மாறுதலின் கதை இது!
புனிதா மகேஸ்வரி
தமிழில்: அன்பரசு சண்முகம்
கர்நாடகாவின் முதல் திருநங்கையாக உயர்கல்வி கற்க அனுமதி
பெற்றிருக்கும் சுமா தனது கொடூரமான கடந்த கால உடல் வியாபாரத்திலிருந்து மீண்டு
கல்லூரி செல்ல முடிந்தது குறித்த பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
சுமா
திருநங்கை என்பதால் அவரது குடும்பத்தினரே அவருக்கு இழைத்த சித்திரவதைகள், கொடூரமான
சதை வணிகத்தில் மூன்று ஆண்டுகளாக பெற்ற உடல்ரீதியான தாக்குதல்கள், வன்புணர்வுகள்
ஆகியவற்றை எதிர்த்துப் போராட அவர் முடிவெடுத்தபோது அவர் வாழ்க்கை புதியதாக
மீண்டும் தொடங்கியது. தனது கடந்த காலத்தை நினைவு கூறும்போது சுமாவின் உடலில்
திகிலும் பயமும் விலக்க முடியாமல் படர்ந்துவிடுகிறது.
‘‘எனக்கு
இன்றும் எது போராட தைரியமளித்தது என்று தெரியவில்லை. என்னால் தாங்கமுடியாது என்று
தோன்றியபோது உருவானது அது. ஆனால் தொடர்ந்து என்னை சரி செய்துகொண்டு அந்த
அவலத்திலிருந்து என் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களிலிருந்து பாலியல்
தொழிலிலிருந்து வெளியே வந்தேன்’’ என்று கூறிய சுமாவின் கண்களில் கண்ணீர் தடையின்றி
பெருகி கன்னங்களில் வழிந்தோடுகிறது.
இந்த
கண்ணீரும் அதன் பின்னான வலியும்தான் தனது கொடூரமான மூன்று ஆண்டுகளை எப்போதும் அவரை
நினைக்காமல் இருக்க வைத்ததா? சுமா முடிவேதும் செய்யவில்லை. ஆனால் இது குறித்து
துக்கப்படுவதை விட அவர் கொண்டாடுவதற்கான பல காரணங்கள் இன்று அவருக்கு உள்ளது.
ஐந்து ஆண்டுகளாக அவர் செய்த போராட்டத்தின் விளைவாக அவருக்கு கல்லூரியில் படிக்க
அனுமதி மட்டுமில்லாது நல்ல வேலை ஒன்றும் கிடைத்துள்ளது. கர்நாடகாவின் மாற்றுப்
பாலினத்தவர் எப்படி கடந்த கால சாம்பலிலிருந்து ரோஜா போல புத்துயிர் பெற்று
மலர்ந்து எழுந்தார் என்பதுதான் இந்தக்கட்டுரை.
‘‘
ஆணின் உடலில் பெண்ணாகப் பிறந்தவள் நான்’’ என்று பெங்களூருவில் தான் பிறந்த கதையை
விவரிக்கிறார் சுமா.
சிறுவயதில் தான் ஒரு மாற்றுப்பாலினத்தவர்
என்று அவர் அறிந்து அமைதி காத்தாலும் அவரை சுற்றி இருந்தவர்களை சூழலுக்கு
இணக்கமாக்க செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வாழ்க்கையினை அமைதியாக தொடர கல்லூரி
விண்ணப்பத்தில் ஆண் என்று குறிப்பிட வேண்டியிருந்தது. ஆனால் சுமாவின் விஷயத்தில்
அதுவும் கூட அவருக்கு துயரைக் குறைக்க உதவவில்லை.
‘‘நல்ல மதிப்பெண் பெற்றபோதும் சக
மாணவர்களால் கடுமையாக கிண்டல்களுக்கும் கேலிச்சிரிப்புகளுக்கும் ஆளானேன். ஆசிரியர்
என்னைக்கேட்கும் கேள்விகளுக்கு கூட என்னால் பதில் சொல்ல முடிந்ததில்லை. அவற்றினை
முடிவுக்கு கொண்டுவர எனது பட்டப்படிப்பினை பாதியிலேயே கைவிட வேண்டியிருந்தது’’
என்ற சுமாவின் குரலில் உணர்ச்சிகளின் தாக்குதலினால் கரகரப்பு கூடியிருந்தது.
தனக்கான
ஆதரவின் நம்பிக்கையாக பெற்றோரை நாடிச்சென்ற சுமா அங்கே பெரும் அதிர்ச்சியை
எதிர்கொள்ள நேர்ந்தது. தன்னைக் குறித்து கூறியதும் பெற்றோர் அவரை ஆறுமாதங்களாக
வீட்டு அறையொன்றில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
‘‘நான் மனநிலைப் பிரச்சனையில்
பாதிக்கப்பட்டுள்ளதாக என்னுடைய பெற்றோர் உறுதியாக நம்பி, பல்வேறு மனநல சிகிச்சைகள்
மற்றும் மந்திர, தாந்திரீகங்கள் மூலம் என்னை இயல்பான ஒருவளாக எனக்கு உணர்த்த
முயற்சித்தார்கள். ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை என்று உணர்ந்தபோது என்னை
அடித்து வீட்டில் அடைத்து வைத்தார்கள்’’ என்று நினைவுகளை மீட்டெடுத்து பேசுகிறார்
சுமா.
தான்
நோயுற்றவள் இல்லையென்றும் மாற்றுப்பாலினத்தவராக இருப்பது இயற்கையானது என்றும் சுமா
தன் பெற்றோருக்கு உணர்த்த வீட்டில் சாப்பிடாமலும் இருந்திருக்கிறார்.
