருந்து வாசகர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

இருபாகங்களான 1136 பக்கங்களின் வழியாக மதுரை, தஞ்சை, நடுநாடு, தொண்டைநாடு, திருவொற்றியூர், வேங்கி, மேலைசாளுக்கியம் உள்ளிட்ட பல தேசங்களின் செய்திகளை தெரிந்துகொள்வதோடு, போர் என்பது பற்றிய விளக்கங்களும், உணவு குறித்த சிந்தனைகள், உரையாடல் சாமா்த்தியம், தர்மம் எது என்ற தேடல், திருமண பந்தம், சாதிமறுப்பு திருமணத்தின் பலன், பௌத்தத்தின் தாக்கம், சமயம் குறித்த தீர்க்கமான கலந்துரையாடல்கள், அந்தணர், வேளாளர் உறவுகள், சனாதன நியாயங்கள், மக்களின் உணவுப்பழக்கங்கள், அரசியல் மற்றும் மதத்தின் இடையறாத வேறுபாட்டினால் ஒன்றுடன் ஒன்று கலக்கும்போது ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், சேரம் நாட்டின் தந்திரங்கள், மேலை சாளுக்கியத்தின் கீழ்த்தர போர்முறைகள், சிற்பக்கலை குறித்த விளக்கங்கள், கப்பல் கட்டுவது, கடலில் பயணிப்பது, வைத்தியம் குறித்த விளக்கங்கள் என தெரிந்துகொள்ளவேண்டிய  பல்வேறு விஷயங்கள் இதில் இருக்கின்றன. இந்நூலை பாலகுமாரன் கடும் உடல்நலிவிடையே எழுதியிருக்கிறார். உண்மையிலே அதற்கான பலனை வாசகர்கள் வாசிக்கும் போது உணர முடியும். 

உடையார் நூலை முழுமையாக படித்த பின் இந்த நூல் தொகுதிகளைப் படிப்பது விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள உதவக்கூடும். அதில் வரும் பல பாத்திரங்கள் இதில் வயதானவர்களாக வருகிறார்கள். இரண்டாவது பாகத்தில் போர் தொடங்கி விடுவதால், அலறல், ரத்தம், வேதனைகள், வலிகள் அதிகம். இந்நூலினை தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பால பாடமாக எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் எதிரிகளே பாராட்டிப்பேசும்படி ராஜேந்திர சோழரின் அணுகுமுறை படைவீரர்களிடையே இணக்கமாக இருக்கிறது. தாத்தா தனது பேரனுக்கு ஒரு கதை சொல்லுவது போலான தன்மையினை அன்பினை இதில் உணர முடிகிறது.பல காலம் கடந்தும் பாலகுமாரனின் பெயர் சொல்லும் படைப்பு இது என்று தைரியமாக கூறமுடியும்.

10
லக்ஷ்மி காந்தன் 
              வடுவூர்துரைசாமி ஐயங்கார்

1920 கால எழுத்தாளரான வடுவூர் துரைசாமி ஐயங்காரின் எழுத்தோவியம் இது. நிர்தாக்ஷ்யண்மாக இதைக்கூறிவிட வேண்டும் என்ற ஆவல் உள்ளோங்கி வர இதை எழுதவேண்டியிருந்தது. வடுவூராரின் கதையில் தகத்தகாய சுயநல சாமர்த்தியம் ஜ்வலிப்பது பொன்னுரங்கம் பிள்ளையின் பாத்திர வார்ப்பில்தான். கண்ணபிரான், தங்கம்மாள்(லக்ஷ்மி), கோபாலசாமிப்பிள்ளை, ருத்ராக்ஷப் பூனை, தாண்டவராயன் என பலர் வந்துபோகும் நிகழ்வான இந்தக்கதையி்ல நாவல், கட்டுரை, நாடகம் என வரம்புடைத்து சென்று மீண்டு வரும் வசீகர நடை சாத்தியமாகி இருக்கிறது. ஆங்கிலத்தழுவல் இதில் இருக்கக்கூடும் என்றாலும் எழுதப்பட்ட காலம் 1920 என்பதால் பல பக்கங்கள் சிறு ஆயாசத்திற்கு இட்டுச்செல்லுமளவு வளவள கட்டுரைகளாய் இருக்கிறது. உ.தா மன உணர்வுகளின் வெளிப்பாடு(கண்ணபிரான் பிரம்மநாயகம் பிள்ளை சந்திப்பு)

