அரசுக்கு காங்கிரசின் உதவி தேவை; அது எங்களை புறக்கணித்துவிட முடியாது!

                                           கே.வி. தாமஸ்

                                ஆங்கிலத்தில்: மனீஷ் ஆனந்த்

                                தமிழில்: அன்பரசு சண்முகம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பொதுக்கணக்குகள் கமிட்டி தலைவராகவும், மத்திய விவசாயம், நுகர்வோர் உரிமைகள், உணவு மற்றும் பொது வழங்குதல் துறை அமைச்சராக இருந்த கே.வி. தாமஸ் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மற்றும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து நம்மிடையே  உரையாடுகிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் என்ன முறையில் எந்த விஷயங்களை விவாதிக்கும் என்று கருதுகிறீர்கள்?

     பெரும்பான்மை பலத்துடன் மோடி அரசு ஆட்சிக்கு 16 மாதங்கள் ஆகிவிட்டன. பாரதீய ஜனதா கட்சி உருவாக்கிய கவர்ச்சியில் அது ஐந்து ஆண்டுகளையும் தாண்டி ஆட்சிசெய்யும் என்று பலரையும் நம்ப வைத்தது. ஆனால் இன்றோ மிக குறைவான காலத்திலேயே கட்சியின் முழு முதல் சர்வாதிகாரியாக பிரதமர் மோடி உருவாகிவிட்டார்.

     நமது பாராளுமன்ற ஜனநாயக அரசில் பிரதமரும் ஒரு பகுதியும், சமமும் ஆனவர்தான். ஆனால் இங்கு இவ்வளவு குறைந்த கால ஆட்சியில் நாம் காண்பது என்ன? அனைத்து அமைச்சர்களும் காணாமல் போய் மோடி மட்டுமே இங்கு அனைத்துமாக இருக்கிறார். உ.தா சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறை அமைச்சர் என்றாலும் கூட அதில் அவர் எந்த முடிவையும் எடுக்க வில்லை. இதே நிலைமைதான் மற்ற அமைச்சர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

     மோடி நட்புறவான அண்டை நாடுகளின் தலைவர்களுடன் உள் மாநில உறவுகள் மேம்படுதல் குறித்து பேசிவருகிறார். ஆனால் நேபாளத்துடன் நமது உறவு இனிமையானதாக அமையவில்லை. மேலும் எல்லையில் பாகிஸ்தானுடனும் பிரச்சனை தீவிரமாகிவருகிறது. இதன் கூடுதலாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா தனது மதச்சார்பின்மையில்  உறுதியாக உண்மையாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

     அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பீகார் தேர்தல் பா.ஜ.க.வின் நாட்கள் முடிவடைந்து கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இதனை பா.ஜ.க. அல்லாத கட்சிகளோடு காங்கிரஸ் தலைமை இணைந்து சாதித்துள்ளது. இவை அனைத்தும் குளிர்கால கூட்டத்தொடரில் குறிப்பிடப்படும்.

ஆட்சி செய்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்த ஒரு பணிதொடர்பான உறவையும் காங்கிரசுடன் பேணவில்லையே?

     தற்போதையை அரசு 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியினை புறக்கணித்து வருகிறது. மோடியின் அணுகுமுறை கட்சி குறித்து எதிரானதாகவே இருக்கிறது. காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியை அரசியலிருந்து அரசு முழுமையாக புறக்கணித்துவிட முடியாது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அண்மையில் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவரான ராகுல் காந்தியை சந்தித்துப்பேசினார். மேலும் கட்சி தலைவரான சோனியா காந்தியிடமும் சில தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் உடன் ஏற்பட்ட இந்த சந்திப்புகள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

     எதிர்கட்சிகளுடன் எந்தவொரு அரசும் எதிர்பார்க்கும் படியான உதவிகள் உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியி அரசின் பத்தாண்டு கால பொருளாதாரக்கொள்கைகளை அப்படியேதானே  மோடி அரசு தொடர்கிறது. அரசு எங்களை புறக்கணிக்கவே முடியாது.

