கௌரவமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு

           கௌரவமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு

                      ஆங்கிலத்தில்: அனுஜ்குமார்

                          தமிழில்: வின்சென்ட் காபோ

அமித்ராய் இயக்கியுள்ள ‘ஐ பேட் திரைப்படம் திரைவிழாக்களில் இந்தியப்பெண்களின் குறிப்பிடத்தக்க அவசியமான தேவை குறித்து பேசியதில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

     தான் வாழும் உல்கஸ் நகரில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டையில் இருக்கும் அமித்ராயை நாம் எளிதில் புறக்கணித்து கடந்துபோய்விட முடியும்தான். ஆனால் அவர் இயக்கியுள்ள படங்களை அப்படி கடந்துவிட முடியாதபடி, திரையிலிருந்து கண்களை எடுக்க முடியாது தனித்துவ திரைமொழியால் வசீகரிக்கிறார் அமித் ராய். 2010 இல் ரோட் டூ சங்கம் திரைப்படம் இதற்கு உத்தரவாதம் தருவது போல் சாதாரண வாழ்வில் அசாதாரண கதாபாத்திரங்களை நடமாடச்செய்து காட்டியிருப்பார் அமித் ராய்.

     மகாத்மா காந்தியின் சாம்பல் திரிவேணி ஆற்றில் கரைக்க எடுத்துச்செல்லப்படும் கார் ஒன்றினை பழுது பார்க்கும் பொறுப்பு ஹஸ்மதுல்லா எனும் மெக்கானிக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியான சம்பவங்கள்தான் கதையாக அமைக்கப்பட்டிருக்கும்.
     கோவாவில் நடைபெறும் திரைவிழாவில் அமித்ராய் திரையிட்டுள்ள படம் இந்தியாவில் தயாரிப்பது குறித்து உள்ளதாக அனைவராலும் பேசப்பட்டது. ‘ஐ பேட் படத்தின் கதை ஒருவர் தன் மனைவியின் மாதவிடாய் கால சிக்கலைத் தீர்க்க குறைந்தவிலையில் அமைந்த தரமான சானிடரி நாப்கின்களை தயாரிப்பது குறித்ததாகும். இந்தியாவில் உள்ள 70% பெண்கள் எளிதில் வாங்க முடியாத அளவு உச்ச விலையில் பன்னாட்டு நிறுவனங்கள் சானிடரி நாப்கின் விற்று வரும் வணிகத்தை கடுமையாக சாடுகிறது இத்திரைப்படம்.

     மும்பையில் நடுத்தரவர்க்கத்திற்கும் கீழான சூழலில் பிறந்த அமித் முதல் தலைமுறையைச் சேர்ந்த ஒரு நபராக திரைத்துறையில் இணைந்து,தனது கதையைக் கூறும் ஆர்வத்துடன்கேமராவைத் தொட்டிருக்கிறார்.
     ‘‘வெகு காலமாக ஒன்று போலான கதைகளைக் கொண்ட படங்களை கண்டு வந்திருக்கிறோம். நாம் இப்போது கேமரா ஆடியின் மற்றொரு புறம் நின்று நமது கருத்தை வேறுவிதமாக காணப் போகிறோம்.  இந்த முறையில்தான் முன்பு உருவாக்கி வைத்திருக்கும் பழைமையான விஷயங்களைக் களைய முடியும்.’’ சந்தையானது சிறு வியாபார நிறுவனங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்பதை கண்டுவந்திருக்கும் வாழ்வியல் அனுபவமும் அமித்ராய்க்கு உண்டு. ‘‘என்னுடைய அப்பா மில் தொழிலாளியாக பணிபுரிந்தவர். ஆலை மூடப்பட்டபோது அனைத்து மில் தொழிலாளிகளின் குடும்பங்களைப் போலவே நாங்களும் பாதிக்கப்பட்டோம். இங்குள்ள குறிப்பிட்ட வணிக வளாகம் ஒன்றுக்கு நான் எப்போதும் செல்வதில்லை. ஏனெனில் அது பல மில் தொழிலாளர்களின் கல்லறை மேல் எழும்பி நிற்பதுதான் காரணம். சாதாரண மில் தொழிலாளியை பரிகாசம் செய்வது போல புகைபோக்கி ஒன்றை அடையாளச்சின்னம் போல அங்கு அப்படியே வைத்திருக்கின்றனர்’’ என்கிறார் நினைவுகளின் பாதையில் நின்றபடி அமித்ராய்.