தர்மம் கடினமாக பாடுபட்டு வெல்லும் இந்தக்கதையில் பொன்னுரங்கம் பிள்ளையின் முகாரவிந்தமே ஷணத்திற்கு ஷணம் பிரகாசிக்கிறது. வலிமையான கதை கட்டமைப்பில் பல காட்சிகள் எளிதில் யூகிக்கக்கூடியதாக இருப்பது பலவீனம் என்றாலும், கடைசி காட்சி பரபரவென படிக்கத்தூண்டுகிறது உண்மையே. மிகு வெள்ளைமனம் சாத்தியமா என்று எண்ணும்படி இருக்கிறது தங்கம், கண்ணபிரான் கதாபாத்திரங்கள். பரபரவென தடதடக்கும் கதை.  எழுதப்பட்ட காலம் தாண்டி வசீகரிக்க வாசிப்பவர்கள் தயாராக வேண்டும். அவ்வளவுதான்.




11
            போரும் பாவையும்
              எர்னஸ்ட் ஹெமிங்வே
                                                               தமிழில்: எஸ். சீனிவாசன்

மூன்று பாகங்கள் கொண்ட இந்நாவலில் முதல்பாகம் படித்து விட்டேன். பாசிஸ்டுகளுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட வந்திருக்கும் ராபர்ட்டோ என்பவனுக்கும், மலைப்பகுதியில் உள்ள ஒரு குழுவுக்கும் நிகழும் உறவினைக்கூறிச்செல்கிறது இந்த நாவல். பாசிஸ்ட்களின் கொடுமைகள், ராபர்ட்டோவை காதலிக்கும் மேரியாவின் வழி கூறப்படுகின்றன. பின் அந்த பாசிஸ்ட்களை வதைக்கும் பிலாரின் காதலனான பாப்லோ குறித்தும் கூறப்படும் இந்தப்பகுதி வாசிக்கவே மிகவும் தடுமாறிய பகுதி.

ஒரு மைதானத்தில் மக்களைக்கூட்டி மிஞ்சிய 10, 12 பாசிஸ்ட்களை விவசாயத்தொழிலாளர்கள், கையில் கிடைத்த மரக்கழி, மம்மட்டி, இரும்புக்கழி கொண்டு அடித்துக்கொன்று ஆற்றில் வீசும் சம்பவங்கள் கண்ணெதிரே நிகழ்வது போல எழுத்தில் மிக மகிழ்வான ஒன்றாக விளக்கப்படுகிறது.

மற்றபடி போர், மது, கறிஉணவு, ஷூக்கள், விமானங்கள், பாலம் தகர்ப்புத்திட்டங்கள் எனச்சொல்லும் கதையில் மொழிபெயர்ப்பு வேகமாக கதையை படிக்க உதவுகிறது. மேரியாவின் காதல் மட்டுமே சிறிய ஆசுவாசம் கதையில் பின்வரும் பாகங்கள் தனித்தனியாக எழுதுவேன்.








12
ஜான் ஆபிரஹாம்: 
கலகக்காரனின் திரைக்கதை
தொகுப்பு: ஆர்.ஆர் .சீனிவாசன்
தமிழ்செல்வி பதிப்பகம்

ஜான் ஆபிரஹாமின் சில கட்டுரைகள் படிக்க கிடைக்கின்றபோது, அவரின் உருவம் மெல்ல வெளிப்படத்தொடங்குகிறது. எந்த கேள்விக்கும் மழுப்பலான பதிலெல்லாம் கிடையாது. நேரிடையான கேள்வியை உடைத்துப்போடும் பதில்கள்தான். சிலசமயம் கேள்வி கேட்பவரே அதிர்ச்சியடையும் வண்ணம் இருக்கிறது. தன்னை ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் குறித்துக்கொண்டு செயல்படுவது கவனிப்பு பெறுவது முக்கியமானது என்று கருதுகிறேன்.

மக்களுக்கான படத்தை அரசின் கொடும்கரங்கள் நீண்டு தடுக்கும்போது, கலைஞன் அடையும் வெறுப்பும், இயலாமையும் படிப்பவரின் இதயம் சிதைக்கும் வண்ணம் இருப்பதால், மிகவும் கடினமான பிரயத்தனத்தில் மனதை திருப்பி எழுத்தில் விட அதிக இடைவெளிகள் தேவைப்பட்டது. அவ்வளவு எளிதில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டுவிடும் சமூகமாக தமிழ் சமூகம்?