சரக்கு மற்றும் பொருட்கள் வரி ஏப்ரல் 1, 2016 ஆம் ஆண்டு அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என்னும் நிலையில் காங்கிரஸ் இதனை நடைமுறைக்கு கொண்டுவர உதவுமா?

     காங்கிரஸ் கட்சியின் மாநில அரசுகளின் உதவியில்லாமல் ஜி.எஸ்.டி. மசோதா சட்டமாக மாற முடியாது என்பது உண்மைதான். ஜி.எஸ்.டி. மசோதாவில் மூன்று திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென்று காங்கிரஸ் கட்சி கோருகிறது. தீர்வுத்தொகை உடன்பாடின்மை, வரிகளை பகிர்தல், கணக்குகளின் அமைப்பு ஆகியவையே அவை. காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைகளை கேட்டு அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விரும்புகிறது.

பீகார் வெற்றி உறுதியாக காங்கிரஸ் கட்சியை உற்சாகப்படுத்தியிருக்கும். கட்சியில் இதன் வெளிப்பாடாக தாங்கள் உணர்வது என்ன?

     காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும், ஆட்சியில் இல்லாமலும் இருந்த காலங்கள் உண்டு. தோல்வி ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையோடு நடக்க கட்சி பழகியுள்ளது. வெற்றியில் ஆவேசமாக நடந்துகொள்ளும் கட்சி காங்கிரசல்ல.

பீகாரின் வெற்றிக்கும் அம்மாநிலத்தில் மெகா கூட்டணியை முன்னே கொண்டுவர பாடுபட்டவர் ராகுல்காந்தி என காங்கிரசின் அனைத்து தலைவர்களும் அவரை பாராட்டி வருகின்றனர். ஆனாலும் கூட இன்னும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் வர ஏன் தாமதமாகிவருகிறது?

     கட்சிக்கு அவர் தலைவராக எப்போது வேண்டுமானாலும் ஆகலாம். அனைவரும் மாற்றுக்கருத்தின்றி ஏற்றுக்கொள்ளும் இளைய தலைவர் அவர். ஆனால் சோனியா காந்தி தலைமைத்துவத்தில் அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என இவர்களே கட்சியினை முன்னே எடுத்துசெல்கிறவர்களாக இருக்கிறார்கள். சோனியாகாந்தி அவர்களின் கீழ் பணியாற்றுவது போலவே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையின் கீழ் பணியாற்றுவதையும் இயல்பானதாக  கருதுகிறோம்.

பிரியங்கா காந்தி அரசியலிலும் கட்சியிலும் துடிப்பான ஒரு சக்தியாக இயங்குகிறார் என்று கருதுகிறீர்களா?

     நாங்களனைவரும் பிரியங்கா காந்தி கட்சியில் முக்கியமான பாத்திரத்தை வகிப்பார் என்றே நம்புகிறோம். அவரைப்பார்க்கும் இந்திரா காந்தி அவர்களைப் போன்றே எங்களுக்குத் தோன்றுகிறது.

காங்கிரஸ் கட்சி தற்போதைய அரசின் சகிப்புத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும் உத்திரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் இயல்பானவையாகத்தானே எடுத்துக்கொள்ளப்பட்டன?

     இந்த அரசு ஒரு சகிப்புத்தன்மையற்ற அரசுதான். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர்ந்தபோது சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் தங்களது பாதுகாப்பு குறித்த அச்சத்தை உணரத்தொடங்கிவிட்டார்கள். ஏன் இந்த சகிப்புத்தன்மையற்ற தன்மையான சம்பவங்களை எதிர்த்துத்தானே எழுத்தாளர்கள் தங்களது விருதுகளைக் கூட திருப்பி அளித்திருக்கிறார்கள்?
                          

நன்றி: டெக்கன் கிரானிக்கல்,ஞாயிறு நேர்காணல்,24 நவம்பர் 2015