‘‘நம்பிக்கையற்ற அந்த நிலையில் தற்கொலை செய்துகொள்ளக்கூட முயற்சித்தேன். இறுதியாக
எனக்குத் தெரிந்த ஒரே வழி அந்தக் கட்டுகளை உடைத்துக்கொண்டு வெளியே வருவதுதான்’’
என்று கூறுகிறார் சுமா.
ஒருநாள்
சுமா தன் வீட்டிலிருந்து வெளியேறி நகரத்தில் உள்ள மாற்றுப்பாலினத்தவர்கள் தங்கும்
ஒரு விடுதிக்கு சென்றார். ஆனால் அதுவும் தனது வேதனை அத்தியாயங்களின் தொடர்ச்சி
என்பதை அவர் அறியவில்லை. ‘‘நான் எனது சொந்த சம்பாத்தியத்தில் எனக்கான தங்குமிடத்தை
உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்போது என்னிடம் வேறெந்த
திட்டங்களும் இல்லாததால், விபசாரத்தில் இறங்க வேண்டியிருந்தது. வன்புணர்வு,
சித்திரவதை, எலும்புகளை உடைப்பது என என்மீது நிகழ்த்தப்பட்ட சுரண்டலைக் கூற
என்னிடம் வார்த்தைகளே இல்லை. மேற்கூறியவற்றில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒன்று
அங்கிருந்த மூன்று ஆண்டுகளும் எனக்கு நிகழ்ந்தபடியேதான் இருந்தது’’ என்கிறார் தன்
மோசமான கடந்த காலத்தை நினைவுகூர்ந்தபடி சுமா.
ஒருநாள்
இரவு காவலரால் தலைமுடியைப்பிடித்து இழுக்கப்பட்டு ஏறத்தாழ 500 மீ. தூரம் தரதரவென
இழுத்துச்செல்லப்பட்டிருக்கிறார் சுமா. அந்த ஒரு சம்பவமே அத்தொழிலை விட அவருக்கு
போதுமானதாக இருந்தது. ‘‘நான் கடுமையாக அவமதிக்கப்பட்டு தாக்கப்பட்டேன்தான்
என்றாலும் அத்தொழிலிலிருந்து வெளிவர அதுவே எனகுக நல்ல வாய்ப்பாக பட்டது. நிறைய
பணம் இதில் கிடைத்தாலும் பாலியல் தொழிலாளர்களுக்கான மாற்றுத்திட்டத்தின் கீழ் நான்
பெண்ணாக அங்கீகரிக்கப்பட்டேன். அதன் வழியே நான் மதிப்பான வேலை ஒன்றை
எதிர்பார்த்தேன்’’ என்கிற சுமாவுக்கு பெங்களூருவில் உள்ள சுற்றுலா சுற்றுலா
அமைப்பான ஈக்குவேஷன் எனும் நிறுவனத்தில் நிகழ்ச்சி துணை உதவியாளராக பணிபுரிய
வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனிடையே
சில தடைகளையும் சுமா எதிர்கொள்ள நேர்ந்தது. ‘‘ பெங்களூரைச் சேர்ந்த பிரபலமான சில
பல்கலைக்கழகங்களில் எனது கல்லூரிப்படிப்பிற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
எனது பாலினம் தொடர்பான முரண்பாடான தகவல்களினால் என்ன குறிப்பிடுவது என்று
அவர்களுக்கு தெரியவில்லை. என்னை பெண் என்று விண்ணப்பத்தில் நான்
குறிப்பிட்டிருந்தாலும், பல்வேறு ஆவணங்களிலும் ஆண் என்றே குறிப்பிட்டிருக்கும்.
பாலின மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே இதற்கு தீர்வாக இருந்தது’ என்கிறார் சுமா.
இந்த
சம்பவங்கள் சுமாவை நம்பிக்கையற்ற திசையில் தள்ளினாலும் செயின்ட் ஜோசப் கல்லூரி
அவரை காப்பாற்றி புது நம்பிக்கையை அளித்தது. அகாய் பத்மஷாலி எனும் மாற்றுப்
பாலினப்போராளியின் ஆதரவினால் ஜர்னலிசம் பழக்க கல்லூரியில் இடம் கிடைத்தது
என்கிறார் சுமா.
‘‘எனக்கு
கிடைத்துள்ள இந்த அடிப்படை பல்வேறு வாய்ப்புகளை பெறவும் உதவுகிறது’’ என்கிற சுமா
மாலை 5 மணி வரை ஈக்குவேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு மாலை 5.30 க்கு மாலை
நேர வகுப்புகளுக்கு வந்து விடுகிறார்.
சுமா
தன்னைப்போலவே பலரும் கடுமையான இக்கட்டுகளிலிருந்து மீண்டு வர முடியும் என்கிறார்.
மாற்றுப்பாலினத்தவர் இடையே சிறிது நம்பிக்கை இருந்தால் போதும் மக்களின் மனதில்
இருக்கும் தவறான எண்ணத்தைப் போக்கி, சமூக புறக்கணிப்பை எதிரத்துப் போராட முடியும்’’
என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சுமா.
வாழ்க்கையின்
உள்ளே வந்துவிட்ட தான் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்று விரும்புகிறார். ஏன்
என்று கேட்டால், ‘‘இத்துறையில் ஆண், பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால்
மாற்றுப் பாலினத்தவர் இதில் வெற்றிபெற்றவராக இருக்கிறார் என்று கூற முடியவில்லை.
நான் அப்படி ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். வாய்ப்புகள் கிடைத்தால்
மற்றவர்களைப் போலவே எங்களாலும் மற்றவர்களைப்போல சாதிக்க முடியும்’’ என்று உற்சாக
பேசி விடைதருகிறார் சுமா.
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
இடெக்ஸ் நவம்பர் 23, 2015