சமூகத்தின் பல்வேறு அவலங்களைக் கண்டு எதுவும் செய்யமுடியாது, தானும் அதில் சிக்கி புதைந்துபோனவன்தானே கலைஞனும். தான் நினைத்த உலகை தியானித்து எழ ஒரு மயக்க மருந்து தேவைப்படுகிறது. அது மது, கஞ்சா, பெண் என எதுவாகவும் இருக்கலாம்.  நிஜத்திற்கு அந்நியமானவனின் வாழ்வு முடிவில்லாத கனவுகளில் சிக்கிக்கொண்டுவிட்டது. நாம் அந்த கலைஞனைக்கொன்று விட்டோம்! ஜான் இறந்துவிட்டார். மக்கள் பங்களிப்புடன் திரைப்படம் எடுப்பது குறித்த முயற்சிகளை அக்காலத்திலேயே முயற்சி செய்தவர் ஜான். தனக்குப் பிடித்த படங்களை எடுக்க பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார் இவர். கூர்மையான அறிவுகொண்ட நேர்மையான கலைஞனை இந்நூலில் காணமுடிகிறது. தம் படைப்பின் திசை குறித்து முடிவெடுக்க வேண்டியவர்களுக்கு உதவுகின்ற நூல் எனலாம்.

13
         ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும்
சி.எம் முத்து


தி.ஜா கையாளும் மையம் என்று கொள்ளலாம். ஆனால் அவை வீணடிக்கப்பட்டு வெறும் ஒலிச்சித்திரமாக மட்டுமே மிஞ்சுகிற நாவல் இது. பிராமண மொழி, குடியான வாழ்வு, மொழியும் மிகவும் பிணக்குடன் ஒன்றாக இணைந்து எழுதப்பட்டுள்ள கதையில் உரையாடல்கள் மட்டும் நன்றாக அமைந்து உள்ளன.

நான்காம் அத்தியாயத்தில் கதையில் சில போக்குகள் புரிபடத்தொடங்குகின்றன என்றாலும், இறுதியில் ஒரு திருப்பம் வருகிறது. எதிர்பார்க்க முடியாதது என்றே கூறலாம். பிராமணர்களின் வாழ்வு, கலை மிக உயர்வாக கூறப்படுகிறது. உணர்ச்சிகரமான கதை கட்டங்களில் மிகச்சுமாரான அடக்கி எழுதும் தன்மையிலான மொழியினால் தொடர்ச்சியாக வாசிக்கும் ஆர்வமே வடிந்துவிடுகிறது. இரண்டாம் அத்தியாயத்தில் வெங்கடாஜலம் பற்றி கட்டுடைத்தபின் எல்லாமே கலைந்துபோனது போல இருக்கிறது. 

நிச்சயம் நல்ல கதை அனுபவத்தை தரும் ஆற்றல் ஆசிரியருக்கு இருக்கிறது என்றாலும், அதை நிரூபிக்க மிக குறைவான அளவு மட்டுமே தன்னடக்கத்தோடு விரும்புகிறார் போல. எனவே கதை மாலைமதி வகை கதையாகி தவறான தேர்வோ என்று புத்தகம் தேர்ந்தெடுத்தது வரை யோசிக்கவைக்கிறது.







14
வீரம் விளைந்தது
நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய்
  என்சிபிஹெச் 

வீரம் விளைந்தது நாவல் பாவெல் கர்ச்சாகின் என்பவரின் வீரம் செறிந்த வாழ்வை தன்னம்பிக்கையுடன் போரில் பங்கேற்றதை குறித்து நெகிழ்ச்சி பெருக பேசுகிறது. இதோடு எதிர்ப்புரட்சியாளர்கள் குறித்து சிறிது இடம்பெற்றிருக்கும் பகுதி ஒன்றே போதும் படிப்பவர்களை அதிரச்செய்ய. நம்பிக்கை வற்றாதிருக்கும் இந்த மனிதனைப் பற்றி படிப்பது அதிசய நிகழ்வு போலப்படுகிறது. நம்பிக்கை எந்த இடமுமில்லாமல் இருக்கும் சூழலில் வாழும் மக்கள் பற்றிய விவரணைகள் அதிகம். கண்ணீர் கரைதட்டி விழுவது போலான நிலைமை பலமுறை ஏற்பட்டுவிட்டது.

இதில் வர்க்க வேறுபாடு எப்படி மனதினையும் சூழ்ந்து அன்பு உருவாகினாலும் அதை வறளச்செய்துவிடுகிறது என்று குறிப்பாக காட்டுகிற சூழல்களைக் காட்டுகிற நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. சமூகத்திற்காக உழைத்த முன்னோடி ஒருவரின் தன்னம்பிக்கை கதை இது என்றும் கொள்ளலாம். பாவெல் கர்ச்சாகின் சமூகத்தின் மீது காதல் கொள்ள பல்வேறு காரணங்களை கூறுகிறார். இதனைப் படித்துமுடித்தபின் அவ்வாறே நமக்கும் தோன்றுவதுதான் நூலின் வெற்றியும் கூட.