     சந்தையில் உள்ள பெரும் படங்களோடு மோதுவது குறித்து தனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை என்பதோடு அவரை மண்ணில் மணம் போல எழுந்து நிற்கும் படத்தின் மதிப்புக்கு போதுமான ஒப்பீடல்ல என்றும் துணிச்சலாக கூறுகிறார். ‘‘ உல்ஹாஸ்நகரில் ஜீன்ஸ் துணி ஒன்று ரூபாய் 300 க்கு கிடைக்கிறது. ஆனாலும் சந்தை உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் தருவதாய் ஆதரவாக இல்லை. தேனை சேகரித்து விற்கும் பழங்குடிகள் சந்தையில் அவர்களுடைய பொருட்களை அவர்களே வாங்குவதில்லை. இந்த முறையில்தான் இயற்கைவழி பொருட்கள் மிக அதிகபட்ச விலையினைக் கொண்டிருக்கின்றன. தூய்மையாக இல்லாத வணிக முத்திரை கொண்ட பொருட்களையே வாங்குகிறார்கள். இந்த முறையில் பயணிக்கும் சந்தையானது ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தியாவசிய தேவையான பொருள் கூட மிக உயர்ந்த மேல்தட்டு வர்க்கப் பொருள் போலாகிவிடுகிறது’’என துயரம் முகத்தில் கவிழ பேசுகிறார் அமித்ராய்.

     அமித்ராய் கையாண்டுள்ள இக்கதை சமூகம் மற்றும் குடும்பம் ஆகியவற்றோடு கடுமையாகப் போராடி மிக குறைந்த விலையிலான சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் எந்திரங்களை உருவாக்கிய கோயம்புத்தூரைச்சேர்ந்த ஏ.முருகானந்தம் என்பவரின் கதையாகும். ‘‘நான் முருகானந்தத்தை சந்தித்து அவர் நாப்கின் கண்டுபிடித்த கதை குறித்து திரைப்படம் உருவாக்கும் முடிவைக்கூறி அவரின் அனுமதி பெற்று போபாலில் படத்தை உருவாக்கினேன். உலகில் மிகப்பெரும் நச்சுவாயு பேரழிவில் இருந்து தன்னை மீட்டெடுத்த நகரமான இங்கு தொழில் முனைவுத்திறன் ஆற்றல் அதிகம் உண்டு’’ என்று விவரிக்கிறார் அமித்ராய்.

