மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான கவுகாத்தி காருண்ய தேவதை

                 பிரசாந்தா மசூம்தார்

                 தமிழில்: அன்பரசு சண்முகம்


     கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆட்டிச பாதிப்பு கொண்ட மகனுடன் அரசு நிதியுதவி பெறும் மனநிலை குறைபாடுடைய குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்திவருகிறார்.

     ரூபா ஹசாரிக்காவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே அவரை ஒரே ஒருவரை மட்டும் கொண்டு 2005 ஆம் ஆண்டு மனநிலை குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான காப்பகமான ‘டெஸ்டினேஷன்’ அமைப்பை தொடங்க தூண்டுகோலாக இருந்தது. இன்று இங்கு சமூகத்தின் ஒரு பிரிவான இம்மக்களில் 75 பேர் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

     பத்து ஆண்டுகளுக்கு முன்பு செரிப்ரல் பால்சி மற்றும் ஆட்டிச குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட தனது மகனை(ரிஷி) பள்ளியில் சேர்க்க கடுமையான முயற்சிகளை செய்திருக்கிறார் ஹசாரிக்கா. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னரே இத்தகைய குறைபாடு கொண்ட சிறுவர்களுக்கான மையம் ஒன்றினை தொடங்கும் எண்ணம் ஹசாரிக்காவிற்கு வந்திருக்கிறது. ‘’12 வயதான ரிஷியை பள்ளியில் சேர்க்க எண்ணற்ற பள்ளிகளுக்கு அலைந்து திரிந்தேன். ஆனால் அவனுக்கான உதவிகளை யாரும் வழங்க முன்வரவில்லை. சில பள்ளிகள் அவர்கள் கூறியபடி எங்களிடம் நடந்துகொள்ளவில்லை’’ என்று கசப்பான புன்னகையுடன் பேசும் ரூபா ஹசாரிகா 2009 ல் தன் கணவரை இழந்த 42 வயது பெண்மணியாவார்.

            ரிஷி குணமடைந்துவிடுவான் என்று அக்குடும்பமே நம்பியிருந்தது. அசாம் தாண்டி பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்த பின்பும் எந்த மேம்பாடும் அவனிடம் உருவாகவில்லை. அப்போது அவனுக்கு வாழ்க்கை முழுவதற்குமான பராமரிப்பும், கவனமும் தேவை என்பதை உணர்ந்து, அவனையொத்த மற்ற குழந்தைகளை கவனிக்க பராமரிக்கவென ‘டெஸ்டினேஷன்’ மையத்தை தொடங்கியிருக்கிறார் ரூபா ஹசாரிகா. அதில் முதல் உறுப்பினராக தன் மகனையே சேர்த்தார். இம்மையம் பற்றிய விளம்பரத்தினை பத்திரிகைகளில் வெளியிட்ட முதல் மாதத்தில் எட்டு நபர்கள் இதில் இணைந்திருக்கிறார்கள். மைய பராமரிப்புக்கென குறைந்த தொகையை கட்டணமாக பெறுகிறார் ஹசாரிகா.

     ‘‘இம்மையத்தை தொடங்கும் முன் வாழ்க்கை கடும் சவாலானதாக இருந்தது. ரிஷியை அழைத்துக்கொண்டு எங்குசென்றாலும் மக்கள் எங்களை அனுதாபத்துடன் பார்த்தனர். ரிஷி எப்போதும் அவர்களுடைய விவாதத்தில் முக்கிய இடம் பெறுபவனாக இருந்தான். இது குறித்த அவனது எதிர்வினைகள் குறித்துதான் எனக்கு பயம் இருந்தது’’ என்கிறார் ஹசாரிகா.

     ‘‘எனது கணவர் வனத்துறை அதிகாரி என்பதால் பணி நிமித்தம் பெரும்பாலான நேரங்களில் வெளியேதான் இருப்பார். அந்த சூழ்நிலை போன்று இருந்தது. வீட்டின் ஒரு புறத்தினை காலி செய்து அதனை ரிஷி போல உள்ளவர்களுக்கான மையமாக மாற்றலாம் என்று உணர்ந்தேன். இது போன்று குழந்தைகள் இருக்கும் பெற்றோரின் சிக்கல்களை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். குழந்தைகளுக்கான மையம் மட்டுமில்லாது, அதன் இருபுறங்களிலும் மூன்று கட்டிடங்களை பொருளாதார பலன்களுக்காக கட்டியிருக்கிறேன்.’’

     அரசின் மானியங்கள், பன்னாட்டு நிறுவன நன்கொடைகள், பல அமைப்புகள், தனி நபர்களின் உதவிகளின் மூலம் மையம் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. 4 வயதிலிருந்து  70 வயது வரை நபர்கள் இம்மையத்தில் உள்ளனர். 41 இளம் வயதினர் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். எண்பது வயதான ஒருவர் அண்மையில் இம்மையத்தில் இறந்துபோயிருக்கிறார். இவர்களில் பலரும் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்தாம். மனநிலை பிறழ்ந்த முகவரி இல்லாத மனிதர்களை காவல்துறை கண்டால் அவர்களை ‘டெஸ்டினேஷன்’ மையத்திற்கு கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள்.

     மையத்தில் உள்ளவர்களுக்கு அடிப்படை கணினி செயல்பாடு முறைகள், காகித பை தயாரிப்பு, கைக்குட்டை அலங்காரத்தையல், கடித உறை தயாரிப்பு, வாழ்த்து அட்டைகள் உருவாக்குவது என மேலும் பல்வேறு பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டு வருகின்றன. ‘‘இவை அனைவருக்கும் கற்றுத்தரப்படுவதல்ல. யாரால் அதனை செய்ய முடியுமோ அவர்களுக்கு மட்டும்தான். அனைத்து திருவிழாக்களையும், பண்டிகைகளையும் ஒன்றாக இணைந்து கொண்டாடி வருகிறோம் நாங்கள்’’ என்னும் ஹசாரிகா செகந்திராபாத்தில் தேசிய மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான கழகத்தில் 15 நாள் பயிற்சியை முடித்துவிட்டு அண்மையில்தான் திரும்பியிருக்கிறார்.

     ‘டெஸ்டினேஷன்’ மையத்தில் தற்போது 27 பணியாளர்கள் உள்ளனர். இதில் சிறப்பு கல்வியாளர்கள், பராமரிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் உட்பட அடங்கும். உளவியல் மருத்துவர் மாதாமாதம் இம்மையத்தினை பார்வையிடுகிறார். மையத்திலுள்ள நபர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்கள் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

     ‘‘என்னைப் பொறுத்தவரையில் இப்பயணம் தொடங்கியது 2005 ஆண்டு கோடைக்காலத்தில். இவற்றோடு இணைந்துள்ளதால் நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் நான் எனது மகனின் உருவத்தையே காண்கிறேன்.’’என்று நம்பிக்கையோடு பேசுகிறார் ரூபா ஹசாரிகா.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – மேகசின் – 8 நவம்பர் 2015