15
புரட்சியில் இளைஞர்கள்
      விளாதிமீர்
                       விடியல்

இந்த நூல் ரஷ்யப்புரட்சியில் ஈடுபட்ட வீரர்களின் நாட்குறிப்புகள், தன் உறவினர்களுக்கு எழுதிய கடிதங்களின் வழியே அவர்களது வாழ்வு, நாடு, குடும்பம் என பலவற்றையும் பேசிச்செல்கிறது. இதில் முக்கியமானதாக நான் நினைப்பது கட்டுமான வேலையில் ஈடுபட்டு மலர்ச்சியை உருவாக்கிய பரீஸ் என்பவரைப்பற்றி எழுத்தாளர் ஒருவர் எழுதிய பதிவுகள்தாம்.

மற்ற கடிதங்கள், நாட்குறிப்பு எல்லாம் மிகவும் அறிவுஜீவித்தனம் வியாபித்திருப்பதாக உணர்கிறேன். பரீசின் தோற்றங்களாய் எழுத்தாளர் கூறும் விவரணைகள் உண்மையுடனும், உயிரோட்டத்துடன் இருப்பதாக கருதுகிறேன். 

நாட்டிற்கான் சுதந்திர அமைப்பை உருவாக்குவதில் பாடுபட்டவர்களை குறித்த பதிவுகள் இன்றைய சுயநலனே முக்கியம் என்று சொல்லும் வாழ்க்கையில் மிக முக்கியமென்பேன். பலருக்காக தன்னை பலியிட்ட மனிதர்கள் எவ்வளவு கருணை கொண்டவர்கள். தன்னை தீக்குச்சியாக எரித்துக்கொண்டு ஒளிதந்து வேதனை பொறுத்துக்கொண்டு மடிவது எத்தனை பேரால் முடியும்? முடிந்திருக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாக கூறிச்செல்லும் இந்த நூல் அந்த தன்மை அந்த மணம் அந்த உணர்ச்சி வேட்கை இதற்காக வாசிக்கத்தூண்டிய நூல் என்று இதனைக் குறிப்பிடலாம்.





16
  தபால்காரன்
தூபர்டோ(பிரெஞ்ச்)
தமிழில்: க.நா.சு

நோபல்பரிசு பெற்ற நூல் மேலும் க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார் என்பதும் இதனை வாசிப்பதற்கான காரணம் என்று கூறலாம். தபால்காரன் கதை திரைப்படம் போல மையம் நோக்கம் கொண்டதல்ல. தபால்காரனின் இயல்புகள் முன்னமே கூறப்பட்டுவிடுகிறது.  அனைத்து கடிதங்களையும் பிரித்து படித்தபின்னரே அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் கொள்கை சார்பு கொண்டவன் இந்த கதையில் வரும் தபால்காரன். அவன் தபாலைக் கொண்டு சேர்க்கும் வீடுகள் வழியில் சந்திக்கும் மனிதர்கள், கடிதத்தில் உள்ளது என்ன? என்று மெல்ல விரியும் கதையில் மனிதர்களின் துயரங்கள் மெல்ல எழுதப்படுகின்றன. தொடர்ந்து படிப்பதற்கான உத்வேகத்தையும் இந்த நடையில் ஆசிரியர் வாசிப்பவனுக்கு தருகிறார் என்பதுதான் முக்கியமானது. மனித மனங்கள் எப்போதும் ஏதாவது ஒரு நிறைவுறாத அரற்றலில் ஈடுபட்டிருக்கும் என்பதை சில கதாபாத்திரங்களின் மூலம் கூறிவிடுகிறார் ஆசிரியர். ஒரு சைக்கிள் பயணத்தின் தபால் பட்டுவாடா. ஒருநாள் தபால்காரனின் வேலை. அவ்வளவே இச்சிறுநாவல். எவ்வளவு சிறியதோ, அவ்வளவு வலிமையான கருத்துக்களை கூறிச்செல்லும் மொழிகைவரப்பெற்றிருக்கிறார் தூபர்டோ. க.நா.சு மொழிபெயர்ப்பை மொழிபெயர்ப்பாக நினைத்து செய்திருக்கிறார். எங்கும் பிசிறில்லாத மொழி. காலம் கடந்தும் வாசிக்க வைப்பது கதையின் கரு மற்றும் அதனை க.நா.சு தன் உரைநடை வழியே வெளிப்படுத்திய விதம் என்றும் கூறலாம் இல்லையா?