     ‘ஐ பேட் கதை உள்ளூர் நியூட்டன் போல சுற்றிக்கொண்டிருக்கும் நட்ராஜ் மற்றும் அவரது உதவியாளரான பென்சில் குறித்தது. ஆனால் நட்ராஜின் மனைவி சாவியோ, அவன் வாழ்க்கை குறித்து போதிய கவனம் இல்லாமல் இருப்பதாக கவலை கொள்கிறாள். தன் மனைவி மாதவிடாய் காலத்தில் படும் சிரமம். நட்ராஜை அதற்கு தீர்வு கண்டறியச்செய்கிறது. அவரது மனைவி அனைத்து குடும்பத்தலைவிகள் போலவே தன் உடல் சார்ந்த சுகாதாரப்பிரச்சனைகள் குறித்து கவனமில்லாது இருக்கிறாள். சானிடரி நாப்கின்களை உள்ளூரில் தயாரிக்க நட்ராஜ் முயற்சிக்கிறார். இந்த ஆராய்ச்சியின்போது 7% பெண்களே (கிராமத்தில்) வர்த்தக முறையில் விற்பனை செய்யப்படும் சானிடரி நாப்கின்களை வாங்கி பயன்படுத்த முடிகிறது என்ற உண்மையை அறிகிறார். நடராஜ் தன் ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டாலும் தான் கண்டறிந்த பொருளை எப்படி சோதித்துப்பார்ப்பது? அவரது மனைவி தன் கணவருக்கு பைத்தியம் பிடித்திருக்கவேண்டும் (அ) இளம் பெண்களை சந்திக்க இதனை ஒரு வழியாக பயன்படுத்திக்கொள்கிறார் என்ற முடிவிற்கு வருகிறார். நட்ராஜின் தாயோ, மகன் தீய ஆவிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதுகிறார். இப்படி வேறுபட்ட சூழல்கள் அவர்களது புரிந்துணர்வில் பல தடங்கல்களை ஏற்படுத்துகிறது. ஒரு ஆண் அறிமுகமில்லாத பெண்ணிடம் அவளது மாதவிடாய் நாட்கள் குறித்து கேட்பதை சிறிது நினைத்துப்பாருங்கள்.

     இறுதியாக நட்ராஜ் தானே பெண் கருப்பை ஒன்றினை உருவாக்கி அதில் ஆட்டின் ரத்தத்தை நிரப்பியிருக்கிறார். தான் உருவாக்கிய கருவி மூலம் அந்தக் கருப்பை அழுத்தப்படும்போது ரத்தம் வெளியேற்றப்பட அந்த சிரமம், நாற்றம் குறித்து தன்னைக்கொண்டே சோதித்து அறிந்துகொண்டார். தீர்வை நோக்கி செல்ல இந்த அனுபவமே அவருக்கு உதவியிருக்கிறது. பருத்தி மற்றும் செல்லுலோஸ் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிந்து இதனைத் தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கினார். இதில் உருவாகும் சானிடரி நாப்கின் அதிகபட்ச உள்வாங்கும் தன்மையுடன் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் இருந்தது.

     திரைப்படச்சந்தையில் இக்கதையானது முக்கியமான இயக்குநர்களால் பாராட்டப்பட்டிருக்கிறது. ‘‘பெண்கள் இந்தப் பிரச்சனையோடு எளிதில் பொருந்திப்போகக் கூடியவர்கள். படத்தினைப் பார்த்த மார்கோ மியூல்லர் (ரோம் திரைவிழா முன்னாள் இயக்குநர்) இந்தியா தன் சொந்தக்காலில் எழுந்து நிற்கும் என்கிறீர்களா? இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காக இப்படத்தினை உருவாக்கினீர்களா? என்று கேட்டார். உலகம் முழுக்க செல்லவேண்டிய தன்மையில் படம் இருக்கவேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது. இதோ இங்கே நான் கூறியிருப்பதே படம் குறித்த விளக்கமாகும்’’என்று கூறி புன்னகைக்கிறார் அமித்ராய்.

     அமித்ராயின் இப்படத்திற்கு பல்வேறு திரைவிழாக்களில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ்கள் கிடைத்திருக்கின்றன. இதில் பெர்லின் திரைவிழாவும் அடக்கம். ‘‘இன்னும் சானிடரி நாப்கின் வாங்க முடியா நிலையில் இருக்கும் பெண்கள் இப்படத்தை பார்க்கவேண்டும். அதுதான் என் படத்திற்கான சரியான சோதனைக்களமாக இருக்கும்’’ என்று நம்பிக்கையுடன் கைகுலுக்கி விடைதருகிறார் அமித்ராய்.                          
                நன்றி: தி ஹிந்து மெட்ரோபிளஸ் டிச.10, 2015