17
   குறுகிய வழி
   ஆந்த்ரே ழீடு
  தமிழில்: க.நா.சு

இந்நாவல் வெறும் 150 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள 1947 ல் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை ஜெரோம், அலிஸ்ஸா என இருவரிடையேயான நிறைவேறாத காதலை பூரணமான நேசத்தை, காதலுணர்வு பொங்கப்பேசுகிறது. 

ஜெரோம் தானே கதையைக்கூறுகிறான். சில இடங்கள் மிகக் கடுமையான உளவெழுச்சியை வாசிப்பவனிடம் ஏற்படுத்தி நிலைகுலையச் செய்கின்றன என்பதை ஆசிரியனின் வலிமை என்றே கொள்ளலாம். நேர்த்தியான க.நா.சு மொழிபெயர்ப்பு கதைக்கு மிக நெருக்கமாக உணரச்செய்கிறது.

அலிஸ்ஸாவின் மனம், மதம், கடவுள் என்று கடும் கட்டுப்பாடுகள் குவிந்தது. அவளின் இன்னொரு பகுதி அன்பை, நேசத்தை நோக்கி செலுத்தினாலும், மதம், கடவுள் என அவளின் உடலில் அறையப்பட்டுள்ள ஆணிகள் அவளை கடும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி, அதுவே நோயாக மாற காதலை உணர்ந்தும் வெளியிட முடியாது தன்னோடு போரிட்டே வெல்ல முடியாது இறந்துபோகிறாள். 

வாழ்வை நிறுவனமயமாக்கம் செய்யும் போது ஏற்படும் சேதாரங்கள் மனிதர்களுக்கிடையேயான அன்பை, நேசத்தை, இணக்கத்தை இழக்க நேருவதுதான்  மாபெரும் அவலமாக இன்றைய காலத்தில் நாம் சந்திக்கவேண்டியதாக உள்ளது.  மிகச்சிறந்த உயிர்ப்புடன் உண்மையைப் பேசுகின்ற நாவல் இது. க.நா.சுவின் மொழிபெயர்ப்பில் மிக எளியதாக மூலத்தின் உணர்வை வாசகனுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.























18
சார்லி சாப்ளின்
  ராண்டார் கை
  சாந்தி பதிப்பகம்

சார்லி சாப்ளினின் சுயசரிதை இது. சார்லி சாப்ளினின் வாழ்க்கையை அவரின் குணங்கள், செயல்பாடுகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்படுவதுதன் காரணத்தையும் கூறுகிறது. ஓரளவு சாப்ளினின் செயல்பாடுகளை நேர்மையாக பதிவு செய்ய முற்படும் நேர்த்தியான படைப்பு என்று இதனைக்கூறலாம்.

திரைக்கலைஞனாக சாப்ளின் கண்டறிந்த உத்திகள், கரு, சிந்தனை, மனம் எல்லாமே திரைப்படத்திற்கான வணிக நோக்கம் என்பதைத்தாண்டி சமூகத்தின் மீது  அவர் வைக்கின்ற விமர்சனமாகவும் கொள்ளக்கூடும். அவரின் சிறந்த கரு, முயற்சி உழைப்பில் வெளிவந்த நகைச்சுவை பாத்திரமற்ற படைப்புகளை புறக்கணித்த மக்கள் அவரிடம் கேளிக்கையை மட்டுமே எதிர்பார்த்தது பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அச்சமூகத்தில் அப்படி நினைக்காவிட்டால்தான் அதிசயம். 

தான் நினைத்த விஷயத்தை திரையில் கொண்டுவர அவர் செய்த செயல்பாடுகள், உழைப்பு, செலவழித்த பணம் இதெல்லாம் அக்காலத்தில் சாதாரணமானதல்ல. இன்று அதிக ஆண்டுகள் செலவழித்து அவர் உருவாக்கிய படங்களை பார்க்கும்போதுதான் அந்த உழைப்பிற்கான மதிப்பை புரிந்துகொள்ள முடிகிறது. நல்ல விஷயங்கள் மட்டுமில்லாமல், அவரின் வேறுபட்ட தனித்துவ குணங்களையும் கூறிச்செல்லும் இந்த புத்தகம் திரைப்படம் தாண்டியும் சாப்ளினைக் காட்டும் புத்தகம் எனலாம்.

கருத்துகள்